கிழக்கு மாகாண பள்ளி வாயல்கள் சம்மேளனம் என்ற பெயரில், சம்பந்தப்பட்ட பள்ளிவாயல்களுக்கோ, பள்ளி வாயல்களின் தலைமைகளுக்கோ தெரியாதவாறு அறிக்கைகளும், செய்திகளும் அடிக்கடி வெளிவந்து கொண்டிருப்பதனை அவதானித்து வருகின்றோம்.
குறிப்பாக, கடந்த வருடம் பாராளுமன்ற பஜட் விவாதத்தின் போது கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனம் என்ற கடிதத் தலைப்பில் அரசாங்கத்தின் பஜட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என்ற பெக்ஸ் செய்தியின் மூலம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டு கோள் விடுக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 22.09.2009ம் திகதி தமிழ் தினசரி பத்திரிகை ஒன்றில் கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் ஹனீபா கடத்தப்பட்டு விடுவிப்பு என்று செய்தி வந்திருந்தது. இச் செய்தியில் பள்ளிவாயல் ஒன்றின் தலைவராகவே இல்லாத ஹனிபாவை கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் என்று அடையாளப்படுத் தப்பட்டிருக்கின்றது. இவ் அடையாளப்படுத்துகையானது பள்ளிவாயல்களின் பேரில் சுயலாபம் தேடுவதற்கோ அல்லது அரசியல் இலாபங்களைப் பெறுவதற்காகவோ எடுக்கப்படும் முயற்சியென நாம் திடமாக நம்புகின்றோம்.
மெளலவி ஹனிபா என்பவர் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயலின் தலைவராக இருந்த போது அதன் பதவி வழியாக அம்பாறை மாவட்ட பள்ளிவாயல் சம்மேளனத்திலும், கிழக்கு மாகாண பள்ளிவாயல் சம்மேளனத்திலும் சில பதவிகளில் இருந்திருக்கிறார்., அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயல் தலைமைப் பதவியில் இருந்து அவர் நீங்கிக் கொண்டது 2007.09.12ம் திகதியாகும்.
இதன்படி பள்ளவாயலின் புதிய தலைவரே மேற்படி சபைகள் கூடுகின்றபோதோ அல்லது உருவாக்கப்படுகின்றபோதோ அங்கம் வகிப்பதுவும் பதவி வகிப்பதுவும் நடைமுறை வழக்கமாகும். ஆகவே, கடந்த 02 வருட காலங்களுக்கு மேலாக பள்ளிவாயலின் தலைவராகவே இல்லாத மெளலவி ஹனீபா கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் என்றும், இயங்காத அச்சபையின் பெயரை பாவிப்பதிலிருந்தும், தவிர்ந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இத்தால் வேண்டுகோள் விடுத்துக் கொள்கின்றோம்.
இவ் வேண்டுகோளினை அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாயல்கள் சார்பில் அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாயல், அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளி வாயல், அக்கரைப்பற்று ஜும்ஆ புதுப்பள்ளி வாயல் ஆகிய வற்றின் தலைவர்கள் கூட்டாக இணைந்து வெளியிடுகின்றோம். தவறும் பட்சத்தில் இவ்விடயத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியை நாடவேண்டியதையும் தவிர்க்க முடியாமலாகும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதேவேளை அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள அறிக்கையில்,
கடந்த 16.09.2009ம் திகதி மெளலவி ஹனிபாவிற்கு நடந்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அறியவேண்டியிருக்கிறது என நமது உலமாக்கள் கருதுகின்றனர்.
நமது பிராந்தியம் தொடர்பிலும் சமுதாய நலன்கள் தொடர்பிலும் மெளலவி ஹனிபாவைப் பற்றிய கருத்துக்கள் வித்தியாசமாகப் பேசப்படுகின்றது. அவருக்குப் பின்னால் அரசியல் பின்னணிகள் இருப்பதாகவும் அறியக்கிடைக்கின்ற காரணத்தினால் உலமா சபையினையும் அவ்வரசியல் தேவைகளுக்காக பயன்படுத்துவதனை தடுக் குமாறு நமது உலமாக்கள் கேட்டுக் கொள்கின் றார்கள்.
எனவே 23.09.2009ம் திகதி நடைபெற்ற அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமாக சபைக் கூட்டத்தில் மெளலவி ஹனிபா பேசிக் கொண்ட ஒருதலைப்பட்ச விடயம் தொடர்பாக நாம் எவ்வித தீர்மானத்திற்கும் வரக்கூடாது என உலமாக்கள் எழுத்து மூலம் கேட்டிருக்கின்றனர்.
எனவே, அவர் ஒரு தலைப்பட்சமாக பேசிய விடயம் தொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் ஊடகங்களுக்கோ நமது உயர் சபைகளுக்கோ, தீர்மானங்கள் என்றோ அறிக்கைகள் என்றோ வெளியிடக்கூடாது எனவும் உலமாக்கள் மேலும் கேட்டுக் கொள்கிறார்கள்.
இன்னும் இவற்றையெல்லாம் மீறி இது தொடர்பில் ஏதாவது அறிக்கைகள் வெளியிடப்படுமானால் அவற்றிற்கு அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபையினர் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துக் கொள்கின்றனர்.