::முஸ்லீம் விடயங்கள்

::முஸ்லீம் விடயங்கள்

முஸ்லீம் விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

விரைவில் மௌலவி ஆசிரியர் நியமனம் உறுதி வழங்குகிறார் பிரதிக் கல்வி அமைச்சர்

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் மௌலவி ஆசிரியர் நியமனம் மிக விரைவில் வழங்கப்படுமென மீண்டும் பிரதிக் கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் உறுதிமொழியை வழங்கியுள்ளதுடன், ஓரிரு மாதங்களுக்குள் இந்த நியமனங்களை வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ். அமீரின் அழைப்பை ஏற்று பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்தன் கடந்த திங்கட் கிழமை கல்முனைக்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு அவர் உலமாக்கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீதின் ஏற்பாட்டில் மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக மௌலவிமார்களினுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.  மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

மௌலவி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த மௌலவிகள், மௌலவியாக்கள் பெருமளவில் கலந்துகொண்ட இச்சந்திப்பில் உரையாற்றுகையிலேயே மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பான உறுதிமொழியை அவர் வழங்கினார்.

பிரதி அமைச்சர் சச்சிதானந்தன் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்; கடந்த இருவார காலத்திற்கு முன் கல்வி அமைச்சர் தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற முக்கிய கூட்டமொன்றில் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டுமென்பதை நான் வலியுறுத்தியதையடுத்து அதற்கான முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் தேசிய பாடசாலைகளுக்கான 1500 ஆசிரியர்கள் நியமனமும் தேசிய பாடசாலைத் தொண்டர் ஆசிரியர்கள் 206 பேருக்கான நியமனமும் வழங்கப்படவிருக்கின்றது. இதேவேளை, மௌலவி ஆசிரியர் விண்ணப்பதாரிகள் 460 பேருக்கு மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பெரும்பாலும் அடுத்த இரு மாதங்களுக்குள் இந்த மௌலவி ஆசிரியர் நியமனம் நிச்சயம் வழங்கப்படும் என்றார்.

பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஜே.சிறீகாந்த், மௌலவி முபாரக் அப்துல் மஜீத் ஆகியோரும் உரையாற்றினர். மேலும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.அமீர், பிரதி அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.எம்.எம். புஹாருடீன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதி கல்வியமைச்சர் மெளலவிமார் சந்திப்பு

பிரதி கல்வி அமைச்சர் மு. சச்சிதானந்தனுடன் மெனலவிமார்களுக்கான சந்திப்பு நாளை கல்முனையில் நடைபெறவுள்ளது.

உலமா கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீதின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் மெளலவி ஆசிரிய நியமனம் சம்பந்தமாக இது வரையில் எடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் பற்றி பிரதி கல்வி அமைச்சர், மெளலவி மற்றும் மெளலவியாக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

இச்சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட மெளலவி ஆசிரிய விண்ணப்பதாரிகள் அனைவரும் கலந்துகொள்ளும்படி வேண்டப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு 0712946509 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

சமூக சேவையாளரும், கடற்றொழில் அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான எஸ்.எச். அமீரின் அழைப்பின் பேரில் கல்முனைக்கு விஜயம் செய்யும் பிரதியமைச்சர் கல்முனை ஸாஹிரா, கல்முனை பாத்திமா கல்லூரிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

மீளக் குடியமர்வு நடவடிக்கையின் போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட வேண்டும்

Hasan Ali M T_SLMC Gen Secஇலங் கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் தலைமையிலான தூதுக்குழுவினரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.  இச் சந்திப்பு வியாழக்கிழமை இந்திய இல்லத்தில் பிற்பகல் 12.30 மணிக்கு இடம்பெற்றது. முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பசீர் சேகுதாவூத், முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.எம்.பாயிஸ் மற்றும் பொதுச் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் பங்கு பற்றினர்.

இச் சந்திப்புத் தொடர்பில் அதன் பொதுச் செயலாளர் ஹசன் அலி கருத்துத் தெரிவிக்கையில்; இதன்போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் துரித கதியில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். இதற்கு சமாந்திரமாக வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களையும் குடியேற்ற வேண்டுமென நாம் கோரினோம்.

யுத்தம் முடிந்துள்ள நிலையில் மக்கள் மன நிம்மதியுடன் வாழ அச்சமற்ற சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இதற்கு ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் மற்றும் குடியமர்த்தல் மீள் கட்டமைப்புக்கு அரசியல் வேறுபாடு களையப்பட்டு சகலரும் சேர்ந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.  இத்தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள தலைமைத்துவங்களை இனம் காணப்பட வேண்டும். இதற்கு அவர்கள் சுதந்திரமான ஜனநாயக வழியில் இயற்கையான தெரிவுக்கு வழி வகுக்க வேண்டும். இதன் மூலமே ஒற்றுமையுடன் சகவாழ்வையும் ஏற்படுத்த முடியுமெனவும் தாம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இவற்றுக்கு இந்தியா பங்களிப்புச் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். இச் சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதரக உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான ஷாமும் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் கவுன்சிலின் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

muslim_council_donation.jpgவடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வழங்குவதற்காக முஸ்லிம் கவுன்சிலினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டன. இது தொடர்பான வைபவம் இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநதிகள் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை அமைச்சரிடம் கையளித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா,  இலங்கையிலுள்ள முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியமான முஸ்லிம் கவுன்சில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு ஏற்கனவே பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இன்று 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர். இதற்காக அந்த அமைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறினார்.

ஊடகவியலாளர்கள் எந்தவொரு சம்பவத்தையும் துணிச்சலாக வெளிப்படுத்தக் கூடியவர்களாக மாறவேண்டும்

“கோழைத் தனத்தை எங்கள் மத்தியில் இருந்து தூக்கி எறிந்து விட்டு நேர்மையாக எவருக்கும் சோடை போகாத நிகழ்வுகளைத் துணிவாக வெளிப்படுத்தக்கூடியவர்களாக ஊடகவியலாளர்கள் மாறவேண்டும்’  இவ்வாறு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற முஸ்லிம் சமூகம் ஊடகத்துறையில் எதிர்நோக்கியுள்ள சவால்கள் எனும் விடயம் பற்றிய கலந்துரையாடலில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்; ஒவ்வொருவரினதும் கலாசாரத்தினையும் அந்தந்த கலாசாரத்தைச் சார்ந்தவர்கள் ஏதாவது ஒரு விழிப்புணர்வு அல்லது எழுச்சிக் கூட்டங்களை நடத்தி அதனைப் பாதுகாப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது எங்கள் மத்தியில் உள்ள சூழல் எங்களின் கலாசாரம், விழுமியங்கள், சுதந்திரங்கள், உரிமைகள் அழிந்துவிடுமா? அல்லது அழியப்போகின்றதா? அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்று முயற்சி செய்ய வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

எதையுமே வியாபாரமாக பார்க்கின்ற இக்காலத்தில் எல்லாமே இன்று வியாபாரமாகி விட்டது. சில விடயங்களை வெளிப்படையாகப் பேசுவதனால்தான் அதற்குரிய பதிலை உரியவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். உள்ளொன்று வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றைப் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டால் எமது சமூகம் முன்னேறுவதற்கு இதுவொன்றே போதுமாகும். எமது பிரதேசத்தில் இருக்கின்ற சில ஊடகவியலாளர்கள் மக்களின் பிரச்சினைகள் அல்லது அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் சம்பந்தமாக பத்திரிகைகளில் வெளிக்கொண்டுவருவதற்கு பயந்து ஒதுங்குகின்றார்கள்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

islam.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜும் ஆப் பள்ளிவாசலில் குத்பா பிரசங்கம் நடாத்திய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி சிரமப்படுவோருக்கு உதவுமாறு இலங்கை முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அவர் தனது குத்பா பேருரையில், இஸ்லாம் பிறருக்கு உதவுவதை பெரிதும் வரவேற்கிறது. முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் என்ற எந்த வித்தியாசமும் இதில் இல்லை. மாறாக மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே. ஓர் உயிர் சிரமப்படும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை அல் குர்ஆன் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மிகத்தெளிவாக எமக்கு கற்றுத் தருகின்றன. எனவே நாம் கஷ்டப்படுவோருக்கு துன்ப துயரத்திலிருப்போருக்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அது உடலால், பொருளால், பணத்தால், ஆலோசனையால் எந்த தோற்றத்திலிருந்த போதிலும் பிற சகோதரனின் துன்பம் துடைப்பது இஸ்லாத்தில் மிகவும் முக்கியமானதொரு அம்சமாகும்.

எனவே நாம் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் உதவவேண்டும். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கும் மக்கள் பல சிரமங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களுக்கு உங்களால். முடிந்தவைகளை கொடுத்து உதவுங்கள் இஸ்லாம் கொடையை மிகவும் நேசிக்கின்றது. கஞ்சத்தனத்தை வெறுக்கின்றது.

இன்று முஸ்லிம் சகோதரர்களின் உள்ளத்தில் ஒரு கேள்வி உண்டாகலாம். எமது முஸ்லிம் சகோதரர்களை இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் ஈவிரக்கமின்றி உடுத்திருந்த ஆடையோடு வடக்கிலுள்ளவர்கள் விரட்டியடித்தார்கள் எமது சமூகம் அவர்களால் அகதிகளாக்கப்பட்டது. சொல்லொணாத் துன்ப துயரங்களை முன்னோக்கியது. இப்பொழுது நாம் உதவி செய்வதா?

எமது சகோதரர்களை விரட்டியவர்கள் இந்த அப்பாவிப் பொது மக்கள் அல்ல. இஸ்லாம் பழிக்குப்பழி வாங்குவதை கற்றுத்தரவில்லை. மாறாக அநியாயம் செய்தவர்களோடும் உபகாரம் செய்து வாழுமாறு எம்மை பணித்திருக்கின்றது. நபி(ஸல்) அவர்களை குறைஷிக் காபிர்கள் மக்காவிலிருந்து விரட்டியடித்தார்கள். எனினும் மக்கா வெற்றி கிடைத்தபோது நபியவர்கள் அவர்களனைவரையும் மன்னித்து விட்டார்கள். நாமும் அந்த உத்தம நபியின் வழிமுறையையே பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகத்தின் கண்ணீரைத் துடைக்கவே தேர்தலில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது – அஸ்லம் தாலிப்

election.jpgமுஸ்லிம் சமுதாயத்தின் கண்ணீரைத் துடைக்கவே நான் தேர்தல் களத்தில் குதித்தேன். என் போன்ற இளைஞர்கள் நம் சமுதாயத்தில் புரையோடிப் போயுள்ள இன்னல்களை இனம் கண்டு சேவை செய்ய முன்வர வேண்டுமென கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல. முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அஸ்லம் தாலிப் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அஸ்லம் தாலிப் மேலும் தெரிவிக்கையில்; பல்வேறு கோணங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்ற மூத்த அரசியல் வாதிகள், முஸ்லிம் சமூகத்தின் இளம் சமுதாயத்தின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி எதுவுமே சொல்லாமல் பிதற்றிப் பேசி வருகின்றனர்.

கொழும்பில் சீரான நீர் வடிகாலமைப்பு இல்லை. சேரிப் புறங்களில் சிறு வீதிகள் சிதைந்து காணப்படுகின்றன. வீடுகள் ஒழுகிக் கரைகின்றன. இவற்றில் கவனமெடுத்து சமுதாய ஏழை எளிய மக்களின் துயரங்கள் துடைக்கப்படவே நான் இத் தேர்தலில் களமிறங்கினேன். இதேபோல கொழும்பு முஸ்லிம் பாடசாலைகள் மிகவும் பின் தங்கிக் காணப்படுகின்றன. ஏன் இந்த அவல நிலை. வேறு மாவட்டங்களில் எமது முஸ்லிம் மாணவர்கள் கல்வியில் முன்னேற வெற்றிக் கம்பங்களை எட்ட முடியுமானால் ஏன் எம்மால் முடியாமலுள்ளது. யார் சிந்திக்கின்றார்… நான் கூறிய உண்மைகளை என்னால் கூட நம்ப முடியவில்லை தான். ஆயினும் நாம் எல்லோரும் ஜீரணித்துத் தான் ஆக வேண்டும் என்றார்.

இஸ்லாமிய சஞ்சிகையின் பிரதிகள் கல்முனைப் பகுதியில் எரிப்பு

அல்- ஹஸனாத் மாதாந்த இஸ்லாமிய சஞ்சிகையின் 600 பிரதிகள் கல்முனைப் பகுதியில் இனந் தெரியாத குழுவினரால் அபகரிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் வெளியீடான அல்ஹஸனாத் சஞ்சிகையின் ஏப்ரல் மாத வெளியீடு ‘பல்லின சமூகங்களுக்கு மத்தியில் பண்பாட்டெழுச்சி, எனும் கருப்பொருளில் சிறப்பிதழாக வெளியாகியது. இந்த இதழ்களே அபகரிக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன.

குறித்த சிறப்புப் பிரதிகளை விற்பனை செய்வதற்கென்று அல்ஹஸனாத் தொண்டர்கள் கிழக்கு மாகாணத்திற்குச் சென்றனர். கல்முனை பிரதேசத்தில் சென்று அல்ஹஸனாத் சஞ்சிகையை வீட்டுக்கு வீடாக விற்பனை செய்து கொண்டிருந்த தொண்டர்களிடம் இனந்தெரியாத குழு ஒன்று வந்து அல்ஹஸனாத் சஞ்சிகையை விற்பனை செய்ய வேண்டாம் என்று கூறியதுடன், அதனை தங்களிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுள்ளனர்.

அதனைக் கொடுக்க மறுத்த தொண்டர்களை தாக்க முற்பட்ட அந்தக் குழு, விற்பனைக்காக வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 600 பிரதிகளை பலவந்தமாக பறித்தெடுத்து தீயிட்டுக் கொளுத்தியுள்ளது.

10 ஆயிரம் ரூபாவுக்கான புலமைப் பரிசில் – படை வீரர்களின் 250 குழந்தைகளுக்கு

wanni-operations.jpgஉயிர் நீத்த மற்றும் வலது குறைந்த நிலைக்குள்ளாக்கப்பட்ட படை வீரர்களின் 250 குழந்தைகளுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கான புலமைப் பரிசில்களை வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தூதுக் குழுவொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து இந்த புலமைப் பரிசில்களை கையளித்தது.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் முஸ்லிம் நலன்புரி அமைப்புக்களை ஒன்றிணைத்து இயங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், இலங்கையில் படை வீரர்கள் அடைந்துவரும் வெற்றிகளைப் பாராட்டும் நோக்கில் சகல முஸ்லிம்கள் சார்பாகவும் இந்த அன்பளிப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் அரசு தூண்டி விடுவதாக விசனம் -ஹக்கீம்

hakkeem.jpgகிழக்கில் ஒரு குழு ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்ததாக வெளி உலகுக்குக்காட்டிய வண்ணம் அரசு ஆதரவோடு தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு இயங்கி வருவதாக தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன் காரணமாக கிழக்கு மாகாண முஸ்லிம்களும், அங்குழுவுக்கு எதிரான தமிழ் மக்களும் பெரும் அச்சம் பீதி கொண்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

யுத்த வெற்றிப்பேரிகை முலக்கத்தின் மூலம் அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான உணர்வுகளைத்தூண்டி விட்டுக் கொண்டிருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் கடும் விசனம் வெளியிட்டார்.

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இஸ்லாமும் பன்மைத்துவமும் எனும் கருப்பொருளிலான தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்த தேசிய மாநாட்டில் நாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 300 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதாவது;  எமது நாடு இன்று பல்வேறு பட்ட சவால்களை எதிர் கொண்டிருக்கும் நிலையில் இத்தகையதொரு மாநாடு இடம் பெறுவதானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே நாம் கருத வேண்டியுள்ளது. சர்வதேசத்தின் கவனம் இன்று தென்னாசியாவில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் பக்கம் திருப்பப்பட்டிருப்பதை காணலாம். அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமாவின் அண்மைய அறிக்கையையும், அமெரிக்க இராணுவத்தின் அறிக்கையும் தென்னாசிய சிறுபான்மை முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், ஆயுதப் போராட்டக் குழக்களாகவும் பார்க்கின்ற ஒரு போக்கையே காண முடிகிறது. மேற்குலக போக்கு உலகில் முஸ்லிம்கள் தான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்பதாகவே உள்ளது. இது இஸ்லாமிய உலகம் இன்று எதிர் கொண்டிருக்கும் பெரும் சவாலாகவே காணப்படுகின்றது.

இது இவ்விதமிருக்க இலங்கையிலும் காலத்துக்குக்காலம் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மைச் சமூகங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர். முஸ்லிம்கள் பெரும்பான்மை கலாசாரத்தின் பக்கம் புகுந்து விடாமலும் மேலாதிக்க தேசியவாதத்துக்கு அடிபணியாமல் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதுமே ஆயதப் போராட்டத்துக்கு முயற்சிக்கவுமில்லை. அதற்குத்துணைபோகவுமில்லை. தெற்கில் முஸ்லிம்களும், சிங்களவரும் சமாதானமாகவும், சகிப்புத்தன்மையுடனும், புரிந்துனர்வுடனும் வாழ்ந்து வந்துள்ளனர்.. இதேபோன்று வடக்கிலும், கிழக்கிலும் முஸ்லிம்களும், தமிழரும் ஒன்றாக ஒரு தாய்பெற்ற பிள்ளைகள் போன்று சமர சமாகவும், புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பேரினவாதச் சக்திகள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தவர் மனங்களில் நச்சுவிதையை விதைக்கும் வேலையை தொடங்கினர். இதன் மூலம் படிப்படியாக தமிழ் மக்களுக்கு எதிரான போக்கு வளர்க்கப்பட்டது. இதன் தாக்கத்தை வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் உணரத்தலைப்பட்டனர். தேசிய அரசியலிலிருந்து தமிழர் ஓரங்கட்டப்படுவதை உணரத் தொடங்கியதும் அந்தச் சமூகத்தின் இளைஞர்கள் தங்களது உரிமைக்காக ஆயுதமேந்த முன்வந்தனர்.

இதேபோன்று இன்று வடக்கு, கிழக்கு இணைப்பு நீக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய சூழ்நிலையில் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் அங்கு வாழும் தமிழ் மக்களால் ஓங்கட்டப்படுமோ என்ற அச்சமும் இன்று உருவாகியுள்ளது.

இன்று அரசு பிரலாபித்துவரும் யுத்த வெற்றிப் பேரிகை முழக்கத்தின் மூலம் சிங்கள மக்களுக்கு என்ன செய்தியை சொல்லவிளைகின்றது. பேரினவாதத்துக்குத் துணை போயுள்ள அரசாங்கம் சிங்கள மக்களின் உணர்வுகளை சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தூண்டிவிட்டுள்ளது. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் மிகப் பாரதூரமானவையாகவே அமையலாம். இதுதான் தமிழ், முஸ்லிம், மக்கள் அச்சமும், பீதியும் கொள்ளக் காரணமாகும்.

இத்தகையதொரு நெருக்கடி மிக்க காலகட்டத்தில் இஸ்லாம் பற்றியும் பன்மைத்துவம் பற்றியும் பேசமுற்பட்டிருப்பது மிகப் பொருத்தமுடையதாகவே நாம் காண்கின்றோம். பன்மைத்துவத்தின் அடிப்படையே சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு என்பவையாகும். இதனை மேற்குலகம் தெரிந்து வைத்திருந்தாலும் கூட முஸ்லிம் உலகை தன் காலடிக்குக் கொண்டுவர வேண்டுமென்பதற்காக தென்னாசியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாத முத்திரை குத்தி செயற்பட முனைகின்றது. பாகிஸ்தானைப் பயங்கரவாதத்தின் மோட்சம் எனக்காட்ட மேற்குலகம் முனைகிறது எனவும் ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்.