புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய பிரதேசங்களில் ஒன்றான ஆனையிறவின் தென்பகுதி பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் கூறினார். இதற்கமைய, ஆனையிறவுக்கு தெற்கே உள்ள கரையோர பகுதிகள் முழுவதும் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
கிளிநொச்சியை முழுமையாக விடுவித்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் யாழ். குடாவின் நுழைவாயிலான ஆனையிறவை நோக்கி முன்னேறி வந்தனர். பரந்தன், கிளிநொச்சியை கைப்பற்றிய இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தற்பொழுது ஆனையிறவுக்குள் பிரவேசித்துள்ளனர். இந்தப் படைப்பிரிவினர் கடந்த ஐந்து நாட்களுக்குள் பெற்ற மூன்றாவது பாரிய வெற்றி இதுவாகும்.
ஆனையிறவுக்கு தெற்கே தமிழ்மடம் கரையோரப் பிரதேசம் இராணுவத்திடம் முழுமையாக வீழ்ந்ததையடுத்து யாழ்ப்பாணத்தின் களப்பு பிரதேசம் பாதுகாப்பு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. அதேசமயம், பூநகரி – பரந்தன் வீதி, பரந்தன் ஆனையிறவு வீதி மற்றும் ஏ-9 வீதிக்கு தென் பகுதி முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனையிறவுக்குள் பிரவேசித்த படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் போது புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரிகேடியர், படையினரின் கடுமையான தாக்குதல்களில் பெருந்தொகையான புலிகள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனையிறவை புலிகளிடமிருந்து ஏற்கனவே மீட்டெடுக்கும் படை நடவடிக்கைகளின் போது முக்கிய பங்களிப்பை வகித்து இராணுவத்திற்காக தன்னை அர்ப்பணித்த ஹஸலக காமினியின் உருவச்சிலை ஒன்றும் ஆனையிறவு பிரதேசத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது படைவீரர்கள் அந்த உருவச் சிலையையும் தாண்டி, வடக்கே நோக்கி முன்னேறி வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஆனையிறவு பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள பாதுகாப்பு படையினர் தற்பொழுது தமது நிலைகளை மேலும் பலப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பரந்தனுக்குக் கிழக்காக அமைந்துள்ள முரசுமோட்டை பகுதியிலும் இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புலிகள் வன்னி நிலப்பரப்பில் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள பல முக்கிய பிரதேசங்களை நாளுக்கு நாள் இழந்து வருகின்றனர். புலிகள் பாவித்து வந்த பல விநியோக பாதைகளையும் பாதுகாப்பு படையினர் நாளுக்கு நாள் துண்டித்து வருகின்றனர். முகமாலை, செம்பியன்பற்று மற்றும் முல்லைத்தீவு ஆகிய தரை வழிப்பாதைகளின் ஒரு சில பகுதிகள் மாத்திரமே தற்பொழுது புலிகளிடம் எஞ்சியுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முல்லைத்தீவிலுள்ள ஒட்டு சுட்டான் பிரதேசத்திற்குள் நேற்று முன் தினம் பிரவேசித்த இராணுவத்தின் நான்காவது செயலணியினர் தற்பொழுது ஒட்டுசுட்டான் முழுவதையும் நேற்றைய தினம் விடுவித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். இதற்கமைய ஏ-32 பிரதான வீதியில் மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் வரையான பிரதேசம் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார். இதன் மூலம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்கள் ஊடாக புலிகள் முன்னெடுத்து வந்த பயங்கரவாத மற்றும் விநியோக நடவடிக்கைகளும் நிர்வாக செயற்பாடுகளும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.