அவுஸ்திரேலியாவில் கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 30 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
கடந்த மாதம் அவுஸ்திரேலியா சென்ற அமைச்சர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவிடம், இனிமேல் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெறாமல் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அவுஸ்திரேலியா உறுதி அளித்தது.
இந்த வாக்குறுதி அளிக்கப்பட்ட ஒரு மாதம் முடிவதற்குள் அங்கு மீண்டும் 3 இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அவர்களில் சுக்தீப் சிங் (வயது 26), அவரது சகோதரர் குர்தீப் சிங் ஆகியவர்கள் மாணவர்கள். இன்னொருவர் இவர்களின் உறவுமுறையைச் சேர்ந்தவர்.
மெல்போர்ன் நகரின் கிழக்கு புறநகர் பகுதியில் இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒரு மதுபான விடுதியில் நடந்த விளையாட்டில் கலந்துகொண்டனர். அப்போது அங்கு விருந்தில் கலந்துகொண்டிருந்த 70 இளைஞர்கள் அவர்களிடம் வந்து வம்பு இழுத்து, ஒழுங்காக உங்கள் நாட்டுக்கு போய்விடுங்கள் என்று எச்சரித்ததுடன், கேலியும் கிண்டலும் செய்தனர்.
இந்தியர்கள் உடனே எதற்கு வம்பு என்று நினைத்து தங்கள் கார்களில் ஏறிச்செல்ல முயன்றனர். அப்போது 70 பேரும் மாணவர்கள் இருவர் மற்றும் அவர்களது உறவினர் ஆகியோரை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.
இதில் காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த போலிஸார் 70 பேரில் 6 பேரை கைது செய்தனர்.