சுவீடன் நாட்டில் அல்பிரெட் நோபல் என்பவர் 21.10.1833இல் இமானுவேல் அல்பிரட்டுக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தார். இவருக்கு தந்தையை அதிகம் பிடிக்காது. தாயின் செல்லப் பிள்ளையாகவே வளர்ந்தார். இரசாயனவியலில் திறமைகளைக் கொண்டு இவரே டைனமைட்டை கண்டுபிடித்தார். இதனூடாக பெருந்தொகையான செல்வம் குவிந்தது. அப்பணத்தின் ஒருபகுதி சுவீடனில் இரசாயனவியல், பௌதீகவியல் போன்றவற்றுக்கான நோபல் பரிசாகக் கொடுக்கப்பட்டாலும் சமாதானத்துக்கான பரிசை நோர்வே நாடுதான் கொடுக்கவேண்டும் என அல்பிரட் நோபல் அவர்கள் முன்மொழிந்திருந்தார். நோவேயிய ஆட்சிமன்றத்தால் தெரிவு செய்யப்படும் குழுவே சமாதானத்துக்கான நோபல் பரிசை யாருக்குக் கொடுப்பது என்பதைத் தீர்மானிக்கும்.
ஒபாமாவுக்கு எதற்கு?
2009ம் ஆண்டுக்கான 108 ஆவது சமாதானப்பரிசை ஏன் அமெரிக்க அதிபர் பராக் உபாமாவுக்கு கொடுக்கிறோம் என்பதை நோபல்குழு நோகாமலே சொன்னது. அதாவது சர்வதேச ரீதியாக இராஜதந்திரத்தைப் பலப்படுத்தியதற்காகவும் மனித ஒத்துழைப்பை ஊக்குவித்ததற்காகவுமே இப்பரிசு இவ்வருடம் வழங்கப்படுகிறது. முக்கியமாக அணுவாயுதமற்ற உலகை உருவாக்குவதற்கான ஒபாமாவின் நோக்கமும் இதில் அடங்குகிறது.
இப்பரிசுக்கான முன்மொழிவைக் கேட்டதுமே பலர் அதிர்வடைந்தனர். இது காலமுதிர்வுக்கு முன்னரே கொடுத்து விட்டார்கள் ஒபாமா வாக்களித்தபடி எதையுமே செய்யவில்லை என்று பல நோவேயிய மக்கள் குழம்பிக் கொண்டனர்.
ஒபாமா தகுதியுடையவரா?
எதையும் மிகச்சுலபமாகச் சொல்லலாம் ஆனால் செய்வது என்பதுதான் கடினமானது. சர்வேதேச ரீதியில் இராஜதந்திரத்தை ஏற்படுத்தினார் என்றால் எங்கே, எப்போ என்பதற்கான போதிய தகுந்த ஆதாரங்கள் கிடையாது. கூடிப்பேசலாம் ஆனால் நடந்தது என்ன? ஈராக்போர் முடிந்ததா? ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுகிறதா? புஸ்சினால் தொடக்கி வைக்கப்பட்டு சர்வதேச சித்திரவதை முகாம் முற்றாக செயலிழந்ததா? சிலவேளை இவரது இராஜதந்திரம் இலங்கையில் பலித்திருக்கிறது எனலாம். கடைசி நேரத்தில் புலிகளுக்குக் கைகொடுப்பேன் என்று கைவிட்டது ஒரு நல்ல இராஜதந்திரி தானே. இதுபற்றி நோர்வே உயர்மட்ட இராஜதந்திரிகள் தான் நன்கறிந்திருப்பார்கள். இவர்கள் ஒபாமாவுக்கு பரிசளிப்பது ஆச்சரியத்துக்குரியது அல்லவே. இந்தப்பரிசு தனக்குத் தகுதியுடையதா? இல்லையா என்பதை உணரமுடியாத ஒபாமாவுக்கு இது பரிசல்ல, பரிசுகெடுப்பாகும். தன் சொந்தநாட்டிலே தான் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த முடியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார். இவரது சுகாதார மீழ்கட்டமைப்பு ஊர்ந்து கொண்டிருக்கிறது.
ஒபாமா இப்பரிசை மறுத்துரைத்து தான் சொன்னதை, சமாதானத்துக்கான பங்களிப்பை செய்த பின்பு எனக்கு இந்த சமாதானப்பரிசைத் தாருங்கள் என்று கூறியிருந்தால் ஒபாமா மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவரே. நோபல் குழுவாவது தன்பிழைகளை உணர்ந்திருக்கும். தான் கொடுத்த வாக்குகளை நிறைவேற்ற முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும், இதனால் கடைசிவரையும் கிடைக்க முடியாத ஒன்றை எப்படியாவது எடுத்து விடவேண்டும் என்று எண்ணினாரோ என்னவோ?
அல்பிரெட் நோபலின் சமாதானப் பரிசுக்கான முன்மொழிவில் முக்கியமானது இராணுவம், இராணுவத் தளபாடங்கள், இராணுவப்பலக் குறைப்பு என்பது. இதை ஒபாமா செய்தாரா? ஈராக்கில் இருந்து தன் இராணுவத்தை வெளியில் எடுப்பேன் என உறுதியளித்தவர் இன்னும் அதற்காக பெருமுயற்சியை செய்யவில்லை, மாறாக 15 000 அமெரிக்கப் போர்வீரர்களை நவீன இராணுவத் தளபாடங்களுடன் அனுப்பி வைத்துவிட்டு நோர்வேக்கு நோபல்பரிசு வாங்க வருகிறார். இவர் எந்தவிதத்திலும் மற்ற அரசியல்வாதிகளில் இருந்து வித்தியாசப்படவில்லை. இது பரிசளிப்பா? பரிசு அழிப்பா? பரிசு கெடுப்பா? இப் பரிசுகெட்ட பரிசைவாங்க ஒரு பரிசளிப்பு விழாவா?
ஒரு சமாதானத்துக்கான பரிசை வாங்கவரும் ஒருவரின் பாதுகாப்புக்காக பலமில்லியின் குரோண்கள் பாவிக்கப்படுகிறது. தெருவிலே கிடக்கும் அள்ளுறுகளின் வாய்மூடிகள் உலோகங்களால் ஒட்டப்படுகிறது. பலமுக்கிய வீதிகள் போக்குவரத்துக்குத் தடைசெய்யப் படுகின்றன. ஒஸ்லோவின் முக்கிய இடங்களில் நுழைவனுமதி மறுக்கப்படுகிறது. இவர் தங்கியிருக்கும் கிராண் கொட்டல் முற்றாக வெற்றிடமாக்கப்பட்டு ஒபாமாவுடன் வந்திருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. கொட்டலுக்கு வெளியே ஒபாமா வந்து கையசைக்கும் வேளை யாரும் சுடாதிருக்க குண்டுகள் துளைக்கா கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஒபாமாவின் பாதுகாப்புக்காக அமெரிக்காவிலிருந்து தனிவிமானத்தில் எடுத்து வரப்படுகிறது லீமுசீன் எனும் மோட்டார் வண்டி. இந்த மோட்டார் வண்டியை எந்தச் சன்னமும் துளைக்காது. குண்டுகள் உடைக்காது. 13மிமீ தடிப்புடைய சிறப்புத் தயாரிப்புக் கார் கண்ணாடியை பசுக்காவே நொருக்காது. இப்படியான பாதுகாப்புகளுடன் வரும் ஒபாமாவுக்கு ஏன் மில்லியன் பணச்செலவில் பாதுகாப்பு. பரிசை எல்லாம் வெள்ளை மாளிகையில் கொடுத்துவிட்டு செலவுசெய்யும் பணத்தைப் பிரயோசனமாக வறியநாடுகளின் வளர்ச்சிக்கோ ஏன் அமெரிக்காவில் வறுமைக் கோட்டின் கீழ்வாழும் கறுப்பின மக்களின் தொழில் வாய்ப்புக்கோ பயன்படுத்தியிருக்கலாமே.
இவர் வந்து இறங்கும் விமானநிலையத்தில் இருந்து ஒஸ்லோ வரை இராணுவப்பாதுகாப்பு. இப்பகுதிகளில் அசையும் கதலிகள் (இராடார்கள்) இராணுவ வாகனங்களில் பூட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. எந்த விமானமும் எல்லைக்குள் நுழையுமுன்னரே முன்னரே சுட்டுவிழுத்தக் கூடியவாறு பீரங்கிகள் மூக்கை நீட்டிக்கொண்டு நிற்கின்றன. இவ்வளவும் எதற்கு? சமாதானப்பரிசு பெறவரும் ஒபாமாவால் நோர்வே போர்கோலம் பூண்டிருக்கிறது எனலாம்.
இராணுவத்தையோ துப்பாக்கிகளையோ தெருவில் காணாத எமது பிள்ளைகள் பயப்படுகின்றனர். இப்படியான இராணுவ பொலிஸ் நடமாட்டத்தைக் கண்டு நோபல் பரிசே அழுகிறது, நாறுகிறது. சமாதானப் பரிசுக்கே போர் பயம் என்றால் சமாதானம் எங்கே? இது பரிசா? பரிசு கெடுப்பா? ஒருவனின் வருகைக்காக நாடே போர் வேடம் தாங்குகிறது என்றால் அவன் போரைக் கொண்டுவாறான் என்றுதானே அர்த்தம். இந்தப் பரிசு கெடுப்பை எப்படி யாரிடம் சொல்லுவது. பரிசைக் கொடுத்து சமாதானத்தைப் பரிசு கெடுக்கிறார்களே.
Related News: அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் பரிசு ? : என் எஸ் குமரன்