இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளது. விடுதலைப் புலிகள இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச் செய்தியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அசாதாரண நிலை காணப்படுகிறது.
இன்று காலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கத்தின் கார் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
சேலத்தில் புதிய பஸ் நிலையப் பகுதியில் இன்று காலை குடியுரிமை நடுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அப்போது அரசுப் பேருந்து ஒன்று தாக்கி சேதப்படுத்தப்பட்டது. பஸ் டிரைவரும், கண்டக்டரும் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை முதல் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் செல்லக்குப்பம் பகுதியில், ராஜபக்சேவின் கொடும்பாவி தீவைத்து எரிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், சிதம்பரம் , மஞ்சக்குப்பம் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னை நகரில் பிரபாகரன் மரணச் செய்தி அசாதாரண நிலையை உருவாக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் இதே பேச்சாக உள்ளது. சில பகுதிகளில் வர்த்தர்கள் அவர்களாகவே கடைகளை அடைத்துள்ளனர். பஸ் போக்குவரத்து உள்ளிட்டவை இயல்பாக உள்ளது.