::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

நீதிமன்றங்களில் புர்கா, ஹிஜாப் அணிய அவுஸ்திரேலிய நீதிமன்றம் தடை உத்தரவு

girls.jpgமுஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க வரும்போது புர்கா,ஹிஜாப் ஆகிய ஆடைகளை அணியக்கூடாதென அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை அவுஸ்திரேலியாவை பொறுத்த வரை இதுவே முதற் தடவையாகும். பாகிஸ்தானைச் சேர்ந்த தன்சிமா 36 என்ற பெண் ஏழு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறியவர்.

அண்மையில் இப்பெண் நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க வருகையில் புர்கா ஆடை அணிந்துகொண்டு வந்தார். இதை அகற்றிவிட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அப்பெண் தர்மசங்கடமான நிலைக்குள்ளானார்.

இவ்வாறானதொரு தடை அவுஸ்திரேலியாவில் பிறப்பிக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். இப்பெண் சார்பாக வாதாடிய சட்டத்தரணி இதை நிராகரித்தார். 17 வயது முதல் தன்சிமா புர்கா அணிந்து வருகிறார். இதை முஸ்லிம் பெண்கள் கெளரவமான ஆடையாகக் கருதுகின்றனர். எனவே நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமானதல்ல எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த நீதிபதி, புர்கா மத ஆடையல்ல. அது கலாசார ஆடையே. சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் புர்கா ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் நீதிமன்ற வளாகமும் ஒன்று. முகத்தை முற்றாக மூடிய நிலையில் சாட்சியமளிக்கப்படுகையில் முகத்தின் அபிநயத்தை கண்டுகொள்ள முடியாதுள்ளது. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் புர்கா ஹிஜாப் களையப்படவேண்டுமென்றார். இவ்விடயம் அவுஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய – எழுபது வருடங்களின் பின்னர் தொங்கு பாராளுமன்றம்

aus.jpgஅவுஸ்தி ரேலியாவில் சனிக்கிழமை நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெறவில்லை. ஆனால் டொனி அபொட் தலைமையிலான எதிர்க்கட்சி பிரதமர் ஜுலியட் கிலாட் தலைமையிலான ஆளும்கட்சியைவிட ஒரு ஆசனத்தைக் கூடுதலாகப் பெற்றது.

மொத்தம் 150 ஆசனங்களைத் தெரிவு செய்ய சனிக்கிழமை அவுஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடந்தது.  இதில் 76 ஆசனங்களைப் பெற்ற கட்சியே ஆட்சியமைக்க முடியும். ஆனால் பிரதமர் தலைமையிலான கட்சி 72 ஆசனங்களையும் எதிர்க்கட்சி 73 ஆசனங்களையும் பெற்றது. எழுபது வீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையிலே இம்முடிவுகள் வெளியாகின.

முன்னாள் பிரதமர் கெவின்ரூட்டை தண்டிக்கும் வகையில் மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் மீதமாகவுள்ள ஐந்து ஆசனங்களின் முடிவுகள் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும் எழுபது வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவில் தொங்கு பாராளுமன்றம் அமையுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

1932ம் ஆண்டுக்குப் பின்னர் குறுகிய கால ஆயுள் தொழிற்கட்சிக்கு கிடைத்தமை இதுவே முதற்தடவையாகும். 2007ல் நடந்த பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்று கெவின்ருட் பிரதமரானார். இரண்டு மாதங்களுக்குமுன்னர் பிரதமர் கெவின்ருட்டுக் கெதிரான எதிர்ப்புகள் கட்சிக்குள்ளும் நாட்டிலும் ஏற்பட்டது. காலநிலைமாற்றக் கொள்ளை வரிவிதிப்பு, பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கை தொடர்பாகவே பிரதமர் மீதான எதிர்ப்பு வலுப் பெற்றது. இதையடுத்து கெவின்ருட் பதவி விலகி ஜுலியட் கிலாட் பிரதமரானார். அவுஸ்திரேலியவின் பெண் பிரதமர் என்ற பெருமையையும் ஜுலியட்கிலாட் பெற்றுக் கொண்டார்.

கட்சிக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி வளர்வதற்கிடையில் மீண்டுமொரு தேர்தலை ஜுலியட் கிலாட் அறிவித்தார். இதனால் அரசாங்கத்தின் ஆயுட்காலம் இடைநடுவில் துண்டிக்கப்பட்டது. தற்போது வெளியான முடிவுகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர் ஜுலியட் கிலாட் இனிவருங்காலம் மோசமானதாக இருக்கும். அரசாங்கத்தை அமைப்பதற்கான பேரம் பேசும் பேச்சுக்கள் சூடுபிடிக்கும் என்றார். எதிர்க்கட்சி வேட்பாளர் டொனி அபொட் கூறுகையில் என்ன வகையிலும் தொழிற்கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சவார்த்தைகளில் தனது கட்சி மும்முரமாகச் செயற்படுமென்றும் டொனி அபொட் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய தேர்தலில் ஜூலியாவின் தொழிற்கட்சி ஆட்சியை இழக்கும் நிலை

அவுஸ்திரேலியாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஜூலியா கில்லார்ட்   தலைமையிலான தொழிற்கட்சி தோல்வியைத் தழுவும் சாத்தியம் காணப்படுகிறது.

12.5 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜூலியாவின் தொழிற்கட்சி 49.2 சதவீத வாக்குகளையும் கன்சர்வேட்டிவ் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி 50.8 சதவீத வாக்குகளையும் பெற்றிருப்பதாக அவுஸ்திரேலிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
2007 தேர்தலில் தொழிற்கட்சி பெற்றிருந்த வாக்குகளின் 3.5 சதவீதம் எதிரணிக் கூட்டணி வசம் சென்றுள்ளது. 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளால் தொழிற்கட்சி ஆட்சியை இழக்கக் கூடும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

அமெரிக்காவின் சர்வாதிகார யுகம் மலையேறிவிட்டது. நைஜீரியாவில் ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத்

najad.jpgஅமெரிக்கா ஒரு உலக சர்வாதிகாரி, இஸ்ரேல் அதன் கூட்டாளி என ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார். நைஜீரியாவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான டி 08 மாநாட்டில் பங்கேற்க வந்த வேளை ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே இதை அஹ்மெதி நெஜாத் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.

நைஜீரியா வந்த ஈரான் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அபுஜாவிலுள்ள ஈரான் தூதரகத்தில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவின் பிசாசுப் படைகளை பூமியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அமெரிக்காவின் சர்வாதிகார யுகம் மலையேறிவிட்டது.

பலஸ்தீன மக்களின் துன்பங்களுக்கு விரைவில் முடிவுகட்டப் போகின்றோம். விரைவில் எமது வெற்றி விழாவைக் கொண்டாடவுள்ளோம் என்றும் ஈரான் ஜனாதிபதி உரையாற்றினார். சுமார் 150 மில்லியன் முஸ்லிம்கள் நைஜீரியாவில் உள்ளனர். இம்மக்கள் ஈரான் நிலைப்பாட்டையும் ஈரான் ஜனாதிபதியையும் பெரிதும் பாராட்டினர்.

ஐ. நா வின் தலைமைப் பதவியை நைஜீரியா அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் இங்கு டி 08 மாநாடு ஆரம்பமானது. எகிப்து, பங்களாதேஷ், இந்தோனேஷியா, ஈரான், மலேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றன. சுமார் 930 மில்லியன் மக்கள் இந்நாடுகளில் வாழ்கின்றனர். யுரேனியம் செறிவூட்டல் விடயம் தொடர்பாக ஆத்திரமடைந்த ஐ. நா. அண்மையில் நான்காவது பொருளாதாரத் தடையை ஈரான் மீது கொண்டுவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஈரான் எதிரிகளின் விமானத் தாக்குதலுக்குட்படாத இடத்தில் மற்றொரு அணு உலையை அமைக்கப் போவதாகச் சூளுரைத்துள்ளது. தனது நாட்டுக் கப்பல்கள் சர்வதேசக் கடற் பரப்பில் சோதனை செய்யப்பட்டால் ஈரான் தக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவித்தது தெரிந்ததே.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி: நடிகை விஜயசாந்தி கைது

vijaya.jpgதெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை விஜயசாந்தி நேற்று கைது செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தை யார் எதிர்த்தாலும் அவர்களை வெட்டிக் கொல்வேன் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

வன்முறையை தூண்டும் வகையில் விஜயசாந்தி பேசியிருக்கிறார். இதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று விஜயசாந்தி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் படியும் தேர்தல் ஆணையம் பொலிஸாருக்கு தெரிவித்திருந்தது. இதனையடுத்து விஜயசாந்தி கைது செய்யப்பட்டார். சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

ஆந்திராவில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 12 சட்ட சபை தொகுதிகளுக்கும் எதிர்வரும் 27ந் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணைக்குழு அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 30ந் திகதி தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.பி. நடிகை விஜயசாந்தி முன்னிலையில் பல்வேறு கட்சித் தொண்டர்கள் தெலுங்கானா கட்சியில் சேரும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயசாந்தி தனி தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கடுமையாக விமர்சித்து, தெலுங்கானா மாநிலத்தை யார் எதிர்த்தாலும் அவர்களை வெட்டி கொல்வேன் என்று ஆவேசமாக பேசினார். இது பற்றி தேர்தல் ஆணைக் குழுவுக்குப் புகார்கள் வந்தன.  இதையடுத்து தேர்தல் ஆணைக்குழு விஜயசாந்திக்கு விளக்கம் கேட்டு அழைப்பாணை அனுப்பியது. அதில் தேர்தல் விதி அமுலில் இருக்கும் போது அதை மீறி வன்முறையை தூண்டும் வகையில் பேசி இருக்கிaர்கள். உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? இதற்கு 4ம் திகதிக்குள் (இன்று) நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மேலும் விஜயசாந்தி வீடு உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதி பொலிசுக்கும் விஜயசாந்தி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டது. அதன்படி பஞ்சாரா ஹில்ஸ் பொலிஸார் விஜயசாந்தி மீது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்தனர். அவரை உடனடியாக கைது செய்யவும் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் விஜயசாந்தியை கைது செய்ய பொலிஸார் முயன்றனர். ஆனால் தொண்டர்கள் நடத்திய அமளியால் கைது நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கைது செய்யப்பட்டார்.

சுன்னி ஆயுதக் குழுவின் தலைவருக்கு ஈரானில் மரண தண்டனை

ஈரானில் கைது செய்யப்பட்ட சுன்னி ஆயுதக் குழுவின் தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் குறித்த சுன்னி ஆயுதக் குழுத் தலைவர் அப்டொல்மாலிக் ரெஜி கைது செய்யப்பட்டிருந்தார்.

அப்டொல்மாலிக் ரெஜி, ஜூன்டல்லாஹ் கிளர்ச்சிக் குழுவின் தலைவராக கடமை யாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப் பினர்கள் முன்னிலையில் ரெஜிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவிர விசாரணைகளின் பின்னர் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பலுகிஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற கடுமையான குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் ரெஜிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் முகவராக செயற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னதாக ரெஜியின் சகோதரருக்கு ஈரானிய நீதிமன்றம் மரண தண்டனை நிறைவேற்றியிருந்தது. எவ்வாறெனினும், ஜூன்டல்லாஹ் அமைப்புடன் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை என அமெரிக்கா நிராகரித்துள்ளது.

குவைத் இளவரசர் சுட்டுக் கொலை

kuwait.jpgகுவைத் இளவரசர் ஷேக் பாசல் (52), அவரது மாமாவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கார் வாங்குவது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக இளவரசரின் மாமா அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இளவரசரின் உடல் நேற்றே அடக்கம் செய்யப் படுமென குவைத் அரசு தெரிவித்திருந்தது. கொலை குறித்து உடனடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. பலமுறை துப்பாக்கியால் சுட்டும் குவைத் இளவரசர் சையிக் பாசல் தப்பி விட்டார்.

தற்போது துப்பாக்கி குண்டுக்கு பலியாகி விட்டார் என்ற தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சுட்டுக் கொல்லப்பட்ட இளவரசர் ஷேக் பாசல் குவைத்தின் 12 வது அரசர். ஷேக் ஷாப் அல்சலீம் அல்சபாவின் பேரன் ஆவார். இளவரசர் ஷேக் பாசலின் கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்னைப் போன்ற இளைஞன் யாருமில்லை -கருணாநிதி

karunanidhi.jpg87 வயது முதியவன் என்று நீங்கள் என்னை அழைத்தாலும், தமிழையும், தன்மானத்தையும், திமுகவையும் காப்பதில் என்னைப் போன்ற இளைஞன் யாரும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

முதல்வரின் 87வது பிறந்த நாளையொட்டி நேற்று இரவு சென்னை திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசியதாவது:

ஒரு இயக்கம் ஒரு வீடு குடும்பம் போல். பெரியார் அவர்களால் வளர்க்கப்பட்ட காரணத்தால், இடையிடையே சில சலசலப்புகள், கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. அப்படிப்பட்ட மாறுபாடுகள் கழகத்தை அழித்துவிடாமல் அந்த மாறுபாடு உண்டாக்குகிறவர்கள் திருந்தும் வகையில் கழகத்தின் வலிமை பயன்படுத்தப்பட்டு அதன் காரணமாக கூரேற்றப்பட்ட ஈட்டி முனையை போல் கனையின் முனைபோல் தி.மு.க. விளங்கி வருகிறது.

அதனால்தான், இடையிடையே யார் யாரோ எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டும் கூட இந்த இயக்கத்தை அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. இந்த இயக்கம் இருக்கக் கூடாது என்று தந்திரோபாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த சட்டங்களை தாண்டி எப்படி இந்த இயக்கத்தை காப்பாற்றுவது, வீம்பு அல்லது தேவையற்ற வீரபிரதாபம் இவைகளால் இந்த இயக்கத்தை காத்து விடமுடியுமா என்ற கேள்விக்கு அண்ணா அளித்த பதில்-லட்சக்கணக்கான தம்பிமார்களை விழிப்படைய செய்து, ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு இந்த இயக்கத்தை பலி கொடுத்துவிடக்கூடாது என்று எண்ணிய காரணத்தால் இன்று தமிழகத்தை ஆளும் கட்சியாகவும், டெல்லியை ஆளும் கட்சிக்கு தோழமை கட்சியாக இருக்க முடிகிறது.

அப்படிப்பட்ட இயக்கத்தை நடத்திச்செல்லும் பெரும் பொறுப்பு தலைவர் என்னுடைய கரத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை அகம்பாவத்தோடு கர்வத்தோடும், திமிரோடும் எண்ணிப் பார்த்து பெருமிதம் கொள்பவன் அல்ல நான். நீங்கள் எல்லாம் என் ஒருவனுடைய சக்தி, அறிவுக் கூர்மையால், சாதுரியத்தால் கிடைத்த வலிமை என்று எண்ணும் அளவுக்கு பைத்தியக்காரன் அல்ல. என்னுடைய வலிமை இந்த இயக்கத்தை நடத்தி செல்வதற்கு எனக்கு ஏற்பட்ட நெஞ்சுரம் எல்லாம் என் எதிரே வீற்றிருக்கும் லட்சோப லட்ச உடன்பிறப்புகளாகிய நீங்கள் வழங்கியது. நானாக உருவாக்கிக் கொண்டவை அல்ல.

நாங்கள் உங்களைவிட பெரியவர்கள் அல்ல. 87 வயது என்ற காரணத்தால் முதியவன், பெரியவன் என்று என்னை அழைக்கலாம். ஆனால், தமிழை, தன்மானத்தை, தி.மு.க.வை காப்பதில் என்னை போல் இளைஞன் இருக்க முடியாது. அந்த உறுதியை நிறைவேற்றுவேன். இந்த இனிய விழாவில் புதிய வரவாக நமது இயக்கத்துக்கு வந்திருக்கும் குஷ்புவை உங்கள் ஆதரவோடு வரவேற்கிறேன் என்றார் கருணாநிதி.

டாக்காவில் பயங்கர தீவிபத்து – 100க்கும் மேற்பட்டோர் பலி

04-dakka-fire.jpgவங்கதேச தலைநகர் டாக்காவின் மையப் பகுதியில் உள்ள பல நூறாண்டு பழமை வாய்ந்த கயதுலி பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். டாக்காவின் மையப் பகுதியில் உள்ள கயதுலி பகுதி மிகவும் பழமை வாய்ந்த ஒன்று. இங்கு நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள்,வணிக அலுவலகங்கள், ரசாயாணப் பொருள் தயாரிப்பு ஆலைகள் உள்ளன.

இங்கு நேற்று இரவு டிரான்ஸ்பார்மர் ஒன்றிலிருந்து கிளம்பிய தீப்பொறியால் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. ரசாயாணப் பொருள் நிறுவனங்கள் நிரம்பிய பகுதி என்பதால் தீ படு வேகமாக பரவியது. விடிய விடிய எரிந்த தீயால் அந்தப் பகுதியே சுடுகாடு போலானது. உடனடியாக மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் இறங்கினர். மிகவும் குறுகலான பல சந்துகள் அங்கு உள்ளன என்பதால் அந்தப் பகுதிகளுக்குள் மீட்புப் படையினரால் போக முடியவில்லை.

மிகுந்த சிரமத்திற்கிடையே நடந்த மீட்பு நடவடிக்கையில் 100 பேரின் உடல்கள் வரை மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 150ஐத் தாண்டும் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். தீயணைப்பு படையினர் மிகுந்த போராட்டத்திற்கிடையே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதி முழுவதும் பொசுங்கிப் போய்க்கிடக்கிறது. பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் இருக்கலாம் எனத்தெரிகிறது. காயமடைந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கடந்த 1971ம் ஆண்டு டாக்காவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் தற்போதுதான் மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக டாக்காவாசிகள் தெரிவிக்கின்றனர். டாக்காவை புரட்டிப் போட்டுள்ள இந்த சம்பவத்திற்கு வங்கதேச அரசு பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை அவர்நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பேகம்கலீதா ஜியாவும் மருத்துவமனைக்குச் சென்று காயம் பட்டவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.இந்த பயங்கர தீ விபத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் பலர் இறந்துள்ளதால் தீவிபத்துக்குள்ளான மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இஸ்ரேல் மீது சர்வதேச கண்டனம்

ship.jpgகாசாவை நோக்கிச் சென்ற உதவி நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேலிய கமாண்டோக்கள் நடத்திய தாக்குதல் குறித்து பக்கசார்பற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டுமென்று ஐநாவின் பாதுகாப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது. அந்த விசாரணை உடனடியாகவும், பக்கசார்பற்றதாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும், வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபையின் அறிக்கை கூறுகிறது.

இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான சர்வதேச கண்டனம் எழுந்துள்ள அதேவேளை காசா மீதான தடைகளை இஸ்ரேல் நீக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன.  இரவு முழுவதும் பாதுகாப்புச் சபையின் கூட்டம் பல மணி நேரம் விவாதித்ததை அடுத்தே இந்த தீர்மானம் வெளியாகியுள்ளது.

பாதுகாப்புச் சபையின் தற்போதைய தலைவரான மெக்சிகோ நாட்டுத் தூதுவர் கிளவுட் ஹெல்லர் இது குறித்துக் கூறுகையில். ”காசாவை நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல்களின் தொடரணி மீது சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பலவந்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்தும் பாதுகாப்புச் சபை தனது ஆழமான கவலைகளை வெளியிடுகின்றது” என்று கூறினார்.

திங்களன்று நடந்த, குறைந்தது 10 சிவிலியன்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த இந்தத் தாக்குதல் குறித்து பாதுகாப்புச் சபை தனது கடுமையான கண்டனத்தை வெளியிடுவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளது.  இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிவிலியன்களும், கப்பல்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பாதுகாப்புச் சபை கேட்கிறது.

இந்தத் தாக்குதல் குறித்து துருக்கிய நாடாளுமன்றதத்தில் உரையாற்றிய அந்த நாட்டு பிரதமர் றெசப் தைப் எர்டோகன் ”இது ஒரு இரத்தக்களரியுடன் கூடிய படுகொலை” என்று கண்டித்துள்ளார். ஐநாவின் அறிக்கை கொஞ்சம் தணிவானதாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா விரும்புகின்ற அதேவேளை விமர்சனத்தின் தொனி தணிக்கப்படுவதை துருக்கி விரும்பவில்லை. இருந்த போதிலும், இறுதி அறிக்கையில் இருந்த வாசகங்கள் மென்மையாக்கப்பட்டதாக ஐநாவில் உள்ள பாலத்தீன பார்வையாளரான றியாட் மன்சூர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

ஐநா விவாதத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நாடுகள் தங்களுடைய சிரமமான நிலைமையை புரிந்துகொண்டிருப்பார்கள் என்று தாங்கள் நம்புவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக் கூறியுள்ளார். அந்தப் பகுதியில் இருக்கும் ஹமாஸ் காரணமாகத்தான் தாம் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். அப்பாவி சிவிலியன்களை இலக்கு வைப்பது தமது நோக்கமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்

கப்பலில் இருந்த பாலத்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் தம்மை தாக்க முற்பட்ட போது இஸ்ரேலிய படையினர் தற்காப்புக்காகவே தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புச் சபையில் கூறியுள்ளது. ஆனால், சிப்பாய்கள் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தம்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் சம்பவம் இஸ்ரேலுக்கு சர்வதேச சட்டங்கள் தொடர்பாக எந்தவிதமான மரியாதையும் கிடையாது என்பதையே காட்டுவதாக அரபு லீக்கின் தலைமைச் செயலாளரான அமர் மௌசா கூறுகிறார். தாக்குதலுக்கு உள்ளான இந்தக் கப்பல்கள் இஸ்ரேலிய துறைமுகமான ஆஸ்டொட்டுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இஸ்ரேலின் பல இடங்களிலும், சுமார் 600 பாலத்தீன ஆதரவுச் செயற்பாட்டாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தாம் ஆயுதங்களை வைத்திருந்ததாக இஸ்ரேலால் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அவர்களில் சில செயற்பாட்டாளர்கள் மறுத்திருக்கிறார்கள். இந்த இராணுவத் தாக்குதல் முழுமையான வெற்றியைப் பெறவில்லை என்று லண்டனுக்கான இஸ்ரேலிய தூதுவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் கூறியுள்ளது.

நன்றி: BBC