::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

சர்வதேச பேட்மிண்டன் போட்டி – பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் !

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், தாய்லாந்தைச் சேர்ந்த பூசனனுடன் பலப்பரீட்சை நடத்திய சிந்து, 49 நிமிடங்களில் 21-16, 21-8 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து, இதுவரை பூசனனுடன் 17 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அதில் 16 முறை சிந்து வெற்றி பெற்றிருக்கிறார். 2019ல் ஹாங்காங் ஓபனில் மட்டும் தோல்வி அடைந்துள்ளார்.
இந்த சீசனில் இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் சிந்து. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் லக்னோவில் நடந்த சையது மோடி சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோகித்சர்மாவுக்கு அபராதம் !

டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்கவில்லை. அதிக நேரம் எடுத்துக் கொண்டது.
மெதுவாக பந்து வீசியதற்காக தலைவர் என்ற முறையில் ரோகித்சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்திய மதிப்பில்  ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது டெல்லி அணி !

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில்  நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் துடு்ப்பெடுத்தாட செய்த மும்பை அணி,  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக இஷான் கிஷன் 81 ஓட்டங்கள் விளாசினார். தலைவர் ரோகித் சர்மா 41 ஓட்டங்கள் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி, 32 ஓட்டங்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் கவனமாக ஆடிய துவக்க வீரர் பிருத்வி ஷா, 24 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் தனது பங்கிற்கு 22 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 104 ஓட்டங்களில் 6 விக்கெட் இழந்த நிலையில், லலித் யாதவ், அக்சர் படேல் இருவரும் அபாரமாக விளையாடி, ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.
லலித் யாதவ் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களும் விளாச, டெல்லி அணி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. 6 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் சேர்த்த டெல்லி அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

2022 – ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர் இலங்கையில் !

2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர் இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் இந்த போட்டித் தொடர் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலிக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு !

இந்திய வீரர் விராட் கோலி இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 23 ஓட்டங்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 2-வது இன்னிங்சிலும் விராட் கோலி (13 ஓட்டங்கள், 16 பந்து) அதே போன்று எல்.பி.டபிள்யூ., முறையில் விக்கெட்டை தாரை வார்த்தார்.
குறைந்த ஓட்டங்களில்  வீழ்ந்ததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சராசரி 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 50 ஓட்டங்களுக்கு கீழ் சென்றது. இதுவரை 101 டெஸ்டில் ஆடியுள்ள கோலி 27 சதம் உள்பட 8,043 ஓட்டங்கள் (சராசரி ஓட்டம் 49.95 ) எடுத்துள்ளார். ஒருவேளை இந்த இன்னிங்சில் அவர் 20 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருந்தால் 50 ஓட்டங்கள் சராசரியை தக்க வைத்திருப்பார்.
மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் கண்டு 28 மாதங்கள் உருண்டோடி விட்டது. இந்த நிலையில் அவர் மீதான விமர்சனங்களும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

வெளியானது 15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் போட்டி அட்டவணை – மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் ! ( அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது )

15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் திகதி தொடங்க உள்ள நிலையில் போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசி லீக் ஆட்டம் மே 22ம் தேதி வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
வான்கடே மைதானம் மற்றும் டி.ஒய்.பாட்டீல் ஆகிய மைதானங்களில் தலா 20 லீக் ஆட்டங்களும், மும்பை பிரபோன் மைதானம் மற்றும் புனே எம்சிஏ சர்வதேச ஸ்டேடியத்தில் தலா 15 போட்டிகளும் நடக்கின்றன. இரண்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.
லீக் ஆட்டங்களுக்கான அட்டவணை மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிளேஆப் போட்டிகள் மற்றும் மே 29ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் மற்றும் மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
IPL 2022 Schedule
IPL 2022 Schedule
(அட்டவணையை காண இங்கே கிளிக் செய்யவும்)

மூன்றே  நாளில் முடிவுக்கு வந்ததது மெஹாலி டெஸ்ட் – இலங்கை அணி படு தோல்வி !

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
மெஹாலியில் நடந்துவரும் இந்த போட்டியில்  நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுக்களை இழந்து 574 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது. இந்திய அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 175 ஓட்டங்களையும்  ரிசப் பந்த் 96 ஓட்டங்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால் மற்றும் விஷ்வ பெர்ணான்டோ ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

அதனடிப்படையில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 174 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்டமாக ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 400 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்ப்பில் நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிசந்திர அஷ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். அதனடிப்படையில் இந்தியா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

மெஹாலி டெஸ்ட் – இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த ஜடேஜா – இலங்கை அணிக்கு முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்கள் !

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று (05) இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டி இந்தியாவின் மொஹாலியில் நடைபெற்று வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 574 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்திய அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 175 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

ரிசப் பந்த் 96 ஓட்டங்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால் மற்றும் விஷ்வ பெர்ணான்டோ ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தலைவர் கருணாரத்ன 28 ஓட்டங்கள், லகிரு திரிமன்னே 17 ஓட்டங்கள், மேத்யூஸ் 22 ஓட்டங்கள், தனஞ்செய டி சில்வா 1 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்நிலையில் நாள் முடிவில் பதும் நிசங்கா 26 ஓட்டங்களுடனும், அசலங்கா 1 ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி, இந்தியாவை விட 466 ஓட்டங்கள் பின்தங்கி உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

அவுஸ்ரேலிய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன்வோர்ன் மாரடைப்பால் மரணம் !

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வோர்ன் (வயது 52) இன்று காலமானார். சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷேன் வார்னே மரணம் அடைந்த செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் கூறி உள்ளார்.

இந்தியா- இலங்கை முதல் டெஸ்ட் – இந்தியாவுக்கு முதல்நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்கள் !

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் ரோகித் சர்மா துடுப்பாட்டத்தை  தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் மயங்க் அகர்வால்- தலைவர் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அணியின் ஓட்டங்கள் 52  இருக்கும்போது ரோகித் சர்மா 29 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹனுமா விஹாரி களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 33 ஓட்டங்களில்  வெளியேறினார்.
தொடர்ந்து ஹனுமா விஹாரி உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்தியா முதல் நாள் மதிய உணவு இடைவேளை 2 விக்கெட் இழப்பிறகு 109 ஓட்டங்கள் எடுத்திருந்தது. விஹாரி 30 ஓட்டங்களுடனும், விராட் கோலி 15 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளைக்குப்பின் தொடர்ந்து இருவரும் ஆட்டத்தை தொடங்கினர். ஹனுமா விஹாரி அரைசதம் அடித்த நிலையில், விராட் கோலி 45 ஓட்டங்களில்  ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரிஷாப் பண்ட் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 27 ஓட்டங்களில் வெளியேறினார். ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்ததும், ரிஷாப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷாப் பண்ட் 96 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். முதல்நாள் ஆட்டம் முடியும் வரை இந்த ஜோடி ஆட்டமிழக்கால் இருந்தது.
இதனால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்கள் குவித்துள்ளது. ஜடேஜா 45 ஓட்டங்களுடனும், அஸ்வின 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
பந்து வீச்சில் லசித் அம்புல்தெனிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.