பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு தமிழ் கூட்டமைப்பு விடுத்த அழைப்பானது துரதிர்ஷ்டவசமானதாகும். சிறிய நிலப் பகுதிக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மனிதாபிமான நடவடிக்கையை கைவிடுவதாகவும் கடைசித் தறுவாயிலிருக்கும் பயங்கரவாதத் தலைமைத்துவத்தையும் பாதுகாப்பதான முயற்சியாகவும் அது அமையும்.
பாதுகாப்பு வலயங்களில் பணயக்கைதிகளாக புலிகளால் வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்காக ஜனாதிபதி வேண்டுகோளை விடுத்திருப்பதாக ஜனாதிபதி செயலகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பிவைத்துள்ள கடிதத்துக்கு ஜனாதிபதி செயலகத்தால் நேற்று சனிக்கிழமை பதிலறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இறப்புகள், காயங்கள், தமிழ் பொதுமக்கள் சிக்கியுள்ளமை தொடர்பாக, புலிகளின் பொறுப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனையும் தெரிவிக்கவில்லை. தமிழ்க் கூட்டமைப்பின் கடிதம் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. பிரிவினைவாதம், புலிகளின் பயங்கரவாதத்தை புகழும் நடவடிக்கைகள், இலங்கை அரசு அதன் மக்களின் நலன்களுக்கு எதிராக பிரசாரம் செய்யும் இணையத்தளங்கள் உட்பட பல இணையத்தளங்களில் அக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு தமிழ் கூட்டமைப்பு விடுத்த அழைப்பானது துரதிர்ஷ்டவசமானதாகும். சிறிய நிலப் பகுதிக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மனிதாபிமான நடவடிக்கையை கைவிடுவதாகவும் கடைசித் தறுவாயிலிருக்கும் பயங்கரவாதத் தலைமைத்துவத்தையும் பாதுகாப்பதான முயற்சியாகவும் அது அமையும். மோதல் பகுதியிருந்து பொதுமக்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியும் அரசாங்கமும் செப்டெம்பர் முதல் விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுத்துவந்துள்ளனர். அச்சமயம் தமிழ்க் கூட்டமைப்பு இதில் ஈடுபாடு காட்டவில்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சிலர், இலங்கைப் படையினரின் முன்னேற்றத்தைப் புலிகள் தடுத்துவிடுவர் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளினால் இடங்களில் வைக்கப்பட்ட பொதுமக்கள் பெரும் அபாயத்தில் இருந்தனர். அது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு அமைதியாக இருந்தது.
மோதல் சூன்யப் பகுதியில் புலிகள் ஆட்லறியை வைத்து தாக்குதல் நடத்திய போது தமிழ்க் கூட்டமைப்பு ஒரு வார்த்தைதானும் தெரிவிக்கவில்லை. அரசு 1,250 மெற்றிக்தொன் உணவு, மருந்துப் பொருட்களை அனுப்பியுள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் 1,020 மெற்றிக்தொன் பொருட்களை அனுப்ப உள்ளது. கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய மனிதாபிமான விநியோகங்களை அனுப்பிவைப்பதை உறுதிப்படுத்த ஜனாதிபதி தனிப்பட்ட கவனத்தை எடுத்துள்ளார்.
பாதுகாப்பு வலயத்திற்குள் விமான, ஆட்லறி தாக்குதல்களால் சராசரியாக 40- 50 பொது மக்கள் கொல்லப்படுவதாகவும் பலமடங்கானோர் காயமடைவதாகவும் தமிழ்க் கூட்டமைப்பு குற்றச்சாட்டுத் தெரிவித்திருந்தது. தற்போதைய மனிதாபிமான நடவடிக்கையில் ஆயுதப் படைகள் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயற்படுவதாக கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் இலங்கை ஆயுதப் படைகள் எந்தவொரு ஆட்லறிகளையோ கனரக ஆயுதங்களையோ பிரயோகிக்கவில்லை. விமானப்படையினரும் குண்டுவீச்சு நடத்தவில்லை. ஆயினும் புலிகள் ஹெலிக் கொப்டர்கள் மீது மோதல் சூன்யப்பகுதியிலிருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தினமும் 40- 50 பொதுமக்கள் கொல்லப்படுவது என்பது மிகைப்படுத்தப்பட்டதென்று நாம் நம்புகின்றோம்.
விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்படுவது மற்றும் காயமடையாமல் பொதுமக்கள் இறப்புக்கள் ஏற்படுவதாக சொல்லப்படுவது சாத்தியமற்றதொன்றாகும்.
சுயாதீன ஊடகங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று தமிழ் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கமுடியாது அதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியாவிலுள்ள இடம் பெயர்ந்தோர் தங்கியிருக்கும் நிலையங்களுக்கு உள்ளூர், சர்வதேச பத்திரிகையாளர்கள் பலதடவை செல்வதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியது.
3 இலட்சம் பேர் மோதல் பகுதிகளில் இருப்பதாக தமிழ் கூட்டமைப்பு கூறியிருக்கிறது. புள்ளிவிபரம் தொடர்பாக மூன்று வித்தியாசமான தொகைகள் பற்றி குறிப்பிட்டிருப்பதை தமிழ் கூட்டமைப்பு ஒத்துக்கொண்டுள்ளது. கடந்த மாதம் 56 ஆயிரம் பேர் வரை வெளியேறிவிட்டனர். அங்கு பட்டினியால் மரணமடைந்திருப்பதாக கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த பொதுமக்கள் போதியளவு உணவருந்தியிருப்பதாக தோன்றுகிறது. அங்கு உணவுத்தட்டுப்பாடு இல்லை என அப்பொதுமக்கள் கூறியுள்ளனர்.
இந்த வருடம் மாத்திரம் 3 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 8 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் தமிழ் கூட்டமைப்பு கூறுகிறது. அரசு ஒருபோதும் உணவு, மருந்தை யுத்தத்திற்கான ஆயுதமாக பயன்படுத்தவில்லை.
ஆயுதக் குழுவொன்றுக்கு உணவு, மருந்து வழங்கும் ஒரேநாடு உலகில் இலங்கை மட்டுமேயாகும். மேலும் கொல்லப்படுவோர், காயமடைவோர் தொடர்பான எண்ணிக்கையை எவராலும் உறுதிப்படுத்த முடியாது. புலிகள் பொதுமக்கள் மத்தியில் சீருடையின்றி கலந்திருக்கும்போது இதனை கூறமுடியாது அத்துடன் புலிகள் பலவந்தமாக ஆட்களைத் திரட்டுகின்றனர்.
வடக்கில் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்பவேண்டும் என்பதில் ஜனாதிபதி தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர். யாழ் குடாநாட்டில் சாத்தியமான அளவுக்கு துரிதமாக உள்ளூராட்சி தேர்தலை நடத்தும் தமது நோக்கம் குறித்து தமிழ், முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கு அவர் அறிவித்துள்ளார்.புளொட் தலைவர் த.சித்தார்த்தனின் யோசனைக்கு பதிலளித்த ஜனாதிபதி, வவுனியா மாவட்டதிலும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் சாத்தியம் குறித்து கவனத்தில் கொள்வதாக கூறியுள்ளார். வடக்கு மக்கள் தமது பிரதிநிதிகளை சுதந்திரமான முறையில் தெரிவுசெய்வதே தமது விருப்பம் என்றும் அவர் தெரிவித்திருப்பதுடன் குறுகிய தனிப்பட்ட அல்லது கட்சி நிகழ்ச்சித் திட்டங்களை நிராகரித்துவிட்டு தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் வடக்கு, கிழக்கு மக்களின் நிலையை மேம்படுத்த அரசுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில்,
அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திற்கு அப்பால் மோதல்கள் இடம்பெறுவதாக இராணுவம் தெரிவிக்கின்றது. ஆனால் பாதுகாப்பு வலயத்தில் படையினரின் வான் மற்றும் ஷெல் தாக்குதல்களில் தினமும் 50 பொதுமக்கள் வரையில் உயிரிழக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைகின்றனர்.
அப்பகுதிகளில் இருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் அரசாங்கம் வெளியேற்றியுள்ளதுடன் உணவு, மருந்து, தற்காலிக குடில்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.உண்மை நிலையை அறிவதற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படுவதில்லை
மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளமையால் செயற்பட முடியாதுள்ளனர். மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
அரசாங்கம் அப்பகுதிகளுக்கு போதுமான மருந்துப் பொருட்களை அனுப்பவில்லை.தற்காலிக குடில்கள் கூட மோசமான காலநிலையால் பாதிக்கப்படுகின்றது.
இப்பகுதிகளில் 300,000 பொதுமக்கள் இருக்கின்றனர். ஐ.நா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கணிப்பின் படி 200,000 மக்கள் அப்பகுதிகளில் வாழ்கின்றனர். அரசாங்கம் 70,000 பொதுமக்கள் இருப்பதாக பொய் கூறுகின்றது .
எனவே அரசாங்கத்தால் அனுப்பப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் பட்டினிச் சாவு ஏற்பட்டு பல் சிறுவர்கள் கூட உயிரிழக்கின்றனர்.
இவ்வருடம் ஏற்கொள்ளப்பட்ட விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக 3000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், அத்துடன் 8000 பொதுமக்கள் காயமடைந்தும் உள்ளனர்.
எனவே பொதுமக்கள் வெளிப்படையாக தாகுதல்களுக்கு இலக்காகின்றமை தெரியவருகின்றது. இம்மக்களுக்கு போதிய உணவு மற்றும் மருந்து அனுப்பாமல் அவற்றை தமிழ் மக்களிற்கு எதிரான போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
எனவே இவ் மனிதாபிமான அவலங்களை கருத்திற் கொண்டு இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்த வேண்டும்,
போதுமான உணவு, மருந்துப்பொருட்கள் போதுமானளவு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்,
ஐ.நா மற்றும் ஐ.சி.ஆர்.சி உட்பட ஏனைய சர்வதேச தொண்டு நிறுவனங்களை அப்பகுதிகளில் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்”
என ஜனாதிபதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று யோசனைகள் இல்லாமல் அரசுடன் கூட்டமைப்பு பேச மறுத்தது சரியானதே -மனோ கணேசன் எம்.பி.
மாற்று அரசியல் யோசனைகள் எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தது மிகச் சரியான அரசியல் முடிவாகுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெவித்துள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது;
நூற்றுக்கு மேற்பட்ட கூட்டங்களை அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி மாநாட்டின் கட்சிப் பிரதிநிதிகள் குழு நடத்தியுள்ளது. இக்குழுவில் 90 வீதமான விடயங்களில் கருத்து ஒருமைப்பாடு ஏற்பட்டுவிட்டதாக அமைச்சர் கூறிவருகிறார். இது உண்மைக்குப் புறம்பானது. அடிப்படை விடயங்களில் கருத்து ஒருமைப்பாடு சர்வகட்சிக் குழுவில் கிடையாது.
இந்நிலையில், முந்தைய ஆண்டில் இக்குழுவினால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு ஒரு மாற்றுத் திட்ட யோசனை அறிக்கையைத் தயாரித்து அரசாங்கத்திடம் கையளித்தது. இந்தக் குழுவிலே தமிழ், முஸ்லிம்களைவிட சிங்கள அங்கத்தவர்களே அதிகம் இருந்தார்கள். இருந்தாலும், இந்தக் குழு வெளியிட்ட யோசனைகள் வரவேற்கத்தக்கவை. இந்த யோசனைகளை தேசிய இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையாக ஏற்றுக்கொள்ள முடியுமென்று அரசாங்கம் அச்சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கத்திற்கும் தெரிவித்திருந்தது. இதற்கான உறுதிமொழி புதுடில்லியில் வைத்து இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினால் இந்தியப் பிரதமருக்கு வழங்கப்பட்டது.
இந்த உண்மையை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பகிரங்கமாக தெரிவித்துள்ளார். ஆனால், கொழும்பு திரும்பியவுடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தீவிரவாதக் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக இந்த யோசனைத் திட்டத்தை அரசாங்கம் குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டது.
இன்று பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாகக் குறைந்தபட்சம் இந்த யோசனைத் திட்டங்களையாவது அறிவித்து அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால், அரசாங்கம் அதைச் செய்யவில்லை. இது சம்பந்தமாக இந்திய அரசாங்கமும் முன்னுக்குப் பின் முரணாகக் கருத்து வெளியிடுவதைத் தவிர எதுவுமே செய்வதாகத் தெரியவில்லை.
இந்த யோசனைகளை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக அறிவிக்குமானால் அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டு அரசுடன் கட்டாயமாகப் பேச வேண்டுமென நாம் கூறவரவில்லை. இதுபற்றிய முடிவைக் கூட்டமைப்பே எடுக்க வேண்டும். அதைப் பரிசீலிக்க வேண்டுமென்றே நாம் கூறுகிறோம்.
ஆனால், 20 வருடங்களுக்கு முன்னாலேயே தமிழர்களால் நிராகரிக்கப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை வட, கிழக்குத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தேசிய சிக்கலுக்குத் தீர்வாக திணித்துவிடலாம் என்ற அபிப்பிராயத்தைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.