மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நாளை தொடங்குகிறது. 28ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் மற்றும் மாநாட்டு வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் இலக்குவனார் திருவள்ளுவர், செம்பை சேவியர், தேவதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் திருச்சி, சென்னை, ஜெர்மனி, பாங்காக், மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. 6-வது மாநாடு மலேசியாவில் 4 நாட்கள் நடத்தப்படுகிறது.சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து தமிழறிஞர்கள் 60 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து , அமெரிக்கா , கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இருந்து பெருந்திரளாக தமிழ் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25-ந் தேதி மாநாட்டின் முதல் நாளில் பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் வா.மு.சேதுராமன் வரவேற்புரை நிகழ்த்துவார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசியா பிரதமர் அலுவலக அமைச்சர் சூ கூன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பேசுவார்கள்.
2-ம் நாளில் தமிழ் மற்றும் தமிழர் பற்றி பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். ஈழத் தமிழர்கள் உள்பட உலகின் பல இடங்களில் வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும். இந்தத் தலைப்பில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி உரையாற்றுவார்.
இந்த மாநாட்டில் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் நடத்தப்பட உள்ளது. அண்ணா பற்றிய கவிதைகளை கவிஞர்கள் பாட உள்ளனர். நிறைவு விழாவில் பன்னாட்டு தமிழுறவு தகவல் தொடர்பு நூல் வெளியிடப்படுகிறது. இதை இ.சி.ஐ. திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் வெளியிட, முதல் பிரதியை சக்கர இந்து புத்த தர்ம தேரோ சாமிகள் பெற்றுக் கொள்வார். உலகில் உள்ள அனைத்து தமிழறிஞர்களின் இ.மெயில் முகவரிகள் இந்தப் புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டு உள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராஜேந்திரன் மாநாட்டு நிறைவுரை ஆற்றுவார்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதும், உலகத் தமிழர்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை வளர வேண்டும் என்பதும்தான் இந்த மாநாட்டின் நோக்கம் என்று தெரிவித்தனர்.