இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை பாரிய உள்நாட்டு யுத்தமாக உருவெடுத்து 25 வருடங்கள் உருண்டோடி விட்டன. இலங்கையை 400 ஆண்டுகள் தமது காலனித்துவ பிடியின் கீழ் வைத்திருந்த ஏகாதிபத்தியவாதிகளினால் உருவாக்கப்பட்ட இப்பிரச்சினை சிங்கள – தமிழ் முதலாளித்துவ அரசியல் சக்திகளினால் தமது குறுகிய அரசியல் லாபம் கருதி இனவாத பாதையில் இழுத்து செல்லப்பட்டதால் இன்று நாடு முழுவதுமே அதல பாதாளத்தில் விழுந்துள்ளது.
தமிழ் மக்கள் தம்மீதான தேசிய ஒடுக்குமுறையை ஏகாதிபத்திய எதிர்பபு தேசிய -ஜனநாயக போராட்டமாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தமிழ் முதலாளித்தவ இனவாத சக்திகளின் தவறான வழிகாட்டல்களினால் அலைக்கழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் இன்று உலகின் மிகமோசமான இனவாத பாசிச இயக்கமான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் பிடியில் சிக்கி, இருந்த உரிமைகளையும் இழந்து தவிக்கின்றனர். இன்று தமிழ் மக்களது போராட்டம் சிங்கள பேரினவாத தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரானதாக மட்டுமின்றி, தமிழ் இனவாத பாசிசத்துக்கு எதிரானதாகவும் பரிணமித்து நிற்கின்றது. மக்களுக்கு எதிரான, இந்த இரண்டு போக்குகளையும் சர்வதேச ஏகாதிபத்தியம் உருவாக்கி ஆதரித்து நிற்பதால், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது தவிர்க்க முடியாதபடி தமிழ் மக்களின் போராட்ட அடிப்படையாக இருக்கின்றது.
மறுபக்கத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடி பெற்ற தேசிய சுதந்திரத்தை இறுதிவரை முன்னெடுத்தச் சென்று, நாட்டில் உண்மையான மக்கள் ஜனநாயக அரசை உருவாக்குவதற்கு பதிலாக, தமது நீடித்த அதிகார இருப்புக்கு பேரினவாத அரசியலை ஒரு ஆயுதமாக பயன்படுத்திய சிங்கள இனவாத முதலாளித்துவ சக்திகளின் திட்டங்களுக்கு பலியானதன் மூலம், நாட்டின் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் இன்று தேவையற்ற இனவாத யுத்தமொன்றின் சுமைகளால் அழுத்தப்பட்டு அவல வாழ்க்கையில் சிக்கி தவிக்கின்றனர்.
ஏகாதிபத்தியத்தாலும் உள்நாட்டு முதலாளித்துவ சக்திகளாலும் உருவாக்கப்பட்ட இந்தப் பிரச்சினையில், ஒரு சரியான நிலைப்பாட்டை பின்பற்றி, நாட்டின் அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த மக்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு – தேசிய விடுதலை போராட்டத்தில் வழிநடாத்தி, ஒரு புதிய ஜனநாயக இலங்கையை சிருஷ்டித்திருக்க வேண்டிய இடதுசாரி கட்சிகள் (கம்யூனிஸ்ட் – சமசமாஜ கட்சிகள்), 1960க்கு பின்னர் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்திலும், அதன் உடன்பிறப்பான இனவாதத்திலும் மூழ்கி, தேசிய இனப்பிரச்சினையை முதலாளித்துவ சக்திகளிடம் முற்று முழுதாக கையளித்து, பெரும் வரலாற்று தவறை இழைத்துள்ளனர்.
1964ல் சர்வதேச அரங்கில் நிகிட்டா குருஷேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நவீன திரிபுவாத பாதையில் பயணிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் அதை பின்தொடரத் தொடங்கியது. அதன் காரணமாக திரிபுவாத, பாராளுமனற் வாத கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற உண்மையான கம்யூனிஸ்ட்டுகள், ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினராயினும், அக்கட்சியின் தலைமையும் சரியான கொள்கைகளை பின்பற்றத் தவறிவிட்டது. அக்கட்சி தலைமை பின்பற்றிய வரட்டுத்தனமான, இடது சந்தர்ப்பவாத போக்கு காரணமாக, தேசிய இனப்பிரச்சினையில் ஒரு சரியான நிலைபப்பாட்டை எடுகக் முடியாமல் போய்விட்டது. சொல்லில் புரட்சியும், நடைமுறையில் தொழிற்சங்கவாத சீர்திருத்தவாத வேலைமுறையையும் கொண்டிருந்த அக்கட்சியின் தலைமை, தேசிய இனப்பிரச்சினையை கட்சி கையில் எடுப்பது, கட்சியை இனவாதப்பாதையில் கொண்டு போய்விடும் என்ற மார்கசிச – லெனினிச விரோத வாதத்தை முன்வைத்தின் மூலம் தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக போராட்டத்துக்கான தலைமையை தமிழ் பிற்போக்கு சக்திகளிடம் கைகழுவிவிட்டது.
புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றிய இந்த நவநவீன திரிபுவாத பாதையை பெரும்பாலான கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களும் கீழ்மட்ட உறுப்பினர்களும் ஏற்கவில்லை. அதனால் அவர்களால் 1972ல் மார்கசிச – லெனினிச இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. இக்கட்சிக்குள்ளும் இழுபறி நிலையே தோன்றியது.
கட்சி தேசிய இனப்பிரச்சினையில் முக்கிய கவனம் செலுத்தி வேலை செய்வதின் அவசியத்தை நிராகரித்த ஒரு பிரிவினர் தேசிய முதலாளித்துவத்தின் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்) பின்னால் இழுபட்டு செல்லும் போக்கை பின்பற்ற ஆரம்பித்தனர். அவர்களை வெளியேற்றி கட்சியை தூய்மைப்படுத்திய பின்னர், இரு நாட்கள் விசேட தேசிய மாநாடொன்றை கூட்டி, தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமான சரியான கொள்கையை கட்சி வகுத்தது. இருந்தும் நாட்டில் உருவாகி வந்த தீவிரமான இனவாத சூழல் காரணமாகவும், தமிழ் பகுதிகளில் பாசிச சக்திகள் தலைதூக்கியதின் காரணமாகவும், கட்சி சில ஆண்டுகளில் செயலற்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. (இன்று தனிநபர்களாக இருக்கும் அக்கட்சி உறுப்பினர்கள் தற்பொழுது கட்சியை மீண்டும் புனரமைப்பதற்கான முயற்சிகளில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஈடுபட்டு வருவதாக தெரிகின்றது.) இருப்பினும் அக்கட்சி, தமது தாய்வழி கட்சிகள் இரண்டும் பின்பற்றிய வலதுசாரி – இடதுசாரி சந்தர்ப்பவாத பாதைகளை சீர்செய்வதில், கணிசமான அளவுக்கு சித்தாந்த – அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது.
அதில் முக்கியமானது, தேசிய இனப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகால, சரியான கொள்கையை உயர்த்தி பிடித்ததாகும். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடப் பிரதேசங்களுக்கு சுயாட்சி அமைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மிகச்சரியான, ஆரம்பகால கொள்கையை மார்க்கிச – லெனினிச கட்சி மீண்டும் உறுதி செய்ததுடன், அதை பல்வேறு தமிழ் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து அடைவதற்காக தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற வெகுஜன போராட்ட அமைப்பையும் தோற்றுவித்தது.
தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் புதிய தலைமை, பின்னர் உருவாகி வந்த ஆயுதப்போராட்ட சூழலில், தனது பெயரையும் (தமிழீழ தேசிய விடுதலை முன்னணி – NLFT), கொள்கைகளையும், போராட்ட வழிமுறைகளையும் மாற்றியது. எனினும், தமிழ் தேசியப் போராட்டத்தின் கடந்த 25 ஆண்டுகால அனுபவங்கள், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் ஆரம்பகால பெயர், கொள்கைகள், போராட்ட வழி முறைகள் என்பனவற்றின் பிசகற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை தெளிவுற நிரூபித்துள்ளன. அது மாத்திரமின்றி இன்றைய சூழலில், அத்தகைய ஒரு பரந்தபட்ட வெகுஜன போராட்ட ஸ்தாபனம் ஒன்று, தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.
எனவே இன்றைய சூழ்நிலையில், வரலாற்றை மீள் மதிப்பீடு செய்வதற்கு உதவியாக, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட்டுகள் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டுக்கு ஒர் உதாரணமாக, 1975ம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேச குழு வெளியிட்ட மிக முக்கியமான வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த அறிக்கையை வெளியீட்டில் இணைத்து உள்யோம். இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே பின்னர் ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ உருவாகக்ப்பட்டது.
தேசிய இனபிரச்சினை உருவெடுத்து 25 அண்டுகளைக் கடந்து, தமிழ் மக்கள் பல பெறுமதிமிக்க அனுபவங்களை பெற்றுவிட்ட இன்றைய சூழ்நிலையிலும் சில சிங்கள இடதுசாரிகள் சிங்களப் பேரினவாத தேசிய இறைமையின் பெயராலும், தமிழ் இடதுசாரிகள் சிலர் தமிழ் இனவாத பாசிசத்தை தமிழ் தேசிய விடுதலையின் பெயராலும் நியாயப்படுத்தி நிற்கும் ஒரு சூழலில் இந்த அறிக்கை 33 ஆண்டுகளை கடந்தும், இன்றைக்கும் மிகச் சரியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதுடன், தீர்க்கதரிசன பார்வையையும் கொண்டுள்ளதையும் காணமுடியும்.
அத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே, தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீர்த்தி வாயந்த வட்டுக்கோட்டை மாநாட்டு தமிழழீ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (அது நடைபெற்றது 1976ல்), இலங்கையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஐ.தே.கட்சி பதவிக்கு வந்தது (அவர் ஆட்சிக்கு வந்தது 1977ல்), நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது (அது 1978ல் அறிமுகப்படுத்தப்பட்டது), 1983ன் இனவன்செயலும், அதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமும் ஆரம்பமாகியது, என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.
இந்த அறிக்கையை தயாரிப்பதில், மார்க்சிச – லெனினிச கட்சியின் அன்றைய முக்கிய தலைவர்களான, காலஞ்சென்ற தோழர்கள் மு.கார்த்திகேசன், வி.ஏ.கந்தசாமி ஆகியோர் முக்கிய பங்கு வகித்ததுடன், அவர்கள் உட்பட கட்சியின் வட பிரதேச குழுவின் 15 உறுப்பினர்களினதும், ஏகமனதான ஆதரவுடன் அது வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வறிக்கையினை அன்றைய தினசரி பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்ததோடு, இவ்வறிக்கை கட்சியினால் துண்டு பிரசுரமாக அச்சிடப்பட்டு நாடு முழுவதும் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக விநியோகமும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிக்கை மூல நகல் இவ்வெளியீட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆங்கில மொழியாக்கம், கனடிய – சோவியத் நட்புறவு கவுன்சில், கனடாவில் வெளியிடும் மாத சஞ்சிகையான NORTH STAR COMPASS, தழிலும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிச – லெனினிச ஆய்வு மையம்
இலங்கை
04 – 03 – 2009
._._._._._._.
தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்!
குடியரசு தினத்தை பகிஷ்கரிப்பது என்பதை தமிழர் கூட்டணி வருடாவருடம் ஒரு சடங்காக நடாத்தி வருகின்றது. இது தமிழ் மக்களின் நலன்களுக்கு உகந்ததுதானா, என்பதை தமிழ் மக்கள் தீர்க்கமாக சிந்திக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.
தமிழ் மக்களினதும் சிங்கள மக்களினதும் பொது எதிரி ஏகாதிபத்தியமாகும். அது உலக மக்களினதும் பொது எதிரியாகும். இந்த உண்மையை முன்பு தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி என்பனவும் தற்போது தமிழர் கூட்டணியும் அங்கீகரிக்க மறுத்தது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியமே தமிழ்மக்களின் நலன்களுக்கு உதவவல்லது என்ற தவறான கொள்கையையே நீண்டகாலமாக பின்பற்றி வந்தனர். அதன் விளைவே தமிழ் மக்களை உரிமையற்றவர்களாக வாழவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளியது.
அதுமட்டுமல்லாமல் இலங்கை மக்கள் ஏகாதிபத்தியத்திற்கெதிராக – தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்கும் பாதையில் எடுத்த சகல நடவடிக்கைகளையும் (குடியரசு பிரகடனம் உட்பட) தமிழ்த் தலைவர்கள் எதிர்த்து வந்ததின் மூலம், இலங்கை மக்களில் பெரும்பான்மையோரின் எதிர்ப்பை சம்பாதித்ததுமல்லாமல் தமிழ் மக்கள் தேசிய சுதந்திரத்திற்கும், தேசிய அபிலாசைகளுக்கும் எதிரானவர்கள் என்ற தவறான எண்ணத்தை தென்னிலங்கை மக்கள் மத்தியில் வளர்த்தும் விட்டது. இதனால் இலங்கையில் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்படும் மக்களாக தமிழ் மக்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
மறுபுறத்தில் தமிழ்க் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி தமிழர் கூட்டணி என்பன தொடர்ச்சியாக பின்பற்றி வந்த தேசவிரோதக் கொள்கையைச் சாட்டாக வைத்துக் கொண்டு அரசியல் சுயலாபம் தேடும் பூர்ஜூவாக் கட்சிகள், சிங்கள மக்கள் மத்தியில் மட்டும் தங்கியிருந்து பாராளுமன்ற ஆசனங்களை பெரும்பான்மையாக வென்றெடுக்கும் குறுகிய தேசியவாத, சர்தர்ப்ப வாதக் கொள்கைகளைப் பின்பற்றி வருவதால், தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல தேசிய நலன்களுக்கும் மிகவும் அவசியமானது என்பதை உணர மறுப்பது மூலம், ஏகாதிபத்தியவாதிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு, சைப்பிரஸில் நடப்பது போல் அல்லது பாகிஸ்தானில் நடந்தது போல ஒரு நிலையை உருவாக்க வாய்ப்பைத் தேடிக் கொடுத்துள்ளார்கள்.
இந்த நிலையை உணர்ந்ததினால் பொலும் இலங்கையின் பிரபல தேசியவாதியான முன்னாள் பிரதமர் திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகு முறையையும், கொள்கையையும் பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் மூலம் முன் வைத்தார். இந்த நல்ல வாய்ப்பை ஏகாதிபத்திய சார்பு யூ.என்.பியும் இதர வகுப்புவாத சக்திகளும் வடக்கிலும், தெற்கிலும் நடாத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் சிதறடித்துவிட்டார்கள். இது இந்நாட்டின் துர்ப்பாக்கியமாகும்.
இன்று பண்டாரநாயக்கா கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினை அடிப்படையில் ஒரு தேசியப் பிரச்சினை என்பதை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட அமரர் பண்டாரநாயக்காவின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல்படுத்த தயங்குவதன் மூலம் தமிழ் மக்களை ஏகாதிபத்திய, பிற்போக்கு முகாமில் தள்ளிவிட்டுள்ளது. இதனால் நாட்டுக்கும், தேசிய சுதந்திரத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு பெருவாய்ப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இதையிட்டு நாட்டு நலனில் அக்கறையுள்ள சகலரும் சிந்திக்க வேண்டும். இந்த அபாயம் சிறிய விஷயமல்ல.
எம்மைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் மொழி, இன பாதுகாப்புக்கான சரத்துக்கள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்படாததை நாம் எதிர்க்கின்றோம். அதேபோல பதிவுப் பிரஜைகளுக்கும், இலங்கை பிரஜைகளுக்கும் இடையில் பாகுபாடு காட்டப்படுவதை முற்றாக அகற்ற வேண்டும் என வற்புறுத்துகின்றோம். கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றில் இனரீதியான பாகுபாட்டை நாம் எதிர்க்கின்றோம். பொருளாதார ரீதியாக சிங்கள பிரதேசத்திற்கும், தமிழ் பிரதேசத்திற்கும் இடையில் பாரபட்சம் காட்டப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறைந்தபட்சம் பண்டாரநாயக்காவின் கொள்கைகளையாவது அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
இன்று தமிழ் மக்கள் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தத்தளிக்கிறார்கள். தமிழ் தலைவர்களின் ஏகாதிபத்திய சார்புக் கொள்கை அவர்களை ஒரு புறத்தில் நாசம் செய்கிறது. மறுபுறத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்காமல் இருப்பதன் மூலம் சுயநல அரசியல் லாபம் தேடும் சந்தர்ப்பவாத, குறுகிய தேசிய அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதில் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதும், ஐக்கியப்படுவதுமான அரசாங்கத்தினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் தந்திரோபாயங்களினால் தேசிய வாழ்விலிருந்து தமிழ் மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆகவே இந்த இரண்டு தவறான போக்குகளுக்கும் எதிரக தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும். போராட வேண்டும். இதைத்தவிர தமிழ் மக்கள் முன் வேறு மார்க்கமே கிடையாது.
தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக சக்திகள், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், புத்திஜீவிகள் தொழிற் சங்கங்கள் மற்றும் தேசாபிமானிகள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழர் கூட்டணித் தலைமைக்கும் அரசாங்கத்தினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் தமிழர் விரோதப் போக்குக்கும், எதிராக ஐக்கியப்பட்டு தமிழ் மக்கள் ஜனநாயக அணி ஒன்றைத் தோற்றுவிப்பதே தமிழ் மக்கள் பிரச்சினையின் தீர்வுக்கான முதற் தேவையாகும். ஒரு சிலரின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக குடியரசு தினத்தைப் பகிஷ்கரிப்பதன் மூலம் தமிழ் மக்கள் எந்த நன்மையையும் அடைய முடியாது. மாறாக இளைஞர்களினதும், மாணவர்களினதும் எதிர்காலத்தைத்தான் பாழடிக்க முடியும்.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளையோ வேறெந்த ஏகாதிபத்தியத்தையோ அல்லது அந்நிய நாடு எதனையுமோ நம்பி தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலங்கை மக்களே தீர்வு காண வேண்டும். கம்போடியாவிலும், வியட்நாமிலும் மக்கள் ஈட்டிய மகத்தான வெற்றி நமக்கு நல்ல பாடமாக அமைய வேண்டும். ஏகாதிபத்தியத்தின் காலைப் பிடித்தோரையே ஏகாதிபத்தியம் உதறித்தள்ள வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. ஏகாதிபத்தியத்தைச் சார்ந்தல்ல, எதிர்த்தே மக்கள் விடுதலைபெற முடியும். தமிழ் மக்கள் இந்நாட்டில் சமத்துவ, ஜனநாயக உரிமையுள்ளவர்களாக வாழ தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான பரந்த அணி ஒன்றே தமிழ் மக்களுக்கு வழிகாட்ட முடியும். பெரும் முதலாளிகளாலும் வர்த்தகர்களாலும், நிலச் சொந்தக்காரர்களாலும் தலைமை தாங்கப்படும் தமிழர் கூட்டணியால், தமிழ் மக்களுக்கு எந்த நல்வழியையும் காட்ட முடியவில்லை. இனிமேலும் காடட் முடியாது. ஆகவே இந்த நேரத்திலாவது தமிழ் மக்கள் திர்க்கமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் கமிட்டி வேண்டுகோள் விடுக்கிறது.
எமது தேசத்தின் ஒருமைப்பாடு, நமது மக்களின் ஐக்கியம், நமது பல்வேறு தேசிய இனங்களின் ஐக்கியம், இவையே நமது இலட்சியத்தின் நிச்சய வெற்றிக்கான அடிப்படை உத்தரவாதங்கள் ஆகும்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்)
வட பிரதேசக்கமிட்டி
19–5-75
நாவலன் பதிப்பகம் நல்லூர் யாழ்ப்பாணம்