::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

கடல் பகுதி பாதுகாப்புக்கு இந்தியா, பாகிஸ்தான் கூட்டுப் படை – பாகிஸ்தான் யோசனை

210909flag.jpgகடல் வழியாக வந்து தீவிரவாதிகள் தாக்குவதைத் தடுக்கும் வகையில், கடல் பகுதி பாதுகாப்புக்கு கூட்டுப் படை அமைக்கலாம் என பாகிஸ்தான் யோசனை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில்,  பாகிஸ்தானின் கராச்சி பகுதியிலிருந்து கடல் வழியாக மும்பை சென்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 183 பேர் பலியாகினர். இந்நிலையில்,  கடல் கொள்ளைகளைத் தடுப்பது தொடர்பான கருத்தரங்கு, கராச்சி நகரில் திங்கள்கிழமை நடந்தது. இக்கருத்தரங்கை துவக்கிவைத்த பாகிஸ்தான் கடற்படைத் தலைவர் நோமன் பஷீர்,  பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மும்பை தாக்குதலை அடுத்து,  கடல் பகுதி பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், இந்தியா,  பாகிஸ்தான் இரு நாட்டு வீரர்களையும் கொண்ட கூட்டுப் படை அமைக்கலாம் என அரசுக்கு யோசனை தெரிவித்திருக்கிறோம் என்றார்.

மும்பை தாக்குதலுக்கு தீவிரவாதிகள் பயன்படுத்திய படகுகளை,  விசாரணை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்தப் படகுகளை ஓட்டிச் சென்றவர்களை தற்போது தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை கடல் கொள்ளை அதிகமாக நடந்துள்ளது. 33 கப்பல்களை கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். 140 தாக்குதல்களை நடத்தி உள்ளனர் என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

எயார் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் ரிக்கெட் பதிவுகள் ரத்து; சேவைகள் பாதிப்பு

26-air-india.jpgவிமானிகளின் வேலைநிறுத்தம் எதிரொலியாக கடைசி நிமிடத்தில் விமானங்கள் ரத்துச் செய்யப்படுவதால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங் களை கருத்தில் கொண்டு காலை நேர விமானங்களை ரத்துச் செய்யவும்,  ரிக்கெட் முன்பதிவுகளை நிறுத்திவைக்கவும் எயார் இந்தியா முடிவு செய்துள்ளது.

வெள்ளத்தில் பலியானோர் இருநூற்றி நாற்பதாக உயர்வு – பிலிப்பைன்ஸில் நான்கு இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்

280909.jpgபிலிப்பைன் ஸில் வீசிய கெற்சனா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 240 பேர் உயிரிழந்ததுடன், ஒரு இலட்சம் பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். சென்ற சனிக்கிழமை பிலிப்பைன்ஸில் கடும் மழை பெய்ததுடன், பாரிய சூறாவளியும் வீசியது. இதில் இருபது அடிக்கு மேல் வெள்ளம் நின்றது.

சுமார் நான்கு இலட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. நாளாந்தம் இழப்புகளின் தொகை அதிகரித்த வண்ணமுள்ளது. இராணுவம், பொலிஸ் படையணிகள் ரோந்தில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதி க்கப்பட்டோரை கரையேற்றி வருகின்றனர்.

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தையடுத்து அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துகள் இன்னும் வழமைக்கு வரவில்லை. விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மீன் பிடி படகுகள் துறைமுகத்துக்குத் திரும்பியுள்ளன. மின்சாரம் சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன.

வீடுகளை விட்டு வெளியேறியோரைப் பராமரிப்பதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளம் பூரணமாக வடியும் வரை தேவையில்லாத பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. வியட்நாமை நோக்கி கெற்சனா சூறாவளி மணித்தியாலத்துக்கு 12 கி.மீற்றர் வேகத்தில் நகர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அரோயா தனது இரண்டு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியு ள்ளார். இதையடுத்து ஏனைய அரசியல் தலைவர்களும் தங்கள் சம்பளங்களை வழங்க முன்வந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பொருளாதார நோக்குடனேயே வருகின்றனர்: எதிர்க்கட்சி எம்.பி.

அவுஸ்ரேலியாவுக்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பொருளாதார நோக்கத்துடனேயே வருவதாக அந்த நாட்டின் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இவர்கள் அகதிகள் என்ற போர்வையில் அவுஸ்ரேலியாவுக்குள் பிரவேசிக்கின்ற போதிலும், பெரும்பாலானோர் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே பிரவேசிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ‘பானபி ஜோய்சி” தெரிவித்துள்ளார்.

புகலிடம் கோருவோராக நேற்று முன்தினம் 40 பேர் வரை அவுஸ்ரேலியாவுக்குள் பிரவேசித்தமையை அடுத்தே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.  அகதிகளாக வருவோரில் பெரும்பாலானோர் மல்டி விட்டமின் போசனை வில்லைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ள ஜோய்சி அவர்கள் மகிழ்ச்சியாகவே காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவுஸ்ரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வரும் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போதைய குடிவரவு கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாலியல் தொழிலுக்காக பெண்கள் கடத்தல் – இந்திய பெண்கள் அமைப்பு ஆழ்ந்த கவலை

290909family.jpgபாலியல் தேவைகளுக்காக இந்தியாவில் பெண்கள், சிறுவர்கள் கடத்தப்படுவது குறித்து இந்திய பெண்கள் அமைப்பு அக்கறை செலுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரப் பிரதேஷ், குஜராத், ராஜஸ்தான், புதுடில்லி ஆகிய மாநிலங்களிலே பெருமளவான பெண்களும் சிறுவர்களும் கடத்தப்படுகின்றனர்.

இவர்கள் பின்னர் பாலியல் தேவைகளுக்காகவும் தொழிலுக்காகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த வேலையை குறிப்பிட்ட குழுவொன்று செய்து வருகின்றது. நேபாளத் திலிருந்தும் பெண்கள் இந்தியாவுக்குள் அழைத்து வரப்பட்டு பாலியல் தொழில்களுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

இது குறித்து பெண்கள் அமைப்பு அதிக அக்கறை செலுத்தியுள்ளது.

அமெரிக்க – கியூபா உறவுகளை வலுப்படுத்த காத்திரமான நடவடிக்கைகள் அவசியம்

கியூபா – அமெரிக்க உறவுகளை கெட்டியான முறையில் வளப்படுத்த அமெரிக்கா வரவேண்டுமென கியூபா வெளிநாட்டமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா. கூட்டத் தொடரில் உரையாற்றிய கியூபா வெளிநாட்ட மைச்சர் ரொட்ரிக் மேலும் கூறியதாவது, அமெரிக்கத் தலைவர்களின் ஐ.நா. உரை கியூபாவுடனான உறவுகளை பல ப்படுத்தும் வகையில் அமையவில்லை என்பது துரதிர்ஷ்டமான விடயம்.

சகல நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையிலான உறவுகளை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும். இதற்கு சர்வதேச சமூகம் அவசரமாக பணியாற்ற வேண்டும்.

அமெரிக்கா, கியூபாவிடையே ஐம்பது வருடங்களாக நல்லுறவு இல்லை. கியூபா ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோ ஓய்வுபெற்ற பின்னர் அமெரிக்காவின் அணுகுமுறைகள் மாறத் தொடங்கின. சென்ற ஏப்ரல் மாதம் கியூபா மீதான சில தடைகள் தளர்த்தப்பட்டன. அமெரிக்கர்கள் தடை யின்றி கியூபா சென்றனர்.

செய்மதிச் சேவைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகள் அமெரிக்க கம்பனிகளால் கியூபா வில் நடத்தப்பட்டன. இது போன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளிடை யேயும் நல்லுறவுகளை வளப்படுத்த உதவுகின்றன. கியூபா பொருட்கள் சேவைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும் அந்நாட்டின் வெளிநாட்டமைச்சர் குறிப்பிட்டார்.

உலகத் தமிழ் மாநாடு ஜுன் இறுதிக்கு ஒத்திவைப்பு

260909tamilnadugovtlogo.jpgஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுவதாக இருந்த ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு ஜூன் மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு தொடர்பான ஆய்வரங்கக் கலந்தாய்வுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கோவையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழறிஞர்களும், ஆய்வாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். எனினும் ஆய்வுக் கட்டுரைகள் தயாரிக்கவும், பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும் கூடுதல் அவகாசம் கிடைத்தால் வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பெரும்பாலானோர் பங்கேற்க வாய்ப்புக் கிடைக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே போதுமான கால அவகாசம் எடுத்துக்கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்கி அளிக்கவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் பெருமளவில் கலந்துகொள்ளவும் வசதியாக 2010 ஜனவரி இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மாநாடு 2010 ஜுன் இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ நடைபெறத் தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்வது எனக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் தேர்தலில் ஏஞ்சலா மேர்கல் வெற்றி

290909jarmani.jpgஜேர்மனில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிபர் ஏஞ்சலா மேர்கலின் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது. 622 பாராளு மன்ற ஆசனங்களில் ஏஞ்சலா மேற்கலின் கிறிஸ்தவக் கட்சி 332 ஆசனங்களை வென்றுள்ளது.

55 வயதுடைய ஏஞ்சலா மேர்கல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். ஏனைய கட்சிகளுடன் கூட்டரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகளில் அவரின் கிஸ்தவக் கட்சி முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏஞ்சலா மேர்கலின் கட்சி 48 வீதமான ஆசனங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானிலுள்ள ஜேர்மன் படைகள் எதிர்கொள்ளும் சங்கடமான சூழல்களால் அதிபர் ஏஞ்சலா மேர்கலின் அரசாங்கம் கடும் விமர்சனங்களுக்குள்ளான போதும் தேர்தலில் எதிர்பார்த்ததைவிட கூடுதலான ஆசனங்களை வென்றுள்ளது.

தேர்தலின் மொத்த முடிவுகள் வெளியான பின்னர் ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்வது பற்றி இறுதி முடிவு எடுக்கப் படவுள்ளது. ஏற்கனவே அரசாங்கத்தில் அங்கம் வகித்த கட்சிகளுடனே மீண்டும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன

வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் துரிதம்; 60 ஆயிரம் பேர் இதுவரை மீட்பு – வெளிநாட்டு உதவிகளை பிலிப்பைன்ஸ் எதிர்பார்ப்பு

280909.jpgபிலிப் பைன்ஸ் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தொடர்வதாகவும் பலியானோர் தொகை 73 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை மழை ஓய்ந்ததால் வெள்ளம் குறையத் தொங்கியது. இதனால் மீட்புப் பணிகள் தடையின்றித் தொடர்ந்தன.

மீட்கப்பட்டோரில் அறுபதாயிரம் பேர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் சிறுவர்களே அதிகமாகும். ஹெலிகொப்டர்கள், தோணிகளின் உதவியுடன் வெள்ளத்தில் தத்தளித்தோர் காப்பாற்றப்பட்டனர்.

வெள்ளம் முற்றாக வடிந்த பின்னரே சேத விபரங்களின் சரியான தகவல்களை அறிய முடியுமென மீட்புப் பணியாளர்கள் கூறினர். வெள்ளத்திலிருந்து தப்பும் பொருட்டு மக்கள் வீட்டுக் கூரைகளின் மேலும் உயரமான இடங்களிலும் ஏறிக் கொண்டனர்.

ஒன்பது மணித்தியாலங்களுக்கு இடைவிடாது மழை பெய்ததால் இருபது அடி உயரத்தில் வெள்ளம் நின்றது. பிலிப்பைன்ஸின் தலைநகர் மனிலா உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. நாற்பது வருடங்களின் பின்னர் இப்பெரு வெள்ளம் பிலிப்பைன்ஸைச் சேதப்படுத்தியது.

மக்களைப் பொறுமையாக இருக்கும்படி பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கோரியுள்ளதுடன், வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று இலட்சத்து முப்பதாயிரம் பேர் வரை வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளனர்.

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் இஸ்ரேல் இராணுவத்தால் முற்றுகை

இஸ்ரேலியப் படைகளுக்கும், பலஸ்தீனர்களுக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பில் நான்கு பலஸ்தீனர்கள் காயமடைந்ததுடன் இரண்டு இஸ்ரேல் இராணுவ வீரர்களும் காயத்துக்குள்ளாகினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு ஜெரூஸத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலடியில் இச் சம்பவம் இடம் பெற்றது.

முஸ்லிம்களின் புனிதத் தலங்களுள் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேலியர்களைத் தடுத்து நிறுத்த பலஸ்தீனர்கள் முயன்றபோதே இச் சம்பவம் ஏற்பட்டது.

இக் கலகத்தை அடக்க மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கி மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இறப்பர் குண்டுகளால் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம் கைக்குண்டுகளையும் வீசியது.

இஸ்ரேல் குடியேற்றங்களை நிறுவும் பொருட்டு கிழக்கு ஜெரூஸலத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டட வேலைகளைத் தடுத்து நிறுத்தவே பலஸ்தீனர்கள் திரண்டு வந்தனர். நான்கு பலஸ்தீனர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். நிலைமைகள் சீரடையும் வரை இப்பகுதியை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது.