இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்துக்கான இறுதி கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30க்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
இரண்டாவது 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் திகதி தொடங்கிய இந்தப் போட்டியில் 12 நாடுகள் பங்கேற்றன. “லீக்” முடிவில் அவுஸ்திரேலியா, ஒல்லாந்து, ஸ்கொட்லாந்து, பங்களாதேஷ் ஆகியவை வெளியேற்றப்பட்டன. “சூப்பர்-08” சுற்று முடிவில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து அணிகள் வெளியேற்றப்பட்டன.
தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை மேற்கிந்திய தீவுகள் ஆகியவை அரை இறுதிக்குத் தகுதி பெற்றன. கடந்த வியாழக்கிழமை நடந்த முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் 7 ஓட்டங்களில் தென்ஆபிரிக்காவையும், நேற்றுமுன்தினம் நடந்த 2வது அரை இறுதியில் இலங்கை 57 ஓட்டங்களில் மேற்கிந்திய அணியையும் தோற்கடித்தன.
20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டி இன்று லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
பாகிஸ்தான் அணி 2வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது. 2007ம் ஆண்டு தென்ஆபிரிக்காவில் நடந்த முதலாவது உலக கோப்பையில் இந்தியாவிடம் தோற்று சம்பியன் பட்டத்தை இழந்தது. பாகிஸ்தான் இந்தப் போட்டித் தொடரின் தொடக்கத்தில் தடுமாறியது. “லீக்” ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்று இருந்தது. “சூப்பர்-8” சுற்றில் முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் வீழ்ந்தது. அதன் பிறகே அந்த அணி விஸ்வரூபம் எடுத்து விளையாடி வருகிறது.
இலங்கை அணி எந்தத் தோல்வியையும் சந்திக்காமல் இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது. உலககோப்பையை வெல்ல இரு அணிகளுமே கடுமையாக போராடும். இதனால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.