பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தமொன்று நடைபெறுகையில் ஊடகங்கள் சமூக அக்கறையோடும் தேவையற்ற பதற்றத்துக்கு இடம்தராத வகையிலும் பணியாற்ற வேண்டும். அதேவேளையில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கருவிகொண்டு அழிப்பது, அச்சுறுத்துவது, ஊடக நிறுவனங்களைத் தாக்குவது போன்ற மிலேச்சத்தனமான செயற்பாடுகளை எவரும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான சம்பவங்கள் மிக வன்மையான கண்டனத்துக்குரியவையாகும் என்று செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் கருத்துச் சொல்லும் சுதந்திரம் உண்டு. அதை இன்னொரு கருத்தினால் எதிர்கொள்வதே சரியானதாகும். மாறாக ஆயுதங்களைக் கொண்டு கருத்துக்களை அடக்கவோ அழிக்கவோ முற்படுவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.
அது ஒருவகையில் இயலாமையின் வெளிப்பாடுமாகும். பத்திரிகை விநியோகங்களுக்குத் தடை விதிப்பது, அச்சுறுத்துவது, ஊடக நிறுவனங்களைத் தாக்குவது ஊடகவியலாளர்களைக் கொலை செய்வது என்பன கருத்துக்களின் குரல் வளையை நெரிக்கின்ற கொடூரமாகும். இதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அண்மையில் எம்.ரி.வி. நிறுவனம் தாக்கப்பட்டது, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் எமக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் மேலும் தொடராதிருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். மக்களுக்கு செய்திகளையும் நாட்டு நடப்புக்களையும் அறிந்து கொள்ளும் உரிமையை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அதற்காக ஊடகங்கள் ஆற்றும் பணி மகத்தானதாகும். கருத்து ரீதியாக விமர்சனங்கள் இருக்கின்றபோதும் இன்னொருவரின் கருத்துச் சொல்லும் சுதந்திரத்தை ஈ.பி.டி.பி. யினராகிய நாம் என்றும் மதிக்கின்றோம். எனவே, நடைபெற்றுள்ள கசப்பான மற்றும் துயரமான சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தவிரவும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என்பதையும் உரியவர்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.