அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இதுவரை கையெழுத்திடாத நாடுகள் அனைத்தும் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வியாழக்கிழமை ஒரு மனதாக நிறைவேறியது. இந்தக் கூட்டத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளைக் குறி வைத்தே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதில் கையெழுத்திட மாட்டோம் என்று இந்திய அரசு சார்பில் கூறப்பட்டது. பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன.
ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு அணு சக்தியைப் பயன்படுத்த இந்தியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொண் டிருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைக்க வேண்டும் என்பதிலும் சர்வதேச அணு விசை ஏஜென்சியின் கண்காணிப்பில் இந்திய அணு நிலையங்களைக் கொண்டு வந்தே தீர வேண்டும் என்பதிலும் அமெரிக்கா உறுதியாக இருப்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.
பாகிஸ்தானையும், இஸ்ரேலையும் அமெரிக்காவால் எந்த அளவுக்கு நிர்ப்பந்தப்படுத்த முடியும் என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவுக்கு அணு சக்தி பயன்பாட்டுக்குத் தேவைப்படும் மூலப் பொருள்கள், தொழில்நுட்பம், ஆகியவற்றுக்காக இனி இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதாகவே சர்வதேசப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்துள்ள அனைத்து நாடு ளும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்.பி.டி.) கையெழுத்திட்டே தீர வேண்டும். ஒருங்கிணைந்த அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலும் (என்.டி.பி.டி.) கையெழுத்திட வேண்டும். உலக நன்மையைக் கருதி இதைச் செய்ய வேண்டும்.
அணு ஆயுதங்கள் பெருகுவது நல்லதல்ல. உலகின் எந்தப் பகுதியில் அணுகுண்டு வீசப்பட்டாலும் அது மனித குலத்தின் பேரழிவுக்கே இட்டுச் செல்லும். இப்போது அணு ஆயுதங்களைத் தயாரித்து கையிருப்பில் வைத்துள்ள நாடுகள் அவற்றைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அணு குண்டுகளை வெடித்துச் சோதனை நடத்தும் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அணுகுண்டு தயாரிப்புக்குப் பயன்படும் மூலப் பொருள்களைத் தயாரிப்பதையே நிறுத்திவிடவும், உலக நாடுகள் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என்று இத் தீர்மானம் கோருகிறது. இதற்கு 1887 வது தீர்மானம் என்று பெயர்.
ஐக்கிய நாடுகள் சபை தோன்றிய 1945 லிருந்து பாது காப்பு கவுன்சிலின் அனைத்து நாடுகளும் பங்கேற்கும் உச்சி மாநாடு இன்றோடு இதுவரை 5 முறை தான் கூடியிருக் கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்குவது இதுவே முதல் முறை. இதிலிருந்தே இந்தத் தீர்மானத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.
பான். கி. மூன் புதியதொரு வரலாற்றுக்கு உலக நாடுகளை இட்டுச் செல்லும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் இந்தத் தீர்மானம் நிறைவேறிய பிறகு பாராட்டு தெரிவித்தார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டு ஒப்பந்த நாடுகளும் ரஷ்யா தலைமையிலான வார்சா இராணுவக் கூட்டு ஒப்பந்த நாடுகளும் எதிர் எதிர் முகாம்களில் இருந்த போதிலும் கூட அணு ஆயுதச் சண்டை நடை பெறாமல் தவிர்த்துவிட்டோம். இனியும் அப்படி இருக்க முடியும் என்று தோன்றவில்லை.
உலகம் முழுக்க பல பயங்கரவாத குழுக்கள் தோன்றி ஆதிக்கம் பெற்று வருகின்றன. அணு ஆயுதமோ அவற்றைத் தயாரிக்கும் தொழில்நுட்பமும் மூலப் பொருள்களுமோ அவற்றின் கைகளில் கிடைத்தால் அதை விட பெரிய அச் சுறுத்தல் மனித சமூகத்துக்கு இருக்க முடியாது என்பதால் தான் இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தீர்மானத்தின் நோக்கம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இனி கையெழுத்திடுவதை அமெரிக்கா ஊக்குவிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நியூயோர்க்கில் நிருபர்களிடம் தெரிவித்தார்.