ஐதராபாத் தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு 2 ஆண்டுகள் கழித்து திருமணம் நடைபெறும் என்று அவரது தந்தை தெரிவித்து உள்ளார். பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், அவருடன் சிறுவயது முதலே பழகிய அவரது குடும்ப நண்பரும், தொழிலதிபருமான சோரப் மிர்சாவுக்கும் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்தை மாற்றிக் கொண்ட பின்னர், பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட 10 கிலோ கேக்கை வெட்டி மகிழ்ந்தனர். அந்த கேக்கில் சானியா- சோரப் ஜோடியின் பெயர் எழுதப்பட்டு வாழ்த்து வாசகம் இடம்பெற்றிருந்தது. அழகுபதுமையாக ஜொலித்த சானியா, டைமண்ட்டுகள் பதிக்கப்பட்ட தங்க நிறத்திலான ‘காக்ரா சோலி’ என்ற விலை உயர்ந்த ஆடையை அணிந்து இருந்தார். பிரபல டிசைனர் ஷாந்தனு- நிகில் வடிவமைத்திருந்த இந்த ஆடையின் மதிப்பு 20 இலட்சம் இந்திய நாணய ரூபா ஆகும். இதனை நிச்சயதார்த்த பரிசாக மணமகன் சோரப் மிர்சா வழங்கினார்.
நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடந்தாலும், திருமண திகதி பற்றி உடனடியாக எந்த முடிவும் செய்யப்படவில்லை. இது பற்றி சானியாவின் தந்தை இம்ரான் மிர்சா கூறுகையில், ‘சானியாவுக்கு முஸ்லிம் முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது. அவர் தொடர்ந்து டென்னிஸ் விளையாடுவார். அவர் 2 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்ய விரும்புவதாக என்னிடம் கூறியிருக்கிறார். எனவே அவரது ஆசைப்படி 2 ஆண்டுகள் கழித்தே திருமணம் நடத்த முடிவு செய்து உள்ளோம். அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் சானியா பங்கேற்க உள்ளார்’ என்றார்.
சோரப் மிர்சா எம்.பி.ஏ. படிப்பதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளார். அவரது படிப்பு முடியவும் 2 ஆண்டுகள் ஆகிவிடும். எனவே 2011ம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.