::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

முக்கியமான இரண்டு தலைமைப்பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விராட் கோலி !

இந்திய இருபது20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக அறிவித்த விராட் கோலி, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய இருபது20 அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், கடந்த 8-9 ஆண்டுகளாக மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன்.

இதில், 5-6 ஆண்டுகள் அணித் தலைவராக இருந்துள்ளேன். தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு தலைமை தாங்க தயாராவதற்கு இடம் தேவை என கருதுகிறேன்.

இருபதுக்கு20 அணியின் தலைவராக இருந்தபோது அணிக்காக என்னிடம் இருந்த அனைத்தையும் வழங்கியுள்ளேன். தீவிர ஆலோசனைக்கு பின்னர், இருபதுக்கு20 அணி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

துபாயில் நடைபெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பின்னர் பதவி விலகவுள்ளேன் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி, டெஸ்ட் அணி, இருபதுக்கு20 என அனைத்து அணியின் தலைவராக விராட் கோலி இருந்து வந்தார்.

இதேவேளை ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவராகவும் விராட் கோலி இருந்து வருகிறார். இருப்பினும், கோலி தலைமையில் பெங்களூரூ அணி இதுவரையில் ஒருமுறை கூட சம்பியன் பட்டம் வென்றதில்லை.

இதற்கிடையில், விராட்கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சரியாக சோபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இருபதுக்கு20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக விராட் கோலி நேற்று அறிவித்துள்ளார்.

“இலங்கை வீரர்கள் வருகை, எங்களுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது.” – விராட் கோலி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை அபுதாபியில் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணியினர் வழக்கமான சிவப்பு நிற சீருடைக்கு பதிலாக நீல நிற உடை அணிந்து விளையாட உள்ளனர். ஆட்டம் முடிந்ததும் இந்த சீருடை ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய சீருடையை அறிமுகப்படுத்திய பெங்களூரு அணியின் தலைவர்  விராட் கோலி பின்னர் கூறியதாவது:-
எங்கள் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாற்று வீரர்களாக சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலாவது பகுதியில் ஆடிய கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள இலங்கை பவுலர்கள் ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா இலங்கையில் அதிக அளவில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள்.
அங்குள்ள ஆடுகளங்களும், அமீரகத்தில் உள்ள ஆடுகளங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். அதனால் இங்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களது திறமை அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். சில வீரர்கள் விலகினாலும் நாங்கள் வலுவாக இருப்பதாகவே உணர்கிறோம். புதிய வீரர்கள் வருகை, எங்களுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது. முதல் பாதியில் எப்படி விளையாடினோமோ அதே வேட்கை, மனஉறுதியுடன் 2-வது கட்டத்திலும் விளையாட வேண்டியது முக்கியம்.” இவ்வாறு கோலி கூறினார்.

மீண்டும் ஆரம்பமாகிறது ஐ.பி.எல் திருவிழா – மோதுகின்றன இரு பலமான அணிகள் !

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்திகதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில் 4 அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் மே 3-ந்திகதியுடன் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தது.
இந்த நிலையில் மீதமுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களுக்கு மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணிகளும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் 2-வது கட்ட பகுதியில் துபாயில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் (அதாவது 30-வது லீக் ஆட்டம்) 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகின்றது.
புள்ளி பட்டியலில் 5 வெற்றி, 2 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மறுபடியும் முதலிடத்துக்கு முன்னேறி விடலாம். இவ்விரு அணிகளும் ஏற்கனவே டெல்லியில் சந்தித்த லீக்கில் சென்னை அணி 218 ரன்கள் குவித்த போதிலும், அதை கீரன் பொல்லார்ட்டின் (34 பந்தில் 8 சிக்சருடன் 87 ரன்) அதிரடியால் மும்பை அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்தது. அந்த தோல்விக்கு பழிதீர்த்து அமீரக சீசனை சென்னை அணி வெற்றியோடு தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் லசித் மாலிங்க !

ரி20 போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெறுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

17 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் ஊடாக தான் பெற்றுக் கொண்ட அனுபவம் மற்றும் அறிவு தொடர்ந்தும் தேவைப்படப்போவதில்லை அவர் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் தனது கிரிக்கெட் வாழ்வில் இறுதியாக இருந்த ரி20 போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டுக்கு ஆதரவு வழங்கும் வகையில் எப்பொழுதும் புதுமுக வீரர்கள் மற்றும் கிரிக்கெட்டை நேசிப்பவர்களுடன் தொடர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வி !

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 10 விக்கெட்டுக்களால் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். சாமிக கருணாரத்ன 24 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் போர்டின் மற்றும் ரபாடா ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதற்கமைய, 121 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 14.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடித்தாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஹென்ரிக்ஸ் 56 ஓட்டங்களையும், டீ கொக் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் பெற்று கொண்டனர்.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரை தென்னாபிரிக்கா அணி வௌ்ளையடிப்பு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது.

விடைபெற்றார் சிம்பாப்வே அணியின் முன்னணி துடுப்பாட்டவீரர் பிரெண்டன் டெய்லர் !

சிம்பாப்வே அணியின் முன்னணி துடுப்பாட்டவீரர் பிரெண்டன் டெய்லர். 35 வயதான இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதன்முறையாக ஜிம்பாப்வே அணியில் அறிமுகம் ஆனார். தற்போது வரை 34 டெஸ்ட், 204 ஒருநாள் மற்றும் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 6 சதங்களுடன் 2320 ஓட்டங்களும், ஒருநாள் போட்டியில் 11 சதங்களுடன் 6677 ரன்களும், டி20-யில் 934 ஓட்டங்களும் அடித்துள்ளார்.
தற்போது அயர்லாந்து- சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஓய்வு பெறும் கடைசி போட்டியில் சிறப்பான வகையில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தொடக்க வீரராக களம் இறங்கிய டெய்லர் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இதன்மூலம் ஏமாற்றத்துடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த பயணத்திற்காக எப்போதும் நன்றிக்குரியவனாக இருப்பேன். நன்றி. என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண ரி20 போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு !

உலகக் கிண்ண ரி20 போட்டிக்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வருமாறு,

தசுன் ஷானக்க (தலைவர்)
தனஞ்சய டி சில்வா (உப தலைவர்)
குசல் பெரேரா
தினேஸ் சந்திமல்
அவிஷ்க பெர்னாண்டோ
பானுக ராஜபக்ஷ
சரித் அசலங்க
வனிந்து ஹசரங்க
கமிந்து மெண்டிஸ்
சாமிக கருணாரத்ன
மஹீஷ் தீக்ஷன
பிரவீன் ஜயவிக்ரம
நுவன் பிரதீப்
துஷ்மந்த சமீர
லஹிரு மதுஷங்க
லஹிரு குமார
பினுர பெர்னாண்டோ
அகில தனஞ்சய
புலின தரங்க

பெண்கள் கிரிக்கெட் விளையாடினால் உடல் தெரியும் என்ற தலிபான்களுக்கு அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை கொடுத்த பதிலடி !

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் பெண்களை கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை செய்தால், ஆப்கான் ஆடவர் அணியுடன் கிரிக்கெட் விளையாடும் திட்டத்தை ரத்து செய்வோம் என்று அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின், அந்நாட்டைத் தலிபான் முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு இடைக்கால அரசு அமைக்கவும் முடிவு செய்து அமைச்சரவைப் பட்டியலை அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே பெண்களுக்கு உரிமைகள் முழுமையாக வழங்கப்படும் என அறிவித்திருந்த தலிபான் தீவிரவாதிகள், திடீரென பெண்கள் அரசியலில் பங்கேற்கத் தடை விதித்துள்ளனர். பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதித்து, கிரிக்கெட் விளையாடவும் அனுமதி மறுத்துள்ளனர்.

தலிபான்கள் தீவிரவாத அமைப்பின் கலாச்சாரப் பிரிவின் துணைத் தலைவர் அஹமத்துல்லாஹ் வாசிக் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பெண்கள் விளையாட்டில் பங்கேற்பது அவசியமில்லை என்று கருதுகிறோம். குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவது தேவையற்றது. கிரிக்கெட்டில் பெண்கள் பங்கேற்றால் அவர்களின் உடல், முகம் ஆகியவை மூடப்படாது. அனைவரும் பார்க்கும் வகையில் உடல் உறுப்புகள் தெரியக்கூடும். இதுபோன்று பெண்கள் ஆடை அணிவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இப்போதுள்ள சூழலில் பெண்கள் கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டும் விளையாடுவது பாதுகாப்பானது அல்ல” எனத் தெரிவித்தார்.

ஆனால், வரும் நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் ஆடவர் அணி ஆஸ்திரேலியாவில் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஆப்கனில் மகளிர் கிரிக்கெட் விளையாடத் தலிபான்கள் தடை விதித்தால், ஆடவர் அணியுடன் விளையாடும் திட்டத்தை ரத்து செய்வோம் என ஆஸ்திேரலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை  வெளியிட்ட அறிவிப்பில், “மகளிர் கிரிக்கெட் என்பது கிரிக்கெட் சபைக்கு ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எங்கள் கண்ணோட்டம். எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் பெண்களும் கிரிக்கெட் விளையாட ஒவ்வொரு அளவிலும் ஆதரவு தருவோம்

ஆனால், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருப்தாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. பெண்கள் கிரிக்கெட்டைத்தலிபான்கள் தடை செய்தால், ஹோபர்ட்டில் நவம்பர் மாதம் ஆப்கன் ஆடவர் அணியுடன் ஆஸ்திரேலிய அணி, விளையாடும் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்வதைத் தவிர ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு வேறு வழியில்லை” எனத் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சார்ட் கோல்பெக் கூறுகையில், “ பெண்கள் கிரிக்கெட் விளையாட தலிபான்கள் தடை விதித்திருப்பது ஆழ்ந்த கவலையளிக்கிறது. பெண்கள் பங்கேற்பு இல்லாமல் எந்த விளையாட்டையும் ஏற்றுக்கொள்வது சாத்தியமற்றது.

சர்வதேச விளையாட்டு அமைப்பு, குறிப்பாக ஐ.சி.சிஅமைப்பு தலிபான்கள் நிலைப்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஐசிசி செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், “தலிபான்கள் பெண்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்த செய்தி கவலையளிக்கிறது. இந்தத் தடையின் தாக்கம் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டு வளர்வதில் சிக்கல் ஏற்படுத்தும். இது தொடர்பாக அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்திய 20 ஓவர் அணியில் மீள இணையும் அஸ்வின் – ஆலோசகராக முன்னாள் தலைவர் டோனி !

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒக்டோபர் 17-ந் திகதி முதல் நவம்பர் 14-ந் திகதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் தலைவர் டோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.அவர் இந்திய அணிக்கு 2 உலக கோப்பை (2007-ல் 20 ஓவர், 2011-ல் ஒருநாள் போட்டி) மற்றும் ஐ.சி.சி. சாம்பியன் டிராபி கோப்பையை (2013) பெற்றுக்கொடுத்து இருக்கிறார்.

34 வயதான அஸ்வின் 4 ஆண்டுகளுக்கு பிறகு 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மகிழ்ச்சியும், நன்றியும் மட்டுமே இப்போது என்னை வரையறுக்கும் இரண்டு வார்த்தைகளாகும்.

இவ்வாறு அஸ்வின் அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.

அவர் கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடினார். அஸ்வின் 46 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை அஸ்வின் உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக தற்போது திகழ்கிறார். அவர் 79 டெஸ்டில் ஆடி 413 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கேப்டன் விராட் கோலி அவருக்கு ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆண்டுகளின் பின்பு இலங்கை நிகழ்திய சாதனை – தென்னாபிரிக்காவை சிதறடித்த இலங்கை பந்துவீச்சாளர்கள் !

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே இரு அணிகளும் ஒரு போட்டிகள் வீதம் வெற்றி பெற்றிருந்த நிலையில் , தொடரை கைப்பற்றப்போவது யார் என்ற போட்டியில் இன்றையதினம் இரு அணிகளும் களமிறங்கின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். அவர் தவிர துஷ்மந்த சமீர 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். தென்னாபிரிக்கா சார்பில் பந்து வீச்சில் கே. மஹராஜ் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, 204 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 30 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 78 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

அவ்வணி சார்பில் க்ளெசென் அதிகபட்சமாக 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் அறிமுகவீரர் மஹீஸ் தீக்சன 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். துஷ்மந்த சமீர 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக துஷ்மந்த சமீர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று 3 வது போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 2 – 1 என கைப்பற்றியதுடன், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் தென் ஆபிரிக்காவை ஒருநாள் தொடரில் வெற்றிகொண்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.