::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

இந்தியப் பிரதமரைச் சந்தித்த ஒபாமா பாராளுமன்றத்திலும் விசேட உரை

india-obama.jpgஆசியா வுக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். புதுடில்லியில் ஒபாமாவுக்கு இராஜ மரியாதை வழங்கப்பட்டது. செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் 21 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

இந்தியா இன்றைய உலகில் சிறிய நாடாக தோன்றவில்லை. உலக வல்லரசுகளில் ஒன்றாக மாறிவருகின்றது. பயங்கரவாதத்தை ஒழித்தல், அமைதியை நிலை நாட்டுதல் அமெரிக்க இந்திய வர்த்தக உறவுகளை மேம்படுத்தல் என்பவற்றில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் உறவு வைப்பதில் அமெரிக்கா பெருமையடைகின்றது என்றும் பராக் ஒபாமா உரையாற்றினார். இந்தியப் பிரதமரைச் சந்தித்த பின்னர் ஒபாமா இந்தியப் பாராளுமன்றத்திலும் உரையாற்றினார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையைப் பெற்றுத் தருவதில் அமெரிக்காவின் அபிலாஷை என்னவென்பதையறிவதில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கறையாயிருந்தனர். பிரதமரின் இல்லத்தில் இராப்போசன விருந்திலும் ஒபாமா கலந்து கொண்டார். இந்தியாவின் வளர்ச்சி ஐ.நா பாதுகாப்புச் சபையில் அந்நாடு அங்கம் பெறும் சூழலை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு ஒபாமா வருவதையொட்டி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அத்துடன் முக்கியமான உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகின. அணு உலைகளை அமைப்பது, அணு பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைச் சம்மதிக்க வைப்பது, அயல்நாடுகளின் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பது, போன்ற விடயங்கள் இங்கு விசேட கவனமெடுக்கப்பட்டன.

பராக் ஒபாமா இந்தியாவுக்கு விஜயம் செய்ததை பாகிஸ்தான் பெரிதாக விரும்பவில்லை. ஒபாமா பாகிஸ்தான் வரவேண்டுமென்பது இஸ்லாமாபாத்தின் எதிர்பார்ப்பாகும் அத்துடன் சீனாவும் ஒபாமாவின் இந்திய விஜயத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பராக் ஒபாமா இந்தியா வருகை

obama.jpgஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நான்கு நாள் பயணமாக இன்று மும்பை வந்தார். முதல் முறையாக இந்தியா வரும் ஒபாமாவுக்கு, மும்பை நகர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தங்கும் மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் அருகே உள்ள கேட் வே ஆப் இந்தியா பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு, வாஷிங்டன் ஆன்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் தனது மனைவி மிஷெல், இரு மகள்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஒபாமா. இந்தியா புறப்பட்டார் வழியில் ஜெர்மனியில் அவரது விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.

இன்று பகல் 1 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தடைந்த ஒபாமாவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி மும்பையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பயணத்தின்போது இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையிலும், அணு சக்தி்த் துறையிலும் மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 12 பில்லியன் டாலர் அளவுக்கான இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த நாட்டிடமிருந்து இந்தியா போர் விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வாங்கவுள்ளது. மேலும் அந் நாட்டின் எரிசக்தித் துறை நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கவுள்ளன. இதனால் அமெரிக்காவில் புதிதாக 60,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிகிறது.

ஒபாமாவுடன் உயர்மட்ட பிரதிநிதிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என சுமார் 3,000 பேர் பல விமானங்களில் வந்துள்ளனர்.

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

CNN_Hero_Narayanan_Kirishnanஎந்திரன் முகத்திரை கிழிகிறது என்ற பதிவில் நான் எழுதியது. திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும், சேவை மனப்பான்யுடனும், துணிவுடனும் உழைத்து கொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக, தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம், பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல். தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.

இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
http://www.akshayatrust.org/contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் 

இந்தோனேஷியாவில் சுனாமிக்கு 108 பேர் பலி

tsunami.jpgஇந்தோ னேஷியாவின் மேற்கு பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சுனாமி உருவானது. இதில் 108 பேர் பலியாகினர். பெண்கள், குழந்தைகள் என 502 க்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டனர்.

இந்தோனேசியாவின், மேற்குப் பகுதியில், சுமத்ரா தீவின் அருகிலுள்ள மென்டாவாய் தீவுக்கருகில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 7.7 ஆக பதிவான இந்த நில நடுக்கம், மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் உணரப்பட்டது.

நில நடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. மென்டாவாய் தீவுகளில் 20 கி. மீ. தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன.

இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் 150 வீடுகள் சேதம் அடைந்தன. மென்டாவாய் தீவுகளில் தெற்கு பகாய் என்ற இடத்தில் உள்ள பெலு மொங்கா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 380 பேர், வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர். மல்கோபா என்ற கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்து விட்டன. உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவுகளின் அருகில், படகில் சுற்றுலா மேற்கொண்டிருந்த 10 அவுஸ்திரேலியர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 1,100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவில் ஐந்து தினங்கள் தங்கியிருக்க முடிவு

obamas.jpgஅடுத்த மாதம் இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கு அதிக நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார். “இது இந்தியாவுடனான நட்புறவை பலப்படுத்துவதற்கு அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டுவதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது’ என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐந்து நாட்கள் வரை, அவர் இங்கு தங்கியிருக்க கூடும் என தெரிகிறது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து, ஒபாமா இத்தனை அதிக நாட்கள் வேறு எந்த வெளிநாட்டிலும தங்கியது இல்லை என அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுடனான நட்பை பலப்படுத்துவதற்கு, அமெரிக்கா அதிக ஆர்வமுடன் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் மும்பை, அமிர்தசரஸ், டில்லி உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒபாமா பங்கேற்கவுள்ளார். மும்பையில் கடந்த 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

இது குறித்து தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறுகையில், “அதிபரின் இந்திய சுற்றுப் பயணத்துக்கான அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும, அமெரிக்க அதிபரின் இந்திய சுற்றுப் பயணம், இரு நாட்டு உறவை மேலும் பலப்படுத்துவதாக இருக்கும்” என்றார்.

மனித உரிமைப் போராளிக்கு சமாதானத்துக்கான நோபல்பரிசு 2010! : நோர்வே நக்கீரா

Noble_Peace_Price2010_Liu_Xiaoboவெடிபொருளான டைனமட்டையும் அதன் முக்கிய வெடிபதார்த்தமான ரிஎன்ரி யைக் கண்டுபிடித்தவரான அல்பிரெட் நோபலின் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை கண்டுபிடிப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வுதான் நோபல்பரிசு. இப்பரிசுகளின் முக்கியத்துவமும் பிரபல்யமும் கொண்டது சமாதானப்பரிசு என்பதை யாவரும் அறிந்ததே. அல்பிரெட் நோபல் என்பவர் சுவீடனைப் பூர்வீகமானவராகக் கொண்டாலும் சமாதானப்பரிசை நோர்வேயில் கொடுக்க வேண்டும் என்று பணித்துச் சென்றார். அதன் காரணமாக சமாதானத்துக்கான நோபல்பரிசு நோபலின் எழுதிச்சென்ற கோட்பாட்டுக்கு இணங்க நோர்வேயிலேயே கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. சுவீடன் டென்மாக் போன்ற நாடுகளின் காலணித்துவத்தின் கீழ் நோர்வே இருந்தாலும் தனது சுதந்திரத்தை, நாட்டின் விடுதலையை இரத்தம் கொலைகள் இன்றி இராஜதந்திரமுறையில் நோர்வே வென்றெடுத்தது. இதனால் சமாதானப் பரிசு வழங்குவதற்கு நோர்வேயே சரியானது என அல்பிரெட் நோபல் கருதியிருந்தார். இருப்பினும் இரண்டாம் உலகப்போரில் சுவீடன் நாசிப்படையை திறந்து விட்டு எதிர்ப்பின்றி இருந்தாலும் நோர்வே ஜேர்மன் நாசிப்படையை எதிர்த்து கெரில்லாப் போரில் ஈடுபட்டிருந்தது குறிப்பிட வேண்டியது ஒன்றாகும்.

ஒரு பேரழிவுவைத்தரும் டைனமயிட்டைக் கண்டுபிடித்தவர் சமாதானத்தை ஊக்குவிக்கும் முகமாக தனது உழைப்பின் ஒரு பகுதியை உலகிற்கு ஈர்ந்து சென்றிருக்கிறார் என்றால் இதன்பின் ஒளிந்திருக்கும் எண்ணத்தை நாம் தோண்டிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். கத்தியை நல்ல விடயங்களுக்கும் பாவிக்கலாம் கத்தியைக்கொண்டு கொலையும் செய்யலாம். அது கத்தியின் பிழையன்று. அதைப் பாவிப்பர்களின் பிழையே. அல்பிரட் நோபலின் நோக்கம் தனது கண்டுபிடிப்பு நல்லவற்றிற்கே பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சமாதானத்துக்கான பரிசை தனிப்பட முக்கியப்படுத்தினார். இன்றும் மலைகளை உடைத்து வீடுகள் கட்டவும் பாதைகள் அமைக்கவும் அவரின் கண்டுபிடிப்பே உதவுகிறது என்றாலும் பேரழிவாயுதங்கள் தயாரிப்பதற்கு இந்த ரிஎன்ரி யே துணைபோகிறது. அதனால் அல்பிரெட்டின் நோக்கம் பிழை என்று கூற இயலாது. புதிய கண்டுபிடிப்பாளர்கள் வளரவேண்டும் புதிய கண்டுபிடிப்புக்கள் உலகிற்கு வரவேண்டும் என்பதே இப்பரிசுத்திட்டத்தின் நோக்கமாகும்.

Liu_Xiaobo_wife_Liu_Xia(லீயூவும் அவர் மனைவியும்)

2010 க்கான நோபல்பரிசை நோர்வே நோபல்பரிசுக்குழு 8.10.2010 மாலை அறிவித்தது. அந்த விடயம் பல நாடுகளில் பரபரப்பையும் சீனாவில் பெரிய பூகம்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பரிசானது மனித உரிமைகள் ஆர்வலரும் போராளியும் எழுத்தாளரும் ஜனநாயக விரும்பியுமான சீனத்தைச் சேர்ந்த லியூ சியாபூ (Liu Xiaobo) க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சீனாவில் மாற்றம் வேண்டும், மனிதஉரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும், அரசியல் மாற்றத்தினூடாக ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று போராடி வந்தவர்தான் லியூ. இவர் சீன அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார் என்று பலஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று அதாவது 09.10.2010 காலை இந்த நோபல்பரிசுச் செய்தியை தன் கணவனுக்குச் சொல்லச் சென்ற அவரின் மனைவியை காணவில்லை என்ற அறிவித்தல் நோர்வேக்கு கிடைத்தது. லியூவின் வழக்கறிஞருடன் தொடர்பு கொண்டபோது அவரின் வாக்கு மூலப்படி வீட்டுக்காவலில் இருந்த லியூவின் மனைவியை சீனாதான் மறைத்து வைத்துள்ளது என்று அறியமுடிகிறது. லியூவுக்கு நோபல்பரிசு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டபோது சீன வெளிநாட்டமைச்சகம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது என்பது இங்கே கருத்தில் கொள்ள வேண்டியது.

லியூவுக்கு எதற்காக நோபல்பரிசு வழங்கப்படுகிறது என்பதை நோபல்குழுவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதமரும், முன்னாள் தொழிற்கட்சிச் தலைவரும், இன்றைய ஐரோப்பா அமைச்சரச் செயலாளருமான தூர்பியோன் யாலாண்ட் குறிப்பிடுகிறார். பொருளாதார ரீதியாக சீனா முன்னேறினாலும், பல சர்வதேச உடன்படிக்கைகளை சீனா கையொப்பமிட்டாலும் அதனை மீறியுள்ளது எனவும், சீனச்சட்டம் 35ன்படி பேச்சுரிமை, கூட்டங்கள் கூடும் உரிமை, எழுத்துரிமை, ஊர்வலம்போகும் உரிமைகள் எழுத்துருவில் இருந்தாலும் அவை நடைமுறையில் மட்டறுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். சீனா தனது சட்டத்தையே குழிதோண்டிப் புதைத்துள்ளது என்பதை லியூவும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.youtube.com/user/thenobelprize

இந்த நோபல்பரிசை லியூவுக்கு வழங்குவதால் நோர்வே பொருளாதார ரீதியாக பல தீமைகளை அனுபவிக்கும் என்பதை அறிந்தும் நோர்வே நோபல்குழு தன்நிலை தளராது பிசகாது அப்பரிசை லியூவுக்கு அளித்துள்ளமை பாராட்டுக்குரியது என பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். தீபெத்திய ஆத்மீகத் தலைவர் டலாய் லாமா நோர்வே நோபல்குழுவுக்கு தனது பாராட்டை இது ஒரு துணிகரமான செயல் என்று விமர்சித்துள்ளார். நோர்வேயின் மீன் ஏற்றுமதியின் பெரும்பகுதி சீனாவுக்கே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான தடையை நோர்வே எதிர்பார்த்திருக்கிறது.

பல சீன உல்லாசப் பயணிகளிடம் செவ்விகண்ட போது பலவிதமான கருத்துக்களை அறிய முடிந்தது. அதாவது ஏன் இந்தப் பரிசை அமைப்புகளுக்குக் கொடுக்கவில்லை, சீனச்சட்டத்துக்கு எதிரான பல வழக்கறிஞர்கள் சிறையில் சீனஅரசின் சித்திரவதைகளுக்கு உள்ளாகிக் கொண்டுள்ளார்கள் அவர்களுக்குக் கொடுக்கலாமே என்ற மாதிரியான பல கருத்துக்களைத் தெரிவித்தார்கள். உலகின் பல நாடுகளும் இப்பரிசு முன்மொழிவை துணிகரமான செயல் என்று பாராட்டி வரவேற்றுள்ளமை சிறப்புக்குரியதே.

அயோத்தி நிலம் 3 தரப்புக்கு சொந்தம்: அலகாபாத் நீதிமன்று பரபரப்பு தீர்ப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் நேற்று அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. அயோத்தி நிலம் மூன்று தரப்பினருக்கு சொந்தம் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 3 மாதகால அவகாசம் உள்ளது என்றும் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் சர்ச்சைக்குரிய நிலம் 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதயை நிலை தொடரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ராமர் சிலைகள் தற்போதைக்கு அகற்றப்படாது என்று தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ரவிசங்கர் தெரிவித்துள்ளார். ராமர் சிலைகள் அமைந்துள்ள பகுதியே இந்துக்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும். எஞ்சிய இன்னொரு பகுதி புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு தரப்பட வேண்டும்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.அப்போது அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு யாருக்கும் வெற்றியல்ல தோல்வியுமல்ல என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்றும், அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாகவும் பாபர் மசூதி கமிட்டி தெரிவித்துள்ளது.

டில்லியிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி நகர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே சிக்கல் நீடித்து வருகிறது.

அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது. 60 ஆண்டுகளாக நீடித்து வரும் வழக்கில் அலகாபாத் மேல் நீதிமன்று லக்னோ பெஞ்ச் தனது விசாரணையை நிறைவு செய்து 24.09.2010 அன்று தீர்ப்பு என்று அறிவித்தது.

அலகாபாத் மேல் நீதிமன்று லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானமாக செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் திரிபாதி என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வழக்கு தொடர்ந்தார். திரிபாதியின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிப்பதற்காக தீர்ப்பு வெளியிட ஒரு வாரம் தடை விதித்தது.

இந்தத் தடை உத்தரவை 28.09.2010 அன்று விலக்கிக் கொண்டதோடு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அயோத்தி வழக்கில் 30.09.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படுமென அலகாபாத் மேல்நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரி ஹரிசங்கர் துபே கூறினார். 30.09.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், டி.வி. சர்மா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது.

ஐந்து ஆண்டுகளின் பின் அமெரிக்காவில் மரண தண்டனை

24-teresa-lewis.jpgஅமெரிக்கா வில் 41 வயதுப் பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் நபர் இவர்தான். விர்ஜீனியாவைச் சேர்ந்த அவரது பெயர் தெரசா லூயிஸ். இவர் தனது கணவரின் இன்சூரன்ஸ் பணத்தை (இரண்டரை லட்சம் டாலர்) பெறுவற்காக அவரையும், வளர்ப்பு மகனையும் கொன்றதாக கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து விஷ ஊசி போட்டு அவருக்குத் தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இதற்கு அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும் இந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தற்போது தண்டனையை நிறைவேற்றி விட்டனர். உள்ளூர் நேரப்படி, விர்ஜீனியாவில் காலை 9.13 மணிக்கு அவருக்க விஷ ஊசி போட்டு தண்டனையை நிறைவேற்றினர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக ஒருவருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம், விர்ஜீனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது கடந்த நூறு ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாகும். கிரீன்ஸ்வில்லி சீர்திருத்த மையத்தில் தெரசாவுக்கு விஷ ஊசி போட்டு கொல்லும் நிகழ்ச்சியை அவரது உறவினர்களும், குடும்பத்தினரும் நேரில் பார்த்தனர்.

தெரசாவைக் காப்பாற்றுவதற்காக கிட்டத்தட்ட 7300 அப்பீல் மனுக்கள் மாகாண ஆளுனருக்குப் அனுப்பப்பட்டன. ஆனால் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி தீர்ப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு

ayodha.jpgஅயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  தீர்ப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அயோத்தி வழக்கில், தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி ரமேஷ் சந்திர திரிபாதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், எச்.எல். கோகலே ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிடுவதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்னைக்கு சுமுகமாக தீர்வுகாண்பதற்கான வாய்ப்புகளைப் பரிசீலிக்குமாறு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மத உணர்வுகள் சம்பந்தப்பட்டது என்பதால் கலவரம் ஏற்படலாம் என்று கருதி பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில்தான், இந்தத் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.

அயோத்தி தீர்ப்பால் மத நல்லிணக்கம், அமைதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் காமன்வெல்த் போட்டி, காஷ்மீரில் வன்முறை, பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் என முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில் இந்தத் தீர்ப்பு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று திரிபாதி தனது மனுவில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, கடந்த வாரம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் திரிபாதி ஏற்கெனவே தாக்கல் செய்த மனு  தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.

உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு

w-t-c.jpgபுனித குர்ஆன் பிரதிகளை எரிக்கும் அமெரிக்க தேவாலயத்தின் தீர்மானத்தைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பெருந்தொகையான மாணவர்களும் கலந்து கொண்டனர். அமெரிக்கா ஒழிக, ஏகாதிபதியம் அழிக, மதக் குரோதத்தை வளர்க்காதே எனப் பலவகையாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

இந்நிலை ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படைகளை மேலும் ஆபத்துக்கள்ளாக்கும் என அங்குள்ள நேட்டோ படைத்தளபதி எச்சரித்துள்ளார். அத்துடன் குர்ஆன் பிரதிகளை எரிக்கும் தீர்மானத்தை அமெரிக்க தேவாலயம் கைவிட வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட தினம் செப்டம்பர் 11 இல் நினைவு கூரப்படவுள்ளது. இது 2001 செப்டம்பர் 11 இல் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத் தாக்குதலைக் கண்டித்தும் இதற்குத் தூபமிட்டதாக தேவாலயம் கருதும் புனித குர்ஆன் வசனங்களை எரிக்கவும் அமெரிக்காவிலுள்ள தேவாலயம் எண்ணியுள்ளது.

இதைக் கண்டித்தே ஆப்கானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதன் எதிரொலிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவும் அபாயத்தையும் சுட்டிக்காட்டிய நேட்டோ தளபதி அரபுலகிலும், இஸ்லாமிய நாடுகளிலும் சமாதானத்தைக் கொண்டுவர அமெரிக்கா எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் இது தவிடு பொடியாக்கும் என்றும் கூறினார். உலகிலுள்ள 1.5 பில்லியன் முஸ்லிம்களின் மனங்களையும் புண்படச் செய்யும் இவ்வாறான வேலைகளால் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நீண்ட கால சமாதானக் கனவு சிதைக்கப்படும் ஆபத்துக்களையும் விளக்கினார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களைத் தோற்கடிக்க பொது மக்களின் ஆதரவு அமெரிக்க இராணுவத்துக்குத் தேவைப் படுகின்றது.  தலிபான்களையும், ஆப்கான் பொதுமக்களையும் வேறுபடுத்தி தலிபான், அல் கைதாக்களை தனிமைப்படுத்த மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை குர்ஆன் பிரதிகளை எரிக்கும் இச்செயல் சீரழிக்கும் என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மற்றும் தலிபான், அல் கைதா அமைப்புகள் தேவாலயத்தின் இத் தீர்மானத்தை சாதகமாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் ஏற்படலாமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.