._._._._._.
யூசப் கே கே மரைக்கார் மன்னாரைச் சேர்ந்தவர். தற்போதும் இலங்கையில் வாழும் இவர் இலங்கையின் தமிழ் நாளிதழ்களில் தொடர்ந்தும் எழுதி வருபவர். இக்கட்டுரை தேசம்நெற் க்காக எழுதப்பட்டுள்ளது.
._._._._._.
ஒக்டோபர் 24 ஆம் திகதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள் தமது பூர்வீக தாயகத்தை விட்டு வெளியேறி 20 வருடங்கள் முடிவடைந்து விட்டன.
உள்நாட்டில் இடம்பெயர்தல் என்பது பல காரணங்களால் ஏற்படுகின்றது. சுனாமி, புயல், வெள்ளப்பெருக்கு, புவியதிர்வு போன்ற இயற்கை காரணங்களினாலும், இனக்கலவரம், மதக்கலவரம் போன்றவற்றாலும் மற்றும் அரசு அபிவிருத்தித் திட்டங்கள், உள்நாட்டு அல்லது சர்வதேச யுத்தம் போன்ற காரணங்களினாலும் ஏற்படலாம். வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமானது ஒரு வகையான இனச் சுத்திகரிப்பு என்று கூடக் கூறலாம்.
உள்நாட்டு இடம் பெயர்வு பற்றி சர்வதேச சட்டத்தில் தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. சர்வதேச சட்டமானது தேசங்களின் வழமையான சட்டங்களையும் சர்வதேச நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் ஐக்கிய நாடுகள் சபையாலும் அதற்கு முன்பிருந்த சர்வதேச ஒன்றியங்களினாலும் உருவாக்கப்பட்ட சட்டங்களை உள்ளடக்கியது எனச் சுருக்கமாக கூறலாம்.
சர்வதேச சட்டங்களுள் மனித உரிமை சட்டங்களும் மனிதாபிமானச் சட்டங்களும் இணைந்து அகதிகள் பற்றியும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பற்றியும் தெளிவான கருத்துக்களை முன்வைத்துள்ளன.
இவற்றை அடித்தளமாகக் கொண்டு பிரான்சில் டெங் என்ற ஐ.நா. சபையின் சட்ட நிபுணர் 1998 ஆம் ஆண்டு உள்நாட்டில் இடம்பெயர்தல் பற்றிய பொதுக் கோட்பாடுகளை (General Principles on Internal Displacement) உருவாக்கினார்.
இந்த கோட்பாடுகளை வோல்டர் கோலின், கோஹன், யாஷ்காய் போன்ற சட்ட வல்லுனர்கள் மேலும் மெருகூட்டினர். இலங்கையின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான தனியான சட்டவாக்கங்கள் எதுவும் இல்லையென்றாலும் இலங்கை அரசியல் சாசனத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் 10 ஆம் சரத்து முதல் 17 ஆம் சரத்து வரையிலான அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்டம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் உரிமைகளுக்கும் பொருந்தும்.
இங்கே உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான சட்டப்படியான பாதுகாப்பு எனக் கருதுகையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான கோட்பாடுகளும் (GPIO) இலங்கையின் அரசியலமைப்புச் சாசனத்தின் 3 ஆம் அத்தியாயத்தில் 10 முதல் 17ம் பிரிவு, கொசோவோ மற்றும் டேந்தன் உடன்படிக்கை ரீதியான விதிகளும் பொருந்தும். என்றாலும் ஐ. நா. சபையின் அல்லது சர்வதேச சட்டங்களின் ஏற்பாடு இலங்கைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பதையிட்டு இன்றும் வாதப் பிரதிவாதங்கள் உண்டு.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பற்றிக் குறிப்பிடுகையில் அகதிகளுக்கும் இவர்களுக்குமுள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். முன்பு கூறப்பட்ட காரணங்களும் உயிருக்கு பயந்து ஒரு நாட்டின் சர்வதேச எல்லையைக் கடந்தவர்கள் அகதிகளாவர்.
அவ்வாறு வெளியேறாது உள்நாட்டிலேயே மறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் ஆவர். இதனோடு இணைந்து பலவந்த வெளியேற்றம், இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலை, மீள்குடியேற்றம், மீளமர்வு, மீளிணைப்பு, பாரம்பரிய குடிநிலம், வழமையான வதிவிடம் போன்ற செயற்பாடுகளையும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இரண்டாயிரமாம் ஆண்டு உலகில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை சுமார் இரண்டரைக் கோடியாகும். அதாவது உலக சனத்தொகையில் இருநூற்றில் ஒருவர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் ஆகவிருக்கின்றனர் என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.
இதில் இன்னுமொரு பிரதான காரணி என்னவெனில், இந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் மோரோ (Moro) முஸ்லிம்களும், மியன்மாரில் ரோஹில்லயா முஸ்லிங்களும், தாய்லாந்திலும், பங்களாதேசின் முன்னாள் யுத்த அகதிகளும், பாகிஸ்தானிலும் மற்றும் ஆப்கானிஸ்தான், ஈராக், துருக்கி, பொஸ்னியா, சோமாலியா, சூடான், எதியோப்பியா, உகண்டா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலும் முஸ்லிம்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களாக சொல்லொனாத் துயரத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவ்வாறான உள்நாட்டு இடம்பெயர்ந்தவர்களில் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் பொதுவானவை தான். குறிப்பாக மனித உரிமை அல்லது அடிப்படை உரிமை மீறல் சம்பந்தமான குடியியல் அரசியல் சமூக பொருளாதார கலாசாரம் தொடர்பான பிரச்சினைகளாக காணப்படுகின்றன.
விசேடமாக உணவு, உடை, இருப்பிடம், நீர், சுத்தமான சுவாத்தியம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, விருப்புடன் கூடிய மீள்குடியேற்றம், வரவேற்ற சமூகம் (Host Community) என்பவற்றைச் சார்ந்த சிக்கல்களுக்கு விடை காண வேண்டியுள்ளது. உலகின் உள்நாட்டு இடம்பெயர்ந்தோர் பிரச்சினைகளில் அசே, பொஸ்னியா உள்நாட்டு இடம்பெயர்ந்தோர்கள் தவிர்ந்த ஏனைய உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை சுமுகமான தீர்வு காணப்படவில்லை.
இலங்கையில் இப்போது ஐந்து இலட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களாக இருக்கும் நிலையில் இவர்களின் பிரச்சினை முற்று முழுதாய் தீர்க்கப்பட்டால் அந்தப் பெருமை அரசாங்கத்தையும் இது தொடர்பான அமைச்சரையுமே சாரும். இவ்வேளை மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத், வாகரையிலும் மூதூரிலும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களை மீள்குடியேற்றியுள்ளமை பெருமை தருவதாக அமைந்துள்ளது.
1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இறுதிவாரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சுமார் 72000 வடபுல முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இன்றுவரை மீள்குடியேற்றப் படாமலிருப்பது மிக வேதனைக்குரிய விடயமாகும்.
மீள்குடியேற்றமானது உண்மையான விட்டுக்கொடுப்புடனும் ஒத்துழைப்புடனும் இடம்பெற வேண்டும். பொஸ்னியா, அசே போன்ற நாடுகளில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பிரச்சினைகள் இந்த முறையில் தான் தீர்க்கப்பட்டன. முக்கியமாக இனங்களுக்கிடையில் விட்டுக் கொடுப்பும் அரசாங்கத்தின் மனப்பூர்வமான ஒத்துழைப்பும் சர்வதேச சமூகத்தின் இடையாறாத உதவியும் மிக அத்தியாவசியமான காரணிகளாகும்.
இரண்டே மணித்தியாலங்களுக்கும், சில இடங்களில் இரண்டு நாட்களிலும் தமது நிரந்தர வதிவிடத்தை விட்டு பலவந்தமாக விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்களின் இழப்புகள் வடபுல உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் தமிழ்ச் சகோதரர்களது இழப்புக்களை விட எந்த வகையிலும் குறைந்ததல்ல.
இதனையிட்டு பலவந்தமாக விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர் மீது எள்ளளவும் காழ்ப்புணர்ச்சியைக் காட்டவில்லை. மாறாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர் வவுனியா வந்தபோதும் பல லட்சம் ரூபா பெறுமதியான உணவு, உடை, மருந்து என்பவற்றைக் கொடுத்துதவினர்.
மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர் மீது சர்வதேச சமூகமும் இலங்கை அரசும் காட்டும் அக்கறையைப் பார்க்கையில் உண்மையில் நெஞ்சு நெகிழ்கின்றது. பல கோடி ரூபாக்களை இந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களுக்காக கொடுத்துதவினர் என்பது வரவேற்கத்தக்க விடயம்.
உடனடியாக பிரித்தானியா வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லி பிராண்ட்டும் பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் பேனாட் கவுச்னரும் ஐ. நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனும் தமது மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்த அள்ளி அடித்துக்கொண்டு இலங்கைக்கு ஓடி வந்தனர்.
இதற்கு சில தினங்களின் பின்பு பான்கிமூனின் உதவியாளர் லின் பாஸ்கோ இவ்வருட செப்டம்பர் 16 ஆம் திகதி வருகை தந்து மெனிக்பாம் முகாமுக்கு சென்று திரும்பினார்.
ஐ. நா. அகதிகள் தாபனத்தைச் சேர்ந்த அன்டோனியோ கட்டரேஸம் வந்தார். தமிழ் மக்களைப் பார்த்துவிட்டு இவர்களை மீளக்குடியமர்த்துவதற்கும் கவனிப்பதற்கும் மேலும் உதவிகள் வழங்கப்படுமென்றார். பாக்கிமூனின் இடம்பெயர்ந்தவர்களுக்கான விசேட பிரதிநிதி வால்டர் கேவின் என்பவரும் வந்து சென்றார்.
இவர்களது கண்களில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களின் அவலநிலை படாமற் போனது ஏன்? இந்த முஸ்லிம்கள் அவர்களது பார்வையில் மனிதர்களாகத் தோன்றவில்லை போலிருக்கின்றது. இதேவேளை இந்தியா ரூ. 500 கோடிகளை இந்த இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒதுக்கியது.
இது போதாதென்று இன்றும் ரூ. 500 கோடிகளை இம்மாதம் ஒதுக்கியுள்ளது. இதேவேளை இந்தியா பலவந்தமாக விரட்டப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வடபுல முஸ்லிம்களுக்கு ஐநூறு ரூபா தானும் கடந்த இருபது வருட காலங்களில் ஒதுக்கவில்லை, கொடுக்கவில்லை என்பது மனவேதனைக்குரிய ஒரு விடயமல்லவா?
உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றி அதீத அக்கறை செலுத்திய அதேவேளை கடந்த 20 வருட காலமாக அல்லலூறும் இடம்பெயர்ந்த வடபுல முஸ்லிங்களைப் பற்றி ஒரு வார்த்தைதனும் பேசாதிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.
இவ்வாறே சர்வதேச மதஸ்தாபனங்களின் கண்களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இவ் வடபுல முஸ்லிம்கள் தென்படாதது ஏன் என்று புரியவில்லை. இந்த வடபுல முஸ்லிம்கள் அவர்களுக்கு மனிதர்களாகத் தெரியவில்லையோ? என்னவோ?
வெளிநாடுகள்தான் இவ்வாறென்றால் உள்நாட்டில் கூட பாரபட்சம் காட்டப்படுவதற்கு ஓர் எல்லை இல்லை. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரும் எவ்வளவோ பேசுகின்றனர். ஆனால் வடபுல முஸ்லிங்களைப் பற்றி ஒரு வார்த்தை தானும் இவர்கள் பேசாததன் காரணம் என்ன? ஒரு வேளை முற்றாக மறந்து விட்டார்கள் போலும். தேர்தல் வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்குமோ?
தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஒக்டோபர் 1990 ஆம் ஆண்டு வடபுல முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது வாழாவிருந்தது தமிழ்நாடு. இதே தமிழ்நாடு முள்ளி வாய்க்காலிலும் புதுமாத்தளனிலும் மூன்று லட்சம் தமிழர்கள் விடுதலைப் புலிகளினால் மனித கேடயமாகத் தடுத்து வைத்த போது வாய்பொத்தி மெளனம் சாதித்தது.
தமிழக ஊடகங்களும் மேற்குலகும் இத்தமிழர்களை விடுவிக்கும்படி புலிகளை தட்டிக் கேட்கத் துணியவில்லை. துணிவுமில்லை. ஆனால் இன்று இலங்கை அரசாங்கம் அத்தமிழ் மக்களை புலிகளின் பிடியிலிருந்து விடுவித்து வைத்திருக்கும் போது மட்டும் கண்ணீர் விடுவதன் மர்மம் என்ன?
இன்று தமிழ் மக்களின் நலனில் திடீரென்று அக்கறை காட்டும் ஒருசில நாடுகளில் சேகரிக்கப்பட்ட பணத்தினை வைத்துக் கொண்டுதான் புலிகள் இயக்கம் பஞ்சமா பாதகத்தை புரிந்தனர். தம்மை வளர்த்து வாழ்ந்துக் கொண்டு வடபுல முஸ்லிம்களின் வாழ்க்கையையும் சீரழித்தனர். இதே புலிகள் இயக்கம் எப்போதாவது வடபுல முஸ்லிம்களை ஏற்று மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தினார்களா? இந்த சின்னத்தனத்தை எப்படி அழைக்கலாம்? மடைமையா? பாராபட்சமா? இனத்துவேசமா? அறியாமையா? அல்லது இரட்டை வேடமா? யூதர்களின் செல்வாக்குக்கு அடிபணியும் ஒரு சில நாடுகள் முஸ்லிம்களைக் கொன்றழிப்பதற்கும் முஸ்லிம் நாடுகளைத் திட்டமிட்டு அழிப்பதற்குப் பயங்காரவாதத்துக்கும் எதிரான போர் என்ற போர்வையில் செய்யும் அட்டூழியங்கள் தான் இவை.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஒன்றாகத் தான் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிங்களை உதாசீனப்படுத்துவதையும் பார்க்கக் கூடியதாகவிருக்கின்றது. இவர்களுக்கு விடிவு எப்போது? இறைவனுக்குத் தான் தெரியும்.