அணு குண்டு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈரான் போதியத் திறன் பெற்றுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுகுண்டு கண்காணிப்புப் பிரிவு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் அணுகுண்டு தயாரிப்பதில் பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ கியூ கான் உதவி செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அணுகுண்டு தொழில்நுட்பத்தை ஈரான் அதன் நட்பு நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டு, தற்போது தனது தேவைக்கு ஏற்ப அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக சர்வதேச அணுசக்தி முகமை தகவல்களை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி ஏ கியூ கான் மூலம் அணுகுண்டு வடிவமைப்பு தொழில்நுட்பங்களை ஈரான் பெற்றுக் கொண்டுள்ளது. மேலும் யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கான இயந்திரங்களையும் அவர் ஈரானுக்கு விற்பனை செய்துள்ளதாகப் பல்வேறு உளவுத்துறை நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
மேற்கண்ட தகவல்களை ஈரான் சென்றுவந்த ரஷிய அணு ஆயுத விஞ்ஞானியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே அணுகுண்டு தயாரிப்புத் தொடர்பாக ஈரான் போதுமான திறனைப் பெற்றுவிட்டதாகவும், தாற்காலிகமாக ராணுவ தேவைக்கு மட்டும் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அணுகுண்டு தயாரிப்புப் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை எனவும் அங்கிருந்து கிடைத்த உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் 2003-ம் ஆண்டிலேயே அணு ஆயுதங்கள் தயாரிக்கும் திறமையைப் பெற்றுவிட்டதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, அமெரிக்க உளவு அமைப்புகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாயின.
ஆனால் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, பிரிட்டன்,,பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டிவருகின்றன.