ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுக்கும், 6 நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் துருக்கியில் நடைபெறவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை வகுக்கும் பிரிவின் தலைவர் ஜாவியர் சொலோனர் தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் ஜேர்மனியின் பிரதிநிதிகள் பங்கேற்பர். ஈரான் சார்பில் அதன் அணுசக்தித் திட்ட முக்கிய அதிகாரியான சய்யீத் ஜலிலி பங்கேற்பார்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தையின் போது உலக நாடுகளுடனான வர்த்தகம், பொருளாதாரத் தடை குறித்த விஷயங்களும் விவாதிக்கப்படும் என்றார் அவர். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பிறகு, ஈரானுடன் நடைபெறவிருக்கும் முதலாவது உயர் நிலையிலான பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஈரான் விஷயத்தில் வெளிப்படையான கொள்கையைப் பின்பற்றுவதற்கான முயற்சிகளை ஒபாமா மேற்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ராஜீயத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடைசியாக கடந்த ஆண்டு, ஜூலை மாதம் ஜெனீவாவில் ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் வல்லரசு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.