டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது இரண்டாவது பதக்கத்தை சுவீகரித்துள்ளது.
F64 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் சமித் துவான் கொடிதுவக்குவினால் இந்த வெண்கலப் பதக்கம் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தப் தொடரின் மூன்று போட்டிகள் நிறைவுக்குவந்த நிலையில் இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் 3 டெஸ்ட் போட்டிகளில் 3 சதம் அடங்கலாக இதுவரை 500க்கும் அதிகமான ஓட்டங்களை குவித்து ஏராளமான சாதனைகளை படைக்க தயாராகிவிட்டார்.
இந்த நிலையில் கிரிக்கெட்டின் பிதாமகன் டொன் பிரட்மென் சாதனையையும் ரூட் முறியடிப்பார் என நம்பப்படுகிறது.
ஒரு ஆண்டில், ஒரு குறித்த ஒரு வீரர், குறித்த ஒரு அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்கள் என்ற சாதனையை பிரட்மன் 71 ஆண்டுகளாக வைத்திருக்கிறார். பிரட்மன் இங்கிலாந்து அணிக்கைதிராக 1930 ம் ஆண்டில் 9 இன்னிங்ஸ்களில் 974 ஓட்டங்களை ஒரே ஆண்டிலேயே விளாசித் தள்ளினார்.
இந்தியாவுக்கு எதிராக இதுவரை ஜோ ரூட் 13 இன்னிங்ஸ்களில் மொத்தம் 875 ஓட்டங்களை பெற்றுள்ளார், நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் இருக்கும் நிலையில் 100 ஓட்டங்களை பெற்றுக் கொள்வாராக இருந்தால், 71 ஆண்டு கால சாதனையை முறியடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
ஒரு ஆண்டில் அதிகமான டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர் என்ற மொகம்மட் யூசுப்பின் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 390 ஓட்டங்கள் தேவையான நிலையில் இந்த ஆண்டில் சாதனை புத்தகங்கள் எல்லாவற்றிலும் தன் பெயரை பதித்து விடுவார் என்றே எதிர்பார்கப்படுகிறது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய 4-வது ஆட்டத்திலேயே இங்கிலாந்து வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 630 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்று 2-வது இன்னிங்சில் ரஹானேவை வீழ்த்தியதன் மூலம் சொந்த நாட்டில் 400 விக்கெட்டை பதிவு செய்துள்ளா்.
94 டெஸ்ட் போட்டியில் 179 இன்னிங்சில் 3408.3 ஓவர்கள் வீசி 9,610 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து இந்த விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 42 ஓட்ங்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது ஒரு இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சாகும். ஒரு போட்டியில் 71 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகள் வீழ்த்தியது அவரின் சிறந்த பந்து வீச்சாகும்.
இதற்கு முன் இலங்கையை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் சொந்த நாட்டில் 493 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதன்பின் சொந்த நாட்டில் 400 விக்கெட்டை தாண்டிய ஒரே பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் , முதல் டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது டெஸ்டில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது.
இந்நிலையில் , 3-வது டெஸ்டில் விராட் கோலி நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தார்.
முதல் இனிங்சில் புதுப்பந்தில் ஆண்டர்சனின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 21 ஓட்டங்களுக்குள் கே.எல். ராகுல், புஜாரா, விராட் கோலி ஆகியோரை இழந்தது. அதன்பின் ஆலி ராபின்சன், சாம் கர்ரன், ஓவார்டன் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்ற இந்தியா 78 ஓட்டங்களில் சுருண்டது.
தொடர்ந்து முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 432 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அந்த அணி சார்பாக தலைவர் ரூட் சதமடித்து அசத்தியதுடன் ஏனைய வீரர்களும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தன்.
இனிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் நோக்குடன் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புஜாரா, ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்தியா 215 ஓட்டங்கள் வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. அதன்பின் 278 ஓட்டங்களுக்குள் முழு விக்கெட்டுக்களையுமே இழந்தது. முக்கியமாக கடைசி 8 விக்கெட்டுகளை 63 ஓட்டங்களுக்குள் இழந்து இனிங்ஸ் தோல்வியை சந்தித்தது இந்தியா.
2வது இன்னிங்சில் இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஓவர்டன் 3 விக்கெட் எடுத்தார்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதால் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4வது போட்டி செப்டம்பர் 2ம் தேதி தொடங்க உள்ளது.
போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைவராக அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். இந்த வெற்றி இங்கிலாந்து தலைவராக ஜோ ரூட்டுக்கு 27-வது வெற்றியாகும்.
என் செல்வராஜா ஒரு நூலகம்! தற்போது தெற்கில் அவரின் பெயரில் ஒரு நூலகம் உருவாகின்றது!
இலங்கையர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் பற்றி பத்திரிகைகளில் வெளிவந்து மறைந்த போதும் இலைமறை காயாக சில உறவுகள் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் மலர்ந்து நறுமணம் கமழ்கின்றது. 1981 மே 31 இரவு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட துன்பியல் நிகழ்வினால் தெற்கில் இன்றும் பலர் மனவேதனையிலும் வெப்பிகாரத்திலும் இருப்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. அப்படிப்பட்டவர்கள் இணைந்து நூலகவியலாளர் என் செல்வராஜாவின் வாழ்நாள் சேவையை கௌரவிக்கும் வகையில் அவருடைய பெயரில் தெற்கில் ஒரு சிறு நூலகம் அமைக்க முன்முயற்சிகள் எடுக்கப்படுகின்றனர். நூலகவியலாளர் என் செல்வராஜா பற்றி சந்தரெசி சுதுசிங்ஹ The Colombo Post என்ற இணையத்தில் வெளியிட்ட பதிவின் தமிழாக்கம் தேசம்நெற் இல் பிரசுரிக்கப்படுகின்றது.
._._._._._.
தெற்கில் நூல்களை வாரி வழங்கும் தமிழ் நேசகன்!
இந்தியா மீதுள்ள எனது பற்றை தகர்த்து என்னை தன் வசப்படுத்தி இந்திய நட்பை காட்டிலும் யாழ்ப்பாண உறவு பாலத்தை கட்ட வேண்டும் என்று மனதுக்குள் ஒலிக்கிறது. அந்த உறவை நினைக்கையில் விட்டுக்கொடுக்க முடியாத உணர்வு ஏற்படுகிறது. எனது உண்மையான உணர்வை மறைத்து மனதை அடக்கி வைக்க எனக்கு இஷ்டம் இல்லை. எனக்கு அவர் மீது காதல் தோன்றுகிறது? எவ்விடத்திலும் துணிச்சலுடன் அதை எடுத்துக்கூற தயங்கமாட்டேன். உறவு என்பது காதலை தவிர வேறு என்ன? அப்படிப்பட்ட நேசத்திற்குரிய மனிதரைப் பற்றிய பாசக் கதைதான்.
இக்கதையின் நாயகனை பற்றி கலாநிதி உருத்திரமூர்த்தி சேரன் என்னிடம் கூறினார். இடைவிடாது கேட்கும் கேள்விகளுக்கு பதில்களை கூறுவதும் அப்பதில்கள் உயிரோட்டம் கொண்டிருப்பதும் அவரது தனித்துமே. அப்படி ஒரு விடைக்காக அறிமுகப்படுத்திய மனிதர் தான் பல்லாயிரம் கேள்வி கனைகளுக்கு பதிலாக
இருப்பவர் தான் நடராஜா செல்வராஜா அவர்கள்.
செல்வராஜா என்பவர் இலங்கையில் மட்டுமல்லாமல் உலக நூலக வரலாற்றில் மிளிரும் தாரகை. அறிவு, மனிதநேயம் நிறைந்த படைப்பே இத்தாரகை. அவ்வப்போது எனக்கு தேவையான தகவல்களை இந்த பதில் கூறும் மனிதரிடம் பெற்றுக்கொண்டேன். இவர் இலங்கை திருநாட்டுக்கு மட்டுமல்லாது முழு ஆசிய பிராந்தியத்திற்குமே பெருமைக்குரிய சின்னமாக விளங்குகிறார். பிரித்தானிய வழங்கும் IPRA (பொதுமக்கள் தொடர்புக்கான விருது) என்ற விருதை பெற்ற முதலாவது இலங்கையாராகவும் ஆசிய இனமாகவும் இவர் கொண்டாடப்படுவதே இதற்கு காரணம். இவர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நூல்களின் பட்டியலை தயாரித்தவரும் மனிதநேயம் கொண்ட மனிதர்களுக்கு முற்போக்கான பதிலும் இவரே.
நடராஜா செல்வராஜா:
அண்மை காலத்தில் இவர் வடக்கிலும் தெற்கிலும் நூலகங்களின் தொடர்பினை ஏற்படுத்தி கொடுத்த இவர் தன் தலையாய கடமையாக அதனைச் செய்தார். ‘வெள்ளவத்தையில் இந்த நூலகத்திற்குச் செல்லுங்கள், இதோ அந்த நிறுவனத்தின் தொலைபேசி இலக்கம், யாழ்ப்பாணத்தில் இதோ இந்த இடத்தில் தகவல்களை பெறலாம்’ என்று தங்கையை போல என்னை வழிநடத்திய இவர் யாழ்ப்பாண காதலின் இன்னுமொரு மைல்கல்லாக நிற்கின்றார்.
அண்மையில் நான் ‘புத்தகமும் நானும்’ என்ற நிகழ்ச்சியின் நெறியாளர் மஹிந்த தசநாயக்க பற்றி ஒரு குறிப்பை எழுதினேன். அதை பார்த்துவிட்டு அண்ணன் செல்வராஜா என்னையும் மஹிந்த அண்ணாவையும் அழைத்து சுவாரசியமான ஒரு கதையைச் சொன்னார்.
‘நான் உங்களுக்கு புத்தகங்களை தருகிறேன். ஆனால் அவற்றை வடக்கிலோ மலையகத்திலோ இருக்கும் தமிழ பிள்ளைகளுக்கு கொடுப்பதற்கு அல்ல. இங்குள்ள சிங்கள பிள்ளைகளுக்குத் தான் நான் அவற்றை கொடுக்கின்றேன் என்றார்’. அந்த பதில் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் ஆணித்தனமாக அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். எங்கள் கேள்வி ஏக்கங்களுக்கு இவ்வாறு விளக்கம் கொடுத்தார்.
‘இதுதான் விஷயம். நான் “Book Abroad” நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு பெரும் எண்ணிக்கையான நூல்களை அனுப்புகிறேன். கொல்களன் கணக்கில் அனுப்புகிறேன். நாங்கள் வடக்கில் பிள்ளைகளுக்கு அவற்றை பகிர்ந்தளிக்கின்றோம். அதேபோல மலையகச் சிறுவர்களுக்கும் அனுப்புகிறோம். ஆனால் ஒன்றை மறந்துவிட்டோம் அதுதான், வடக்கிலுள்ள பிள்ளைகளுக்கு வெளிநாட்டிலிருந்து கொடையாளர்களிடமிருந்தும் இன்னும் பல வழிகளிலும் இப்படி புத்தகங்கள் கிடைத்தாலும் சிங்கள பிள்ளைகளுக்கு அரசாங்கமோ வேறு நிறுவனங்களோ இப்படி புத்தகங்களை வழங்குவதில்லை என்ற விடயம். அதனால் தான் சொல்கிறேன், இப்புத்தகங்களை பின்தங்கிய கிராம புறங்களைச் சேர்ந்த சிங்கள பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டுமென்று. நான் அனுப்புகின்ற புத்தகங்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன. அவற்றை நான் தருகிறேன். அதேபோல ஆங்கில புத்தங்களுக்கு மேலதிகமாக சிங்கள புத்தகங்களை வாங்க நான் பணம் தருகின்றேன்’. இப்படி கூறிய அவரை கௌரவிக்கும் முகமாக நாங்கள் பின்தங்கிய கிராமங்களை தேடிச் சென்று புத்தகங்களை பெற்றுக்கொடுக்க பணியாற்றுவோம்.
நாங்கள் எப்போதும் நூலக வசதிகளே இல்லாத பாடசாலையைத் தேடிப் பிடித்து நூலகமொன்றை உருவாக்குவதற்கு முயற்சிப்போம். நன்றியுணர்வை வெளிப்படுத்துவதற்காக அவரது பெயரை ‘நடராஜா செல்வராஜா’ அந்நூலகத்திற்கு சூட்ட முடியுமென்றால் அதுவே இச்சமூகத்திற்கு சிறந்த ஒரு செய்தியாக அமையக்கூடும். வடக்கில் நூலகங்களுக்கு தீ வைத்த இருண்ட நினைவுகள் இருக்கும் தருவாயில், வடக்கிலிருந்து தெற்கிலுள்ள சிங்கள பிள்ளைகளுக்காக இதுபோன்ற கருணை காட்டுவதன் மூலம் வெளிப்படுத்தப்படுவது என்னவெனில், அவர்களுக்கும் எமக்கும் எவ்வித இடைவெளியும் இல்லை என்பதையும், எம்மிடையே பிரிவினை, மோதல் இருப்பதாக கூறிவரும் பலருக்கு அது தவறான புரிதல் என்பதை உணர்த்தும். தற்போது நாம் அதற்காக உழைக்கின்றோம்.
நன்றாக சிங்களத்தில் உரையாற்றும் இவருக்கு தென்னிலங்ககையில் பலர் இருக்கின்றார்கள். நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் (இன்றைய விஜயரத்தினம் மகா வித்தியாலயம்) கல்வி பயின்ற இவர் இலங்கை நூலக விஞ்ஞான சங்கத்தில் டிப்ளோமா பெற்றவராவார். ‘தங்கை, நம் இரு சமூககங்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் கிடையாது சிங்கள, தமிழ் என்று அரசியல் வாதிகளுக்குத் தான் பிரச்சினை உள்ளது’ அப்படித்தான் அவர் சுருக்கமாக கூறுவார். எனது யாழ்ப்பாண மக்கள் நமக்கும் தென்னிலங்கை மக்களுக்கும் இடையில் குரோதம் இருப்பதாக என்னிடம் ஒருபோதும் கூறியதில்லை.
‘தங்கை தாங்கள் என் மூத்த மகளை விட ஒரு வயது இளையவர்.. உங்களை போன்றவர்கள் இந்த நிலத்திற்கு பெறுமதிமிக்கவர்கள்’. அவர்களது அன்பில் நாம் எம்மை காணுகிறோம். செல்வராஜா என்ற மனிதர் இந்நாட்டில் வடக்கு தெற்கு பிரிவினையை மறந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாசிக்க கூடிய ஒரு புத்தகம் போன்றவர். நாங்கள் அப்புத்தகத்தை வாசிக்கின்றோம். இப்புத்தகம் நாட்டின் தமிழ் சிங்கள அனைவராலும் அன்போடு நேசிக்கும் புத்தகமாக அமையுமென நம்புகின்றோம்.
நான் யாழ்ப்பாண நேசகி,
சந்தரெசி சுதுசிங்ஹ
மாத்தறையிலிருந்து
sandaraseepriyathma@gmail.com
ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலமையை மேலும் புரிந்து கொள்ளவதற்கு 1970 களில் நிலவிய பூகோள அரசியலை எமது நாடு இலங்கையுடன் இணைத்து பார்போம்…
வல்லரசுகள் ஆசியாவிற்கான நுளை வாயிலாக மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானை பாவிக்க முற்பட்ட சம காலத்தில் ஆசியாவின் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் அமெரிக்கா தனது செல்வாக்கை நிறுவ முயன்ற நிகழ்வும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அதற்கு ஏதுவாக அன்றைய ஜேஆர் இன் தேர்தல் வெற்றியும் அவரின் அமெரிக்க நலன் சார்ந்த ஆட்சியும் அமைந்தன. இதன் முக்கிய அம்சம் திறந்த பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியதும் ஆகும்.
ஜேஆர் அமெரிக்காவிற்கான செய்தித் தொடர்பு நிலையம் ஒன்றை சிலாபத்தில் அமைக்க அனுமதி வழங்க முற்பட்ட நிலையில் இதற்கு இந்தியாவின் பிரதம மந்திரி இந்திரா காந்தி தனது ஆட்சேபனையை தெரிவித்தார். இதனையும் மீறி இலங்கையில் அமெரிக்காவின் பிரசன்னத்திற்கு பச்சை கொடி காட்டிய ஜேஆர் இற்கு பாடம் கற்பிக்க முயன்றார் இந்திரா காந்தி.
சோசலிச சோவியத் முகாமுடன் நெருங்கிய உறவை கொண்டிருந்த இந்திரா காந்தியின் செயற்பாடுகளை ‘இந்திரா காந்தியின் சோசலிச செயற்பாடுகள்” என்று பேசும் அளவிற்கு நிலமைகள் இருந்தன அன்று. அந்த அளவிற்கு சோவித்த யூனியனுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கமும் பரஸ்பர இராணுவ பொருளாதார பரிமாற்றங்களும் இருந்தன. இந்தியாவை மீறி இலங்கை விடயத்தில் யாரும் தலையிடுவதை அனுமதிக்காத செல்வாக்கு பலமும் அன்று இந்தியாவிடம் இருந்தது.
இலங்கையில் இன ஒடுக்கு முறையிற்கு உள்ளாகியிருந்த சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுதல் என்ற முடிவிற்குள் தம்மை தகவமைத்து செயற்பாட்டை தொடங்கியிருந்து 1970 களின் பிற்கூற்று நிலமைகளை இந்திரா காந்தி ஜேஆருக்கு பாடம் கற்பிப்பதற்கு தனக்கு சாதகமாக பாவிக்க முற்பட்டார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்றவைதான் ஈழவிடுதலை அமைப்புகளுக்கான ஆதரவும் இந்தியாவின் பயிற்சிகளும் ஆகும்.
சற்று ஆழமாக பார்த்தால் புரியும் ஆசியாவிற்கு தமது காலடியை வைக்க மத்திய ஆசியா ஊடாக ஆப்கானிஸ்தானிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையையும் அமெரிக்கா, சோவியத் யூனியன் என்ற இரு முரண்பட்ட முகாங்களின் வல்லரசுகளும் முனைந்ததன் வெளிப்பாடுகள் 1970 களின் நடுப்பகுதியில் கரு கொண்டிருந்தன. அதற்கான செயற்பாடுகள் இவ்விரு நாடுகளிலும் நடைபெற்றன.
சோவியத் யூனியன் இலங்கையை தனது நட்பு நாடான இந்தியா ஊடாகவும் ஆப்கானிஸ்தானை தனது எல்லை நாடாகவும் பாவித்தது. அமெரிக்கா இலங்கையை தனது வலதுசாரிக் கூட்டாளி ஜேஆர் ஊடாகவும் ஆப்கானிஸ்தானை தனது இராணுவக் கூட்டாளி பாகிஸ்தான் ஊடாகவும் கையாண்டன.
இந்தியாவுடனான பகையை கடன் தீர்க்க பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் முஸ்லீம் அடிப்படைவாத தீவிரவாதத்தை தனக்கு சாதமாக அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் பாவித்தது. கூடவே அமெரிக்காவும் இந்திய சோவியத் நட்பிற்கு பாடம் கற்பிக்க இதனையே பயன்படுத்தியது.
இதன் வெளிபாடுகளும் அமெரிக்காவின் சோவியத்திற்கும் சோசலிசத்திற்கும் எதிரான செயற்பாடுகளை செயற்படுத்த ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லாவின் அரசை அழிக்க உருவாக்கப்பட்டவைதான் ஆப்கானிஸ்தான் முஹாஜிதீன்களும் அதனைத் தொடர்ந்து உருமாற்றம் அடைந்த தலிபான்களும் ஆகும். இதற்கான முழுப் பொறுப்பும் அமெரிக்கா அதன் கூட்டாளி நாடுகள் நேட்டோவையும் சாரும். இந்த சர்வ தேச பின்னணியின் அடிப்படையிலேயே ஆப்கானின் பிரச்சனையை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஈழவிடுதலை அமைப்புகளில் ஒரு பிரிவினர் இடதுசாரிக் கருத்தியலை தமது அடிநாதமாக கொண்ட செயற்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு கரம் கொடுப்பது போன்று தனது சொல் கேளாத அமெரிக்காவின் பிரசன்னத்தை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உருவாக முயன்ற இலங்கை அரசிற்கு பாடம் புகட்ட ஆயுதப் பயிற்சியும் ஆதரவும் வழங்கிய நிகழ்வுகளைப் போல் 1970 களின் பிற்பகுதியில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றன.
ஆப்கானிஸ்தானில் முழு ஆப்கானித்தானும் முஸ்லீம்கள் என்ற அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி போராட்டத்தை தகவமைத்தாக பொது பார்வையில் பார்க்கப்பட்டாலும் இங்கும் பஷ்தூன் மக்களின் பெருபான்மை நலன்களை முன்னிறுத்திய போராட்டமாக அது இன்றுவரை பெரும்பாலும் கருக்கொண்டு செயற்பட்டு வருவது கவனத்தில் எடுகப்பட வேண்டிய விடயம்.
பாகிஸ்தான் மதராசா பள்ளியில் கற்ற மாணவர்களின் பிரசன்னம் அதிகம் உள்ள தலிபான்களின் அடிநாதமாக விளங்குவதும் இதுதான். அதுதான் தலிபான்களைத் தவிர்த்து வேறு விடுதலை அமைப்புக்களும் உருவாகி செயற்படுவதற்கான காரணமும் ஆகும்.
இலங்கையில் பெரும்பான்மை பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான சிறுபான்மை மக்களின் போராட்டமாக ஈழவிடுதலைப் போராட்டம் கருக் கொண்டிருந்தது. இங்கு பிரிவினைவாதம் முன் நிறுதப்பட்டதால் தனி நாடு என்று கோரிக்கை சார்ந்த போராட்டம் ஒரளவிற்கு மேல் சோவியத் இந்திய ஆதரவுச் செயற்பாடுகள் க(ம)ட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தன.
1970 களில் தாம் சீனச் சார்பான இடதுசாரிக் கருத்தியலாளர்கள் என்ற வடிவத்தில் தமிழ் பேசும் மக்களை இணைத்துக் கொள்ளாமல் முழு இலங்கையிற்குமான புரட்சி என்று போதுமான அளவு தயாரிப்புகளில் ஈடுபடாத ஜேவிபின் இலங்கையின் அரசை கைப்பற்றும் புரட்சி இந்திய இராணுவத்தின் உதவியுடன் தோற்கடிக்கப்பட்டதன் பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் பேசும் மக்களையும் இணைத்துக் கொண்டு போதிய தயாரிப்புகளுடன் சோவியத் சார்பு நிலைப்பாட்டுடன் புரட்சி ஒன்றை இலங்கையில் நடாத்தியிருந்தால்…. ஜேவிபின் இலங்கை அரசைக் கைப்பற்றுதல் வெற்றி பெற்றிருக்குமோ என்ற கருதுகோளை புறந்தள்ள முடியவில்லை.
அன்றை அமெரிக்க சோவியத் இந்தியா சீனாவின் அரசியல் ஒழுங்குகள் இதற்கான வாய்புக்களை அதிகம் கொண்டிருந்தன.
இங்கு ஜேவிபி பிழையான தந்திரோபாய அடிப்படையிலும் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்து ஆனால் கிட்டத்தட்ட சம காலத்தில் ஆப்கானிஸ்தானில் ஆப்கானிய கம்யூனிஸ்ட்களின் மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றியும் இடதுசாரி ஆட்சியும் அமைந்ததற்கான வாய்புகளையும் நாம் இவ்வாறுதான் இலங்கை நிலமையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
இந்த சமாகால பூகோள, பிராந்திய, ஆசிய, இந்து சமுத்திரச் சூழலை அடிப்படையாக கொண்டுதான் ஆப்கானிஸ்தான் வரலாறு. நஜிபுல்லாவின் கொலையும் அதனைத் தொடர்ந்த உள்ள நாட்டுப் போரின் இறுதியில்தான் 1996 ல் தலிபான்களின் முதல் தவணை ஆட்சி ஆப்கானில் உருவானது.
இது முஹாஜீதீன்கள் பஷ்தூன்களை பெருபான்மையாக கொண்ட பழங்குடி மக்கள் பாகிஸ்தான் மதராசில் கல்வி கற்ற மாணவர்களை கொண்டு உருவானவர்களால் தலிபான என்ற அமைப்புதான் அது. இதற்கான தலமைப் பொறுப்பை முஹாஜீதின் தலமைப் பொறுப்பில் இருந்த முகமது உமர் நியமிக்கப்பட்டார்.
இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை அடி நாதமாக கொண்டு உருவான அரசு பல வகையிலும் அந்த மக்களுக்கான சரியான ஆட்சியை வழங்கவில்லை. ஆப்கானிஸ்தானில் வாழும் பலவேறு இனக்குழுக்ளை ஒருங்கிணைத்து சமமாக கையாளுதல் ஆண் பெண் சத்துவம் குறிப்பாக பெண்களுக்கான கல்வி உரிமை உட்பட்ட சகலதையும் மறுத்த நிலமை ஆட்சியில் கோலோச்சியது.
போதை பொருட்களை உலக சந்தையில் அதிகம் ஊக்கிவித்த உற்பத்திச் செயற்பாடுகள்… பாகிஸ்தானின் இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாத்தை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்…. இதில் அனேகம் அமெரிக்காவின் வேண்டுதலை பாகிஸ்தான் ஊடாக செயற்படுத்தியவை அடங்கும இந்தியா மீதான இஸ்லாமிய மத அடிப்படைவாதத் தாக்குதல்கள் என்று பலதையும் செயற்படுத்தும் ஒரு தளமாக ஆப்கானிஸ்தானும் அதன் தலிபான் அரசும் செயற்பட்டன.
மாறாக பல வருடங்களாக யுத்தம், வல்லரசுகளினால் உருவான ஸ்திரமற்ற அரசு என்று சின்னா பின்னப்பட்டுப் போன நாட்டை கட்டியமைக்க அவர்களால் முடியவில்லை. கூடவே அவர்களுக்கு நேரடி ஆதரவுக்கரமான பாகிஸ்தானின் விருப்பமும் அதுவாக இருக்கவில்லை.
மதத் தீவிரவாதத்தின் தீவிரவாதிகளின் முகாங்களை அமைக்க உதவும் ஒரு நிலமாக மலைப் பிரதேசமாக அதிகம் ஆப்கானிஸ்தான் பாவிக்கப்பட்டது.
ஒரு ஜனநாயக முற்போக்கு மக்கள் நலன்சார்ந்த அரசை செயற்பாட்டை தலிபான்கள் முன்னெடுக்கவில்லை. இதனை மாற்றயமைக்கும் வல்லமையும் மக்களிடம் இருக்கவில்லை. தலிபான்களுக்கு எதிராக செயற்பட்ட ஏனைய சிறுபான்மை மக்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்திய வடக்கு கூட்டணியும் இதனை செய்து முடிக்க முடியவில்லை.
இந்நிலையில் 9/11 என்று அறியப்பட்ட அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலும் இதனைச் செயற்படுத்தியதாக உரிமை கோரிய அல்கைதாவின் இருப்பிடம் ஆப்கானிஸ்தான் என்றும் அமெரிக்காவினால் கூறப்பட்டு பின் லாடனை தம்மிடம் ஒப்படைக்குமாறு தலிபான்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு பின்னால் வளங்களை திருடுவதற்கான சந்தர்பங்களைப் பார்த்திருந்தி அமெரிக்க அரேபிய எண்ணையும் ஆப்கானிஸ்தான் மலைகளில் செறிந்திருக்கும் 7 ட்ரிலியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலான வளங்களையும் திருடுவதற்கு இரட்டைக் கோபுரத் தாக்குதலின் சூத்திரதாரி ஒசமா பின் லாடன் ஆப்கானிஸ்தரின் மறைந்திருப்பதாக கூறிக் கொண்ட ஆப்கானிஸ்தானிலும்… அபாயகரமாக இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கின்றார், சதாம் குசைன் என்று ஈராக் மீதும் படையெடுத்து.
இத்தனைக்கு வரலாற்றுப் போக்கில் ஒசமா பின் லாடன் சவூதியரேபிய பிரஜை மேலும் அவர் கொல்லப்பட்டது அமெரிக்காவின் உற்ற இராணுவத் தோழன் பாகிஸ்தானில். இவ்விரு நாடுகளுடனும் இன்று வரை அமெரிக்கா நல்ல நண்பன் என்ற உறவிலேயே இருக்கின்றது என்பது வேடிக்கையான விடயம். மனித குலம் அமெரிக்காவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டியது இந்தக் குற்றங்களின் அடிப்படையில் என்பதுதான் இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம்.
என்னென்ன காரணங்களுக்காக அமெரிக்கா தனது படைகளை அனுப்பி ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் லிபியாவை கைபற்றியேதா அவை ஏதும் உண்மை இல்லை என்றாகிவிட்ட நிலையில் ஐ.நா.வின் மனித உரிமை சபையில் இந்த குற்றங்களை புரிந்தமையிற்காக அமெரிக்க ஐரோப்பிய நேட்டோ கூட்டமைப்பை நிறுத்தப் போவது யார்…?
இவ்வாறான பூகோள அரசியல் நிலமையில் இலங்கை மக்கள் சிறப்பாக தமிழ் பேசும் மக்கள் தமக்கான அரசியல் தீர்வை இதே அமெரிக்கா அதன் நட்பு சக்திகள் பெற்றுக் கொடுக்கும் என்று இலவுகாத்தி கிளியாக இருப்பது ஆப்கானிஸ்தான் பாடங்களை நாம் புரியாதவர்கள் என்றே ஆகிவிடும்.
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 03 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 3
தேசம்: இளந்தளிர் வாசகர் வட்டம் தொடர்பில் கதைத்திருந்தோம். அந்த நேரம் உங்களுக்கு கிட்டத்தட்ட 15 வயது வந்திருக்கும். அந்த காலகட்டத்தில் உங்களுடைய தந்தையார் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அப்போது எத்தனை வயது உங்களுக்கு?
அசோக்: அப்பா இறக்கும் போது, எனக்கு பத்து வயது இருக்கும் என்று நினைக்கிறன்.
தேசம்: அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு…
அசோக்: பெரிதாக ஞாபகம் இல்ல. கொஞ்சம் ஞாபகம் இருக்குது. அப்பாக்கு தொடர்ந்து அஸ்மா தான். மட்டக்களப்பில் செல்லையா டாக்டர் என்று ஒருத்தர் இருந்தார். டிசம்பர் மாத காலத்தில், அப்பா எங்கட வீட்டில் இருக்கிறேல. Paying ward என்டு காசுக்கட்டி, செல்லையா டாக்டரிட வார்டில அப்பா அட்மிட் ஆகிடுவார். அந்தக் காலம் அங்கதான் அப்பா இருப்பார். ஏனென்றால் மார்கழி மாதக்குளிரில் அப்பாவுக்கு வருத்தும் கூட.
தேசம்: அந்த காலகட்டத்தில அப்பா ஓய்வு பெற்றுவிட்டாரா?
அசோக்: ஆம். அப்பா ஓய்வு பெற்றிட்டார். செல்லையா டாக்டரிட வாட்டிலதான் அப்பா இறந்தார். அம்மாவின் மடியில்தான் அப்பா இறந்தாக, அம்மா சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். நான் கடைசி ஆள் என்றபடியால், நான்தான் கிரியை செய்ய வேண்டும். அப்ப மொட்டையடித்து கொள்ளி வைத்தது அதெல்லாம் ஞாபகம் இருக்கு.
தேசம்: அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான உறவு நிலையை எப்படிப் பார்க்கின்றீர்கள்? அவர்கள் விரும்பித் தான் செய்தவை. அவர்களுக்குள் சமத்துவம் இருந்ததா?
அசோக் : அப்ப தெரியல. ஆனால் இப்ப பார்க்கேக்கை, அப்பாட்ட ஒரு அதிகாரத்தனம் இருந்தது. தலைமை ஆசிரியரும் தானே அப்பா. அரசியல் ரீதியாக அப்பா ஒரு தமிழ்த் தேசியவாதியாகவும், பெரியாரிஸ்டாக இருந்தாலும், கூட வீட்டில ஒரு சட்டம்பியாகத்தான் இருந்தார். எனக்கு தெரிய படங்கள் எல்லாம் அவர் சொல்ற படங்கள் தான் அக்காக்கள் பார்க்க வேண்டும்.
தேசம்: பெண்களை பாதுகாக்கிற ஒரு எண்ணம்…
அசோக்: ஓம், சிவாஜி படங்கள் தான் பார்க்க வேண்டும். வேறு யாருடைய படங்களையும் பார்க்க கூடாது.
தேசம்: தன்னுடைய விருப்பங்கள் சார்ந்து செய்றார்.
அசோக் : சத்தியாகிரக போராட்டத்தில் அம்மா திருகோணமலைக்கு ஊர்வலமாக போனார் என்பது எங்களுக்கு முற்போக்காக பட்டாலும் கூட அது, அப்பாவினுடைய அபிலாஷையாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறன். அம்மா விரும்பி இருக்கலாம். ஆனால், அம்மாவுக்கு பெரிய ஒரு சுதந்திர வெளி இருந்ததாக தெரியவில்லை. ஆனால், அதற்காக அடக்குமுறை அடிப்பது அதுகள் இல்லை. ஆனா ஒரு ஆணாதிக்க தனம்தான் அப்பாவிடம் இருந்தது. அதிகார சட்டம்பித்தனந்தான் குடும்பத்தில் இருந்தது.
தேசம்: பெரும்பாலான முற்போக்கு பேசுபவர்களின் குடும்பங்களிலும் அதுதானே இன்றும் நிலைமை. அது அம்மாவை பாதிக்கும் விதமாக இருக்கவில்லை…
அசோக்: அப்படி இருக்கவில்லை. இதைவிட பெரிய பிரச்சினை கொடுக்கக்கூடிய ஆளாக நான் தான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். என்னொரு விடயம் என்னென்றால், எங்கள் வீட்டில் அண்ணாக்கள் எல்லாருடையதும் காதல் திருமணம். அண்ணிமாரைத் திருமணம் செய்து அவங்கள்தான் அனைத்து பொறுப்பையும் பார்க்குற ஆட்களா இருந்தார்கள். அந்நேரம் அப்பா எதிர்ப்பு காட்டினாலும் கூட, காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆளாக மாறிட்டார்.
தேசம்: திருமணத்தை தடுத்து நிறுத்தக்கூடிய அளவுக்கு எல்லாம் போகேலை
அசோக்: இல்லை
தேசம்: அப்பா இல்லாத காலத்தில் அந்தக் கால சமூகத்தில் ஆண் இல்லாமல் குடும்பத்தை கொண்டு நடத்துவது அல்லது முன்னுக்கு கொண்டுவருவது என்பது மிக கஷ்டமாக இருந்திருக்கும். நீங்கள் ஏழு வயதாக இருக்கும் போதே அப்பா இறந்துட்டார். அதற்குப் பிறகான உங்களை வளர்த்தெடுப்பதில் அம்மாவின் உடைய பங்கு எப்படி?
அசோக்: 7 வயதில்லை. எனக்கு அப்போது 10 வயது இருக்கும். அப்பா இறக்கும் போது அண்ணாக்கள் ஓரளவு வளர்ந்துட்டாங்க . ஆனா யாருக்கும் உத்தியோகம் இல்லை. அப்பாவினுடைய பென்ஷன் இருந்தது. காணிகள் வருமானங்கள் இருந்தது. அப்பா இறந்ததற்கு பிறகு என்ன நடந்தது என்றால் அப்பா அரசியல் நடவடிக்கைகள் சார்ந்து நிறைய கடன் பட்டிருந்தார். அப்பா நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார்.
எங்களுக்கு காணி, பூமி நிறைய இருந்ததால் அதை வைத்துதான் காலப்போக்கில் கடன்கள் எல்லாம் அடைத்தோம்.
78 ல் மட்டக்களப்பில் சூறாவளி வரும் வரைக்கும் தென்னந்தோப்பால் பெரிய வருமானம் இருந்தது. பொருளாதார ரீதியாக பெரிய பிரச்சனை இருக்கவில்லை. அம்மாவுக்கு நான் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற விருப்பம் நிறைய இருந்தது. 5ம் வகுப்பு கொலர்சிப்பில் பாஸ் பண்ணும் அளவுக்கு திறமை இருந்தது. ஆரம்ப இளம்வயதில் விளையாட்டுத்தனம் இருந்தாலும் இடைக்காலத்தில் நல்ல மாணவனாக நான் இருந்தேன். கிருஸ்ணபிள்ளை சேர், இவர் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்தவர். என்னில் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இப்படித்தான் அம்மாவும்.
என் சிந்தனைகளும், போக்கும் அவங்களுக்கு நிறைய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என இப்ப நினைக்கிறன்.
தேசம் : அந்த நேரம் அப்பா தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்திருக்கின்றார். அந்த காலகட்டத்தில் அப்பாவின் இழப்பு தமிழரசுக்கட்சி க்கு எப்படி இருந்தது?
அசோக்: தமிழரசுக் கட்சிக்கு அப்பாவினுடைய இழப்பு பெரிய ஒரு இழப்பாக இருக்கவில்லை. ஏனென்றால் அதை ஈடு செய்வதற்கு அவர்கள் இன்னொருவரை தேர்ந்தெடுத்து இருப்பார்கள்.
தேசம் : அவருக்கான கௌரவத்தை கொடுத்ததாக இல்லை?
அசோக் : இல்லை அப்பா தமிழரசுக்கட்சியை நேசித்தாரேயொழிய, தமிழரசுக்கட்சி அப்பாவை பயன்படுத்தியது. அது எனக்கு காலப்போக்கில் தெரியவந்தது. எனக்னொரு அத்தான் இருந்தார். இரா. பத்மநாதன் என்று பேர். சுதந்திரன் பத்திரிகையில் எஸ் .டி. சிவநாயகம் ஆசிரியராக இருந்த காலத்தில் அத்தான் அதன் துணை ஆசிரியராக இருந்தார். மட்டக்களப்பு எம்பியாக இருந்த இராஜ துரையின் வகுப்புத் தோழன். மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்தவர். அத்தான், அப்பா போன்றவர்கள் பயன்படுத்தப்பட்டார்களே தவிர, எந்த கௌரவமும் அவர்களுக்கு கிடைக்கல்ல.
தேசம் : அதை எப்படி பார்க்குறீர்கள்? ஏன் அந்த உணர்வு உங்களுக்கு வருகிறது? நீங்கள் எந்த காலத்திலும் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்யவில்லை?
அசோக் : இல்லை. அண்ணாக்கள் தமிழரசுக் கட்சியுடன் மிகத் தீவிரமாக இருந்தவர்கள். ஒரு அண்ணன் இருக்கிறார் அவர் இப்போதும் தீவிரமான தமிழரசுக் கட்சிதான். எங்க குடும்பம் தமிழரசுக் கட்சி குடும்பமாக தான் எப்பவும் இருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவங்களின்ர காலத்தில் இருந்த அரசியல் நோக்கமும், போராட்ட உணர்வும் தமிழரசுக் கட்சியிடம் இல்லாமல் போய் விட்டது. அவர் உண்மையாகவே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும், மலையக மக்களுக்குமான தீர்வை விரும்பினார். முதன் முதலில் முஸ்லிம் மக்களுக்காக தனிஅலகுக் கோரிக்கையை முன்வைத்தவர் அவர்தானே. முஸ்லிம் தமிழ் உறவை வளர்த்தவர். ஆனா, என்ன செய்வது வேறு தேர்வுகள் இல்லை. தமிழ் அரசுக் கட்சிதான் இருக்கிற திருடர்களில் நல்ல திருடனாக இருக்கிறது.
தேசம்: இந்த இளந்தளிர் வாசகர் வட்டம் தான் உங்களுடைய அரசியலின் அரும்பு நிலை என்று நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் எப்படியான அரசியலை நீங்கள் தேர்வு செய்கின்றீகள்?
அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டத்துக்குள் இருக்கும்போது அப்ப 71 ஆம் ஆண்டு ஜனதா விமுக்திப் பெரமுன ஜே.வி.பி யின் ஆயுதப் புரட்சி நடக்குது.
தேசம்: அது தொடர்பாக உங்களுக்கு ஏதும் ஞாபகம் இருக்கின்றதா?
அசோக்: அது ஞாபகம் இருக்குது. அம்பாறையில் சென்றல் கேம் என்ற இடத்தில் ஒரு சிறைச்சாலை உருவாக்கி அங்கு அட்களை கொண்டு போனார்கள். அது மட்டக்களப்பிலிருந்து எங்கட ரோட்டாலதான் போனது. அப்பா சின்ன வயசுல நாங்க ….. கொண்டு போறாங்க என்று ஆட்கள் போய் பார்த்தவங்க. அந்த ஞாபகம் இருக்கு.
தேசம்: ஜே.வி.பி தொடர்பான பிரமிப்பு ஒன்று அந்த நேரம் இருந்திருக்கு…
அசோக் : அதுக்குப் பிறகு என்ன நடந்தது என்றால். 1977 ம் ஆண்டு இது நடக்குது. ஆறு வருஷத்தால ஜே.வி.பி வெகுஜன இயக்கமாக. ஜனநாயக முறைக்குத் திரும்புவதாக அறிவித்து அவங்கள் தங்களை பிரகடனப்படுத்துறாங்கள்.
78ஆம் ஆண்டு அவங்களுடைய கொள்கைப் பிரகடனம் தமிழில் வருது. இந்தப் பிரகடனத்தை படிக்கிறம் நாங்கள். ரஷ்யப் புத்தகங்களைப் படித்தது. கியுபா புரட்சி, வியட்நாம் போராட்டம் சேகுவேரா, பெடல் கஸ்ரோ, மார்க்சீய சித்தாந்தம் தொடர்பில் எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்ததுதானே. அந்தக் கொள்கை பிரகடனம் எங்களை கவர்ந்தது.
இலங்கையில் ஒரு வர்க்கப் போராட்டத்தை கொண்டு வரலாம் ஒரு முழுமையான புரட்சி என்ற சிந்தனை எங்களுக்கு இருந்தது.
தேசம்: கிட்டத்தட்ட 77 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே உங்கட பார்வை ஒரு இடதுசாரி பார்வையாக வந்திட்டுது.
அசோக்: ஆம் ஏனென்றால் மாக்சிச புத்தகங்கள், ரஷ்யா நாவல்கள்: தாய், வீரம் விளைந்தது எல்லாம் படிக்கத் தொடங்கிவிட்டோம். லைபிறரில இந்த புத்தகங்கள் எல்லாம் வாரது தானே. அதால ஓரளவு இடதுசாரி அரசியல் எங்களுக்குள் உருவாகிவிட்டது. அதால தான் நாங்கள் அந்த கொள்கை பிரகடனத்தை படித்தவுடனேயே அதிலும் இலங்கையில் வர்க்கப் போராட்டம், தொழிலாளர் புரட்சி என பல்வேறு விடயங்கள் கதைக்க பட்டிருந்தது.
அப்ப நான் என்ன செய்தேன் என்றால் அந்த புத்தகத்தைப் படித்துவிட்டு, லயனல் பொபேகேவுக்கு கடிதம் எழுதுறன். அதுல ஒரு அட்ரஸ் போட்டிருந்தது. உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றோம் என அனுப்பிட்டன். அனுப்பி ஒரு பதினைந்து இருபது நாள் போக அந்த கடிதத்தோடு தோழர் முபாரக் என்றவர் வீட்டில் வந்து என்னை சந்திக்க வாரார். நீங்கள் தோழருக்கு கடிதம் எழுதி இருந்தீங்க. உங்களோட கதைக்க வந்துள்ளேன் என்றார். அப்பதான் ஜனதா விமுக்திப் பெரமுனவுக்கும் எனக்கும் தொடர்பு ஏற்படுகிறது. பிறகு நாங்கள் தோழருடன் எல்லா நண்பர்களும் சந்தித்து வகுப்பெடுத்து…
தேசம்: நீங்கள் சொல்வது தனிப்பட்ட முறையிலா அல்லது இளந்தளிர் வாசகர் வட்டமாகவா?
அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டம்தான். நாங்கள் அவங்களுடைய கொள்கைப் பிரகடன த்தை படித்துவிட்டு தொடர்பு கொள்ளலாம் என்று முடிவெடுத்த பின்பு நான்தான் அந்த கடிதத்தை எழுதுறன். அவர் வந்து எங்களை சந்தித்த பிறகு கேள்விகள் கேட்கிறம். அந்தக் கேள்விக்கு எல்லாம் அவர் பதில் அளித்த பிறகு எங்களுக்கு சேர்ந்து வேலை செய்யலாம் என்று நம்பிக்கை வருது. எங்களுடைய முதல் வேலை போஸ்டர் ஒட்டுறது. துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது.
தேசம்: நீங்கள் சொல்லுகின்ற இதே காலகட்டத்தில் நீங்கள் ஜேவிபி சார்பாக போறீங்க அதே நேரம் உங்கட குடும்பம் வந்து தமிழரசு கட்சியுடன் தமிழ்தேசியத்தோட ஐக்கியமாகி இருக்கு. இதே காலகட்டத்தில் தான் வடக்கில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பாக நீங்கள் அந்த காலத்தில் ஏதும் அறிந்திருந்தீர்களா?
அசோக்: அப்பா சுதந்திரன் பத்திரிகை தொடர்ச்சியாக எடுக்கிறவர். அப்பா இறந்த பின்பும் சுதந்திரன் பத்திரிகை வீட்டுக்கு வாரது. அதற்கூடாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.
தேசம்: அறிந்திருந்தும் தான் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்?
அசோக்: ஓம். எனக்கு தமிழரசு கட்சியின் மீதான வெறுப்பு நிலை இருக்குதானே. இப்போ நினைத்துப் பாத்தா தமிழரசுக் கட்சி மீதான வெறுப்பு நிலையை விட அது கட்சி சார்ந்த எம் பிக்களின் போக்குகள் நடத்தைகள் காரணமாக வந்திருக்கும் எண்ணுகிறன்.
தேசம்: நீங்கள் ஒரு தமிழ் தேசிய அரசியல் குடும்பத்தில் இருந்து கொண்டு இடதுசாரி அரசியலை எடுக்கிறீர்கள். அதேநேரம் இடதுசாரி அரசியலை படிச்சுப்போட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பா தமிழ்த்தேசிய அரசியலுக்க போனவர்கள் இருக்கிறார்கள் தானே. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
அசோக்: அவர்கள் உண்மையான இடதுசாரி கருத்துக் கொண்டவர்களாக இருந்திருக்கெலாது. இருந்திருந்தால் புலி அரசியலுக்குள் போய் இருக்க முடியாது. இயக்கங்களை தேர்ந்தெடுத்து அங்கு போனதற்கு ஒவ்வொருவருக்கும் அரசியல் காரணங்கள் இருக்கு. அவங்ளின்ர அரசியல் வர்க்க நிலையும் இத தீர்மானிக்கும்தானே.
தேசம்: உங்களுக்கு ஜேவிபியோட இருக்கிற அரசியல் உறவிலிருந்து எப்படி நீங்கள் விடுபட்டீர்கள் பிறகு?
அசோக் : ஜே.வி.பியோட நாங்கள் தீவிரமாக வேலை செய்திருக்கிறோம். பாசறைக்கெல்லாம் போய் இருக்கின்றோம். படுவான்கரையில் ஒரு கிராமத்துல வீடெடுத்தனாங்கள். நாங்க ஒரு பதினைந்து இருபது தோழர்கள் போய் அங்கேயே தங்கி ஒரு வாரம் நின்று வகுப்பெடுத்து மிகத் தீவிரமாக இருந்தனாங்கள்.
அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு முபாரக், உதுமாலெப்பை என்ற ஒரு தோழர் அவர் வந்து கொழும்பு மாவட்டத்தில் ஜேவிபினுடைய மாவட்ட சபை உறுப்பினராக இருந்தவர் என்று நினைக்கிறன். வகுப்பெடுத்தார்கள். முஸ்லிம் தோழர்கள் நிறைய பேர் ஜே.வி.பியில இருந்ததாங்க… அதுதான் மிகவும் ஆச்சரியமான விடயம். எங்களுக்கு வகுப்பெடுத்த 3 – 4 தோழர்கள் முஸ்லிம்கள். ஒரு தமிழ் தெரிந்த சிங்களத் தோழர். சிங்கள தோழர்கள் எடுக்கிறதை இவர்கள் மொழிபெயர்ப்பார்கள்.
தேசம்: மட்டக்களப்பில் தமிழ், சிங்களம், முஸ்லிம் சமூகமும் இருந்தபடியால் தான் ஜே.வி.பியினுடைய ஆதிக்கம் அங்கு வருதா? வடக்கில் நான் நினைக்கல இப்படியொரு ஆதிக்கம் இருந்தது என்று.
அசோக்: வடக்கில் இடதுசாரி கட்சிகள், இயக்கங்கள் இருந்தபடியால் அந்த இடத்தை ஜே.வி.பியால் நிரப்ப முடியவில்லை.
எங்களுக்குள்ள இடதுசாரித் தாக்கம் ஒன்று இருந்தபடியால் எங்களுக்கான இடம் வந்து ஜே.வி.பியாத்தான் இருந்தது. யாழ்ப்பாணத்தில இருந்த கம்யூனிஸ்ட் பார்ட்டி வேற ஏதும் வந்திருந்தால் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து இருப்போம்.
இடதுசாரி இயக்கம் வந்து, வர்க்கப் போராட்டம் என்று வந்திருந்தால், நாங்கள் அதற்குத்தான் போயிருப்போம். ஆனால் கிடைத்தது ஜே.வி.பி தான். பிறகு என்ன நடந்தது என்றால் அனுராதபுரத்தில் இனக்கலவரம் நடந்தது. அதற்குப் பின்னால் ஜே.வி.பி முக்கிய பங்கு வகித்தது என்ற ஒரு கதை வந்தது. அந்த கதை தொடர்பான உரையாடல்தான் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு வந்தது. பிறகு நாங்கள் அவர்கள் ஒரு இனவாதக் கட்சி தான் என்ற முடிவுக்கு வாறம். அதுல இருந்து நாங்க ஒதுங்குறம்.
தேசம்: ஜேவிபியினுடைய நீங்கள் சொன்ன ஐந்து பாடத்திட்டத்தில் ஒன்று இந்திய எதிர்ப்பு என்று நினைக்கிறேன்
அசோக்: அது எங்களுக்கு எடுக்கப்படவில்லை இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற அந்த வகுப்பு எங்களுக்கு இல்லை.
தேசம்: தமிழ் மக்களுக்கு எதிரான அந்த பகுதியே எடுத்துட்டாங்க
அசோக்: எடுத்திட்டாங்கள். வகுப்பில வந்து வந்து சுயநிர்ணய உரிமை பற்றி. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சம உரிமை, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம்… சோசலிசம் இப்படி அரசியல் வகுப்புக்கள் இருக்கும். அவர்கள் எங்களுக்கு எடுக்காமல் விட்ட இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற வகுப்பு, மலையக மக்களுக்கு எதிரான இனவாதம் கொண்டது என்பதை அவர்களை விட்டு வந்த பிறகு அறிந்து கொண்டோம். ஜே.வி.பி இடது சாரி போலிமுகம் கொண்ட மோசமான இனவாதக்கட்சி.
தேசம் : கிட்டத்தட்ட 77ஆம் ஆண்டு காலகட்டம் என்றால் நீங்கள் ஜி.சி.இ எடுக்கிற காலகட்டம் என்று நினைக்கிறன்.
அசோக்: ஆம். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சனி ஞாயிறு தான் எங்கடை சந்திப்புகள் எல்லாம் நடக்கும். ஒரு பாடசாலை விடுமுறை காலத்தில் தான் நாங்க பாசறைக்கு போனோம்.
தேசம்: பாசறை எங்க நடந்தது என்று சொன்னீர்கள்?
அசோக்: அது படுவான்கரையில் விவசாய நெல் காணியில் ஒரு வீடு எடுத்து, அங்கேயே தங்கி சமைச்சு சாப்பிட்டு அங்குதான் வகுப்பு நடந்தது.
தேசம்: இப்ப இந்த ஜே.வி.பியின் பிரச்சனைக்குப் பிறகு உங்களுக்கு இடைவெளி ஒன்று வரப்போகுது…
அசோக்: நாங்கள் என்ன செய்த என்றால் வெளியேறிவிட்டு, இளந்தளிர் வாசகர் வட்டம் , விளையாட்டுகள் என்று திரியிறம். இக் காலங்களில தேசிய இளைஞர் சேவை மன்றத்தோடும் நாங்க இருக்கம். அப்ப மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தராக செட்டிபாளையத்தைச் சேர்ந்த செல்வநாயகம் அண்ணர் பொறுப்பாக இருந்தார். அவர் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். அவர்கள் நடாத்தும் விளையாட்டு முகாம், தலைமைத்துவ பயிற்சி நெறி, சிரமதானம் என்று இதிலையும் ஈடுபடுகின்றோம். இந்த டைமில தான் 77 கலவரம் முடிந்து 78 என்று நினைக்கிறேன் காந்திய வேலைத்திட்டங்கள் அங்க மட்டக்களப்பு பிரதேசங்களில தொடங்குது.
தேசம்: 77 கலவரம் என்ன மாதிரி உங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது? அதுல கொஞ்சம் நீங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?
அசோக்: அதை ஒரு இனவாதமாகத்தான் நாங்கள் பார்த்தனாங்கள். அதுல வந்து ஜே.வி.பி பெரிய ஈடுபாடு கொண்டிருந்தது என்பது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இடதுசாரி இயக்கமே அதுல பின்னணியாக இருந்தது என்பது பெரிய தாக்கமாக ஏமாற்றமாக இருந்தது. அது தாக்கத்தை கொடுத்தபடியால்த்தான் நாங்கள் காந்தியத்தோட வேலை செய்யத் தொடங்கினாங்கள். மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களோடு வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு இருந்தது.
தேசம்: அப்பவும் தமிழ்தேசியத்தோடு அதற்கு போவதற்கு நீங்கள் விரும்பவில்லை?
அசோக் : இனவாதம், தேசிய இனப்பிரச்சனை, புறக்கணிப்புக்கள், தமிழர் மேலான வன்முறைகள், உரிமை மறுப்பு, கொடுமைகள் தொடர்பாய் எங்களுக்கு பார்வைகள் எண்ணங்கள் இருந்தன. திட்டமிட்ட சிங்கள குடியேற்ற திட்டங்களான கல்லோயா, கந்தளாய் பற்றியெல்லாம் அப்ப அறிந்திருந்தோம். தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பாக எங்களுக்கு அந்த ஐடியா இருக்கவில்லை. காசி ஆனந்தனின் பேச்சுக்கள் உணர்ச்சியூட்டக்கூடிய பேச்சுக்கள் எல்லாம் எனக்கு அந்த நேரமே அலர்ஜியாகத்தான் இருந்தது. அமிர்தலிங்கம் மங்கையர்கரசியின் பேச்சுக்களெல்லாம்… எப்பவுமே நான் இந்தக் கூட்டங்களில் ஆர்வம் காட்டியதில்லை.
தேசம்: அது முக்கியம் ஏனென்றால் அந்தப் பதின்ம வயதில் பெரிய அரசியல் விழிப்புணர்வு ஒன்று இருந்திருக்காது. இருந்தும், அது ஒரு சலிப்புத் தாற, உண்மைக்குப் புறம்பான விடயமாகத் தான் நீங்கள் பார்க்கிறீர்கள்?
அசோக்: காசி ஆனந்தனின் பாட்டெல்லாம் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை கொடுத்தது ஆனால் எனக்கு எவ்வித தாக்கத்தையும் கொடுக்கவில்லை. இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை இலங்கைத் தொழிலாளர்களின் வறுமைப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது தமிழரசுக் கட்சியால் முடியாது என்பது அந்த வயதில் இந்த எண்ணம் எங்களிடம் இருந்தது. எங்க கிராமத்தில் தமிழரசுக் கட்சிக்கு செல்வாக்கு இருந்தது. எங்கள் மத்தியில் அது பெரிய தாக்கத்தை கொடுத்ததாக தெரியவில்லை. எனக்கு தெரிய மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி எம்பி மார்களின் குடும்பம் ஊழல் கொண்டதாகவே இருந்தது.பணம் ஒன்றே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.
இலங்கைத் தமிழ் இடதுசாரி கட்சிகள் ஈடாட்டம்ிய வகையில் இடதுசாரிப் பாரம்பரியத்தோடு செயற்படுகின்ற ஒரே கட்சியான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி மற்றும் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்களால் பிரித்தானியாவில் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி என்ற இரு கட்சிகளும் கொரோன காலத்து குழுவாத சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளன. தனிநபர் குழுவாத முரண்பாட்டால் கட்சியின் உறுப்பினர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டார். அதற்கு முன்னரும் பின்னரும் இக்குழுவாத போக்கு காரணமாக கட்சியில் இருந்து சிலர் வெளியேறியும் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பும் இக்குழுவாத போக்கிற்குள் இழுத்துவிடப்பட்டு உள்ளது.
இவ்விரு கட்சிகளுமே சராசரி மக்களைப் பொறுத்தவரை முகவரியற்ற கட்சிகளாக இருந்த போதும் நுண் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட அமைப்புகள். அமைப்பு வடிவத்தில் இயங்குகின்ற போராட்டங்களை முன்னெடுக்கின்ற அமைப்புகள். புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி இலங்கை தமிழர்கள் மத்தியில் பல போராட்டங்களை நடத்திய வரலாற்றைக் கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன் கிந்துசிட்டி மயானப் போராட்டம் முக்கியமானது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் ஒரு பலமான குரலாக இருந்து வருகின்றது. அதேபோல் பிரித்தானியாவில் தமிழ் சொலிடாரிட்டி அகதிகள் உரிமை, தொழிலாளர் உரிமை போன்றவற்றிற்காக பிரித்தானியாவில் உள்ள ஏனைய இடதுசாரி மற்றும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராடி வருகின்றது. இவ்வமைப்புகள் மீது பல விமர்சனங்கள் இருந்த போதும் அமைப்பு வடிவில் இயங்குகின்ற இடதுசாரி நிலைகொண்ட அமைப்புகள் இவையிரண்டுமே.
உங்களுக்கு தெரிந்த வலதுசாரிகளை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் அந்தப் பட்டியல் மிக மிக நீண்டு செல்லும். ஆனால் உங்களுக்கு தெரிந்த இடதுசாரிகளை அடையாளம் காட்டுங்கள் என்று கேட்டுப் பாருங்கள். ஓரிரு பெயர்களை முன் வைத்ததுமே ‘அவரை இடதுசாரி என்று யார் சொன்னது? என்ற கேள்வி வெவ்வேறு திசைகளில் இருந்து வரும். ‘தோழர்’ என்று பெயருக்கு முன் போட்டால் இடதுசாரியா? ‘மார்க்ஸ், லெனின், கார்ள் மார்க்ஸ்’ படத்தை முகநூல் வட்ஸ் அப் ப்ரோபைலில் போட்டால் இடதுசாரியா? மார்க்ஸ் படம் போட்ட தேநீர் கப்பில் ரீ குடித்தால் இடதுசாரியா? இப்படி ஆளுக்கு ஒரு அடையாளத்தோடு நான் கொம்னிஸ்ட், நான் சோசலிஸ்ட், நான் லெப்டிஸ்ட் என்ற தோரணையோடு பலர் உலாவருகின்றனர்.
இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே வாழ்கின்ற இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியிலும் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்டவர்கள் மிகச் சிறுபான்மையினராகவே உள்ளனர். வலது சாரிக் கருத்தியலுடன் ஒப்பிடுகையில் இடதுசாரிகள் முற்போக்கானவர்களாகவும் சக மனிதர்களை மதத்தவரை இனத்தவரை ஒடுக்கப்பட்ட சாதியினரை பெண்களை மதிப்பவர்களாக இருந்த போதிலும் பல்வேறு காரணங்களாலும் இக்கருத்தியல் பிரிவினரின் கருத்தியல் பிரதான அரசியல் சமூக நீரோட்டத்தில் இல்லை. அதற்கு தங்களை இடதுசாரிகளாக காட்டிக்கொள்ளும் பலரின் தனிமனித நேர்மையின்மையும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
இந்தப் பின்னணியிலேயே தனிப்பட்ட ஆண் – பெண் உறவை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய அரசியலையும் அவர்கள் சார்ந்த அரசியல் அமைப்புகளையும் மலினப்படுத்தும் போக்கு இக்கொரோனா காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு முதற் களப்பலியானவர் புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் நன்கு அறியப்பட்ட உறுப்பினர் மு மயூரன். இவ்வாண்டு மார்ச் 21 கட்சியின் அரசியற் குழு வருமாறு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மு மயூரன் பெண்களுடன் முறைகேடாக நடந்துகொண்டுள்ளார்; என்ற குற்றச்சாட்டுக்கள் கட்சிக்கு முன்வைக்கப்பட்டதாகவும் மு மயூரன் முன்வைத்த விளக்கங்கள் நம்பகத்தன்மையற்றவையாகவும் முன்னுக்குப் பின் முரணாணதாக இருப்பதாகவும்; கட்சி குற்றம்சாட்டி அவரை கட்சியின் வெகுசன அமைப்புகளிலும் வகித்த பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக இடை நிறுத்தி வைப்பதென அறிக்கை வெளியிட்டது.
ஆனால் இக்குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட பெண், மு மயூரனுக்கும் தனக்கும் இருந்த உறவை வஞ்சக எண்ணத்தோடு அரசியல் பழிவாங்கல்களுக்கு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி இருந்தார். அவர் மு மயூரன் மீது சுமத்தப்பட்ட பழியை களைவதற்காக தனது முகநூலில் குற்றம்சாட்டியவர்களை கடுமையாக விமர்சித்தும் வருகின்றார்.
கட்சிக்கு அல்லது கட்சியில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருக்கு நிதிப்பங்களிப்பினைச் செய்த மோகனதர்ஷினி என்பவர் மேற்கொண்ட தனிநபர் தாக்குதலே இதுவென கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன. மோகனதர்ஷினியிடம் இருந்த பெறப்பட்ட பணம் மீளளிக்கப்பட்ட போதும் அவர் கட்சியில் அதீத செல்வாக்கை செலுத்துவதாகவும் அவ்வட்டாரங்கள் தேசம்நெற் க்கு தெரிவிக்கின்றன. இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த ஒரே இடதுசாரி அமைப்பான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி யின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதன் தலைவராக சி கா செந்தில்வேல் உள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் பொதுவெளியில் கருத்துக்கள் எதையும் வெளியிடவில்லை. ஆனால் பலரும் அவருக்கு இந்நிலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இதே போன்றதொரு குற்றச்சாட்டு பிரித்தனியாவில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி கண்டுவரும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் மீதும் சுமத்தப்பட்டு உள்ளது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தரும் தமிழ் அரசியல், கலை, இலக்கிய எழுத்துக்கள் மூலமும் அறியப்பட்டவரான சேனன் உருவாக்கி இருந்தார். இன்று இவ்வமைப்பு கணிசமான உறுப்பினர்களைக் கொண்டிருப்பதுடன் புலம்பெயர் நாடுகளில் அமைப்பு வடிவில் உள்ள ஒரே தமிழ் இடதுசாரி அரசியல் ஸ்தாபனம் இதுவென்றால் அது மிகையல்ல.
தங்களை முற்போக்காளர்கள் பெண்ணிய போராளிகள் என முத்திரைகுத்திக் கொண்ட 20 பேர் கையெழுத்திட்ட முகநூல் போராட்டம் ஒன்று ஓகஸ்ட் பிற்பகுதியில் பெரும் பரபரப்புடன் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர் மோகனதர்ஷினி, தீப்பொறி அமைப்பினரான ராகுல் சந்திரா (ரகுமான் ஜான்) ஆகியோர் கையெழுத்திட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். குற்றம்சாட்டப்பட்டவருடனும் குற்றம்சாட்டப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி அமைப்புடனும் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர்களும் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்திருந்தவர்களுமே இப்போராட்டத்தில் குதித்துள்ளனர். முற்றிலும் தனிப்பட்ட வஞ்சம் தீர்க்கின்ற செயலாகவே இது பார்க்கப்படுகின்றது.
தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிக உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கும் சூழலில் தங்கள் சொந்த நலன்களை முன்நிறுத்தி அப்பாவிப் பெண்களின் பெயர்களை தெருவுக்கு இழுத்துவிடுகின்ற முயற்சியாக மட்டுமே இதனைப் பார்க்க முடிகின்றது. ஏற்கனவே தமிழ் பெண்கள் பொது வெளிக்கு வரமுடியாத அளவுக்கு அவர்கள் அச்சமான சூழலில் உள்ள போது காதல் மற்றும் உறவுப் பிரச்சினைகளை பொதுவெளியில் கொண்டுவந்து விவாதித்து பெண்களை கேவலப்படுத்துவதும் இடம்பெற்று வருகின்றது. தங்களுடைய கருத்துக்கு மாறான பதிவுகளுக்கு ‘லைக்’ போட்டவர்களை அணுகி அவர்களை அச்சுறுத்திய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் ‘தம்பி எனக்கு வயசாச்சு இவையோட எனக்கு மல்லுக்கட்ட முடியாது. அது தான் ‘லைக்’கை எடுத்துப்போட்டன்’ என தேசம்நெற் க்கு தெரிவித்தார். ‘தம்பி நாளைக்கு உங்களைப் பற்றியும் ஏதும் எழுதிப் போடுவினம், கவனம்’ என்று என்னை எச்சரிக்கையும் செய்தார். முகநூல் ரவுடிகள் ஜாக்கிரதை.
புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி போல் குழுவாதத்திற்குள் சிக்காத தமிழ் சொரிடாரிட்டி அமைப்பு மேற்படி குற்றச்சாட்டை முற்றிலும் பாறுபட்ட கோணத்தில் அணுகியுள்ளது. தமிழ் சொலிடாரிட்டியின் முக்கியஸ்தர் ராஜரஞ்சன் புஸ்பராகவன் இவ்விடயம் தொடர்பில் வெளியிட்ட பதிவில்: “அரசியல் ரீதியாக அமைப்பை எதிர்கொள்ள வக்கற்றவர்கள் இத்தகைய சிறுமைத்தனமான செயல்களில் – அவதூறுகளில் ஈடுபடுகிறார்கள். இதில் சம்மந்தப்பட்டவர்கள் பலரது அரசியற் போதாமை பல முன்பே விமர்சிக்கப் பட்டிருக்கிறது. இதில் பலர் சமூக விரோத அரசியலை நீண்ட காலம் செய்து வருபவர்கள் என்பது தெரிந்த விசயமே” எனத் தெரிவித்துள்ளார். மேலும் “அவதூறுகளுக்கு நாம் அடிபணியப் போவதில்லை“ என்றும் அறிவித்துள்ளனர்.
இவ்வாறான தனிமனித உறவு சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் இது ஆரம்பமும் அல்ல முடிவும் அல்ல என்பது தெளிவாகின்றது. தமிழ் இடதுசாரி அரசியல் ஒரு தெளிவுக்கு வருவதற்கு முன் இன்னும் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என்பது திண்ணம். இவற்றை கடந்துசெல்லும் வல்லமை ஏற்கனவே நலிந்துள்ள இடதுசாரி ஆர்வலர்களிடம் இருக்கின்றதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இன்று ஆப்கானின் நெருக்கடிகள் ஒன்றும் புதில்ல. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகள் காலம் காலமாகச் செய்துவருகின்ற குறளி வித்தைகளின் தொடர்ச்சியே. செல்வத்தால் கொழுத்த மேற்கு நாடுகள் ஐநா வின் பொது உடன்பாடு இன்றி. ஏனைய நாடுகளில் தலையீடு செய்வது தங்களின் சொந்த நலன்களுக்காக மட்டுமே. அதனால் இத்தலையீடுகள் பெரும்பாலும் அந்நாடுகளைச் சீரழிவிற்குள்ளேயே தள்ளி விடுகின்றன. அண்மைய தசாப்தங்களில் வளைகுடா யுத்தம் – ஈராக், லிபியா, யேர்மன், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளில் தலையீடு செய்து அங்கிருந்த அதிகாரக் கட்டமைப்புகளை உடைத்து தங்களுக்கு சாதகமான பொம்மைத் தலைமைகளை உருவாக்கும் முயற்சி எதனிலும் மேற்குலகம் வெற்றிபெறவில்லை.
ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்கின்றோம் என்ற பெயரில் இந்த மேற்கு நாடுகள் நேரடி அல்லது மறைமுக தலையீடுகளைச் செய்து அந்நாடுகளின் மக்களையும் வளங்களையும் அழித்து அந்நாடுகளை பல தசாப்தங்களுக்கு முன்னேற முடியாதளவிற்கு சீரழித்து வந்துள்ளன. ஈராக், லிபியா போன்ற நாடுகளில் ஆராஜகப் போக்குகளை ஆரம்பத்தில் ஊக்குவித்தவர்களும் இந்த மேற்கு நாட்டினரே. ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹுசைனுக்கு உயிரியல் ஆயுதங்களை வழங்கியது, லிபிய அதிபராக இருந்த கேர்ணல் கடாபிக்கு ஆயுதங்கள், நிதியை வழங்கியது மேற்கு நாடுகளே. ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன்களையும் தலிபான்களையும் தொடர்ந்து அல்ஹைடா பின்லாடனையும் வளர்த்துவிட்டது இந்த மேற்குலகமே. சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் க்கு ஆயுதம் வழங்கி வளர்த்ததும் இவர்களே. இப்போது தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடாத்தியதும் இந்த மேற்குலகமே.
இவ்வாறெல்லாம் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுக்கும் இந்த மேற்குலகின் நடவடிக்கைகள் தங்களுக்கு லாபத்தை தரவில்லை என்றால், அவர்கள் அம்போ என்று அந்த நாடுகளை கைவிட்டு ஓடிவிடுவார்கள். இதுதான் ஒவ்வொரு தலையீட்டின் போதும் நடைபெற்றது. அதுவே ஆப்கானிஸ்தானிலும் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு முன்னர் அமெரிக்க நேட்டோ படைகளுடன் சேர்ந்து போரிட்ட குர்திஷ் போராளிகள் கைவிடப்பட்டனர். அமெரிக்க துருப்புக்கள் மீளப்பெறப்பட்ட போது குர்திஷ் வீரர்கள் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு விடப்பட்டனர். அமெரிக்க நேசநாட்டுப் படைகளுக்கு மொழிபெயர்ப்பு மற்றும் உதவிகளுக்கு உதவிய உள்ளுரவர்கள் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். இவர்களில் பல நூற்றுக்கணக்கானோரை பயங்கரவாதிகளிடம் கைவிட்டுவிட்டே இந்த மேற்கத்தைய படைகள் வெளியேறின. வெளியேறிக் கொண்டிருக்கின்றன.
இதே மாதிரியான அரசியல் சூழல் இலங்கையிலும் இருந்தது. 1980களில் தனக்கு மாறாக அரெிக்காவுடன் உறவைப் பேணிய இலங்கை அரசுக்கு பாடம் புகட்ட இந்திய அரசு விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஆயுதப் பயிற்சியும் வழங்கி, ஆயுதங்களையும் வாரி வழங்கியது. ஆனால் இந்திய புலனாய்வுத்துறை இந்தப் போராளிகளுக்கு தமிழீழம் அமைவதை இந்தியா ஒரு போதும் அனுதியாது என்பதை மிகத் தெட்டத் தெளிவாக தெரிவித்தும் இருந்தது. ஆனால் இந்த ‘ஈ’ அமைப்புகள் (EPRLF & EPDP) தவிர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் என்பன மக்களை தொடர்ந்தும் தமிழீழம் என்ற போர்வையில் ஏமாற்றியே போராட்டத்தை முன்னெடுத்தன. ஈபிஆர்எல்எப், ஈபிடிபி மட்டுமே வெளிப்படையாக தமிழீழத்தைக் கைவிட்டு தூர நோக்கோடு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை ஏற்று ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு வந்தது. EPDP, தமிழீழ விடுதலைப் புலிகளோடு இருந்த முரண்பாட்டால் தொடர்ந்தும் ஆயுதம் ஏந்தியதும் விடுதலைப் புலிகள் போல ஆயுத வன்முறைகளில் ஈடுபட்டதும் வரலாறு.
1987இல் இலங்கையில் நேரடித் தலையீட்டை மேற்கொண்ட இந்திய இராணுவம் 1990இல் இலங்கையை விட்டு வெளியேறியதும் அக்கால கட்டத்தில் இந்திய இராணுவத்திற்கு உதவியவர்கள் அவர்களுக்கு ரற்றா காட்டியவர்கள், இந்திய இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து நூற்றக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர்.
மீண்டும் இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் சில தசாப்தங்களுக்கு பின் தள்ளப்பட்டு நிற்கின்றது. இந்த போராட்டங்கள் என்ற பெயரில் கொல்லப்பட்ட போராளிகள், பொதுமக்கள், இராணுவ வீரர்கள் என்று எந்த உயிரிழப்பிற்கும் எவ்வித அர்த்தமும் இல்லை. டட்ட கஸ்டங்களுக்கும் இழப்புகளுக்கும் கூட எவ்வித அர்த்தமும் இல்லை. ஏனெனில் நாங்கள் மீண்டும் ஆரம்பப் புள்ளியில் வந்து நிற்கின்றோம். எங்களிடம் எஞ்சியிருப்பது வெறும் அனுபவங்கள் மட்டுமே. அதிலிருந்தும் எதனையும் கற்றுக்கொள்ளவும் நாங்கள் தாரில்லை.
இன்று உலகமே ஒரு கிராமமாகிவிட்டது. இன்று ஆப்கானிஸ்தானில் வெளியேற்றம் பற்றி 24 மணிநேரச் செய்திச் சேவைகள் பிளந்து தள்ளுகின்றன. இன்னும் சில வாரங்களில் ஆப்கானிஸ்தான்காரர்கள் எங்கள் நாடுகளுக்கு அகதிகளாக படையெடுக்கிறார்கள் என்று இந்த மேற்கு நாட்டுச் செய்தி நிறுவனங்கள் ஒப்பாரி வைக்கும். ஈராக் அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள், லிபிய அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள், சிரிய அகதிகளுக்கு ஒப்பாரி வைத்தார்கள் இன்றும் இத்தாலியின் மெடிற்றிரேனியன் கடற் பரப்பில் தினமும் அகதிகள் உயிரிழக்கின்றனர். ஏன்? இந்த மேற்கு நாடுகள் தலையீடு செய்து அவர்களின் நாடுகளைச் சீரழித்து சின்னாபின்னமாக்கியதால், அவர்கள் வாழ வழியின்றி மேற்கு நோக்கி வருகின்றனர். அவர்களுடைய இந்த நிலைக்கு இந் நாடுகளே தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
நீங்கள் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்து கிழித்தது போதும், உங்கள் சர்வதேச பொலிஸ்காரன் அடாவடிகள் போதும், மூடிட்டு இருங்கள் செய்த பாவங்களுக்கு, அனைவருக்கும் அகதி அந்தஸ்த்தை வழங்குகள்.