இலங்கை கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் யூசூப் ராசா கிலானி தெவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது கிழக்கு பாகிஸ்தான் நகரான லாஹுரில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
மார்ச் மாதம் 3ஆம் திகதி லாஹுர் கடாபி மைதானத்திற்கருகில் இலங்கை கிக்கெட் வீரர்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த 12 ஆயுத பாணிகளுக்கு விடுதலைப் புலிகள் நிதியளித்ததற்கான தகவல்கள், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன என்று பாகிஸ்தான் பிரதமர் கிலாணி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்த வாரம் லிபியாவில் சந்தித்த போது மேற்படி தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப் புலிகளின் ஈடுபாடு பற்றி அவருடன் பிரஸ்தாபித்ததாகவும் கிலானி கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக இலங்கை புலனாய்வு அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதற்காக விரைவில் ஒரு குழுவை அனுப்பவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு தாமே பொறுப்பு என்று கடந்த ஜூன் மாதம் ரெஹ்றிக் ஈ தலிபான் பஞ்ஜாப் குழு உரிமை கோரியது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை வீரர்கள் சென்று கொண்டிருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்ப்டடது.
இலங்கை அணியைச் சேர்ந்த 6 வீரர்கள் இத்தாக்குதலில் காயமடைந்ததோடு 6 பாகிஸ்தான் பொலிஸாரும் இரண்டு சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவத்தை அடுத்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி உட்பட பல கிரிக்கெட் அணிகள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பாகிஸ்தான் சுற்றுப் போட்டிகளில் கலந்து கொள்வதை ரத்துச் செய்தன.
சர்வதேச கிரிக்கெட் சபையும் பாகிஸ்தானில் நடத்தத் திட்டமிட்டிருந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்துள்ளது.