::கலை இலக்கியம்

::கலை இலக்கியம்

கலை இலக்கியம் தொடர்பான விமர்சனங்களும் கட்டுரைகளும்

‘ஈழத் தமிழர்’ என்ற பதத்திற்கு பதிலாக இன்று ‘ஐரோப்பிய தமிழர்’ என அடையாளப்படுத்தும் நிலை – என். செல்வராஜா

selvarajah-n02.jpgஐரோப்பாவில் வாழும் தமிழர் எதிர்காலத்திலும் தமிழர் என்ற அடையாளத்தினை பேணுவார்கள். ஆனால்,  ஈழத் தமிழர்கள் என்ற பதத்திற்கு பதிலாக ஐரோப்பிய தமிழர் என்று அடையாளப்படுத்தும் நிலை தோன்றியுள்ளதாக லண்டனிலிருந்து நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூல்களை ஆணவப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நூலகர் என். செல்வராஜா தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் புலம்பெயர் தமிழ் சூழலில் வெளியீடுகளை ஆவணப்படுத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த உரையாடலில் பல்கலைக்கழக பேராசிரியர்களும்,  விரிவுரையாளர்களும்,  தமிழ்த்துறை உள்ளிட்ட பல மாணவர்களும் பங்குபற்றினர்.

தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் துரை. மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலகவியலாளர் என். செல்வாராஜா தொடர்ந்து உரையாற்றுகையில்:

ஐரோப்பாவில் வாழும் தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினர் இலங்கை தமிழர் பற்றி பல ஆய்வுகளை ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் மேற்கொள்கின்றனர்.  ஐரோப்பியரும் இவ்வாறான ஆய்வுகளில் ஆர்வம் செலுத்துகின்றனர். பல்வேறு மொழி அகராதிகளும்,  மொழிபெயர்ப்பு முயற்சிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களினாலும் அவர்களது இரண்டாம் தலைமுறையினராலும் நேரடியான மூல மொழியிலிருந்தும்,  மூல நூலாசிரியரின் வாழிடச் சூழலை அனுபவித்தும் நேரடியாக மொழிபெயர்க்கப்படுகின்றன. படைப்பாளி நிலக்கிளி பால மனோகரன் (டென்மார்க்) சரவண பவன் (ஜேர்மனி) கலாமோகன் (பாரிஸ்) போன்றோரை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

1980களில் மலேசியா,  சிங்கப்பூர் நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்களின் தலைமுறையினர் இன்று சிலோன் தமிழர்களாக வாழ்வது போல ஐரோப்பிய தமிழரும் தனித்துவ அடையாளத்துடன் வாழ்வார்கள்.

இன்று ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் கூட பல இலங்கை தமிழர்கள் போட்டியிடுகின்றனர். மலேசியா,  சிங்கப்பூர் தமிழர்களில் இலங்கையிலிருந்து சென்றவர்களே 1870-1930 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல இலக்கியங்களை படைத்துள்ளனர். மலேசியா மான்மியம் ஈழத்தமிழராலேயே எழுதப்பட்டுள்ளது. மலேசியாவின் ஆரம்பகால படைப்பிலக்கியங்கள் ஈழத்தமிழர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. ஆனால்,  இவை ஆவணப்படுத்தப்படவில்லை. இவற்றை தனியான ஒரு மலேசிய நூல்தேட்டம் மூலம் ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ளேன்.

ஐரோப்பிய தமிழ் ஆவணகாப்பகமும்,  ஆய்வு நிலையமும் என்ற பெயரில் அமைப்பொன்று ஏற்படுத்தப்பட்டு ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த மண்ணில் தமிழர்களின் நூல்கள் ஆவணப்படுத்தப்படுவதோடு,  அங்கு இலங்கை தமிழர் பற்றிய நூல்களும் ஆவணப்படுத்தப்படுகின்றன. இவை எதிர்காலத்தில் தமிழர் பற்றி ஆய்வு செய்யும் ஐரோப்பியர்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் பல்கலைக்கழகங்களில் கற்பவர்களுக்கும் ஒரு ஆய்வகமாகத் திகழப் போகிறது. பிரித்தானியாவிலுள்ள முன்னணி ஆறு பல்கலைக்கழங்களில் 600ற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்கள் வருடாந்தம் கல்வி கற்று பட்டதாரிகளாக வெளியேறுகிறார்கள். எமது புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் இலங்கை தமிழர்களுக்கு ஏதோவொரு வகையில் உதவிகளை செய்து வருகின்றனர்.

நூல்தேட்டத்தின் 7வது நூல் தொகுப்பு பேராதனை பல்கலைக்கழக வெளியீடுகளையும்,  பல்கலைக்கழக நூலகத்தின் அரிய வளங்களையும் ஆவணப்படுத்தி வெளியிடப்படவுள்ளது. இந்த நூல் தேட்டம் விற்பனை நோக்கத்துடன் செய்யப்படவில்லை. ஈழத்தமிழரின் வெளியீடுகள் உலகளாவிய ரீதியில் ஆவணப்படுத்தப்படுவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் இடத்திலிருந்து கொண்டே இலங்கை தொடர்பான பல ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றனர். இவை இலங்கையிலும் இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் அச்சிடப்படுகின்றன. இந்த நூல்கள் பலவற்றில் எழுத்தாளரின் இலங்கை விலாசமே பயன்படுத்தப்படுகிறது என்பதும் அவதானிக்கப்பட வேண்டும்.

இளம்தலைமுறையினரும் இலங்கை பற்றி ஆய்வு செய்யவே ஆர்வமாகவுள்ளனர். எதிர்காலத்தில் இலங்கையில் பல வெளியீடுகளை மேற்கொள்வார் எனவும் புலம் பெயர் தமிழரின் ஆதரவினை பெற்றுக்கொள்ள தாயகத்திலுள்ள தமிழ்ப் படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார். உரையின் முடிவில் திரு. செல்வராஜா ஒன்றுகூடலில் கலந்துகொண்டோரின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
 

புலத்துத்தமிழா!! நோர்வே நக்கீரா

புலத்துத்தமிழா!!

ஊரை எண்ணி உருகினோம்
          உண்மை அறிய உயரினோம்
தாரை வார்த்து வந்த பூமி – என்றும்
         தாமரை இலைத் தண்ணீர்தானே

வேரை தேட முயல்வதனால்
         விழுதுகளில் வாழ முடிவதில்லை
ஊரை எண்ணி உளல்வதனால்
          உண்மையின் தரிசனம் தெரியதில்லை

பொக்குவாய் திறந்து என்பிள்ளை சிரிக்க
           பக்கென்று சுனாமி தெரியுதயையோ
திக்குவாய் திறந்து தீந்தமிழ் பிறக்க
          தொக்குவாய் ஒப்பாரி கேட்குதையோ

உடலிங்கு இருக்க உயிரங்கு வாழும்
          உரமிங்கு இருக்க பயிர்ரெங்கு போகும்.
கடலிங்கு இருக்க மீனெங்கு வாழும்
          கடனிங்கு இருக்க ஊரிலுடன்கட்டை ஏறும்.

சேவல் செத்த தேசத்தில்
          சேதி சொல்ல யாருமில்லை
ஏவல் செய்து வாழ்வதற்கு – காலையில்
         எகிறி அலறும் அலாரமிங்கே

பூங்காலை பிறக்கும் பூபாளம் பாடி – இங்கோ
          பனிவானம் கொட்டும் பகலள்ளி ஓடி
தேன்காலை என்று ரொட்டியைத் தின்றும்
         தேடிய பணமும் எமைத்தேடாது போகும்

வேரை அறுத்து வந்த உனக்கு
          வேற்று மண்ணில் பவுசுப்பெருக்கு
ஊரை ஊன்றிய மக்கள் தமக்கு
           உத்தமனாய் விடாதே கணக்கு

தலைவிதி தன்னை தானே தீர்க்கும்
           தலையாய கடமை தமிழர்க்குண்டு
கொலைவெறி கொண்டு ஈழம் என்று – மீண்டும்
            கொல்லநினைக்க முள்ளிவாய்காலிலுண்டு

பண்டா நினைத்ததை பிரபாகரன் முடித்தான்
            திண்டாடும் தமிழன் அரசியலைத் தொலைத்தான்
கொண்டாடும் கொடுவினம் கொடியுயர்த்தி கோலோச்ச
            மன்றாடி மகிழுதோ பின்னணியில் த.தே.முன்னணியும்

மண்ணை வேண்டிப் போராடி
           மண்ணாய் போன மன்னர்களே!
கண்ணாய் மனிதம் காட்டி
           காதலி தமிழை மனதில் ஊட்டி

தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்
          தவறிபோனால் இனத்தோடழிவான்
அமிழ் தினிய தமிழைக் காக்க
         எழுந்து வாடா இனத்தை மீட்க

பத்துப் பெத்தால் பரிசளிப்போம்
         பத்தாது போனால் பரிசகியோம்
முத்தாய் எம்மினம் முகிழ்வுறவே
         வித்தாய் விழைவோமா புலத்தினிலே

நோர்வே நக்கீரா

27.02 2010

விடைபெறுவீர் அமுதுப் புலவரே….. : என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்.)

tn.jpgஅமுதுப் புலவர் என எம்மவரால் அன்புடன் அழைக்கப்படும் இளவாலை அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் 23.2.2010 அன்று காலை 11.00 மணியளவில் தன் உலகவாழ்வைவிட்டு நீங்கிய செய்தி என் இதயத்தைக் கனக்கச் செய்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவுவைப் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அமுதுப் புலவர். தம்பிமுத்து – சேதுப்பிள்ளை தம்பதியினரின் மகனாக 1918ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி பிறந்த இவர், தன் ஆரம்பக் கல்வியை புனித சார்ள்ஸ் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த்துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றிருந்த இளவாலை அமுது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டத்தையும், இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் பண்டிதர் பட்டத்தையும் பெற்றவர்.

ஓய்வுபெற்ற முதலாம் தர ஆசிரியரான இவர், இளவாலை அமுது என்று ஈழத்துத் தமிழ்; இலக்கிய உலகில் பரவலாக அறிமுகமானவர். 1984ம் ஆண்டு முதல் தாயகத்திலிருந்து குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வந்து லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் வாழ்ந்து வந்தார்.

சுமார் ஏழு தசாப்தங்களாக இலக்கியத்துறையில் வேரோடி விழுதெறிந்து ஆலமரமாக வீற்றிருக்கும் அமுதுப்புலவரின் முதலாவது ஆக்கம் 1938ம் ஆண்டு சத்தியவேத பாதகாவலனில் மாதா அஞ்சலி என்ற தலைப்பில் பிரசுரமாகியிருந்தது. இதே காலப்பகுதியில் ஆசிரியர் கலாசாலையின் தூதன் என்ற சஞ்சிகையின் ஆண்டுமலருக்கு மலராசிரியராகப் பணியாற்றியும் இளவயதிலேயே தன் திறமையை அமுதுப்புலவர் வெளிப்படுத்தியிருந்தார். இளம் பத்திரிகையாளராக 1940ம் ஆண்டில் இளைஞர் அமுதசாகரன், போதினி என்ற பத்திரிகையையும் நடத்தியிருந்தார். அன்றுமுதல் இன்றுவரை இலங்கையின் அனைத்துத் தேசிய பிராந்திய தமிழ்ப் பத்திரிகைகளிலும், பெரும்பாலான சஞ்சிகைகளிலும், உலகெங்கும் வெளியாகியுள்ள பல்வேறு சிறப்பு மலர்களிலும் அமுதுப் புலவரின் படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.

நூலுருவில் வெளிவந்த இவரின் வெளியீடுகளான நெஞ்சே நினை, இவ்வழிச் சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள், அன்பின் கங்கை அன்னை தெரேசா, மடுமாதா காவியம் அல்லது மருதமடு மாதா காவிய மல்லிகை, அன்னம்மாள் ஆலய வரலாறு, அமுதுவின் கவிதைகள், இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள், ஆகிய நூல்கள் ஈழத்துத் தமிழ் மக்களின் இல்லம் தோறும் வலம் வந்து மனதைத் தொடும் வசனங்களாலும் மரபுக்கவிதைகளாலும் அவர்களிடையே இலக்கிய மணம் பரப்பி வருகின்றன.

அன்னை திரேசாவின் வாழ்க்கை வரலாற்று நூலும் மடுமாதா காவியம் என்ற ஈழத்து மருதமடுத்  திருத்தலம் பற்றிய காவிய நூலும் கடந்த காலங்களில் பரவலாக விதந்து பேசப்பெற்றவை. அமுதுவின் கவிதைகள் நூல் அமுதுப்புலவரின் கவிதாபுலமையை கச்சிதமாகப் பதிவுசெய்துவைத்திருக்கும் ஒரு இலக்கியப் பெட்டகமாகும். இன்று வளரும் இளம் கவிஞர்களின் கைகளில் தவழ்ந்துவரும் இந்த நூலும் அண்மைக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அமுதுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைக் கெளரவிக்கும் வகையில் பல்வேறு அறிவுசார் நிறுவனங்களும் அவரைக் கௌரவித்திருக்கின்றன. இவரின் சமய இலக்கியத் தொண்டினை கௌரவித்து 2004ம் ஆண்டில் ரோமாபுரியில் பரிசுத்த பாப்பரசரினால் செவாலியர் விருது வழங்கப்பட்டது. பின்னர் 2005இல் இலங்கை அரசு கலாபூஷணம் விருதையும் அமுதுப் புலவருக்கு வழங்கியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொளரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும் அதே ஆண்டில் வழங்கியிருந்தது. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது.

தனது தொன்னூற்றிரண்டு வயதினைக் கடந்து இதுவரை திடகாத்திரமான முதிய இளைஞனாக நம்மிடையே வலம்வந்த அமுதுப் புலவர் இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தியை மனது என்னவோ நம்பவே மறுக்கின்றது.

அமுதுப் புலவரின் முன்னைய படைப்புகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாக 1600 பக்கங்களில் வெளியாகிய “இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்”  என்ற நூலின் வெளியீடும், அமுதுப் புலவருக்கு மூதறிஞர் பட்டமளித்துப் பாராட்டும் விழாவும் இம்மாதம் ஏழாம் திகதிதான் (07.02.2010) வெகு சிறப்பாக நடந்தேறியிருந்தது.

முத்தமிழ் அறிஞர் தாசீசியஸ் அவர்களின் தலைமையில் இலக்கிய விழாக்களின் வழமைக்கு மாறாக மண்டபம் நிறைந்த அரங்கில் (Greenford Hall) லண்டனில் வாழும் இலக்கியப் பிரமுகர்கள் வாழ்த்துக்கூற, அமுதுப் புலவர் 92 வயதிலும் தளராத உறுதியுடன் அங்கு மேடையில் புன்முறுவலுடன வீற்றிருந்ததை இனி வாழ்வில் மறக்கமுடியாது.

அந்த மேடையிலே, இலங்கையிலிருந்து வந்திருந்த வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீ கஜன் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடமும், பத்து நிமிடமும் கறாராக பேச வழங்கிக்கொண்டிருந்த தலைவர் – அமுதுப் புலவருடைய பேச்சை மட்டும் நிறுத்தவேயில்லை. சலிப்பையே தராத – நகைச்சுவையும், நெகிழ்வும், கிண்டலும் கலந்த அந்த உரை இன்னமும் எனது காதுகளில் ரீங்காரமிடுகின்றன. 45 நிமிடங்களுக்கும் அதிகமாகப் பேசியிருப்பார். குறுக்கீடில்லாத அந்த உரையே அவரது இறுதி உரை என்பதை அவரே அன்று மேடையில் கூறியவேளை சிரித்தவர்களும் சிரிப்பை மறந்தனர். அன்றைய மேடையில் நான் உரையாற்ற வாய்ப்புக் கிட்டவில்லை. அதனை அவர் நன்றாக உணர்ந்துமிருந்தார். தனது உரையிலேயே அதனைக் குறிப்பிட்டதுடன், பின்னர் மேடையில் அவரது நூலைப் பெற்றுக்கொள்ளச் சென்ற வேளையில் ஒரு தந்தையின் பரிவுடனும், பாசத்துடனும் என்னைக் கட்டியணைத்து உச்சிமோந்து- நூலை வழங்கியமை என்னை மெய்சிலிர்க்கவைத்ததுடன் கண்களில் நீரையும் வரவழைத்தது.

அன்றைய நிகழ்வினை ஒழுங்குசெய்த அமுதுப் புலவரின் குடும்பத்தினரும் விழாக் குழுவினரும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஒரு பாரிய திருப்திகரமான சேவையைச் செய்திருக்கிறார்கள். தன் வாழ்நாளில் வளமுடனும், நிறைவுடனும் ஒரு கவிஞராக வாழ்ந்து முதுமையை எட்டிய ஒரு முழமையான மனிதரை அவர் வாழ்ந்த தமிழ் அறிவோர் சமூகம் வாழ்த்தி மன நிறைவுடன் வழியனுப்பி வைத்துள்ளது. இத்தகைய திருப்திகரமானதும் மன நிறைவானதுமான வழியனுப்புதல்கள் எங்கள் அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

மறைந்தும் மறையாத அமுதுப்புலவர் அடைக்கலமுத்து அமுதசாகரன் – கலாபூசணம் புன்னியாமீன்

அமுதுப் புலவர் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த இளவாலை அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் 23.2.2010 இலண்டனில் தன் உலக வாழ்வைவிட்டு நீங்கிய செய்தி எம் இதயங்களைக் கனக்கச் செய்தது. அன்னாரின் மறைவையிட்டு இந்தக் கட்டுரை இடம்பெறுகின்றது.

வடமாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவுக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் ‘இளவாலை அமுது’ எனும் பெயரில் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலும்,  புலம்பெயர்ந்த இலக்கியப் பரப்பிலும் நன்கு அறிமுகமான மூத்த எழுத்தாளரும்,  கவிஞருமாவார். அமுது, மறைமணி எனும் பெயர்களிலும் எழுதி வந்த ‘அமுதுப் புலவர்’ 1984ம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம்பெயர்ந்து தனது குடும்பத்துடன் லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் வாழ்ந்து வந்தார்;

தம்பிமுத்து,  சேதுப்பிள்ளை தம்பதியினரின் புதல்வாரன இவர் யாழ்ப்பாணம் சென். சார்ள்ஸ் வித்தியாலயம்,  யாழ். சேன் பற்றிக்ஸ் கல்லூரி, கொலம்பகம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை,  பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த் துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ‘வித்துவான்’ பட்டமும் இலங்கை கல்வித்தணைக்களத்தில் ‘பண்டிதர்’ பட்டமும் பெற்ற இவர்,  ஓய்வுபெற்ற முதலாம்தர ஆசிரியருமாவார்.

சுமார் 7 தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்துறையில் முனைப்புடன் செயற்பட்டு வரும் அமுதுப் புலவரின் கன்னியாக்கம் 1938ம் ஆண்டு இலங்கையில் முதலாவது தமிழ்ப் பத்திரிகையெனக் கருதப்படும் ‘சத்தியவேத பாதுகாவலன்’ எனும் பத்திரிகையில் ‘மாதா அஞ்சலி’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இதே காலப்பகுதியில் ஆசிரியர் கலாசாலையின் ‘தூதன்’ என்ற சஞ்சிகையின் 100வது ஆண்டு மலருக்கு ஆசிரியராக நின்று பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் வீரகேசரி,  தினகரன்,  சத்தியநேசன், காவலன், ஈழநாடு, உதயன், ஈழகேசரி,  புதினம், அஞ்சல்,  தொடுவானம்,  ஈழமுரசு போன்ற பல்வேறு சஞ்சிகைகளிலும்,  பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. பல வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.

இத்தகைய இவரது ஆக்கங்களில் சில இதுவரை 11 நூல்களாக வெளிவந்துள்ளன. 1940ம் ஆண்டில் வெளிவந்த ‘மாதா அஞ்சலி’ எனும் நூல் இவரின் முதலாவது நூலாகும். இதைத் தொடர்ந்து வெளிவந்த இவரின் நூல்கள் பின்வருமாறு:

நெஞ்சே நினை (வரலாறு)
இவ்வழி சென்ற இனிய மனிதன் (சிறுகதைத் தொகுதி)
காக்கும் கரங்கள்
அமுதுவின் கவிதைகள்
அன்பின் கங்கை அன்னை திரேசா
மருத மடு மாதா காவிய மல்லிகை
அமுதுவின் கவிதைகள் (திருத்திய இரண்டாம் பதிப்பு)
அன்னம்பாள் ஆலய வரலாறு
இந்த வேலிக்குக் கதியல் போட்டவர்கள்.
“இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்” 

அமுதுப் புலவரின் முன்னைய படைப்புகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாக 1600 பக்கங்களில் வெளியாகிய “இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்”  என்ற நூலின் வெளியீடும், அமுதுப் புலவருக்கு மூதறிஞர் பட்டமளித்துப் பாராட்டும் விழாவும் இம்மாதம் ஏழாம் திகதிதான் (07.02.2010) வெகு சிறப்பாக லண்டனில் அவரது 92வது வயதில் நடந்தேறியமையும் குறிப்பிடத்தக்கது.

இவரின் ‘அமுதுவின் கவிதைகள்’ என்ற நூலின் முதற்பகுதி சில்லாலை வைத்தியர் இன்னாசித்தம்பி அவர்களின் நினைவாக நிறுவப்பெற்ற ‘தம்பி’ தமிழ் அரங்கத்தினால் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் இவர் தெரிவித்திருந்த சில கருத்துக்கள் அனைவரினதும் மனங்களை நெருடக்கூடியவை. அதனை அவரின் வரிகளிலேயே தருவது பொருத்தமானதாக அமையும்.

“….வீட்டிலும்,  நாட்டிலும் இரத்தத்துளிகள். தமிழன் என்ற  வேருக்கே கோடாரி வைக்கப்பட்டது. இடம்பெயர்ந்து இங்கிலாந்துக்கு வரவேண்டியதாயிற்று. ஒரு ஒற்றைத் தாளைத் தானும் உடன் கொண்டு வந்தால்,  இடையே உள்ள இருபது தடைமுகாம்களிலும்,  ஆபத்தை விலைக்கு வேண்டுவதாய் முடியும். இந்த நிலையில் நான்  நீண்ட காலமாகத் தேடித் திரட்டிய நூல்களையும்,  எனது கவிதைக் கோவைகளையும்,  என் இல்லத்தில் பக்குவமாய் வைத்து விட்டுப் பிறநாடு வந்து சேர்ந்தேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு என் இல்லத்துக்குச் சென்ற போது அங்கே சுடுகாட்டின் மௌனம் தோன்றியது. கடுகு மணியொன்றைக் கண்டெடுத்தாலும்,  காகிதத் துண்டு ஒன்றைக் காணமுடியவில்லை. திருடர்கள் திருவிழா நடத்தியிருக்க வேண்டும.; வாழ்ந்த சுவடுகள் கூடத் திருடப்பட்டு விட்டன…..”

இது அமுதுப் புலவரின் முகவுரை வரிகள். இந்த வரிகள் அமுதுப்புலவரின் சொந்த வரிகள் அல்ல. தாயகத்தை விட்டுப் புகலிடம் வந்த பலரின் ஆத்மாவின் குரல்கள் இளவாலை அமுதுவின் தொலைந்து போன கவிதைகள் கூட இன்று நூலுருவில் வெளியாக அவருக்கு ஒரு நண்பர் இருந்திருக்கிறார். சட்டத்தரணி இரா. ஜெயசிங்கம் அவர்கள் அமுதுவின் கவிதைகளை பத்திரிகைகளில் இருந்து தனது ஆர்வத்தின் காரணமாகத் தொகுத்து வைத்திருக்கின்றார். அந்தக் கவிதைகளும் சேர்ந்தே முதலாவது பதிப்பாக ‘அமுதுவின் கவிதைகள்’ வெளிவந்தன.

இளவாலை அமுதுவின் சில நூல்கள் பற்றி பிரபல எழுத்தாளரும், நூலாசிரியருமான என். செல்வராஜா அவர்கள் தனது நூல் தேட்டம் பாகம் 1இல் 508, 874வது பதிவுகளாகவும், பாகம் 3 இல் 2098, 2867வது பதிவுகளாகவும் பாகம் 4இல் 3648 வது பதிவாகவும் பதிவாக்கியிருந்தார். அக்குறிப்புகளைப் பின்வருமாறு அவதானிக்கலாம்.

அன்பின் கங்கை, அன்னை திரேசா: இளவாலை அமுது (இயற்பெயர்- அமுதசாகரன் அடைக்கலமுத்து) லண்டன்: தமிழரங்கம், மே 1997. (லண்டன்: வாசன் அச்சகம்)
(16),230 பக்கம், புகைப்படங்கள். விலை: ஸ்டேர்லிங் பவுண் 5.00. அளவு: 20X14.5 சமீ.

அன்னை திரேசா என்ற பெயர் பலருக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் அந்தப் பெயருக்குள் இருக்கும் அன்னையின் பணிகளைத் தெரிந்தவர்கள் ஒரு சிலரே. அவர் வாழ்க்கை இனிய தமிழில் நூலுருவாகியுள்ளது. கத்தோலிக்கத் துறவியாக அழைப்புப்பெற்று ஆசிரியராக இந்து முஸ்லீம் மக்களிடையே கடமையாற்றிய வேளை வாழ்வின் விளிம்பில் நின்று தவிப்போருடன் தொடர்பு கொண்ட அன்னை திரேசாவின் கதையை இளவாலை அமுது நூலாகப் படைத்துள்ளார். இக்கதை ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறாக மட்டு மின்றி ஒரு தொண்டர் நிறுவனத்தின் வரலாறாகவும் அமைகின்றது.

நெஞ்சே நினை: சுவாமி ஞானப்பிரகாசர் வாழ்க்கை வரலாறு. ச.அடைக்கலமுத்து, (புனைபெயர்: இளவாலை அமுது). யாழ்ப்பாணம்: யாழ். மறைமாவட்ட இலக்கியக் கழகம், ஆயர் இல்லம், 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
(16), 210 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 21X14 சமீ.

மானிப்பாயில் பிறந்து, அச்சுவேலியில் வளர்ந்து நல்லூரிலிருந்து முழு உலகிற்கும் தொண்டாற்றி 1947 தைத்திங்கள் 22ம் நாள் மறைந்த பன்மொழிப்புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் வாழ்வும் பணியும் இங்கு இலக்கியச் சுவை சொட்டக் கூறப்பட்டுள்ளது.

இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள்:  இளவாலை அமுது. லண்டன் SW17 7EZ: புதினம் 10ஆவது ஆண்டு நிறைவு வெளியீடு, 38, Moffat Road , 1வது பதிப்பு, மே 2006. (யாழ்ப்பாணம்; புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360 பிரதான வீதி).
213 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண் 5., அளவு: 21X14.5 சமீ.

புலவர்மணி கலாநிதி இளவாலை அமுது அவர்கள் லண்டன் புதினம் இருவாரப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்த வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. தமிழ் வளர்த்த சான்றோர்கள் மாத்திரமன்றி, சமகால ஊடகத்துறையினர், எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் என்று 44 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை முதல் மறைந்த மனிதகுல மாணிக்கம் இரண்டாம் யோவான் பவுல் (பாப்பாண்டவர்) வரை விரிந்துள்ள இத்தொடரில், சமகால புகலிடக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

மருத மடுமாதா காவிய மல்லிகை. அமுதசாகரன் அடைக்கல முத்து (புனைபெயர்: அமுது). லண்டன்: தமிழ் அரங்கம்,  87, Hazelmere Walk, Northolt, Middlesex, UB5 6UR. 1வது பதிப்பு, 1998 (கொழும்பு 13: லங்கா பப்ளிசிங் ஹவுஸ்)
(32),162 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21ஒ13.5 சமீ.

இலங்கையில் மருதமடுத்திருப்பதியில் வீற்றிருக்கும் மடுமாதா பேரில் பாடப்பெற்றதும், மரபுக்கவிதைகளில் எழுதப்பெற்றதுமான காவிய நூல். அட்டையில் மடுமாதா காவியம் என்ற தலைப்புடன் வெளிவந்துள்ளது.

அமுதுவின் கவிதைகள். இளவாலை அமுது. இலண்டன்:  Tamil Literary Society 2வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1991. (சென்னை 17: Manimekalai Prasuram, T. Nagar).
240 பக்கம், விலை: இந்திய ரூபா 100, அளவு: 21.5X14.5 சமீ.

வைத்தியர் இன்னாசித்தம்பி அவர்களின் நினைவாக நிறுவப்பெற்ற பண்டத்தரிப்பு தம்பி தமிழ் அரங்கத்தின் முதலாவது பதிப்பாக 1991இல் வெளியான அமுதுவின் கவிதைகளின் திருத்திய மறு பதிப்பு இதுவாகும். அமுதுப்புலவர், இளவாலை அமுது என்று நம்மிடையே அறிமுகமாகியுள்ள அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்களின் இத்தொகுதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசியபானம் என்ற தலைப்பில் 17 கவிதைகளையும், சிந்தனைச் சந்தனம் என்ற பிரிவில் 35 கவிதைகளையும், முல்லையில் கிள்ளிய மொட்டுக்கள் என்ற தலைப்பில் 20 கவிதைகளையும், நெஞ்சில் தோன்றிய நினைவுச் சுடர்கள் என்ற தலைப்பில் தமிழ்ப் பெரியார்கள் பற்றிய 27 கவிதைகளையும், கதிரொளியில் சில துளிகள் என்ற தலைப்பில் 11 கவிதைகளையும் உள்ளடக்கியுள்ளன.

தமிழ்மொழிக்கு இவர் ஆற்றியுள்ள பங்களிப்பு, தமிழர் பண்பாட்டுக்கு இவரின் பணி, சமயத்துக்காக இவரின் சேவைகள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு 2004ம் ஆண்டில் உரோமா புரியில் பரிசுத்த பாப்பாண்டவர் அவர்களினால் “செவாலியர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதைத் தம் வாழ்வில் கிடைத்த மாபெரும் கௌரவமாக கருதி வரும் இளவாலை அமுது அவர்களுக்கு, ஸ்ரீ  லங்கா அரசு 2005ம் ஆண்டில் ‘கலாபூஷணம்” விருது வழங்கியும், யாழ் பல்கலைக்கழகம் ‘கலாநிதி’ பட்டம் வழங்கியும் கௌரவித்துள்ளன. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது. அத்துடன் தாயகத்திலும் புகலிடத்திலும், பல்வேறு அமைப்புக்கள் கவிமாமணி, தமிழ் கங்கை,  மதுரகவி,  சொல்லின் செல்வர்,  புலவர் மணி,  செந்தமிழ்ச் செல்வர் போன்ற பட்டங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

எத்தகைய பட்டங்களைப் பெற்றாலும், எதுவித கர்வமுமின்றி இனிதாகப் பழகும் சுபாவம் கொண்ட இம்முதுபெரும் ‘தமிழ் வித்தகர்” ஆரம்ப காலங்களில் தான் இலக்கியத் துறையில் ஈடுபடுவதற்கும்,  அதே போல பல்வேறுபட்ட மனச்சோர்வுகளுடன் புலம்பெயர்ந்த பின்பு தனது எழுத்துத் துறை ஆர்வத்தைத் தூண்டி, எழுத மீண்டும் ஊக்கமளித்தவர்கள் என்ற அடிப்படையிலும், பண்டிதமணி கணபதிப்பிள்ளை,  புலவர் இளமுருகனார், ஆயர் தியோகிப்பிள்ளை,  கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் ஈ. கே. இராஜகோபால் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வந்தார்.

மரபுக் கவிதையே வழிவழி தொடர வேண்டும் என்ற அவாக் கொண்டிருந்த இவரின் அன்பு மனைவி ஆசிரியை திரேசா ஆவார். எழுத்துத்துறையிலும், கவிதைத்துறையிலும் பல்வேறு பட்ட சாதனைப் புரிந்துள்ள, இளவாலை அமுது அவர்கள் சுமார் அறுபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பத்திரிகையாளராக ‘இளைஞர் போதினி’ எனும் பத்திரிகையை (1940ம் ஆண்டில்) நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அமுதுப் புலவர் – இளவாலை அமுது இன்று காலமானார்!

அமுதுப் புலவர் இளவாலை அமுது ஆகிய பெயர்களால் அறியப்பட்ட அடைக்கலமுத்து இன்று (பெப்ரவரி 23) காலமானார். பல்வேறு சிறப்புப் பட்டங்களைப் பெற்ற இவரின் ஆக்கங்களின் தொகுப்பு சில வாரங்களுக்கு முன்னதாக லண்டனில் வெளியிடப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களான கலாநிதி சந்திரகாந்தன் கலாநிதி வசந்தன் ஆகியோரின் தந்தையார் ஆவர். கலாநிதி வசந்தன் லண்டனிலும் கலாநிதி சந்திரகாந்தன் கனடாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார்

sridar.jpgஇலங் கையின் பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா சுகயீனம் காரணமாக இன்று காலை 8.00 மணியளவில் கொழும்பில் காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 47.  நாடகக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர், ‘மிமிக்ரி’, மற்றும் ஓவியம் என ஒட்டு மொத்தக் கலைத்துறையில் ஈடுபட்டு, தன்னை முழுமையாகக் கலைத் தாய்க்கு அர்ப்பணித்த ஸ்ரீதர் பிச்சையப்பா. 
1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி பிறந்தவர்

இவரது பூதவுடல் தற்போது அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை 2.00 மணியளவில் மாதம்பிட்டிய மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாபூசணம் மணிமேகலை காலமானார்

mani.jpgகலைஞர் கலாபூஷணம் மணி மேகலை இராமநாதன் கொழும்பில் காலமானார். சுமார் மூன்று மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்ப ட்டிருந்த வேளையிலேயே நேற்று முன்தினம் இரவு காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 64. அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 20 ஆம் திகதி கொழும்பு- 10. ஸ்ரீ பிரியதர்ஷன மாவத்தையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இருந்து கலாபவனத்திற்கு இன்று எடுத்துச் செல்லப்படும். நாளை பி.ப.4 மணியளவில் பொரளை மயானத்தில் நடைபெறும்.

கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர் மணிமேகலை தனது 9வது வயதி லேயே பாடகியாக கலைத்துறைக்குள் பிரவேசித்தார். அதன்பின் நர்த்தகியாக, நடிகையாக கடந்த 53 ஆண்டுகள் ஈழத்துக் கலையுலகில் பிரகாசித்தார்.

மேடைநாடகம், வானொலி, வட மோடி தென்மோடிக் கூத்துகள், சினிமா சின்னத்திரை, வில்லுப்பாட்டு என எல்லாவற்றிலும் கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டுவந்த ஒரே கலைஞர் மணிமேகலை என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ்!! – இனியவன் இஸாறுதீன்

tamilதமிழ்

மொழியெனப் படுவது
இதயங்களின்
உணர்வுத்தானம்

உணர்வுகளின்
இதயப்பாலம்

ஒருவரது சிந்தனையை
இன்னொருவர் அடைந்துகொள்ள
உதவும் வாகனம்

இத்தனை பயனைப் பெற்ற மாந்தர்
தங்களது தாய்மொழிக்குப்
பாராட்டுவிழா நடத்தினர்

அரேபியர் தங்கள் மொழியை
ஆன்மீகமொழி என்று
அறைந்தனர்

ஆங்கிலேயர் தங்கள் மொழியை
வணிகமொழி என்று
வாழ்த்தினர்

இத்தாலியர் தங்கள் மொழியை
இசைமொழி என்று
இயம்பினர்

பிரெஞ்சுக்காரர் தங்கள் மொழியை
காதல்மொழி என்று
கூவினர்

உருதுக்காரர் தங்கள் மொழியை
கவிதைமொழி என்று
‘கஜல்’ பாடினர்

ஆனால் தமிழே
உன்னைத்தான் உலகத்தமிழர்
இதயமொழி என்றே
இயங்குகின்றனர்

முத்துச் சிரித்தால்
உன்னை
முல்லைத்தமிழ் என்போம்

கண் மொழிந்தால்
உன்னை
கன்னித்தமிழ் என்போம்

பரஸ்பரம் நிகழ்ந்தால்
உன்னை
பிள்ளைத்தமிழ் என்போம்

ஆறுதல் வார்த்தையே
உன்னை
அன்னைத்தமிழ் என்போம்

உன் சுவாசம் இல்லையேல்
எம்மிடம்
இல்லை உயிர் என்போம்

தேகமெல்லாம் தித்திக்கும்
தாய்மொழியே

நீ
உதடுகளுக்கு
உண்மையளிக்கிறாய்

உள்ளங்களுக்கு
விருந்து வைக்கிறாய்

உணர்வுகளுக்கு
ஊட்டமளிக்கிறாய்

செவிகளுக்கு
மதுரமாகிறாய்

விழிகளுக்கு
சிற்பமாகிறாய்

உரைத்தால்
இதய நரம்புகளைத்
தித்திக்க மீட்கிறாய்

வரைந்தால்
விழி வழியே
வானவில்லாகிறாய்

இப்படி
உன் செப்படிவித்தையை
செப்புவதெப்படி
ஓ…
எத்தனை அற்புதம் தமிழே

தொன்மைக்காலத்துப் பிறப்பு நீ
மானுடஇதயங்களில்
முளை விட்டாய்

இலக்கியக்கிளைகளில்
வான்தொட்டாய்

இலக்கணத் தளைகளால்
விருட்சமிட்டாய்

அழகியல்க(இ)லைகளில்
நிழல் விட்டாய்

மானுடக்கலையை
மேம்படுத்தி மேம்படுத்தி
மானுடத்திலேயே
மகத்துவமுற்றாய்

எழுதுகோல் உழுதால்
நீ
எழுத்தாய் முளைப்பாய்

எழுத்துக்கள் முளைத்தால்
சொல்லாய் செழிப்பாய்

சொற்கள் செழித்தால்
வார்த்தையாய் விளைப்பாய்

சிந்தனை விளைந்தால்
அறிவாய் கிளைப்பாய்

அறிவாய் கிளைத்தால்
கேள்வியாய் வரமளிப்பாய்

உயிரோடு மெய்புணர்வாய்
உணர்ச்சிகளை வெளிப்படுத்துவாய்
ஜீவன் ததும்பும் சொற்கலையில்
ஓவியம் கொணர்வாய்

உன் ஒலிவடிவம்
இதயம் தொடும்போது
வரிவடிவங்களுக்கு
வனப்பும் கொடுப்பாய்

கற்றால்
எங்கள் கல்விக்கு
நீ
மெய்ஞானம் ஆவாய்

கேட்டால்
கேள்விக்கு
நீ
விஞ்ஞானம் ஈவாய்

மானுட உதடுகள்
இதயத்தில் செதுக்கிய
இதிகாசக் கல்வெட்டு நீ

உன் நயத்தால்
எங்கள் வாழ்வை
வளப்படுத்துகிறாய்

உன் நயனத்தால்
எங்கள் நாவுகளை
நெறிப்படுத்துகிறாய்

எதுவாயினும்
நீ
இதயங்களை
இணைக்கும்போதுதான்
நாங்கள்
பரவசமடைகிறோம் தமிழே

-இனியவன் இஸாறுதீன்-

புத்தாண்டில் புதுயாகம்: நோர்வே நக்கீரா

2010.jpgபுத்தாண்டில் புதுயாகம்

கந்தகக்காற்று ஊர்கோலம் போனது
யார் யாரோ அரக்கர்களால் – எம்தேசம்
கேவலம்…போர் கோலமானது.

பட்டாசு வெடிக்க
சட்டமில்லை என்று
பாதுகாப்புச் சட்டம் போட்டது
சமாதான நாடு.
சங்காரம் செய்யும் அழிவாயுதப்படையலின்
பிரமாக்கள் என்று
அகிலச்சான்றிதழ் பெற்றது- எம்
நோர்வேயிய நாடு.

யாகம்…விஸ்வாமித்திர யாகம்
விஸ்வமான மித்துருக்களால்;
சத்துருக்க போர் யாகம்.

யாகம் போகம் மாறியும்
தாகம் தாகமென
தியாகம் தியாகமாக -காகம்
கல்லுச் சேர்த்ததே தியாகமானது
வேள்வி…கேலியாகி…கேள்வியானது போ.

அன்று…யாகம் காக்க இராம இலக்குவர்
இன்று எம்மைக்காக்க….யார் சிக்குவர்?
இலங்கையில் இராமாயணம்
இறப்பதே இல்லையோ?

துப்பாக்கிகளுடன் தூங்கி எழுந்து
குண்டுகளிடையே குறுக்கே விழுந்து
ஊரைக்காத்த உத்தம உயிர்கள்
வன்னிமக்களாய்
வனத்தினுள் வதங்கிப் போவதோ?

வெட்டிய தலைகள் மண்ணில் வீழவுமில்லை
வேட்டுவிழுந்து உடலிலுயிர் பிரியுமில்லை
உதிரம் சொட்டும் வாளுடன் வந்து
வோட்டுக்கேட்டு வருடம் பிறக்குதே!
மனிதம் மறந்து வாழ்வு சிறக்குமோ?

தமிழன்…தமிழன் என வேதம் ஓதி
ஈழம்…ஈழம் என்று எண்ணை ஊற்றி
வேளம் வந்து வேவுபார்க்க
சிம்மம் சினந்து சிம்மாசனம் போட்டது.
மிருகம் தூக்கிய மிருகத்தியாகம்
போகமின்றி மிருகமாய் போனது போ…!

தாகம்…தாகம் எனத்தண்ணீர்தேடி
காகம் கல்லைச் சேர்த்ததே மிச்சம்.
இனியும் வேண்டாம் பகைமையின் எச்சம்.
மனிதம் வாழ்ந்தால் அமைதி நிச்சயம்.

பிறக்கும் வருடம் சிறப்பாய் பிறக்க
வீழ்ந்தவை எல்லாம் மிருகமாய் போக
எழுவது எல்லாம் மனிதராய் எழுக
மிருகம் கொண்டு மிருகமானது போதும்.
வாய்மை கொண்ட மனிதவாழுமை வேண்டும்

சாதி சாதியென்று சாய்த்து
சாதித்தது என்ன?
மனிதசாதி ஒன்றே போதும்
மதமும் வேண்டாம்
மார்க்கமும் வேண்டாம் -எமக்கு
மனித மார்க்கமே போதும் போதும்.

வாழும் காலம் மனிதராய் வாழ
புத்தாண்டுப் பெண்ணே
புதுச்சேலை கட்டிவா!!!

நோர்வே நக்கீரா
01 01 2010

தேசியத் தலைவரின் உரைக்கு லண்டன் எக்செல் மண்டபத்தில் மதியுரைஞர் வழங்கிய பொழிப்புரை : எஸ் வாசுதேவன்

Maaveerar_Naal_Excel2009அன்பான தமிழீழ மக்களே வழமை போல இந்த ஆண்டும் எங்கட தலைவரின்றை உரையிலை (சுடச் சுடச் ஆற்றும் மாவீரர் தின உரை : ஈழமாறன்)  ஒளிச்சிருக்கிற சில விசியங்களை உங்களுக்கு இங்கை சொல்லப் போறன். இந்த ஈழமாறன் ஒரு மாறாட்டக்காறன். அவனுக்கு நான் அடிக்கடி சொல்லுறனான் எடேய் கவனமா எழுத்துப் பிழையளை பார் எண்டு! அவன் பாங்கோக்கிலை எங்கட பெடியள் பேச்சுவார்த்தை காலத்திலை கொடியிடை பெட்டயளை ஆவெண்டு பாத்தமாதிரி பாத்து நான் தலைவருக்கு சொன்ன உரையிலை ஒரு பெரிய பிழை விட்டுட்டான். வழமையா ரைப்பண்ணிற பெடியளை இந்த துலைவார் வன்னியிலையிருந்து அள்ளி கொண்டுபோய் எல்லா இடமும் தலையாட்ட வைச்சதிலை உவன் ஈழமாறனை ரைப்பண்ண தலைவர் சொன்னவர்! அவன் ஒரு பெரிய எழுத்துப்பிழை விட்டிட்டான்.  வெளிநாட்டிலை இருக்கிற நம்மட ஆட்கள் தயவு செய்து மன்னிச்சுக் கொள்ளுங்கோ. புலன்பெயர்ந்த மக்குகளாகிய உங்களை அவன் புலம்பெயர்ந்த மக்கள் எண்டு ரைப்பண்ணி உங்களை அவமதிச்சுப் போட்டான். ஆனால் தலைவர் அதுக்குள்ளையும் சூசகமா ஒரு செய்தி சொல்லியிருக்கிறது உங்களுக்கு தெரியம் தானே.

தலைவர் தன்றை உரையிலை யாழ்ப்பாணம் எண்ட சொல்லை ஒரு இரண்டு இடத்திலை மட்டும் தான் சொல்லியிருக்கிறார் எண்டு நீங்கள் கவலைப்படக் கூடாது. யாழ்ப்பணத்திலை வன்னி எவ்விடம் என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் யாழ்ப்பாண ஆக்கள் படிச்ச ஆக்களா இருந்தாலும் அந்த வன்னி மக்களின்றை வீரத்தை வீச்சா காட்ட வேணும் எண்டுதான் தலைவர் வன்னி என்ற சொல்லை பல இடத்திலை பாவிச்சிருக்கிறார் எண்டதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தலைவர் தான் இறந்ததை பற்றியும், இறக்காததைப் பற்றியும் மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறார். அதுக்குள்ளை இன்னுமொரு விசியம் ஒளிஞ்சிருக்கு. அதை நீங்கள் வலு கவனமாக பாக்கவேணும். முன்பு புலன்பெயர்ந்த மக்கள் “தலைவர் இருக்கிறார், இல்லை” என்ற விளையாட்டை விளையாடிச்சினம். இப்ப “ராம் (கிழக்கு மாகாண தளபதி) உள்ளே, வெளியே” விளையாட்டு விளையாடினம். இது எங்கட தலைவரின்றை துரதரிசனத்தை வடிவா காட்டிறதை நீங்கள் பாக்கலாம். இதிலை தலைவர் சொல்லுற முக்கிய விசியம் புலன்பெயர் மக்களுக்கு தமிழீழ போராட்டம் ஒரு விளையாட்டு! அவை எங்களை வைச்சு ஒரு காலத்திலை துரோகி, தியாகி என்ற விளையாட்டும் விளையாடுவினம் என்ட உண்மையையும் தலைவர் இதிலை கலந்திருக்கிறார். புலன்பெயர் நாட்டிலை இருக்கிற எங்கடை பெடியள் காசு விசியத்திலை வலு கவனம் எண்டதை தலைவர் சொன்னாலும் அவர் உண்மையிலை இந்த காசுக்காகத் தான் அவை குழி பறிச்சவை எண்டதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

மற்றது இவன் டக்கிளசை நாங்கள் எத்தனை தரம் கட்டிப்பிடிச்சு கொஞ்ச நினைச்சும் அவன் தப்பீட்டான். கட்டிப்பிடிக்கிற வெறியிலை கடைசியிலை  நாங்கள் வன்னி மக்களை எப்படி கட்டப்பிடிச்சம் எண்டதையும் தலைவர் இஞ்சை சொல்லியிருக்கிறார். தோழரே துப்பாக்கியை உயர்த்தும் எதிரி தானே அது! குறி பார்த்து நல்லா சுடு. எதிரி இல்லையா இருக்கவே இருக்கிறான் சக போராளி! அவனும் இல்லையா இருக்கவே இருக்கிறார்கள் மக்கள். கடைசி நேரத்திலை நூற்றுக்கணக்கான மக்கள் எங்கட பிடியிலை இருந்து தப்பிச் செல்லேக்கை எங்கட இயக்கம் எவ்வளவு விசுவாசமாக குறி தவறாது சுட்டார்கள் என்பதை தலைவர் மிகவும் விலாவாரியாக விளக்கியுள்ளார்.

இந்தியா, பின்நவீனத்துவம், எம்ஜிஆர், சீனா, வணங்கா மண், அமரிக்கா என்று எங்கடை இயக்கம் அவையோடை செய்த அரசியலாலை மக்கள் என்ன பலன் பெற்றிருக்கினம் எண்டதை தலைவர் சொல்ல மறக்கேல்லை. அதிலை ஒரு செய்தி ஒளிச்சிருக்கிறதை நீங்கள் கவனிச்சிருக்க மாட்டியள்.  சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானை போன்ற எதிரும் புதிருமான நாடுகளை ஒரு குறைந்த பட்ச புரிந்துணர்வுடன் (புலி அழிப்பு) ஒரு வேலைத்திட்டத்தை போட்டுக்கொடுத்தவர் எங்கடை தலைவர் தான். இந்த கூட்டுக்குள்ளை அமரிக்காவையும் ஏன் சர்வதேசத்தையே புத்திசாலித்தனமாக இணைத்த பெருமை எங்கடை தலைவரைச் சாரும். உந்த சூழல் மாசடையிற விசியத்திலை கூட அடிபடுகிற சர்வதேசம் எங்கட தலைவரின்றை சிந்தனையாலை எப்பிடி ஒற்றுமைபட்டு இந்த ஒப்பிறேசன் பீக்கனை வடிவா முடிச்சிரிக்கினம் எண்டதை நீங்கள் வடிவாக இப்ப பாக்கிறியள். ஆனால் இந்த மாற்று இயக்க ஆக்கள் இன்னும் குறைந்த பட்ச புரிந்துணர்வில ஒரு தளம் அமைக்க படுகிறபாட்டை கிட்டடியிலை சுவிசிலை கூட பாத்திருப்பியள்.  எங்கட தலைவரின்றை கெட்டித்தனம் இப்ப இவைக்கு விளங்கியிருக்கும்.

மற்றது பாருங்கோ அமரிக்கன் கப்பல் அனுப்புவான் எண்டு ஆவெண்டு கொண்டு நில்லாமல் தலைவர் இந்தியா தேர்தல் முடிவை பாத்து ஏமாந்ததை தலைவர் தன்றை உரையில் சொல்லாததன் காரணத்தை நான் கட்டாயம் விளக்க வேணும். இந்த ஜெயலலிதா அம்மாவிலை தலைவருக்கு எப்பவும் ஒரு கண். அவா எம்ஜீஆருக்கு நல்லா பிடிச்ச ஒரு ஆள்தானே அதாலை தலைவருக்கும் அவாவை நல்லா பிடிக்கும். தயவு செய்து சும்மா எல்லாத்துக்கும் விசில் அடிக்காது இதை வடிவா கேளுங்கோ. இந்திய தேர்தலிலை அம்மா வெண்டிருந்தா பிறகு அவாவை கட்டிப்பிடிக்க பொட்டன்றை ஆட்களே அனுப்ப வேண்டி வந்திருக்கும். அம்மா முந்தி பகிடிக்கு சொன்ன விசியங்களை தலைவர் ஒரு காலமும் மறக்க மாட்டார். மற்றது அம்மாவும் சும்மா பம்மாத்துக்கு தானே தமிழீழத்திற்கு ஆதரவு எண்டு சொன்னவா. நல்ல காலம் அங்கை அம்மா வராதது.

தலைவர் புலன்பெயர் நாட்டிலை எங்களை காப்பற்ற நடைபெற்ற எல்லா போராட்டத்தை பற்றியும் கூறேல்லை எண்டு லண்டன் தவிர்ந்த மற்ற நாட்டு மக்கள் கோவிக்க கூடாது. சுவிசிலை ஒருத்தர் மணவறை போட்டு உண்ணாவிரதம் இருந்தது தான் தலைவருக்கு மிகவும் பிடிச்ச உண்ணாவிரதம். ஆனால் மக்டொனாலஸ் உண்ணாவிரதம் தலைவரின் அமரிக்க விசுவாசத்திற்கு கிடைத்த ஒரு பாராட்டாக நினைத்து தான் தலைவர் பரமேஸ்வரனுக்கு மட்டும் தன்றை நன்றியை தெரிவித்திருக்கிறார்.

தலைவர் தான் படிக்காட்டிலும் தமிழர்கள் நல்லா கணக்கு படிச்சவை எண்டு தான் வன்னியிலை இடம்பெயரந்த மக்கள் பற்றின கணக்கை கொஞ்சம் கொம்பிளிக்கேற்றா சொல்லீட்டர். நான் அதை கட்டாயம் உங்களுக்கு விளக்கவேணும். பொட்டனிடம் தலைவர் வேதனையுடன் எத்னை ஆயிரம் மக்கள் இன்னும் இருக்கினம் எண்டு கேட்டது தற்சமயம் நாங்கள் பலி கொடுக்க ஆட்கள் காணாட்டி பிறகு தலைவற்றை உயிருக்கு ஆபத்து என்பதை நல்லா புரிஞ்சுகொண்டார்.  அந்த பய கெலியிலைதான் எத்தனை ஆயிரம் மக்கள் இன்னும் வன்னியலை இருக்கினம் எண்டு கேட்டவர்.  3 லட்சம் மக்களை வைத்து கடைசி ஒரு மூன்று மாதம் சமாளிக்க முடியும் என்று தலைவருக்கு தெரியும். ஆனால் அவர் கே.பியின்றை திட்டத்தை நம்பினதாலை தான் மோசம் போனதையும் வலு கிளியரா தலைவர் சொல்லியிருக்கிறார்.

தலைவரின் எதிர்கால சிந்தனை என்ற பெயரிலை வெகு விரைவிலை ஒரு புத்தகத்தை அடிச்சுவிட லண்டன் புலியள் இப்ப முடிவெடுத்திருக்கினம். அந்த சிந்தனையளை வடிவா தலைவர் உங்களுக்கு விளக்கியிருக்கறார். புத்தகம் வந்ததும் அதுக்கொரு விழா வைச்சு அங்கை வெளியிடேக்கை கண்ணை மூடிக்கொண்டு அன்பழிப்புகளை அள்ளி வழங்குங்கோ. தலைவரின் எதிர்கால சிந்தனையிலை தலைவர் ஒரு விசயத்தை சொல்லாமல் விட்டதை நீங்கள் கவனிச்சிருப்பியள். வட்டுக்கொட்டை தீர்மானம் மற்றது காலம் கடந்த தமிழீழ அரச. இதிலை வட்டுக்கொட்டையாலை தலைவர் இவ்வளவு காலமும் பட்ட கொதிவலியை தெரியாதவை கொஞ்சப்பேர் திரும்பவும் வட்டுக்கொட்டை பற்றி பறையினம். தலைவர் உள்ளுக்குள்ளை நல்லா சிரிச்சுப்போட்டு உவையும் தன்னை மாதிரி நல்லா அவதிப்படட்டும் எண்டு தான் அவர் ஒண்டும் சொல்லேல்லை.

மற்றது காலம் கடந்த தமிழீழ அரசு. உவர் உருத்திரர் வந்து என்றை பதவிக்கு பலநாளாக கண் வைச்சிருந்தவர். அது எங்கடை தலைவருக்கும் நல்லா தெரியும். அது தான் அவரும் அதைப்பற்றி பெரிசா கதைக்கேல்லை. உந்த காலங்கடந்த தமிழீழ அரசு என்ற பேரை மாத்தி புலன்பெயர் காசுபுடுங்கும் அரசு எண்டு மாத்தச் சொல்லி தலைவர் அவைக்கு கடும் உத்தவை போட்டிருக்கிறார். புலன் பெயர் மக்கள் தன்னை விட மிக முட்டாள்கள் எண்டதையும் தலைவர் இதிலை நல்லா விளக்கியிருக்கறார்.

அன்பார்ந்த புலன்பெயர் மக்குகளே!
அடுத்த வரியம் உங்களை சந்திக்க எலுமோ தெரியாது. ஆனால் தலைவர் தலைவர் எண்டு வரிக்கு வரி சொன்னதை நீங்கள் வலு கவனமாக கவனிச்சிருப்பியள். இல்லாட்டி நீங்கள் என்னையும் துரோகியாக்கி போடுவியள்.

புலியளின் தாகம் புஸ்வான தாயகம்!
டாக்டர் மதியுரைஞர்.

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

Kvingar Murugaiyan Photo - Thamayanthyமுருகையன் இறந்து ஏறத்தாழ நான்கு மாதங்களில் நான் இக்கட்டுரையை எழுதுவதற்கு காரணம் இருக்கிறது. தமிழ்த்தேசியம் என்ற போர்வையில் புலிப் பாசிஸத்தை அறிந்து அறியாமலோ அல்லது தங்களது தனிப்பட்ட சந்தர்ப்பவாத நலன்களுக்காகவோ ஆதரித்து வரும் எழுத்தாளர்கள் வலைப்பதிவாளர்கள் முருகையனை ஒருபக்கச் சார்போடு விதந்துரைத்து அதிகளவில் முருகையனுக்கு அஞ்சலிக்குறிப்புக்களை எழுதியிருக்கிறார்கள். முருகையனும் புலிப்பாசிஸத்தை நியாயப்படுத்தி அதனது பிரச்சாரத்துக்கு உதவியவர் என்பதால் இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

தான் வாழ்ந்த சமூகத்தின் விமர்சகராக தன் காலத்தின் மனச்சாட்சியின் குரலாக முருகையன் இருந்தாரா? அவரது சமகாலத்து ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் முருகையனின் இடம் என்ன?

1986ம் ஆண்டு முருகையன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு துணை பதிவாளராகப் பணியாற்ற வருகின்றபோது தான் புலிப் பாஸிசத்திலிருந்து தனது சுயாதீனத்தை பேணிக்கொள்வதற்காக பல்கலைக்கழகம் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இதே ஆண்டுதான் யாழ் பல்கலைக்கழக மாணவரான விஜிதரனை புலிகள் கடத்திச்சென்று சித்திரவதை செய்து கொன்றதன் மூலமாக பல்கலைக்கழகம் மீதான தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தினார்கள். மாற்று இயக்கங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கல்வியை இடைநிறுத்தி ஓட வேண்டியிருந்தது.

Dr Rajani Thiranagamaஅடுத்தடுத்த ஆண்டுகளில் ஈழத்தமிழ் சூழலின் நிலமையினை விமர்சித்து “முறிந்த பனை” எழுதிய நான்கு  யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் முதன்மையானவரான ராஜினி திராணகம புலிகளால் கொல்லப்பட மீதிப்பேர் ஒதுங்க வேண்டியிருந்தது அல்லது தென்னிலங்கைக்கு தப்பிச்செல்ல வேண்டியிருந்தது. யாழ் பல்கலைக்கழக மாணவியும் கவிஞையும் நாடகவியலாளரும் பெண்ணியவாதியுமான செல்வி புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் கவிஞரும் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்புக்கு முருகையனிடமிருந்து முன்னுரையைப் பெற்றவருமான எம்.ஏ. நுஃமான் முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் கலைக்கப்பட்டார். நிலமை இவ்வாறு இருக்கும்போது நமது கவிஞர் முருகையனோ சற்றும் மனம் தளராது புலிப்பாசிச அரசியலுக்கு வெற்றுப்பிரச்சாரம் செய்யும் கவிதைகளையும் நாடகங்களையும் எழுதினார்.

‘தற்கொடை’ என்ற முருகையனின் கவிதையில் வள்ளுவரை கவிதைசொல்லி தெருவில் சந்தித்து வீட்டுக்கு அழைத்துச் செல்லுகிறார். வீட்டிலோ வள்ளுவர் தான் இயற்றிய புதிய அதிகாரத்தை கொடுக்கிறார். கவிதையின் இரண்டாவது பகுதி பின்வருமாறு

தற்கொடை என்ப தமிழீழ
மைந்தர்கள்
நிற்கும் புதிய நிலை.

தன்னுயிரை தான் ஈயும்
சான்றாண்மை தற்கொடையாம்
ஏன்ன நிகர் ஆகும் இதற்கு?

ஓர்ம உரமும் துறவும்
உறுதியுமே
கூர்மதியோர் ஆவிக் கொடை

கற்கண் டினிது பழங் கள் இனிதே
என்பார்கள்
தற்கொடையின் தன்மை தெரியார்.

ஆவி கொடுக்கும் அசையாத்
திடம் கொண்ட
வாலிபர்கள் வாழ்வதிந்த மண்.

சொந்த மண் மீளச் சுடுகலன்கள்
ஏந்திடுவோர்
தந்திடுவார் தங்களுயிர் தாம்.

நஞ்சைக் கழுத்தில் நகையாய்
அணிவோரின்
நெஞ்சம் நிரம்ப நெருப்பு.

வெங்கொடுமைச் சாவும் விளையாட்டுக்
கூடமாம்
பொங்கு சினம் கொண்ட புலிக்கு.

அச்சம் அறியார்: அடங்கார்:
அவர்க்குயிரோ
துச்சம்: எதிரி வெறுந்தூள்.

கொல்வோரை மோதிக் கொடுபட்ட
இன்னுயிரை
ஏல்லா உலகும் தொழும்.

இதைவிட நல்ல பிரச்சார முத்து புலிகளுக்குக் கிடைக்கப் போவதில்லை. இப்பிரச்சாரத்தின் முன் புலிகளின் ஆஸ்தானக் கவிஞரான புதுவை ரத்தின துரையே பிச்சைதான் வாங்கவேண்டும்.

மேற்கூறிய கவித்துவச் சிறப்பு எதுவுமில்லை. திருக்குறளின் வடிவத்தை பிரதிபண்ணி கவிதை பண்ணும் இவ்வுக்தி மிகவும் மலினமானதும் இலகுவானதுமான முயற்சி. வழமையாக பாடசாலை மாணவர்கள் பாலியல் வசை மொழிகளை இதே யுத்தியைப் பயன்படுத்தி உருவாக்குவதுண்டு. இதற்கு நல்ல உதாரணம்:

ஏவ்வோழ் ஓழ்த்தார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை
கள்ளோழ் ஓழ்த்தாருக்கு

எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான தமிழ்ப் புலமையுள்ள எந்தவொரு மாணவருமே இந்த வகையில் கவிதை கட்டமுடியும். இப்பருவ மாணவர்களையே புலிகளும் தங்களது ஆட்சேர்ப்புக்கு இலக்கு வைப்பதால்தான் முருகையனின் தற்கொடை கவிதை புலிகளுக்கு அற்புதமான பிரச்சார முத்து.

முருகையன் யாழ்ப்பாண சனத்தொகையில் 50 வீதமான ஆதிக்க வேளாள சாதியைச் சேர்ந்தவர். அதிலும் சைவ உணவு மட்டுமே உண்ணும் சாதியின் உட்பிரிவைச் சேர்ந்தவர். ஈழத்தமிழரின் அதியுச்ச கல்வி கலாச்சார நிறுவனமான  யாழ் பல்கலைக்கழகத்தின் முது துணைப்பதிவாளராக இருந்துகொண்டு தன்னுடைய ஐம்பதுகளின் இறுதியில் பாதி நரைத்த தாடி மீதி கவிஞன் நாடகாசிரியன் என்கிற படிமங்களோடும் யாழ் பல்கலைக்கழகத்தில் அதிகாரத்திலிருக்கிற பெரும்பாலானோர் மாணவன் மாணவிகளுடன் ஈடுபடுகின்ற பாலியல் லீலைகளில் சம்பந்தப்படாத நல்ல மனிதர் என்ற பெயரோடும் ‘தற்கொடை’ எழுதுகிறபோது இக்கவிதையின் உச்ச பிரச்சார பயன்பாடு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

Selviபுலிகளுக்காக முருகையன் எழுதிய இன்னொரு பிரச்சாரப் படைப்பு உயிர்த்த மனிதர் கூத்து என்கிற நாடகம். விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளனான க. சிதம்பரநாதனோடு சேர்ந்து கூட்டு முயற்சியாக இதனை எழுதினார். நாடகத்துறையில் தனக்குப் போட்டியாக இருந்த செல்வி புலிகளால் கொல்லப்பட்டதில் சிதம்பரநாதனுடைய பங்களிப்பும் இருந்திருக்கிறது. சிதம்பரநாதனுடைய முன்னைநாள் மேலாளரான அதிபர் ஆனந்தராஜா புலிகளாலால் கொல்லப்பட்டதில் சிதம்பரநாதனுடைய பங்களிப்பும் இருந்ததான ஒரு குற்றச்சாட்டும் உண்டு. உயிர்த்த மனிதரின் கூத்து பிரதியை வாசித்துப் பார்த்தால் பிரச்சார அம்சம் மட்டும் மேலோங்கும் மிகச்சுமாரானது என்பது புரியும். விடுதலைப் புலிகளின் ஆணைப்பிரகாரம் (Commissioned to)    எழுதப்பட்ட நாடகம் போலவேயுள்ளது.

ஸ்ராலின் போன்ற ஒரு கொடுங்கோலனை மிகச் சரியாகவே வெறுத்த மகத்தான ரூஷ்ய பெண்கவிக்குக்கூட அவருடைய மகன் “குலாக்” கொடுஞ்சிறையில் வதைக்கப்பட்ட போது ஸ்ராலினைப் போற்றிப் புகழ்ந்து கவிதை எழுத வேண்டியிருந்தது. ஆனால் புலிகளுக்குச் சேவகம் செய்ய வேண்டிய எந்த நெருக்கடிகளும் முருகையனுக்கு இருந்ததில்லை. ஏ. ஜே.கனகரட்னா போன்ற உன்னத மனிதர்கள் புலிகள் பற்றிய மிகத்தெளிவான விமர்சனங்களையும் சிந்தனைகளையும் தங்களுக்கு மிக நெருக்கமானவர்களிடமே பகிர்ந்து கொண்டு இதே யாழ்ப்பாணத்தில் கௌரவம் அறம்சார் வீரம் நேர்மையோடு வாழ்ந்திருக்கிறார்கள்.

“ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கல்லடி கண்ணே” என்பதற்கிணங்க ஒரு Hypocrite ஆக இயங்கி புலிகளின் பாசிசத்தை நியாயப்படுத்தி புலிகளின் அனுதாபிகளாகவும் புலிகளின் பிரச்சாரகர்களாகவும் செயற்பட்ட பேரா. சிவத்தம்பி மு. பொன்னம்பலம், சு. வில்வரத்தினம் போன்றவர்களின் அணியிலேயே முருகையனும் வருகிறார். முருகையனுக்கும் மேற்கூறியவர்களுக்கும் பிரபாகரனுடைய போராட்டத்திற்குப் “பதமான” பதின்ம வயதுக் குழந்தைகள் இருந்தார்கள். இவர்கள் அனைவருமே புலிகளின் பிரச்சாரத்துக்கு ஆட்பட்டு தங்களது குழந்தைகள் புலிகளில் இணையக்கூடாது என்பதற்காக அவர்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து கூட்டிவந்து கொழும்பு சென்னை முதலிய இடங்களில் வைத்து வளர்த்து சிறந்த பல்கலைக்கழக கல்வி பெறுவதை உறுதிப்படுத்தினார்கள். முருகையனுடைய பெண் திருமணமாகி கொழும்பில் சந்தோசமான குடும்ப வாழ்விலிருக்கிறார். முருகையனுடைய பையன் நிரந்தரமான ஒரு உளநோயாளி. ஆம் இது “போராட்டத்தில்” விலக்குப்பெறுவதற்கான நியாயத்தை வழங்குகிறது.

ஆனால் மறுபக்கத்தில் ஒரு உளப்பாதிப்புள்ள மகனின் தந்தையான முருகையனுக்கு என்ன குறைபாடுகள் இருந்தாலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எவ்வளவு அருமை பெருமையாகச் சீராட்டி வளர்ப்பார்கள் என்பது சொல்லிக்கொடுத்துத் தெரிய வேண்டியதில்லை. அப்படிப்பட்ட முருகையன் மற்றவர்களுடைய குழந்தைகளை ஒரு தனி மனிதனின் நலனுக்காக நடத்தப்பட்ட பாசிசப் போராட்டத்திற்கு தாரை வார்த்துக் கொடுபடுவதற்காக பிரச்சாரம் செய்ததை புரிந்துகொள்வது எவ்வாறு? (முருகையனும் ஒரு உளநோயாளி. அவ்வப்போது நோய் முற்றுகிறபோது சிகிச்சை இளைப்பாறலுக்குச் சென்றுவிட்டு மீளவும் தேறி சித்த சுவாதீனமுள்ள மனிதராக மீண்டு வருகின்ற அளவில் தன் நோயை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்)

இந்த இடத்தில்தான் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு மாயையிலிருந்தாலும் நியாயமானதாக நம்பியவரும் முருகையனைப் போன்ற hypocrite அல்லாதவருமான நேர்மையான மனிதனும் கவிஞரும் சொல்லப்பட்ட தமிழாசிரியருமான பண்டிதர் பரந்தாமன் வருகிறார். பகுத்தறிவுத் தந்தை என வர்ணிக்கப்படும் தென்புலோலியூர் கந்த முருகேசனார் இவருடைய குரு.  ஹாட்லிக்கல்லூரியில் நான் படித்த காலப்பகுதியில் இவர் ஆசிரியராக இருந்தாலும் இவரிடத்தில் தமிழ் படித்திருக்ககூடிய பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.

இரண்டாம் ஈழப்போர் தொடங்கிய தொண்ணூறுகளில் தன்னுடைய நாற்பதுகளிலிருந்த பண்டிதர் ஆசிரியர் வேலையைவிட்டு விலகி முழுநேர உறுப்பினராக சீருடையணிந்து புலிகளில் இணைந்தார். சங்க காலக் கவிதைகளில் ஒரு அதிபதியான பரந்தாமனின் பொற்காலமும் சங்ககாலத்திலேயே இருந்தது. விடுதலைப் புலிகளின் பொற்காலமான தொண்ணூறுகளில் புராதன சங்ககாலம் “தமிழீழத்தில்” re enact பண்ணப்படுவதாக  ஒரு குழந்தையின் முகச்சாயலைக் கொண்டிருந்த பண்டிதர் உண்மையிலேயே நம்பினார். சங்ககாலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த பண்டிதர் சங்ககால மொழியையும் பதங்களையும் கொண்டு பிரச்சாரமில்லாத சில நல்ல கவிதைகளையும் எழுதியுள்ளார். பண்டிதர் பரந்தாமனுடைய மகனும் வேறொரு பிரிவில் எங்கள் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளில் போய்ச் சேர்ந்தான். மகன் புலிகளில் இணைவதை பண்டிதர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவித்திருந்தார். அதுமட்டுமின்றி தன் மகன் இணைந்ததை மிகப்பெருமையாகச் சொல்லியும் திரிந்தார். புலிகள் யாழை விட்டு வன்னிக்குச் சென்றபோது பண்டிதரும் வன்னிக்குப் போனார். இவ்வாண்டில் புலிகளுக்கும் இராணுவத்திற்குமிடையிலான இறுதிச் சமரொன்றின் போது பண்டிதர் புதுக்குடியிருப்பில் தள்ளாத வயதிலும் போரிட்டு மடிந்தார். அவருக்கு நெற்றியிலோ நெஞ்சிலோதான் சன்னம் பாய்ந்திருக்கும் என்பதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை.

பின்வருவது பண்டிதரின் நல்ல கவிதையொன்று.

நல்லையல்லை நெடுவெண்ணிலவே

இல்லும் இழந்தனம் ஊரும் இழந்தனம்
ஏல்லாம் இழந்தே ஏதிலியர் ஆனோம்
வேற்றூர் தன்னில் வெய்யிலுக்கொதுங்கல்
போற்றெருவோரம் புளியோ வேம்போ
ஆலோ அரசோ அருநிழல் தேடி
ஓலை மறைப்பில் உழலும் வாழ்க்கை
ஒழியுநாள் வருமோ?
முன்னாள் எம்மூர் உழுது வித்திய பழனச் செந்நெல்
அலைகடற் படுத்த விளைமீன் குழம்பொடு
ஆர உண்டே மூரல் முறுவலர்
சேர இருந்து
திங்கள் சொரிந்த
பாலொழிப் பரப்பில்
மாலைத் தென்றல்
முல்லை நறுமணம் முகந்து வீச
மேனி சிலிர்ப்ப இன்பில் மிதந்த
எழில் வாழ்வு கழிந்தது மாதோ
இன்னாள் ஏர்க்களம் யாவும் போர்க்களம் ஆன
வாரியிடையே வலைஞர் செல்லார்
குயிலும் கோழியும் கூவல் மறந்தன
கிள்ளை மழலையும் கேளா நல் ஆன்
கன்று துள்ளா கறவை சுரவா
எல்லாம் அழுக்காறுடையான் உள்ளம் போல்
புல்லென்றாகிப் போன
யாமோ கடுவெயில் அருவழி நெடுந்தொலை ஏகி
கான விறகு கட்டி விற்கும்
அல்லல் வாழ்க்கையே ஆனோம்
இங்ஙன் சிறுவர் மகிழார் இளையோர் நயவார்
பாடுநர் நோக்கார் பகையறக் களத்தில்
ஆடுநர் வேண்டார் நீடொழி பரப்பி
மெல்ல வானில் வருகுவை
நல்லை அல்லை நெடுவெண்ணிலவே

பண்டிதரோடு முருகையன் வகையறாக்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.

முருகையன் யூன் 27 ல் கொழும்பில் இறந்தபோது உடனடியயாக அவரைப் போற்றிப் புகழ்ந்து அஞ்சலி அறிக்கை விட்டவர்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். தேவானந்தாவை பல தடவைகள் கொல்ல முயன்ற புலிகள் குறைந்த பட்சம் இரு தடவைகளேனும் பெண் தற்கொலைதாரிகளைப் பயன்படுத்தி அவரைக்கொல்ல முயன்றுள்ளனர். தேவானந்தாவோ தற்கொலைக் குண்டுதாரிகளை நியாயப்படுத்தியும் பிரச்சாரப்படுத்தியும் கவிதை எழுதிய முருகையனை போற்றிப் புகழ்ந்ததானது பெருந்தன்மையாலோ அறியாமையாலோ அல்ல. முருகையன் இறந்து சரியாக ஆறு நாட்களின் பின் புலிக் காய்ச்சலிலிருந்து மெல்ல மெல்ல மீண்டுவரும் யாழ் பல்கலைக்கழகத்துள் சண்டை சச்சரவு இல்லாமல் நுழைவதற்கு தேவானந்தாவுக்கு முருகையனை போற்ற வேண்டியிருந்தது. மேலும் இது வாக்குப்பெறுவதற்கான ஒரு மலினமான அரசியல் நடவடிக்கையும் கூட. மறைத்தும் மறந்தும் கடந்து செல்லுதல் அல்ல reconciliation என்பதை தேவானந்தா உணரவேண்டும்.

40 களில் ஈழத்து நவீன கவிதை மஹாகவியுடன் தொடங்கியது. மஹாகவி முதல் தலைமுறைக்கவிஞர். 50 களிலிருந்து கவிதை எழுதிவரும் நீலாவணனும் முருகையனும் இரண்டாவது தலைமுறைக் கவிஞர்கள். (பார்க்க: பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் என்ற நூலின் முன்னுரை). நவீன ஈழத்துக் கவிதையின் பிதாமகரான மஹாகவியின் கவிதைகள் அசலானவையும் தரத்தில் மிக உயர்வானவையும் ஆகும். இவருக்குப் பின்னர் வந்த நீலாவணனும் முருகையனும் பல சுமாரான கவிதைகளை எழுதியுள்ள போதும் நீலாவணனின் சிறந்த கவிதைகள் முருகையனின் சிறந்த கவிதைகளைவிட தரத்தில் உயர்வானவைகள். முருகையனில் அசலைவிட நகல்தான் அதிகமாக இருக்கிறது.

Arnold_Weskerமுருகையனின் படைப்புக்களில் வேறொருவரின் படைப்பை தழுவி அல்லது மொழிபெயர்த்து அல்லது வடிவம் மாற்றி எழுதியiவைதான் சிறப்பாக இருக்கின்றன. ஆனோல்ட் வெஸ்கர் என்ற பிரித்தானிய நாடகாசிரியரின் உருவகக்கதையொன்றை தழுவியே ஆதி பகவன் என்ற நெடுங்கவிதையை எழுதியுள்ளார். ஆதிக் கிரேக்க நாடகாசிரியரான Sophocles இனது நாடகங்களான  Antigone, Oedipus Rex  என்பவற்றை  தழுவி குனிந்த தலை தந்தையின் கூற்றுவன் ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். Bertolt Brecht  இன் Life of Galileo வை தழுவி கலிலியோவை எழுதியுள்ளார். அன்ரன் செக்கோவின் Enemies என்ற சிறுகதையைத்தழுவி இருதுருவங்கள் என்ற நாடகத்தை எழுதியுள்ளார். Terry Eagleton எழுதிய The Illusions of Post Modernism என்ற கட்டுரையை முருகையன் முதலாளியத்தின் மறுபக்கம் என்ற தலைப்பில் மொழிபெயர்த்துவிட்டு  “பின் நவீனத்துவம் மாயைகளைக் கட்டவிழ்த்தல்” என்ற புத்தகத்தில் தனது கட்டுரையாகப் போடுகிறார். 

தான் சுயமாக எழுதிய நாடகங்களோடு தான் மொழிபெயர்த்த நாடகங்களையும்  தான் எழுதிய நாடகம் போன்ற மாயையோடு சேர்த்துத் தொகுக்கிறார். முருகையனுடைய அகராதியில் தழுவலுக்கும் மொழிபெயர்ப்புக்கும் வித்தியாசமில்லை. மொழிபெயர்ப்பு சரியாக செய்ய முடியாவிட்டால் தழுவல் என்றும் தழுவல் திருட்டல்லவா என்ற குற்றச்சாட்டு வந்தால் மொழிபெயர்ப்புத்தான் என்றும் சொல்லித்தப்பலாம். உண்மையில் இவை அப்பட்டமான இலக்கியத் திருட்டுக்கள். ஐரோப்பிய மொழியொன்றில் இந்தத்திருவிளையாடல்களை முருகையன் செய்திருப்பாராயின் ரெறி ஈகிள்ரனின் பதிப்பாளர் முருகையன் மீது வழக்குத்தாக்கல் செய்திருப்பார்.

முருகையனின் சொந்த நாடகங்கள் மிகச்சுமாரானவையாக இருக்கின்றன. அதிலும் ‘வந்துசேர்ந்தன’ போன்ற நாடகங்கள் வேடிக்கைக்குரிய வகையில் பாடசாலை மாணவர்கள் எழுதுகின்ற தரத்தில் இருக்கின்றன. செய்யுளில் (Verse)  எழுதிவிட்டால் மட்டும் அது நல்ல நாடகமாகிவிடாது. ஆனால் நல்ல நாடகம் நாடகப்பிரதி பற்றிய புரிதல் இல்லாத ஒருவருக்கு செய்யுளில் எழுதப்பட்டது நல்ல நாடகப்பிரதி என்ற பிரமையைக் கொடுக்கக் கூடியது. முருகையனின் கவிதைத் தொகுதிகளிலுள்ள 80 வீதமான கவிதைகள் மிகச் சுமாரானவைவும் தனித்தன்மை இல்லாதவையும். ‘அகிலத்தின் மையங்கள்’ எழுதிய முருகையனால்தான் மேற்கூறிய 80 வீதமான கவிதைகளும் எழுதப்பட வேண்டுமல்ல.  மேமன் கவி அப்துல் ரகுமான் போன்ற மூன்றாந்தரமான ஒரு கவிஞராலோ சாதாரணமான தமிழ்ப் புலமையுள்ள ஒருவராலோ மேற்கூறிய 80 வீதமான கவிதைகளை எழுதமுடியும்.  முருகையனிடம் சொந்தச் சரக்கு இல்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

துரதிஸ்ட வசமாக மஹாகவியும் நீலாவணனும் தங்களுடைய 44 ம் வயதிலேயே மரணமடைந்துவிட்டதால் மூத்த கவிஞர் என்ற பதவி முருகையனுக்கு போட்டியின்றிக் கிடைத்தது. அவரது கவிதைகளின் தரத்தின் அடிப்படையிலன்றி வயது ஆங்கில மொழிப்புலமை அதிகாரம் மிக்க பதவிகளிலிருந்தமை என்பனவே முன்னணிக் கவிஞர் என்ற அடைமொழியை முருகையன் அடையக்காரணமாக இருந்தது. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டால் தங்களின் உக்கிப்போன கோவணங்களின் நாறல் அம்பலத்திற்கு வந்துவிடும் என்பதால் ‘ஒறிஜினல்’  பேராசிரியர்களான சிவத்தம்பியும் சிவசேகரமும் முருகையனுக்கு எழுதிய அஞ்சலிகளில் மகா பொய்கள் சொல்லியுள்ளனர். சிவத்தம்பி கைலாசபதியோடு சேர்ந்து மஹாகவியை இருட்டடிப்புச் செய்தவர். சிவசேகரம் மஹாகவியை இருட்டடிப்புச் செய்த கைலாசபதிக்கு வக்காலத்து வாங்கியவர்.

எந்தவொரு அசலான கலைஞனும் ஒரு சித்தாந்துத்துக்குள் (Doctrine) சிறைப்பட்டுப் போகமாட்டான். மார்க்ஸியம் ஒரு சித்தாந்தம். இதன் காரணமாகத்தான் மஹாகவியும் நீலாவணனும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற பிரச்சார இலக்கியத்தை முதன்மைப்படுத்திய கிளப் (club)களில் தங்களை இணைக்கவில்லை. மேலும் அசலான கலைஞர்கள் என்பதால் கைலாசபதி சிவத்தம்பி போன்ற Literary cognition  (இலக்கிய ஞானம்) ஐ  அரிதாக உடையவர்களிடம் சேவகம் செய்து இலக்கிய அந்தஸ்து பெறவேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்ததில்லை.

அடிப்படையில் மஹாகவியும் நீலாவணனும் முற்போக்காளராய் இருந்தார்களே தவிர பிற்போக்காளராயும் வலதுசாரிகளாயும் இருக்கவில்லை. நகல் கவிஞரான முருகையனோ கைலாசபதி சிவத்தம்பிக்கு சேவகம் செய்தார். மார்க்ஸியக் கிளப்பின் சீன சார்பு chapter ஆன தேசிய கலை இலக்கியப்பேரவையின் உறுப்பினர் முருகையன். இந்த மார்க்ஸியக் கிளப் களுக்கும் சாயிபாபா கிளப் மற்றும் மோட்டார் வண்டிக் கிளப்புக்களுக்கும் (Bikie clubs) பெரிய வித்தியாசங்களில்லை. இவ்வகையான இலக்கிய மார்க்ஸிய கிளப்புக்கள்தாம் குழுமனப்பான்மை முதுகுசொறிதல் காரணமாக உண்மையான இலக்கியத்தை சீரளிப்பவர்கள்.

இந்த அடிப்படையிலேயே சிவத்த தம்பியும் சிவத்த சேகரமும் முருகையனுக்கு எழுதிய புனைவுசார் அஞ்சலிகளை புரிந்துகொள்ள முடியும். சிவத்த சேகரத்தார் “குறுகிய தமிழ்த் தேசியவாதத்திற்கு பலியாகாமல் அவரால் முழுமையான ஒரு மனிதநேயவாதியாக விருத்தியடைய முடிந்தது.“ என்று முருகையனைச் சொல்கிறார். தேசிய கலை இலக்கியப்பேரவை பதிப்பித்த முருகையனின் கவிதை தொகுப்பில் “தற்கொடை” என்ற அவரது கவிதையும் முருகையனின் நாடகங்களின் தொகுப்பு நூலில் “உயிர்த்த மனிதர் கூத்து” என்ற புலிப்பிரச்சார நாடகமும் தவிர்க்கப்பட்டு உத்தியோக பூர்வமாக சுயதணிக்கை செய்யப்பட்ட பின்னர் சேகரத்தார் நம் காதில் பூச்சுற்றுகிறார். முருகையன் குறுகிய தமிழ்த் தேசியவாதத்துக்குப் பலியாகியிருந்தாலும் மன்னிக்கலாம். முருகையன் அதைவிடக் கேவலமாகிப்போய் புலிப் பாசிஸத்துக்கல்லவா பலியாகியிருக்கிறார். சேகரத்தார் மேலும் உன்மத்தம் கொண்டு “முருகையனுடைய கவிதைகள் ஈழத்துத் தமிழ்க் கவிதை தனது உச்சங்களை எட்டிய காலப் பகுதியில் எழுதப்பட்டவை. ஈழத்துக் கவிதையை அதன் உச்சங்கட்குக் கொண்டு சென்றவற்றுள் அவரது கவிதைகளுக்கு ஒரு பெரும் பங்குண்டு. அவற்றின் சிறப்பை அறிந்ததனாலேயே பேராசிரியர் கைலாசபதி அவரைக் கவிஞர்கட்குக் கவிஞர் என்று கூற முற்பட்டார். அக்கூற்று இன்று வரையுங் கூட செல்லுபடியானது”  என்கிறார். இதைவிட தம்பியும் சேகரமும் முருகையனை பாரதிதாசனுக்கு ஒத்தவராக அல்லது அவரையும் மீறியவராகக்காட்ட முற்பட தம்பியோ முருகையனைக் கொண்டுபோய் மஹாகவிக்கு அருகில் வைக்க முற்பட்டிருக்கிறார். நவீன தமிழிலக்கியத்தில் மஹாகவி ஒரு இரத்தினக்கல் என்றால் முருகையன் ஒரு கூழாங்கல்.

Sergei_Mikhalkovஇந்த ஆகஸ்டு 27 ம் திகதி சேர்ஜி மிகல்கோவ் என்ற ரூஷ்ய கவிஞர் இறந்தார். அவர் கிரெம்ளினில் ஆயுட்கால ஆஸ்தான கவி. முதலில் அவர் சோவியத் தேசிய கீதத்துக்கு இரண்டு வகையான பாடல்களை எழுதினார். ஸ்ராலின் உயிரோடு இருந்த போது ஸ்ராலினை மகிமைப்படுத்தி எழுதியது ஒன்று. ஸ்ராலின் இறந்தபின்னர் ஸ்ராலினை புறக்கணித்து எழுதியது மற்றது. சோவியத் உடைந்த பின்னரும் ரூஷ்ய அதிபர் பூட்டினின் கட்டளைக்கிணங்க அதே பழைய சோவியத் இசைக்கு மூன்றாவது முறையாகவும் ரூஷ்ய தேசிய கீதத்துக்கான பாடலை எழுதினார். அவர் சேவகம் செய்த எல்லா ஆட்சிகளும் அவருக்கு பதக்கங்களை வழங்கின. மிகல்கோவ் இறப்பதற்கு சரியாக 2 மாதங்களுக்கு முதல் யூன் 27 ல் இறந்த முருகையனோ மிகல்கோவையே விஞ்சிய சேவக்காரன். ருஷ்ய ஆட்சிகளுக்கு சேவகம் செய்த மிகல்கோவ் ஒருபோதும் ரூஷ்யர்களின் எதிரிகளான ஜெர்மானிய நாசிகளுக்கு சேவகம் செய்யவில்லை. முருகையன் அதற்கொப்பானதை செய்திருக்கிறார்.

முருகையன் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முதலே பிரபாகரன் மண்டையில் போடப்பட்டு விட்டதால் முருகையனுக்கு மாமனிதர் பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் இலங்கை அரசின் அதியுயர் இலக்கிய விருதான சாகித்ய ரத்னா விருது (இடது சாரிக்கட்சிகள் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது முருகையனின் இடதுசாரித் தொடர்பாலேயே இவ்விருது)  முருகையனுக்கு 2007 ல் வழங்கப்பட்டபோது அவர் அதனை ஏற்றுக்கொண்டார். விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகளையும் நியாயப்படுத்தி ‘தற்கொடை’ எழுதிய முருகையனுக்கு இலங்கை அரசு இவ்விருதைக் கொடுத்திருக்கிறது. (இலங்கையின் புலனாய்வுப்பிரிவினர் 9 மணியிலிருந்து 5 மணி வரையான பகல்வேளைகளில் மட்டுமே தொழில் செய்வார்கள் என்று சக கவிஞர் ஒருவர் என்னிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். சிங்களவர்களுக்கு மேல் வீடு இல்லை என்று பிரபாகரனின் மதியுரைஞர் இலண்டன் சீமையில் பேசியிருக்கிறார்.)

பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருது

211009proelanco.jpgபுதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிப் பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருது! ஒரு இலட்சம் தொகையும், சான்றிதழும் குடியரசுத்தலைவர் வழங்வுள்ளார் !

இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் சங்க இலக்கியங்களில் நல்ல புலமையும் ஆராய்ச்சித் திறனும் கொண்ட இளைஞர்களுக்கு “இளம் அறிஞர் விருது”வை நேற்று அறிவித்துள்ளது. இவ்விருதுக்கு உரியவராகப் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர்மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் மு.இளங்கோவன்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் சங்க இலக்கியம்,இலக்கணம் குறித்து எழுதியுள்ள நூல்கள்,ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தன.சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைக்குறிப்புகளை விரித்துரைக்கும் ஆய்வுகளைச் செய்துள்ளார்.

 முனைவர் மு.இளங்கோவன் சங்க இலக்கியத்தில் நல்ல பயிற்சியுடையவர் என்பதுடன் சங்க இலக்கிய நடையில் மாணவப் பருவத்திலேயே பாடல் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.மாணவராற்றுப்படை(1990) அச்சக ஆற்றுப்படை(1992) என்னும் நூலும், அரங்கேறும் சிலம்புகள்(2004) என்ற மரபுக்கவிதை நூலும் இதற்குச் சான்றுகளாகும்.இவர் எழுதியுள்ள பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் புகழ்பெற்றனவாகும்.
 
சங்க இலக்கியத்தில் ஒன்றான மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நன்னனின் கோட்டையை, நவிரமலையைக் கண்டுபிடித்துப் படத்துடன் இதழ்களிலிலும் இணையத்திலும் வெளியிட்டதால் வெளிநாட்டு அறிஞர்கள் இக்கட்டுரையை உயர்வாக மதிக்கின்றனர்.சங்க காலப் பாரியின் நண்பர் கபிலர் உயிர் துறந்த இடம் தென்பெண்ணையாற்றங்கரையில் உள்ள கபிலர் குன்று என்பதையும் வெளியுலகிற்குக் கொண்டுவந்தார்.சங்க இலக்கியத்தில் இடம்பெறும் இசையைப் பற்றி முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் ஆராய்ச்சி செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குத் தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதி உருவாக்கி வழங்கிய பெரும் பணியில் ஈடுப்பட்டவர்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கூத்து,இசை பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்தவர். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இவற்றின் முதற் பதிப்புகளை மின்னூலாக்கி இணையத்தில் வழங்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ளவர்.சங்க இலக்கியப் புலவர்கள்,சங்க இலக்கிய ஆய்வில் ஈடுபட்ட அறிஞர்களின் வாழ்க்கையை இணையத்தில் ஒருங்குகுறி வடிவில் வெளியிட்டு வருகிறார்.அவ்வகையில் சங்க இலக்கிய ஆய்விலும் பதிப்பிலும் ஈடுப்பட்ட உ.வே.சாமிநாத ஐயர்,பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தி.வே.கோபாலையர், வீ.ப.கா. சுந்தரம், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை இணையத்தில் வெளியிட்டவர்.

சங்க இலக்கிய ஆய்வுகளை இணையம் வழியாக அடுத்த கட்டத்திற்கு உலக அளவில் எடுத்துச் செல்பவர் மு.இளங்கோவன்.எனவே இவர் ஆய்வு முயற்சிகளை இலண்டன் கோல்ட்சுமிது பல்கலைக்கழகம்,மலேசியா பல்கலைக்கழகம்,புத்ரா பல்கலைக்கழகம்(மலேசியா), சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைகழகம்,இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்அறிஞர்கள் பாராட்டி வருகின்றனர்.

 இது தவிர உலக அளவில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மு.இளங்கோவனின் இலக்கியம்,இலக்கணத்தை இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையப் பணியைப் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகின்றனர். 

மு.இளங்கோவன் இதுவரை 18 நூல்களை வெளியிட்டுள்ளார்.இவற்றுள் இரண்டு நூல்கள் இவர் பதிப்பித்த நூல்களாகும்.உலக அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைத்துள்ளார்.தேசிய அளவில் 42 கட்டுரைகளும்,இலக்கிய இதழ்களில் 79 கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழகத்தின் முன்னணி ஏடுகளான தினமணி,தமிழ் ஓசை, செந்தமிழ்ச்செல்வி, சிந்தனையாளன், கண்ணியம் உள்ளிட்ட ஏடுளிலும் திண்ணை, தட்சுதமிழ்,  தமிழ்க்காவல், மின்தமிழ், பதிவுகள்,வார்ப்பு உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுதிவருபவர்.

 சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரை படித்து உலக அளவில் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை,முதுகலை தமிழ் படித்தவர். புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வினை முடித்தவர். முனைவர் பட்ட ஆய்வினைத் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் “பாரதிதாசன் பரம்பரை” என்ற தலைப்பில் நிகழ்த்தி முனைவர்பட்டம் பெற்றவர்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தவர். இந்திய நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப் பெற்றுப் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இப்பொழுது பணிபுரிந்து வருகிறார்.இவரின் பிறந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூர் ஆகும்.

பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் தேசம்நெற்றின் வாழ்த்துக்கள்