::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

யூவான் அல்மெய்தா காலமானார்

130909.jpgகியூப புரட்சியின் முக்கியமான ஆரம்பகட்டத் தலைவர்களில் ஒருவரான யூவான் அல்மெய்தா இதய நோயால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 82.

கியூபாவின் துணை அதிபரான யூவான் அல்மெய்தா, ஃபிடல் மற்றும் ராவூல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியின் ஆரம்பகாலங்களின் போது போராடியிருந்தார்.

இந்த போராட்டத்தின் முடிவாக ஃபல்கேன்சியோ பாட்டிஸ்டாவின் அரசாங்கம் 1959 ஆம் ஆண்டு ஆட்சியில் தூக்கி எறியப்பட்டது.

ஹவானாவை சேர்ந்த கட்டிட தொழிலாளியான யூவன் அல்மெய்தா, புரட்சியாளர்கள் தலைமை பீடத்தில் இருந்த ஒரே கறுப்பினத்தவர் ஆவார்

ஊழல் அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யோசனை

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள், சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்களைப் பறிமுதல் செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்.

பொதுமக்களின் பணத்தில் அரசு அதிகாரிகள் சொத்து சேர்த்தால், அதை பறிமுதல் செய்ய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்தார்.

ஊழல் ஒழிப்புத் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது, தலைமை நீதிபதி இந்தக் கருத்தை வலியுறுத்தினார். அதேபோல், ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முக்கியப்புள்ளிகள் மீது வழக்குத் தொடர்வதற்கு அனுமதியளிப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

சிறப்பு நீதிமன்றங்கள் பற்றாக்குறையால், ஏற்கெனவே 9 ஆயிரம் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் ஊழல் தடுப்பு அமைப்புக்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அந்த நிலையில், வழக்குத் தொடர அனுமதியளிப்பது மற்றும் பெருமளவு சாட்சிகளை கொணர்வது ஆகியவற்றில் ஏற்படும் தேவையற்ற காலதாமதம் ஆகியவை, ஊழல் வழக்குகளில் முறையான தண்டனை பெற்றுத் தருவதற்கு பெரும் தடையாக உள்ளன என்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கவலை வெளியிட்டார்.

என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் – வைகோ

“விடுதலைப் புலிகளிடம் இருந்து நான் பணம் பெற்றதாக சுப்ரமணியசுவாமி கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள்” என்று வைகோ கூறினார்.

அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:  இன எதிரிகள் நம்மைக் கடுமையாக விமர்சித்தால் நாம் சரியான பாதையிலேயே செல்கிறோம் என்று தந்தை பெரியார் கூறியிருக்கிறார்.

சிங்கள அரசும், தமிழினத் துரோகிகளும் என் மீது பழி சுமத்தும்போதுதான் அவர்கள் எம்மீது எவ்வளவு ஆத்திரத்தில் இருக்கிறார்கள் என்பதும் எமது லட்சிய உறுதியும் நிரூபணமாகிறது. விடுதலைக்காகப் போராடும் அவர்களிடம் காசு வாங்குவது என்பது உலக அரங்கிலேயே பெரிய ஈனச் செயலாக இருக்கும்.

“சீறிவரும் சிங்கத்தை எதிர்த்தால் அது பெருமைக்குரிய போராட்டமாகவே இருக்கும். அருவருக்கத்தக்க அசிங்கத்தில் புரளும் பிராணி வரும்போது, ஒதுங்கிக் கொள்வது மேலானது” என்று பழந்தமிழ்ப் பாடல்கள் சொல்கின்றன. இதுதான் என்னுடைய வாதம்.

ஜெட் ஏயார் ஊழியர்கள் வேலைநிறுத்தம் : 9 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வி

09-airways-99.jpgஜெட் விமான ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக நடத்திவரும் வேலை நிறுத்தப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இன்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 9 மணி நேரம் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை மும்பையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் சுமுகமான முடிவு எட்டப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இந்தப் போராட்டத்தினால் இன்று 242 ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஹிட்லரின் பாலியல் நடவடிக்கையை சித்திரிக்கும் எயிட்ஸ் விளம்பரத்தால் சர்ச்சை

aids-ad.jpgசர்வாதி காரி ஹிட்லர் பெண் ஒருவருடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சித்திரிக்கும் புதிய ஜேர்மனிய எயிட்ஸ் விளம்பரம் ஒன்று, ஐரோப்பா எங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மேற்படி விளம்பரமானது ஜோசப் ஸ்டாலின், சதாம் ஹுசைன் ஆகியோர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவதை சித்திரிக்கும் காட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.

இந் நிலையில் இன ரீதியான வெறுப்புணர்வை பிரதிபலிக்கும் இந்த விளம்பரத்துக்கு ஐரோப்பா எங்குமுள்ள ‘எயிட்ஸ்’ விழிப்புணர்வு தொண்டர் ஸ்தாபனங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘எயிட்ஸ் என்பது ஒரு மக்கள் கொலையாளி’ என்ற தலைப்பில் ஆங்கிலம் ஜேர்மன், மற்றும் ஸ்பானிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம், எதிர்வரும் வாரம் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படவுள்ளது.

இந்த விளம்பரமானது எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துவதாக உள்ளதாகவும் தமக்கு எயிட்ஸ் நோய் உள்ளதா என பரிசோதிப்பதற்கு வெட்கப்பட்டு பின்வாங்கும் நிலையை மக்கள் மத்தியில் தோற்றுவிப்பதாக உள்ளதாகவும் பிரித்தானியாவை அடிப்படையாக கொண்டு செயற்பட்டு வரும் எயிட்ஸ் விழிப்புணர்வு தொண்டர் ஸ்தாபனமான ‘ரெரன்ஸ் ஹைக்கின் டிரஸ்ட்’ குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் மேற்படி விளம்பரத்தை தயாரித்த டாஸ் கொமிட்டி முகவர் நிலையத்தின் ஆக்க பணிப்பாளர் டிர்க் சில்ஸ் விபரிக்கையில், “இந்த விளம்பரமானது மக்களை அதிர்ச்சியடையச் செய்து ‘எயிட்ஸ் எச்சரிக்கை’ தொடர்பில் அவர்களது கவனத்தைத் திசை திருப்புவதை நோக்காகக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் அதிக வருவாயைப் பெறுவது இந்தியா

workers.jpgவெளிநாடு சென்று வேலைபார்க்கும் தொழிலாளர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கும் பணத்தின் அளவை வைத்துப் பார்க்கையில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா தான் என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.

கடந்த ஓர் ஆண்டில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பிரஜைகளிடம் இருந்து இந்தியா 4500 கோடி அமெரிக்க டாலர்களைப் பெற்றுள்ளதாம். இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் சீனாவும் அதைத் தொடர்ந்து மெக்ஸிகோவும் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.

பிக் பிரதர் நிகழ்ச்சி என மோசடி – துருக்கியில் 9 இளம் பெண்கள் மீட்பு

11-big-brother-girls.jpgபிக் பிரதர் ரியாலிட்டி ஷோவைப் போல நடத்துவதாக கூறி 9 இளம் பெண்களை மோசடியாக வரவழைத்து ஒரு வீட்டில் தங்க வைத்து அவர்களை கேமரா மூலம் ரகசியமாக ஆபாச படம் பிடித்து வந்துள்ளது துருக்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 மாத வீட்டுச் சிறைக்குப் பின்னர் அந்தப் பெண்களை போலீஸார் மீட்டுள்ளனர்.

இஸ்தான்புல் அருகே உள்ள ஒரு வீட்டில்தான் இந்தப் பெண்களை அடைத்து வைத்திருந்தனர். பிக் பிரதர் நிகழ்ச்சி போல என்று கூறி இவர்களை வரவழைத்து வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டனர். பின்னர் ரகசியக் கேமரா ஒன்றின் மூலம் இவர்களது செயல்பாடுகளை ரகசியமாக படம்  பிடித்து அவற்றை இன்டர்நெட் மூலம் நேரடி ஒளிபரப்பாக காட்டி பணம் பார்த்துள்ளனர். இதில் அவர்களது பாத்ரூம் ஆபாச காட்சிகளும் படுக்கை காட்சிகளும் அடக்கம். அதை இன்டர்நெட்டில் வி்ற்றுள்ளது அந்தக் கும்பல்.

முதலில் பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெண்கள் தேவை என்று இந்த கும்பல் விளம்பரம் கொடுத்துள்ளது. அதைப் பார்த்து நிறையப் பெண்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு குரல் தேர்வு, முக அழகுத் தேர்வு என நிறைய நடத்தி பின்னர் 9 பேரை தேர்வு செய்து வீட்டுக்குள் அனுப்பி விட்டனர். இந்த நிலையில், இந்தப் பெண்களின் பெற்றோர்கள், தங்களது பெண்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் பெரும் குழப்பமடைந்து போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸ்  விசாரணையில், பிக் பிரதர் நிகழ்ச்சி என்ற பெயரில் 9 பெண்களும் சிக்கிய விவரம் தெரிய வந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்று அடைபட்டிருந்த 9 பெண்களையும் மீட்டனர்.

இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு

110909rahul_gandhi.jpgஅகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இந்தியாவின் தேசிய நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது நாட்டிலுள்ள நதிகளை இணைப்பதென்பது ஆபத்தான யோசனை என்றார்.

அத்தகைய திட்டங்களின் பாரதூர விளைவுகள் பற்றி சிந்திக்கப்பட்டதாக தனக்குத் தெரியவில்லை என்ற அவர் இயற்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடவேண்டும் என்றும் அதனுடன் விளையாடுவது பேரழிவினை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தார்.

தமிழக முதல்வர் கருணாநிதி நதிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக அனைத்து நதிகளையும் இணைக்கலாம் என்கிறாரே என்று கேட்டபோது, அத்தகைய இணைப்பு ஆபத்தானது என்பது தனது சொந்தக் கருத்து என்றும், மேலும் மாநிலங்கள் நதி நீர் பங்கீடு குறித்த பிரச்சினைகளை வேறு வழிகளிலே தீர்த்துக்கொள்ள முயலலாம் என்றும் ராகுல் காந்தி பதிலளித்தார்.

ஸ்வைன்: இந்தியாவில் 154 பலி

swine.jpgபன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மகாராஷ்டிராவில் 5, கர்நாடகாவில் 4 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் சுமார் 176 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகபட்சமாக 68 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 32, மகாராஷ்டிராவில் 26, தமிழகத்தில் 19 மற்றும் ஹரியானாவில் 14 பேருக்கு பரவியுள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,611 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு ‘முன்டாசர்’ திங்கள் விடுதலை

1099images.jpgகடந்த ஆண்டு டிசம்பரில் பாக்தாதில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீது பாதணிகளை வீசி பிரபலமடைந்த இராக் நாட்டு பத்திரிகை நிருபர் முன்டாசர் அல் ஜெய்திக்கு கார், வீடு,  பணம் என பல்வேறு பரிசுப் பொருள்களை தரத் தயார் என்று ஏராளமானவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

புஷ் மீது பாதணி வீசிய குற்றத்துக்காக அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இராக் நீதிமன்றம் ஒன்று 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.  ஜனாதிபதி; பொதுமன்னிப்பு வழங்கியதால் அவர் அடுத்த திங்கள்கிழமை விடுதலை ஆகிறார். அவர் விடுதலை ஆகப்போகும் செய்தி எட்டவே ஏராளமானோர் அவருக்கு வெகுமதி தருவதற்காக காத்திருக்கின்றனர்.  இதற்காக பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர்.  இந்த தகவலை தி கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

நிருபர் இதற்கு முன்பு வேலை செய்த நிறுவனத்தின் அதிபர் 4  படுக்கை அறை வசதி கொண்ட வீட்டை கட்டிமுடித்து அவருக்கு அதை இனாமாக வழங்க தயாராக உள்ளாராம். இதுதவிர கார் போன்றவையும் அவருக்கு கொடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. மேலும் அவர் வேலைசெய்த பத்திரிகை அலுவலகத்துக்கு நிறைய பேர் தொடர்பு கொண்டு பணம் தருகிறேன்,  அவரது உடல்நலம் பேண மருத்துவ செலவை ஏற்கிறேன் என்றெல்லாம் தெரிவித்துள்ளனர்.

மொராக்கோவில் வசித்துவந்த இராக்கியர் ஒருவர் முன்டாசர் திருமணம் செய்துகொண்டு உல்லாசமாக இருக்க தனது மகளையே தருகிறேன் என்று தெரிவித்துள்ளாராம். சவூதியிலிருந்து தொடர்பு கொண்ட மற்றொரு நபர் முன்டாசரின் ஷ_க்களுக்காக 1 கோடி டாலர் பணம் தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளாராம்.

ஆனால் இதையெல்லாம் நம்பிவிடமுடியாது.  புஷ் மீது ஷ_ வீசப்பட்ட உடன் எத்தனையோ பேர் தொடர்புகொண்டு இது தருகிறேன் அது தருகிறேன் என வாய் நிறைய பேசினார்கள். சொன்னதோடு சரி. இப்போதும் இந்த வார்த்தைகளை நம்பிவிட முடியாது.  என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றார் பத்திரிகை ஆசிரியர் அப்துல் ஹமீத்

சிறையிலிருந்து விடுதலையாக உள்ள முன்டாசர் இனி பத்திரிகையாளர் வேலைக்குப் போகத் தயாராக இல்லை என்பது மட்டும் தெரிகிறது. அவர் அநாதைகள் இல்லம் ஆரம்பிக்கப் போகிறாராம். இந்த தகவலை தமது இரு சகோதரர்களிடம் முன்டாசரே தெரிவித்துள்ளார