கட்டுரைகள்

Wednesday, June 23, 2021

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

மைதானத்தில் அட்டகாசம் செய்த ஷாகிப் அல்ஹசன் – நடுவருடன் வாக்குவாதம் செய்து ஸ்டம்பை எட்டி உதைத்து சண்டித்தனம் !

டாக்கா பிரீமியர் லீக் பங்களாதேஷில் நடந்துவருகிறது. இதில் அண்மையில் நடந்த ஆட்டத்தில் பந்து வீசிய ஷாகிப், நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மூன்று ஸ்டம்புகளையும் வேரோடு பிடுங்கி வீசினார். பின்னர் மீண்டும் அவர் கேட்ட அப்பீலுக்கு நடுவர் அவுட் கொடுக்காததால் கோபத்தில் ஸ்டம்பை எட்டி உதைத்து விட்டுச் சென்றார்.
டாக்கா பிரீமியர் லீக்- 3 போட்டிகளில் விளையாட ஷாகிப் அல் அசனுக்கு தடை
இந்த இரண்டு சம்பவங்களும் காணொலியாக இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டன. பலரும் ஷாகிப்பின் இந்த செயலை கண்டித்துள்ளனர். வங்கதேச கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராக அறியப்படும் ஷாகிப், தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் கலீத் மகமூத் உடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
அதன்பின்னர், தான் கோபப்பட்டது குறித்து ஷாகிப் மன்னிப்புக் கோரியுள்ளார். “அன்பார்ந்த ரசிகர்களே, எனது பொறுமையை இழந்து கோபப்பட்டு, ஆட்டத்தைப் பார்த்துவந்த அனைவரது அனுபவத்தையும் கெடுத்ததற்கு, முக்கியமாக வீட்டிலிருந்து ஆட்டத்தைப் பார்த்து இதனால் வருத்தமடைந்தவர்களிடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு அனுபவம் வாய்ந்த வீரனாக நான் அது போல நடந்திருக்கக் கூடாது. ஆனால் சில சமயங்களில் துரதிர்ஷ்டவசமாக எல்லாவற்றையும் மீறி இப்படி நடந்துவிடும். அணிகளிடமும், அதன் நிர்வாகத்திடமும், தொடரின் ஒருங்கிணைப்பாளர்கள், அதிகாரிகளிடமும் எனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இது போல மீண்டும் நடந்து கொள்ளமாட்டேன் என்று நம்புகிறேன். நன்றி” என்று ஷாகிப் அல் ஹசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய கிரிக்கெட் நிர்வாகம், டாக்கா பிரீமியர் லீக்கில் 3 ஆட்டங்களில் விளையாட ஷாகிப் அல் அசனுக்கு தடை விதித்தது. அத்துடன் 5 லட்சம் வங்காளதேச டாக்கா அபராதமும் விதித்தது.
கடந்த வருடம், ஐசிசியின் ஊழலுக்கு எதிரான விதிமீறலுக்காக ஷாகிப் 12 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

பிரெஞ்சு ஓபின் டென்னிஸ் தொடர் 2021 – மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பார்போரா சாம்பியன் !

பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபின் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், செக் குடியரசின்  பார்போரா கிரெஜிகோவா ரஷியாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பைனலில் பார்போரா - அனஸ்டேசியா மோதல்:  முதல் முறை சாம்பியனாக முனைப்பு - Dinakaran
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-1, 2-6, 6-4 என்ற செட்கணக்கில் பார்போரா வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் 40 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்சு ஓபனை வென்ற முதல் செக் குடியரசு வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1981ல் ஹனா மாண்ட்லிகோவா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
உலக தரவரிசையில் 33வது இடத்தில் உள்ள பார்போரா (வயது 25), டென்னிஸ் போட்டிகளில் இதுவரை இரண்டு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

“2007 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு என்னை தலைவராக தெரிவு செய்வார்கள் என எண்ணினேன்.” – யுவராஜ் சிங்

2007-ம் ஆண்டு முதலாவுது  20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இதில் டோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

அதே வருடம் நடைபெற்ற   50 ஓவர் உலக கோப்பை போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

அதன்பின் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. தலைவராக டோனி முதல் முறையாக நியமிக்கப்பட்டார். அதன்பின் டோனி வெற்றிகரமாக கேப்டனாக அசத்தினார்.

இந்த நிலையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என எதிர்பார்த்தேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

2007-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறியதால் கடும் கொந்தளிப்புகள் இருந்தது. பின்னர் இரண்டு மாத இங்கிலாந்து சுற்றுப்பயணமும், தென்ஆப்பிரிக்காவுக்கும், அயர்லாந்துக்கும் ஒரு மாத சுற்றுப்பயணமும் இருந்தது.

அதன்பின்னர் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடந்தது. வெளிநாட்டில் 4 மாதம் சுற்றுப்பயணம் இருந்தது. எனவே மூத்த வீரர்கள் தங்களுக்கு இடைவெளி தேவை என்று நினைத்தார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் 20 ஓவர் உலக கோப்பையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். பின்னர் டோனி கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. யார் கேப்டன் ஆனாலும், அது ராகுல் டிராவிட்டாக இருந்தாலும், கங்குலியாக இருந்தாலும் எதிர்காலத்தில் யாராக இருந்தாலும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நான் அதை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வெல்ல யுவராஜ்சிங் முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டி தொடரில் தான் யுவராஜ் சிங் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர் அடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலமான முதல்நாளிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட இங்கிலாந்து வீரர் – 8 ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட்டால் வந்த வினை !

இங்கிலாந்து – நியூசிலாந்து இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.
இந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக  விளையாடிய அறிமுக வீரரான ஒல்லி ரொபின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பந்துவீச்சில் ஸ்விங் மற்றும் பவுன்சர் போன்றவற்றைச் சிறப்பாக வீசி ஒல்லி ராபின்சன் இங்கிலாந்து ரசிகர்களை வியக்கவைத்தார். இதனால், இணையத்தில் ரொபின்சன் குறித்த பேச்சுக்கள் அதிகரித்தன.
ஒரு சிலர் இங்கிலாந்து அணியின் எதிர்கால நட்சத்திர வீரர் என புகழ்ந்து தள்ளினர். ஆனால் அந்த புகழ்ச்சிகள் அன்றைய தினம் மாலை வரை கூட நிலைக்கவில்லை. இதற்கு காரணம் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட டுவீட்தான் என தெரியவந்தது.
8 வருடங்களுக்கு முன்பு சில டுவீட்களை வெளியிட்டிருந்த ராபின்சன், அதில் இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக, ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது இந்த டுவீட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது.
இந்நிலையில், ஒல்லி ராபின்சன் டுவீட் போட்டது உறுதியாகி உள்ளதால் அவரது மன்னிப்பை நிராகரித்து அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து  இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எம் பி சார்ள்ஸ்ம் கொரோனாவும்: கொரோனா வைரஸில் இருந்து தப்பினாலும் ரிஎன்ஏ வைரஸில் இருந்து தப்பிக்க முடியவில்லை!!!

கொரோனாவையே கட்டுப்படுத்தும் தடுப்பூசி பத்து மாதங்களில் ரெடியாகிவிட்டது. ஆனால் தமிழ் தேசிய வைரஸ்களின் அழிவில் இருந்து தமிழ் மக்களை எந்தக் கடவுளாலும் காப்பாபற்ற முடியவில்லை. ஐம்பது வருடங்களாக இந்த தமிழ் தேசிய வைரஸ்கள் உருமாறி, உருமாறி காலத்திற்குக் காலம் தமிழ் மக்களை அழித்து வருகின்றன. சிங்கள பேரினவாதத்துடன் போட்டி போட்டு தமிழ் மக்களை அழித்து வருகின்ற இந்த தமிழ் தேசிய வைரஸ்கள்: தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய புடுங்கிகள்: (ரெலோ, புளொட், புலி) என்றெல்லாம் உருமாறி தமிழ் மக்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பிடுங்கி எடுத்துக்கொண்டுள்ளனர்.

கேள்விச் செவியன் ஊரைக்கெடுத்த கதையாக தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோதாவில் வீம்பு பேச்சுக்களும் வீம்புத்தனங்களும் செய்து தமிழ் மக்களை இன்று கடைநிலையில் கொண்டுவந்து விட்டுள்ளனர். அன்று ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் தலைமைகளும் சரி, இன்று பாராளுமன்றம் செல்கின்ற அரசியல் தலைமைகளும் சரி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இவர்கள் எல்லோருக்கும் அறிவு எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. அதனால் அவர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் முட்டாள்களாகவே எண்ணுகின்றனர். முன்னவர்களது அதிகாரவெறிக்கு தமிழ் மக்கள் மண் மூட்டைகளாக்கப்பட்டனர். பின்னையவர்களது பாராளுமன்றக் கதிரைகளுக்கு தமிழ் மக்கள் மந்தைக் கூட்டங்களாக்கப்பட்டனர்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் தேசிய ஆயுதக் குழுக்களும் கட்சிகளும் தமிழ் மக்களின் குருதியயை குடித்தே வருகின்றனர். இதில் இரா சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், த சித்தார்த்தன் எல்லோருமே ஒரே டிஎன்ஏ உள்ள வைரஸ்கள் தான். இந்த வரிசையில் கடைசியில் உருமாற்றம் அடைந்தவர்கள் தான் சி வி விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் மற்றும் அவரில் இருந்து திரிபடைந்த மணிவண்ணன்.

வைரஸ்கள் திரிபடைந்து உருமாற்றம் பெறும் பொழுது பொதுவாக அவற்றின் வீரியம் குறைவடைந்து பலவீனமாகும். ஆனால் தமிழ் தேசிய வைரஸ்கள் திரிபடைந்தாலும் அவற்றின் தமிழ் மக்களை அழிக்கின்ற ஆற்றலில் எவ்வித பலவீனமும் ஏற்படவில்லை. அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு அனைத்து நிலைகளிலும் இவர்கள் தமிழ் மக்களை அழித்தொழித்து வருகின்றனர். பொறுப்பற்ற முட்டாள்கள் பொறுப்பான பதவிகளில் அமருகின்ற போது சமூகம் பேரழிவை நோக்கித் தள்ளப்படுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

இதற்கு வளர்ந்த நாடுகள் வளர்முக நாடுகள் என்று விதிவிலக்குகள் இல்லை. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்மினதும் இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடியினதும் முட்டாள் தனமான முடிவுகளே இந்நாடுகளில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொரோனாவிற்குப் பலியாகக் காரணம். இன்று உலகமெங்கும் வளர்முக நாடுகளில் கொரோனாவிற்கு மக்கள் பலியாவதற்கு முக்கிய காரணம் பிரித்தானிய, அமெரிக்க அரசுகளின் பணத்தாசை மட்டுமே. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பதவிக்கு வரும்வரை கொரொனா தடுப்பூசியின் உரிமத்தை சிறிதுகாலத்திற்கு விட்டுக்கொடுப்பதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் பதவிக்கு வந்த பின் அதனை அடக்கியே வாசிக்கின்றார்.

கொரோனா தடுப்பூசிக்கான உரிமம் விட்டுக்கொடுக்கப்பட்டு இருந்தால் உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பு வக்சின் உருவாக்கப்பட்டு கூடிய விரைவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் பெரும் தடையாக உள்ளன. இவர்களே இன்றைய கொரோனா கொலையாளிகள். தங்களுக்கு தேவையான போது மனித உரிமை அரசியலைத் தூக்கிப் பிடிக்கும் இவர்கள் இப்பொழுது தங்களால் பல்லாயிரக் கணக்காண மக்கள் கொல்லப்படுவதை நாசுக்காக மூடி மறைக்கின்றனர். இவர்களுடைய மேற்குலக பிரச்சார ஊடகங்களும் அதனை கண்டும் காணாமல் மௌனமாய் உள்ளன. தமிழ் தேசிய வைரஸ்களைப் போன்றவர்களே இன்னும் இந்த காலனித்துவத்திற்கு அடிமைச்சானம் எழுதிக்கொடுத்துவிட்டு கதையளந்து திரிகின்றனர்.

பொது மக்களின் வரிப்பணத்திலும் உலகெங்கும் இருந்து பெறப்பட்ட தகவலையும் அறிவையும் கொண்டு தயாரிக்கப்பட்ட வக்சீனுக்கு இப்பொது ஒரு சில உலகப்பெரும் மருத்துவ நிறுவனங்கள் உரிமம் பாராட்டுகின்றன. ரஸ்யாவினதும் சீனாவினதும் வக்சீனே இன்று வளர்முக நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வக்சீனை உற்பத்தி செய்து பிரித்தானியாவுக்கு வழங்கிய இந்தியாவுக்கே தன்னிடம் உள்ள வக்சினில் ஒரு பகுதியயை பிரித்தானியா வழங்க மறுத்திருந்தது சில வாரங்களுக்கு முன் வந்த செய்தி.

சுற்றத்தில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்காமல், கேட்காமல், தீரவும் விசாரிக்காமல் சார்ள்ஸ் நிர்மலநாதன் என்ற வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர், “இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை” என்று பாராளுமன்றத்தில் முழங்கினார்; அல்ல யாருக்கோ முதுகு சொறிந்தார்.

உலகில் கொரோனாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ பொலிஸ் அதிகாரம் உடைய நாடுகளே. அந்தக் கட்டமைப்புத் தான் அந்நாடுகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவியது. (அது மட்டுமே காரணம் அல்ல என்பதையும் குறித்துக்கொள்க.) அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையும் ஒப்பீட்டளவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு இலங்கையின் இராணுவக் கட்டமைப்பும் ஒரு காரணம் என்பதை மருத்துவத்துறை சார்ந்தவர்களே ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் விட்ட அறிக்கைகளில் வடக்கு கிழக்கில் கொரோனா தடுப்பு மையங்களை உருவாக்குவதற்கே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தாங்களும் ஏதோ அறிக்கை வெளியிட வேண்டும், பாராளுமன்றத்தில் முழங்க வேண்டும் என்பதற்காக சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அறிக்கை விடுவது பின்னர் அதுபற்றி மௌனமாக இருப்பது என்பது இவர்களுடைய சாக்கடை அரசியல் தந்திரம். அதற்கு தானும் சளைத்தவன் அல்ல என்பதை சாரள்ஸ் நிர்மலநாதன் நிரூபித்துள்ளார். “சுகாதாரத்துறையினர் செய்ய வேண்டிய வேலைகளை இராணுவத்தினர் செய்வதனாலேயே நாடு தற்போது பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த செயற்பாடு தொடர்ந்தால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது” என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்து உள்ளார். எதை எதிர்ப்பது எதை ஆதரிப்பது என்ற விவஸ்தையே இல்லாத முட்டாள்களை பாராளுமன்றம் அனுப்பியதன் விளைவை தமிழ் மக்கள் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.

இந்த தமிழ் தேசிய வைரஸ்களுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டால் எஞ்சியுள்ள தமிழ் சமூகமும் அழிந்துபோய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு விடயம் பற்றி பேசுவதாக இருந்தால் அதனைப் பற்றி தேடி ஆய்வு செய்து பேச வேண்டும். இல்லையேல் தெரியாத விடையத்தை பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தெரியாத விடையத்தை தெரிந்தது போல் காட்டி இப்படி ஊதிக்கெடுக்கின்ற ஆண்டிகள் சேர்ந்து தமிழ் மக்களுக்கு தமிழீழ மடம் கட்டித் தர வெளிக்கிட்டு உள்ளனர். இவர்கள் மடம் கட்டுகிறார்களோ இல்லையோ தமிழ் மக்களுக்கு கொல்லி வைப்பது என்றே விறகுக்கட்டைகளுடன் வலம்வருகின்றனர். ஜாக்கிரதை!

2021ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் !

2021ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வருடத்துக்கான இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடாத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்திருந்தது.

எனினும், தற்போது இந்தியாவில் நிலவி வரும் கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த போட்டித்தொடரை இலங்கையில் நடாத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் இந்திய அதிகாரிகள் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற்போடப்பட்டது லங்கா பிரீமியர் லீக் !

இம்முறை இடம்பெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரை ஒத்தி வைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை ஆராய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொவிட்-19 பரவலை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரை எதிர்வரும் யூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துவது தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் ஆராய்ந்து வருகின்றது.

இதற்மைய, எதிர்வரும் நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த போட்டித் தொடர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரெஞ்ச் ஓபன் தொடர் – தகர்க்கப்பட்டது செரீனா வில்லியம்ஸின் சாதனைக்கனவு !

உலகின்  தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 1999-ம் ஆண்டு முதன்முதலாக கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றார். தொடர்ந்து டென்னிஸில் ஜாம்பவானாக திகழ்ந்த இவர், இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடைசியாக 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபனை கர்ப்பிணியாக இருந்தபோதே வென்றார்.
குழந்தை பெற்ற பிறகு சிறிது காலம் விளையாடவில்லை. அவர் தற்போது வரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இன்னும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுவிட்டால், கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை அதிகமுறை வென்ற மார்கரெட் கோர்ட் (24) சாதனையை சமன் செய்துவிடுவார்.
தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபனில் எப்படியும் சாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினார். முதல் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21 வயதேயான இளம் வீராங்கனை ரிபாகினாவிடம் 6-3, 7-5 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்.
தோல்வியினை தொடர்ந்து பேசிய அவர்,  “பிரெஞ்ச் போனால் என்ன? விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
23 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள செரீனா களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபனை மூன்று முறை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்துடனான 20 ஓவர் போட்டித்தொடருக்கு இலங்கை அணிக்கு புதிய தலைவர் !

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கான இலங்கை அணியின் 20 ஓவர் போட்டி தலைவராக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான அவர் ஏற்கனவே ஒருநாள் போட்டிக்கு தலைவராக உள்ளார்.

குசல்பெரரா இலங்கை அணிக்காக 22 டெஸ்ட், 104 ஒருநாள் போட்டி மற்றும் 47 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

THAMILKINGDOM: ஊக்கமருந்து பரிசோதனை வலையில் சிக்கினார் குசால்

இலங்கை 20 ஓவர் அணிக்கு மலிங்கா தலைவராக செயல்பட்டு வந்தார். அவர் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் தசுன் ‌ஷனகா தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் நீக்கப்பட்டு குசால் பெரேரா தலைவராக தேர்வாகி உள்ளார்.

இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டிகள் வருகிற 23, 24 மற்றும் 26-ந்தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் 29, ஜூலை 1 மற்றும் 4-ந்தேதிகளில் நடக்கிறது.

பயணத்தடை நாட்களிலும் 2000க்கு குறையாத தொற்றாளர்கள் – 2இலட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று – ஏன்..? எதற்காக ..? யாருக்காக..? இந்த பயணத்தடை ?

கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்த தவறிவிட்டது என்பதே உண்மை. 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதற்கே அரசு நாட்டை முழுமையாக பல மாதங்கள் முடக்கியது. ஆனால் நாளாக நாளாக அது தொடர்பாக கவனம் செலுத்தப்படாமலேயே போய்விட்டது.

50,000 தொற்றாளர்களை அண்மித்த போதே இலங்கை மருத்துவ சங்கத்தின் அதிகாரிகள் பலரும் 14 நாட்கள் முழுமையான ஊரடங்கை அமுல்படுத்துமாறு வேண்டிய போதும் கூட பொருளாதாரத்தை காரணம் காட்டி அரசு முடக்க பின்வாங்கியது.

ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 600 ஆக பதிவாகி வந்த தொகை ஒரு கட்டத்துடன் கட்டுப்படுத்த முடியாததாகிவிட்டது. பின்பு நாளொன்றுக்கு 1000 தொற்றாளர்களும் அதனை தொடர்ந்து 2000 , 3000 என தொற்றாளர்கள் அதிகரித்துக்கொண்டே சென்றனர்.

May be an image of motorcycle, road and street

இந்த கட்டத்தில் கூட அரசு சுதாகரித்துக்கொண்டதாக தெரியவில்லை. பயணத்தடை அமுலில் இருப்பதாக கூறுப்படுகிறதே தவிர அது முழுமையான நடைமுறையில் என்பதே உண்மை. இங்கு காட்டப்பட்டுள்ள இந்தப்படம்  வெள்ளவத்தையில் எடுக்கப்பட்ட படமாகும். நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் இது போன்ற பல படங்களை காண முடிந்தது. இவ்வளவுக்கு அலட்சியமாக தான் நகர்ந்துகொண்டிருக்கின்றது இலங்கையின்  இந்த பயணத்தடை.

 

இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணி வரை 2,280 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் நாட்டில் இன்று மாலையுடன் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 1,656 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பயணத்தடை விதிக்கப்பட்டு சுமார் 20 நாட்களை அண்மிக்கின்ற நிலையில் கூட தொற்றாளர்களின் தொகை 2000க்கு குறைந்தபாடில்லை. அப்படியானால் ஏன்..? எதற்காக ..? யாருக்காக..? இந்த பயணத்தடை என்ற வினா எழுகின்றது.

எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதை போலவே கொரோனா கட்டுப்படுத்தல் என்ற விடயத்தில் அரசு தோற்று விட்டது என்றே சொல்ல வேண்டும். பாராளுமன்ற தேர்தலை அண்மித்த காலம் வரை அவ்வளவு கட்டுப்பாடாக கொரோனா தொடர்பான விடயங்கள் கண்காணிக்கப்பட்டன. ஆனால் இன்று எல்லா விடயங்களும் கண்துடைப்பாக மாறிப்போயுள்ளது. இந்த பயணத்தடை கூட கண்கெட்ட பிரகான சூரியநமஸ்காரம் போன்றதே.

அதிலும் கொடுமை இரண்டாவது கொரோனா அலைக்கு காரணமான ஆடைத்தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்குவதாகும். பலரும் ஆடைத்தொழற்சாலைகளை மூடுங்கள் என வேண்டுகோள் விடுத்தும் அரசு கவனம் செலுத்தியதாய் தெரியவில்லை. செலுத்தப்போவதாயுமில்லை. தடுப்பூசி விடயத்தில் கூட முன்களப்பணியாளர்களான வைத்தியசாலைத்தாதியர்களை அரசு கவனத்தில் கொண்டதாய் தெரியவில்லை.  இதனாலேயே அவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சருடைய நகர்வுகள் இன்னும் கேலிக்குரியதாக மாறிவருகின்ற நிலையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. களனியில் கொரோனாவை விரட்ட சடங்கு செய்தமை , சித்தவைத்தியரின் கொரோனாப்பாணியை ஆதரித்தமை மற்றும் அதனால் அங்கு அலை மோதிய மக்கள் கூட்டம் என பல முன்யோசனையற்ற செயற்பாடுகளுக்கு அவர் பொறுப்பு கூற வேண்டியவர். ஆனாலும் அவர் புரிந்து கொள்வதாயில்லை. அண்மையில் கூட அவரை குறித்த பொறுப்பிலிருந்து மாற்றுமாறு சில வைத்தியர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தமையும் நினைவிற்கொள்ளத்தக்கது.

சரி மக்களாவது பொறுப்புடன் நடந்து கொள்கிறார்களா என்றால் சிறிதளவு கூட சிந்திப்பதாயில்லை. ஒரு நாள் பயணத்தடை எடுத்தால் கூட கடைகளில் குவிந்து மொய்த்து விடுகிறார்கள். சரி என்னிடம் ஓரளவு பயணத்தடை நாட்களை தாக்குப்பிடிக்க கூடியளவிற்கு பொருட்கள் உள்ளன. போதும் என்ற திருப்தியில் யாராவது இருக்கிறார்களா என்றால் .., ஆகச்சிலரே நிலையயை உணர்ந்து செயற்படுகின்றனர். ஏனையோர் கொரோனாவை ஒரு விடயமாகவே பொருட்படுத்தவேயில்லை. சரி நம்மில் எத்தனை பேர் முகக்கவசங்களையேனும் முறையாக அணிகின்றோம்..,? நாம் முகக்கவசம் அணிவதும் , தலைக்கவசம் அணிவதும் பொலிஸாருக்காகவே தவிர நமது நன்மைக்காக என நாம் எண்ணும் வரை சில விடயங்கள் மாறப்போவதில்லை.

அரசியல் தலைமைகளும் மக்கள் மத்தியில் இது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவோராயில்லை. முடியுமானவரை வழமையான காழ்ப்புணர்ச்சி அரசியலை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனரே தவிர மக்களை விழிப்பூட்டுவதாயில்லை.

அண்மையில் “கொரோனா பரவலின் தற்போதைய நிலைமையை கவனத்தில் கொள்ளும் போது, இலங்கையின் நிலைமையானது இந்தியாவை விட மோசமானது” என சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் கலாநிதி சஞ்சய பெரேரா தெரிவித்திருந்தமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

தனித்து அரசாங்கத்தை மட்டுமே விமர்சிப்பவர்களாயிராது நாம் பாதுகாப்பாக இருப்பதுடன் நம் சார்ந்தவர்களையும் பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட முன்வர வேண்டும். விழிப்புணர்வுடன் இருங்கள். அரசாங்கங்கள் மாறிக்கொண்டுதான் இருக்கும். நம் சார்ந்த அன்பானவர்கள் பற்றி நாம் தான் சிந்திக்க வேண்டும். ஆகவே பொறுப்புடன் செயற்படுவோம்..!

சுயநலம் காப்பது  பொதுநலன் பேணுதற்கே..!