ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகளின் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையிலிருந்து கொழும்பு செல்லவிருந்த பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளானார்கள். இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானம் ஒன்றை இயக்கி அவர்களை கொழும்பு அழைத்துச் சென்றது. ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள் வேலைநிறுத்தம் காரணமாக ஜெட் ஏர்வேஸ் சேவை முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக சென்னையிலிருந்து ஜெட் நிறுவனம் இயக்கும் எட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கொழும்புக்கான விமானம். இந்த விமானம் இன்று ரத்து செய்யப்பட்டதால், அதில் செல்லவிருந்த பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
இதையடுத்து சென்னையிலிருந்து கொழும்புக்கு ஏர் இந்தியா நிறுவனம் கூடுதல் விமானத்தை இயக்கியது. சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் பயணிகள் இதில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதே விமானத்தில், ஜெட் வேலைநிறுத்தத்தில் சிக்கி கொழும்பு செல்ல வேண்டிய இந்திய கிரிக்கெட் அணியினரும் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த சிறப்பு கூடுதல் விமானம் இன்று முற்பகல் 11.45 மணிக்கு சென்னைக்கு வந்திருந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிற பயணிகளுடன் பெங்களூர் சென்றது. அங்கு தங்கியிருந்த சில வீரர்களை ஏற்றிக் கொண்டு 12.45 மணிக்கு கொழும்பு சென்றது.
இந்த விமானத்தில் சச்சின், ராகுல் டிராவிட், கம்பீர், இஷாந்த் சர்மா, பிரவீன் குமார், அமித் மிஸ்ரா, யூசுப் பதான், படேல், அபிஷேக் நாயர், திணேஷ் கார்த்திக், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரும், பயிற்சியாளர்களான ராபின் சிங், வெங்கடேஷ் பிரசாத், கேரி கிர்ஸ்டன் ஆகியோரும் பயணித்தனர்.