அணு சக்தியை உற்பத்தி செய்வது ஈரானின் தார்மீக உரிமை. இந்த உரிமையை; விட்டு கொடுக்க தயாரில்லை என, ஈரான் ஜனாதிபதி அகமது நிஜாத் தெரிவித்துள்ளார்.
ஈரான், அணு ஆயுதம் தயாரித்து வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அஞ்சுகின்றன. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை கேள்விப்பட்ட மேற்கத்திய நாடுகள், அந்நாட்டின் மீது கடந்த 2006ம் ஆண்டு முதல் பொருளாதார தடை விதித்துள்ளன.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்தி கொண்டால், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை விலக்கி கொள்வது குறித்து பரிசீலிப்போம்; இல்லாவிட்டால் ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரித்திருந்தார். அணு சக்தி உற்பத்தி என்பது ஈரானின் தார்மீக உரிமை. இந்த உரிமையை விட்டு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. அமைதி பணிக்கு தான் அணு சக்தியை ஈரான் பயன்படுத்துகிறது.
மேற்கத்திய நாடுகள் பயப்படுவது போல் நாங்கள் அணு ஆயுதம் எதையும் தயாரிக்கவில்லை.அணு ஆயுத பரவல் தடை, அமைதி பணிக்கு அணு சக்தி என்ற விஷயத்தில் மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்.
இந்த மாத இறுதியில் ஐ.நா., பொது சபையில் பேச வரும் போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்று அகமது நிஜாத் மேலும் தெரிவித்துள்ளார்.