::கலை இலக்கியம்

Wednesday, September 22, 2021

::கலை இலக்கியம்

கலை இலக்கியம் தொடர்பான விமர்சனங்களும் கட்டுரைகளும்

கிழக்கு இலக்கிய பெருவிழா 24, 25 ம் திகதிகளில்

கிழக்கு மாகாண இலக்கியப் பெருவிழா எதிர்வரும் 24 ம், 25 ம், திகதிகளில் அம்பாறை டீ. எஸ். சேனநாயக்கா கல்லூரியில் இடம் பெறவுள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமும், கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இந்த இலக்கிய விழாவையொட்டிய ஆய்வரங்கு நிகழ்வு அக்கரைப்பற்று அல்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி (24/9/2009) இடம் பெறவுள்ளதாக கலாசார உத்தியோகத்தர் க. அன்பழகன் தெரிவித்தார்.

இந்த ஆய்வரங்கில் “கிழக்கிலங்கையின் நாட்டார் நம்பிக்கைகள்” எனும் தலைப்பில் எம். எஸ். அபுல்ஹஸனும், “கிழக்கிலங்கையின் கூத்து மரபு” எனும் தலைப்பில் நடராஜரத்தினமும், “கிழக்கிலங்கையின் நாட்டார் பாடல்கள்” எனும் தலைப்பில் ரமீஸ் அப்துல்லாவும், “கிழக்கிலங்கையின் நாட்டார் பட்டப் பெயர்கள்” – எனும் தலைப்பில் த. மலர்ச் செல்வனும், “கிழக்கிலங்கையின் நாட்டாரியல் பழமொழிகள்” – எனும் தலைப்பில் எஸ்.  முத்துமீரானும், “கிழக்கிலங்கையின் நாட்டார் ஆய்வுகள் அன்றும் இன்றும்” எனும் தலைப்பில் கலாநிதி. செ. யோகராசாவும், “கிழக்கிலங்கையின் இடப்பெயர்கள்” எனும் தலைப்பில் ஜலீலும், “கிழக்கிலங்கையின் நாட்டாரியல் வாய்மொழி மொழிகள் எனும் தலைப்பில் பேராசிரியர் சண்முகதாஸ¤ம், “கிழக்கிலங்கை மக்களின் வாழ்வும் வளமும்” எனும் தலைப்பில் எம். ஏ. மஜீத்தும், “கிழக்கிலங்கையின் நாட்டார் அறிவியல் எனும் தலைப்பில் தேனூரானும், “கிழக்கிலங்கையின் கிராமிய சிறு தெய்வ சடங்கு” எனும் தலைப்பில் முருகேசு தயாநிதியும் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில் நாடகம், நாட்டு கூத்து வளர்ச்சிக்காக காத்திரமான பணியாற்றிவரும் பேராசிரியர் சி. மெளனகுரு தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்.

இவ்விழாவில் இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது பெரும் கலைஞர்களின் விபரம் வருமாறு, அக்கரை மாணிக்கம் (வ. ஞானமாணிக்கம்)  த. தில்லைமுகிலன், ஆ. சிங்கராயர், செல்வி மணிமேகலா கார்த்திகேசு, இராமன் பிச்சை, ஏ. ஆர். ஏ. பிஷ்றுல்ஹாபி, என். மணிவாசகன், ஏ. முஸம்மில் இ. அரசகேசரி, க. தருமரெத்தினம், மா. செல்வராசா, க. செல்வத்தம்பி, பாவலர் சாந்திமுகைதீன் ஆகியோர் நாடகம், நாட்டுக் கூத்து, கவிதை, இலக்கியம், உயர் கல்வி, கைவினை, எழுத்து ஆகிய துறைகளுக்காக தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்படுகின்றனர்.

உலகின் மிக நீள தொலைக்காட்சி நெடுந்தொடர் முடிவுக்கு வருகிறது

guidinglightsoapopera.jpgஉலகி லேயே மிக நீளமான தொலைக்காட்சித் தொடரான ‘கைடிங் லைட்’ எனும் அமெரிக்க நெடுந்தொடர் 72 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது முடிவுக்கு வருகிறது.

1937ஆம் ஆண்டு என்.பி.சி. வானொலியில் தினந்தோறும் 15 நிமிடங்கள் என்று ஆரம்பித்த இத்தொடர் மக்களின் பேராதரவுடன் 1952ஆம் வருடம் தொலைக்காட்சித் தொடராக உருமாற்றம் பெற்றிருந்தது.

ஸ்பிரிங்ஃபீல்ட் என்ற கற்பனையான நகரத்தில் நடக்கும் காதல், கல்யாணம், கள்ளக் காதல், விவாகரத்து, அவ்வப்போதைய மர்மக் கொலை என்பதாக இந்த தொடர் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் சென்றது.  ஆனால் பலவித தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெருகிவிட்ட தற்போதைய சூழலில் இந்நிகழ்ச்சியின் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்துவந்தது.

தென்கச்சி சுவாமிநாதன் நேற்று காலமானார்

180909swamynathan.jpgஅகில இந்திய வானொலி நிலைய முன்னாள் உதவி இயக்குநரும், பிரபல எழுத்தாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் நேற்று காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 67. அவர் சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்தார். சென்னை வானொலியில் ‘இன்று ஒரு தகவல்’ என்னும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியை தொடர்ந்து பல ஆண்டுகள் வழங்கியவர் தென்கச்சி சுவாமிநாதன்.

அது ஒலிபரப்பான காலகட்டத்தில் அதை கேட்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு, அந்நிகழ்ச்சி புகழ்பெற்று விளங்கியது. அதில் தினம் தினம் புதுப்புது தகவல்களை, நகைச்சுவையுடன் வழங்கியவிதம் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.

அவர், பிரபல எழுத்தாளராகவும் விளங்கினார். ‘அன்பின் வலிமை’, ‘தீயோர்’ மற்றும் ‘அறிவுச் செல்வம்’ உட்பட ஏராளமான புத்தகங்களை தென்கச்சி சுவாமிநாதன் எழுதியுள்ளார். 1977ம் ஆண்டில் அகில இந்திய வானொலி பணியில் சேர்ந்த அவர், விவசாய நிகழ்ச்சிப் பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டபோது, ‘வீடும் வயலும்’ என்ற சிறப்பான நிகழ்ச்சி மூலம் விவசாயத்துறையின் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவி புரிந்தார்.

இது தவிர, குழ ந்தைகளுக்கான ஏராளமான நிகழ்ச்சிக ளையும் தயாரித்து வழங்கியவர் தென்கச்சி சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. தென்கச்சி சுவாமிநாதன் மறைவுக்கு பா.ஜனதா தலைவர் இல. கணேசன், இந் திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா. பாண்டியன், திராவிட கழக தலைவர் கி. வீரமணி ஆகியோர் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

அரச சாகித்திய விருதுகள்

இவ்வாண்டுக்கான இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் தங்க விருது பேராசிரியர் க. குணராசாவுக்கு (செங்கை ஆழியனுக்கு) வழங்கப்பட்டுள்ளது. சிங்களப் பிரிவில் கலாநிதி திஸ்ஸ காரியவசம் மற்றும் ஆங்கில பிரிவில் கலாநிதி ஆஷ்லி கல்பே ஆகிய இருவருக்கும் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத் துறையில் அவர்கள் ஆற்றிய சேவையை கெளரவிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. பரிசுத் தொகையாக ரூ. 75,000/- இவர்களுக்கு வழங்கப்படும்.

நேற்று கலாசார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இத்தகவல் வெளியிடப்பட்டதோடு இவ்வாண்டு சாகித்திய பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதில், எட்டுப் பிரிவுகளில் தமிழ் நூல்களும் அவற்றின் படைப்பாளர்களின் பெயர்களும் அடங்கும். ஒவ்வொரு துறையிலும் இருவரின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

14ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும் வைபவத்துக்கு இவர்கள் அழைக்கப்படுவர். அங்கேயே பரிசு எவருக்கு என்பது தெரிவு செய்யப்பட்டு ஒருவருக்கு விருதும் மற்றவருக்கு சான்றிதழும் வழங்கப்படும் என இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

நாவல் இலக்கியம்: விதி வரைந்த பாதையில் – வவுனியர் இரா உதயன்

வயலான் குருவி – அkஸ் எம். பாயிஸ், அக்கரைப்பற்று

சிறுகதை இலக்கியம் : ஆத்ம விசாரம் – அ. ச. பாய்வா, மட்டக்களப்பு

உடைந்த கண்ணாடி மறைந்த குருவி – ஓட்டமாவடி அரபாத்

கவிதை : என்னைத் தீயில் எறிந்தவள் – அஷ்ரப் சிகாப்தீன்

வேறுடன் பிடுங்கிய நாளிருந்து – நீ. பி. அருளானந்தம், கல்கிசை

நாடக இலக்கியம் : ஒரு கலைஞனின் கதை – கலைஞர் கலைச்செல்வன்

வீர வில்லாளி – எஸ். முத்துக்குமாரன் – மட்டக்களப்பு

சிறுவர் இலக்கியம் : பூனைக்கு மணி கட்டிய எலி- சி. எம். எம். ஏ. அமீன்

குட்டி முயலும் சுட்டிப் பயலும் ஓ. கே. குணநாதன், மட்டக்களப்பு

நானவித இலக்கியங்கள் : கர்மயோகி பவுல் – வண. கலாநிதி எஸ். ஐ. மத்தியு, கல்முனை

மட்டக்களப்பு கோவில்களும் தமிழர் பண்பாடும் – எஸ். தில்லைநாதன், மட்டக்களப்பு

மொழிபெயர்ப்பு இலக்கியம் : நெடும் பயணம் – மடுளுகிரியே விஜயரத்ன

குருதட்சனை – திக்குவளை கமால்

சிறுவர் இலக்கிய மொழிபெயர்ப்பு : சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு – சரோஜனி அருணாசலம்

மலேசியாவில் ‘வல்லினம்’ க‌லை இல‌க்கிய‌ விழா : ம‌.ந‌வீன்

Malasia_KalaiIlakkiyaVilaஅண்மையில் (29.08.09) வ‌ல்லின‌ம்இத‌ழ் ஏற்பாட்டில் ‘க‌லை இல‌க்கிய‌ விழா’ சிற‌ப்பாக‌ ந‌டைப்பெற்ற‌து. தான் சிரி சோமாஅர‌ங்கிலும் ம‌ண்ட‌ப‌த்திலும் ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ளை உள்ள‌ட‌க்கியிருந்த‌ இந்த‌ விழாவின் முத‌ல் அங்க‌மாக‌ ஓவிய‌ர் ச‌ந்துருவின் ஓவிய‌ க‌ண்காட்சியும் ஸ்டார் க‌ணேச‌னின் நிழ‌ல்பட‌ க‌ண்காட்சியும் பார்வையாள‌ர்களைக் க‌வ‌ர்ந்த‌து. ஓவிய‌ர் ச‌ந்துரு இந்நிக‌ழ்வுக்கென‌ பிர‌த்தியேக‌மாய் வ‌ரைந்த‌ தோட்ட‌ப்புற‌ வாழ்வு சார்ந்த‌ காட்சிக‌ள் ப‌ல‌ரையும் ந‌ம‌து சுவ‌டுக‌ளை மீட்டுண‌ர‌ உத‌விய‌து. ஸ்டார் க‌ணேச‌னின் அற்புத‌மான‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் அவ‌ரின் ப‌த்திரிகைத் துறையைத் த‌விர்த்து அவ‌ர் கொண்டிருக்கும் ஆத்மார்த்த‌மான‌ க‌லையுண‌ர்வை வெளிப‌டுத்திய‌து.

நிக‌ழ்விற்குத் த‌லைமையேற்ற‌ தேசிய‌ நில‌ நிதி கூட்டுற‌வு ச‌ங்க‌த்த‌லைவ‌ர் ட‌த்தோ.ச‌காதேவ‌ன் ம‌ற்றும் சிற‌ப்பு வ‌ருகை புரிந்த‌ கொடை நெஞ்ச‌ர் ர‌த்ன‌வ‌ள்ளி அம்மையார் முறையே ஓவிய‌ர் ச‌ந்துருவின் ஓவிய‌த்தையும் ‘ஸ்டார்’க‌ணேச‌னின் நிழ‌ல்ப‌ட‌த்தையும் திற‌ந்து வைத்த‌ன‌ர். இந்நிக‌ழ்வின் இவ்விரு க‌லைஞ‌ர்க‌ளும் த‌ங்க‌ள் க‌லைப் ப‌ய‌ண‌த்தைப் பார்வையாள‌ர்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர்.
 
இர‌ண்டாவ‌து அங்க‌ம் தான்சிரி சோமா அர‌ங்கில் ந‌டைப்பெற்ற‌து. நிக‌ழ்வின் ஏற்பாட்டாள‌ரான‌ ம‌.ந‌வீன் த‌ம‌து வ‌ர‌வேற்புரையில் ச‌ம‌ர‌ச‌ங்க‌ள் இன்றி வ‌ல்லின‌ம் த‌ன‌து பாதையில் செல்வ‌தையும் அத‌ன் ப‌ய‌ண‌ம் வேறொரு ப‌ரிணாம‌த்தை அடைந்துள்ள‌தையும் சுட்டிக்காட்டினார். நிக‌ழ்வின் முக்கிய‌ப் புர‌வ‌ல‌ரான‌ திரு.ராம‌கிருஷ்ண‌ன் வ‌ல்லின‌ம் தொட‌ர்ந்து சிற‌ப்பாக‌ ப‌ய‌ணிக்க‌ வேண்டும் என‌ வாழ்த்தி அம‌ர்ந்தார். வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ச்சிக்குப் பெரும் ப‌ங்காற்றிய‌ டாக்ட‌ர்.ச‌ண்முக‌சிவா சிற்றித‌ழ்க‌ளின் தோல்விதான் அத‌ன் வெற்றி என்றார். ஒரு சிற்றித‌ழ் உருவாகும்போதே அதுத‌ன் ம‌ர‌ண‌த்தைத் தீர்மாணித்த‌ப் ப‌டிதான் உருவாகிற‌து என்றார்.

‘க‌விதை திற‌னாய்வு’ க‌ட்டுரையை வாசிக்க‌ வேண்டியிருந்த‌ ஜாசின் ஏ.தேவ‌ராஜ‌ன் த‌விர்க்க‌ முடியாத‌ கார‌ண‌ங்க‌ளால் வ‌ர‌முடியாம‌ல் போக‌வே அவ‌ர‌து க‌ட்டுரை ம‌ட்டும் க‌விஞ‌ர்.ப‌ச்சைபாலனால் வாசிக்கப்ப‌ட்ட‌து. எழுதிய‌வ‌ர் இல்லாததால் விவாத‌ங்க‌ளும் ந‌டைப்பெற‌வில்லை.

தொட‌ர்ந்து வ‌ல்லின‌த்தில் இட‌ம்பெற்ற‌ சிறுக‌தைகளை ஒட்டி யுவ‌ராஜ‌ன் விம‌ர்ச‌ன‌ம் செய்தார். சுருக்க‌மான‌ தீவிர‌மான‌ அவ‌ர் விம‌ர்ச‌ன‌ம் ப‌ல‌ரிட‌மிருந்து அதிருப்தி அலையை ஏற்ப‌டுத்திய‌து. ப‌ல‌ருக்கு விம‌ர்ச‌ன‌ம் புரிய‌வில்லை என்ப‌தும் உண்மை. ம‌ர‌பான‌ விம‌ர்ச‌ன‌த்தில் இருந்து வில‌கி யுவ‌ராஜ‌ன் த‌ன்னைக் க‌வ‌ர்ந்த‌ க‌தைக‌ளை ம‌ட்டும் தேர்ந்தெடுத்து அதின் மைய‌த்தை ப‌ற்றி உருவிபேசிய‌து ம‌லேசியத் த‌மிழ் இல‌க்கிய‌த்திற்குப் புதுமை.

ஒரு ம‌ணிநேர‌ உண‌வு இடைவேளைக்குப் பிற‌கு மூன்றாவ‌து அங்க‌ம் தொட‌ங்கிய‌து.

எழுத்தாள‌ர் கோ.முனியான்டி அவ‌ர்க‌ளால் அம‌ர‌ர்.எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் அவ‌ர்க‌ளுக்கு அஞ்ச‌லி செலுத்த‌ப்ப‌ட்ட‌து.29.09.09 எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னின் நினைவுநாள் என்ப‌து அப்போதுதான் ப‌ல‌ருக்கும் தெரிந்த‌தும் ம‌லேசியாவில் புத்தில‌க்கிய‌ம் வ‌ள‌ர‌ வேண்டும் என‌ ஆவ‌ல் கொண்டு செய‌ல்ப‌ட்ட‌ அவ‌ரின் நினைவு நாளில் ‘க‌லை இல‌க்கிய‌ விழா’ ந‌டைப்பெற்ற‌து த‌ற்செய‌லான‌ இன்ப‌ம்.

ம‌.ந‌வீனின்க‌விதை தொகுதியான‌ ‘ச‌ர்வ‌ம் ப்ர‌ம்மாஸ்மி’ புத்த‌க‌த்தை ஆதி.இராஜ‌குமார‌ன் அவ‌ர்க‌ள் வெளியிட‌ ம‌.ந‌வீன் பெற்றோர்க‌ள் பெற்றுக்கொண்ட‌ன‌ர். இபா.அ.சிவ‌த்தின் மொழிப்பெய‌ர்ப்புக் க‌விதையான‌ ‘பின்ன‌ர் அப்ப‌ற‌வை மீண்டும் திரும்பிய‌து’ நூலை எழுத்தாள‌ர் கோ.முனியான்டிவெளியிட‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ம‌திய‌ழ‌க‌ன் பெற்றுக்கொண்டார். இமஹாத்ம‌னின் சிறுக‌தையான‌ ‘ம‌ஹாத்ம‌ன் சிறுக‌தைக‌ள்’ நூலினை எழுத்தாளர் சீ.முத்துசாமி வெளியிட‌ ம‌ஹாத்ம‌னின் தாயார் பெற்றுக் கொண்டார். தொட‌ர்ந்து நூல் திற‌னாய்வு ந‌டைப்பெற்ற‌து. ம‌.ந‌வீனின் நூலை பா.அ.சிவ‌மும் மாஹாத்ம‌னின் நூலை சிவா பெரிய‌ண்ண‌னும் சிவ‌த்தின் நூலை சீ.அருணும் முறையே ஆய்வு செய்த‌ன‌ர். அவ்வ‌ம‌ர்வில் சிங்கை இள‌ங்கோவ‌னின் உரையும் இட‌ம்பெற்ற‌து. அதிகார‌த்துக்கு முன் இல‌க்கிய‌வாதி அடிமையாக‌க் கூடாது என்ப‌திலிருந்து அவ‌ருக்கே உரிய‌ தீவிர‌த்துட‌ன் உரையை கூர்மைப்ப‌டுத்துனார்.

நிக‌ழ்வின் இடைவெளியாக‌ மீண்டும் அரை ம‌ணிநேர‌ம் தேநீருக்காக‌ ஒதுக்க‌ப்ப‌ட்டு நான்காம் அங்க‌ம் த‌யாரான‌து. 

அடுத்த‌ அம‌ர்வில் ‘வ‌ல்லின‌ம்’காலாண்டித‌ழ் மாத‌ இத‌ழாக‌ அக‌ப்ப‌க்க‌மாக‌ வெளியீடு க‌ண்ட‌து. வ‌ழ‌க்க‌றிஞ‌ரும் ச‌மூக‌ அக்க‌றை மிகுந்த‌வ‌ருமான‌ ப‌சுப‌தி அவ‌ர்க‌ள் ச‌மூக‌ விழிப்புண‌ர்வு மிக்க‌த் த‌ம‌து உரைக்குப்பின் அக‌ப்ப‌க்க‌த்தை வெளியீடு செய்தார். http://vallinam.com.my/ எனும் முக‌வ‌ரியில் இய‌ங்கும் வ‌ல்லின‌ம் இணைய‌ இத‌ழ் இனி மாத‌ம் தோறும் புதுப்பிக்க‌ப்ப‌டும் என‌ அறிவிக்க‌ப்ப‌து. 

இறுதி அங்க‌மாக‌ சிங்கை இள‌ங்கோவ‌னின் ‘மிருக‌ம்’ நாட‌க‌ம் ஒளித்திரைவ‌ழியாக‌ அர‌ங்கேற்ற‌ம் க‌ண்ட‌து.சிங்க‌ப்பூருக்கு வ‌ந்து சேரும் த‌மிழ‌க‌த் தொழிலாளிக‌ளால் சிங்கைவாசிக‌ள் குறிப்பாக‌த் த‌மிழ‌ர்க‌ள் அடையும் பாதிப்புகளை அது எடுத்து இய‌ம்பிய‌து. காத்திர‌மான‌ அந்நாட‌க‌த்தால் ப‌ல‌ர் அதிர்ச்சிக்குள்ளானார்க‌ள். சில‌ர் நாட‌க‌த்தை நிறுத்தும்ப‌டியும் கூச்ச‌லிட்ட‌ன‌ர். ஒன்ற‌ரை ம‌ணி நேர‌ நாட‌க‌மான‌ ‘மிருக‌ம்’ நிறைவு க‌ண்ட‌தோடு நிக‌ழ்வும் முடிவுற்ற‌து சில‌ ப‌த‌ற்ற‌ங்க‌ளோடும்… சில‌ அதிர்ச்சிக‌ளோடும்… புத்துண‌ர்வோடும்.

‘மரணத்தின் வாசனை’, ‘பலி ஆடு’ புத்தக வெளியீடுகள்

ஈழத்தின் அறியப்பட்ட கவிஞரும் விமர்சகருமான கருணாகரனின் கவிதைகள் மற்றும் த.அகிலனின் மரணத்தின் வாசனை ஆகிய நூல்களின் வெளியீடு வெள்ளிக்கிழமை கனடா – ஸ்காபரோ சிவிக் சென்ரரில் மாலை 6 இலிருந்து 9 மணி வரை இடம்பெற இருக்கிறது. கருணாகரனின் தொகுதி போர் தொடங்க முன் வன்னியுள்ளிருந்து நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும்.Book_Launch_28Aug09

இலக்கியவாதி – அரசியல்வாதி – அறிவுஜீவி : யமுனா ராஜேந்திரன்

…எழுத்தாளனுடைய வாழ்க்கை என்பது அதி பலவீனமானது. அநேகமாக அம்மணமான நடவடிக்கை. அதற்காக நாம் அழுது கொண்டிருக்கத் தேவையில்லை. எழுத்தாளன் தனது தேர்வை மேற்கொள்கிறான். அதில் அவன் உறுதியாக நிற்கிறான். நீங்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் வீசம் காற்றுக்கும் திறந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். சில திசைக் காற்று கடுங்குளிராகத்தான் இருக்கும். உங்கள் விருப்பப்படிதான் நீங்கள் வெளியே வந்திருக்கிறீர்கள். நீங்கள் இடர்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். உங்களுக்குத் தங்குமிடமில்லை. பாதுகாப்பில்லை – நீங்கள் பொய் சொன்னால் ஒழிய – நிஜத்தில் நீங்கள்தான் உமது சொந்தப் பாதுகாப்பைக் கட்டமைத்துக் கொள்கிறீர்கள், இப்படியும் இதனைச் சொல்லலாம், நீங்கள் அரசியல்வாதியாக ஆகிறீர்கள்…

நாடகாசிரியர் ஹெரால்ட் பின்ட்டர்
நோபல் பரிசு உரை

…பாசிச இலங்கை அரசை ஒரு அப்பாவி மூன்றாம் உலக அரசாக சர்வதேச சமூகம் பார்க்கிற பார்வையில் மாற்றம் வந்தால் மட்டுமே இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் பேசப்படும்….புலிகளே அழிக்கப்பட்ட பிறகு இனி என்ன பேசி என்ன செய்ய என்கிற மனநிலைக்குச் சென்றுவிடாமல் தமிழகத்தில் உள்ள புலிகள் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒரே குரலில் உடனடியாகப் பேசத்துவங்க வேண்டும். இன்றுவரை இலங்கையில் ஆட்சியிலிருந்த எந்த அரசும் தமிழ் மக்களுக்காக உருப்படியான எந்த அரசியல் நடவடிக்கையும் ஒரு திட்டமாகக் கூட முன்வைக்கவில்லை என்பதைக் கணக்கில் கொண்டு நாம் குரல் எழுப்ப வேண்டும்…

எழுத்தாளர் ச. தமிழ்ச் செல்வன்
துப்பாக்கிகள் அடங்கியிருக்கும் இப்போதேனும்

1

சாருவும் ஜெயமோகனும் ஈழப் பிரச்சினை குறித்து, அரசியல் மற்றும் கலாச்சாரம் என முன்பாக ஏதும் எழுதியிருக்கிறார்களா?

சாரு இரண்டு மாஸ்டர் பீஸ்கள் எழுதியிருக்கிறார். முதலாவது மாஸ்டர் பீஸ் : அவருடைய சிறுகதையான ‘உன்னத சங்கீதம்’. இரண்டாவது மாஸ்டர் பீஸ் : தமிழகச் சஞ்சிகையில் வரமுடியாத அளவு புரட்சித்தன்மை கொண்ட(சாருவின் இணையத்தில் வந்திருக்கிற) கலாகௌமுதிக் கட்டுரை. கலாகௌமுதிக் கட்டுரையை விடவும் கடுமையான ஈழத்தமிழர் குறித்த கட்டுரைகளை தமிழகத்தில் உயிர்மையும், காலச்சுவடும் நெஞ்சுரத்துடன் வெளியிட்டிருக்கிறது. எந்தவொரு மதிமுக, திமுக பத்திரிக்கையிலும் வந்திருக்கக் கூடிய கட்டுரைதான் சாருவின் கலாகௌமுதிக் கட்டுரை. கோரிக் கொள்கிற மாதிரியான அப்படியான எந்தக் கலகப் பண்பும் அந்தக் கட்டுரையில் இல்லை. சாருவின் முதலாவது மாஸ்டார் பீஸான உன்னத சங்கீதத்தில் சாரு தெரிவிக்கும் ஈழப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணி அவரது ஈழம் குறித்த, குறிப்பான அறிவுக்கு ஒரு சான்று : இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப் படையினர் இலங்கைச் சிங்களப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததால் வெகுண்ட சிங்கள இளைஞன் ஒருவன், தமிழர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராட சிங்கள ராணுவத்தில் சேர்ந்து தமிழர்களைக் கொல்கிறான். ஈழப் போராட்ட வரலாறு பற்றிய நூற்றுக்கணக்கான தமிழ்-சிங்கள-ஆங்கில நூல்கள் எதிலும் காணக்கிடைக்காத சாருவின் நுண்விவர வரலாறு இது.

சாருவின் ஈழப் பிரச்சினை பற்றிய ‘அறிவு’ என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது.

ஜெயமோகன் அவ்வப்போது, திண்ணை, காலம், ஜெமோ வலைத்தளம் என எழுதிய ஈழ இலக்கியவாதிகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு ‘எனிஇன்டியன்’ பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. அப்புறமாக ஈழத்தமிழர்களின் தமிழகத் தமிழர்கள் குறித்த பார்வையெனத் தான் கற்பித்துக் கொண்டது குறித்து, தனது அவுஸ்திரேலியப் பயணத்தை முன்வைத்து ஜெமோ ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ நாவல் குறித்த பதிவுகள் வலைத்தள விமர்சனம் ஈழத்தின் விடுதலைப்போராட்டம், அதனது ஆயுதப் போராட்டம் குறித்து முன்கூட்டிய ஜெயமோகனின் மனப்போக்கை முன்வைத்த ஆவணங்களாகும். மனிதனின் இயல்பான மிருகத்தனத்துக்கும் ஆயுதப் போராட்டத்தின் வன்முறைக்கும் பூடகமாக முடிச்சுப்போடப்பட்ட ஒரு விமர்சன மொழியை கெரில்லா நாவல் விமர்சனத்தில் ஜெமோ பாவித்திருப்பதை எம்மால் உணரமுடியும். ஈழத்தமிழர்களுக்கு உலக இலக்கிய, இந்திய இலக்கிய வாசிப்பில்லை என எழுதினார். கவிஞர் மு.புஷ்பராஜன் ‘ஈழத்தமிழர்கள் விரல்சூப்பிக் கொண்டிருக்கவில்லை’ எனக் காட்டமாகப் பதில் எழுதியதன் பின் ஜெமோ வாயைத் திறக்கவில்லை. தமிழகத் தேர்தலை முன்வைத்து அவர் எழுதிய கட்டுரையில், பேரினவாதத்தினால் ஈழத்தமிழர் மீதாகச் சுமத்தப்பட்ட படுகொலைகள் மற்றும் வன்முறைகளை, இந்திய தமிழக ஆட்சியாளர்களின் கொள்கைகளால் விளைந்த தமிழகத் தமிழர்களின் வறுமையுடனும் பட்டினி வாழ்வுடனும் ஒப்பிட்டு எழுதுவது ஜெமோவின் நியாமற்ற செயல்..

குறிப்பிட்ட மாணிக்கப் பரல்கள் தவிர சாருவோ ஜெமோவோ ஈழத்தமிழர்களின் அவலவாழ்வும் போராட்டமும் குறித்து எதுவும் எழுதியவர்கள் இல்லை.

2

ஈழ வன்முறைகள் பற்றி எழுதும்போது, கியூபப் பிரஜைகளைச் சுதந்திரமாகவிட்டால் தொண்ணூறு சதமானவர்கள் கியூபாவை விட்டு ஓடிப்போய்விடுவார்கள் என தடாலடியாக எழுதுகிறார் சாரு. குவேராவை காந்தியுடன் ஒப்பிட முடியாது எனும் ஜெமோ, குவேரா தனிமனித மூப்புக்கு கொண்ட ஒரு சாகசவாதி என எழுதுகிறார். சான்றுக்கு குவேரா பற்றிய காஸ்டநாடாவின் நூலை நல்ல நூல் என்கிறார். முன்பாகவே அ.மார்க்சும் அந்தப் புத்தகம் நல்ல புத்தகம் எனச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.

பகத்சிங் விடயத்திலும் காந்தியை நிலைநாட்ட அ.மார்க்சின் புத்தகம் ஜெமோவுக்கு உதவுகிறது. ஆச்சரியப்படத்தக்க விதத்திலான ஒற்றுமை என்ன வென்றால், பகத்சிங் மற்றும் சேகுவரா திருவுருக்களைக் ‘கட்டு’ உடைத்துவிடுவதென்று அ.மார்க்சும் புறப்பட்டிருக்கிறார். ஜெமோவும் புறப்பட்டிருக்கிறார். இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில் ஜெமோ, அமா இருவரும் பின்நவீனத்துவம் பேசுபவர்கள்தான். வித்தியாசம், வலது மற்றும் இடது பின்நவீனத்துவத்திற்கு உள்ள வித்தியாசம்.

கியூபாவிலிருந்து மியாமிக்கு ஓடிப்போனவர்கள் கியூபப் புரட்சியின் கருத்துருவம் பிடிக்காமல் ஓடிப்போனவர்கள். பாடிஸ்டா அமெரிக்காவுக்கு ஓடிப்போய் நாடுகடந்த கியூபா அரசும் கூட அமைத்தார். பிறிதொரு வகையில் கியூபாவிலிருந்து விலகுகுகிற கியூப இளைய தலைமுறையினர் கலாச்சாரக் காரணங்களுக்காக, இலக்கியம் மற்றும் இசை குறித்த கியூபாவின் கட்டுப்பாடுகளை மீறி ஓடிப் போகிறார்கள். இப்போது நிலைமை வேறு. முன்னொரு காலத்தில் கியூபாவில் தடைசெய்யப்பட்டிருந்த மரியா வர்கஸ் லோசாவின் நாவல்கள் உடனடியில் இப்போது வெளியாகிறது. இசை குறித்த எந்தக் கட்டுப்பாடுகளும் தற்போது இல்லை. கியூப இசைச் சாதனைக்கு சான்றாக ‘புனாவிஸ்டா இன்டர்நேசனல்‘ விவரணப்படத்தை சாருவுக்குப் பரிந்துரைக்கிறேன். கியூபாவில் சிறுதொழில் முகவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். சிறுமுதலாளிகள் தோன்றுகிறார்கள். வேற்றுநாட்டவர்கள் புதிதாகக் கட்டப்படும் மாளிகைகளில் கியூபாவில் வாங்கிக் குடியேறலாம். இப்படி நிறைய மாற்றங்கள் அங்கு நடந்து வருகிறது.

முன்னொருபோது இலத்தீனமெரிக்க நாடுகளிடமிருந்து தனிமைப்பட்டிருந்த கியூபா இன்று சகல நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கக் கண்டத்தில் தற்போது அந்நியப்பட்டிருக்கிற ஒரே நாடு வடஅமெரிக்காதான். ‘தவறு எங்கள் பக்கமும் இருக்கலாம்‘ என கிலாரி பில்கிளின்டன் பேசுகிற காலம் இது. கியூபக் கலைஞர்களின் சுதந்திரத்தையும் அரசியல் சுதந்திரத்தையும் முன்னிட்டு இரண்டு அமெரிக்கக் கலைஞர்களின் ஆக்கங்களைச் சாருவுக்குப் பரிந்துரைக்கிறேன். ‘அபோகலிப்ஸ் நவ்‘ திரைப்பட இயக்குனர் பிரான்ஸிஸ் கொப்போலா, கியூபாவில் கலைஞனின் சுதந்திரம் குறித்து எழுதியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கியூபா சென்ற ‘பிளட்டுன்’ திரைப்பட இயக்குனர் ஆலிவர் ஸ்டோன், ஃபிடலைச் சந்தித்து இரண்டு விவரணப்படங்கள் தந்திருக்கிறார். மூன்றாமுலக மக்களும் கியூப மக்களும் ஃபிடலை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை அந்த விவரணப்படத்தில் சொல்கிறார்கள். ‘தங்களுக்கென அடையாளம் தந்த தலைவன்’ ஃபிடல் என கரீபிய ஆப்ரிக்க முதியவர் சொல்கிறார். இது கியூபாவின் சமீபத்திய அரசியல் கலாச்சாரச் சித்திரம்

கியூபாவின் அனைவருக்குமான கல்வி மற்றும் மருத்துவம் சம்பந்தமான சாதனைகளில் உலகில் கியூபாவுடன் ஒப்பிட எந்த நாடும் இல்லை. இது கியூபா குறித்த பிறிதொரு பரிமாணம். இதே கியூபாவில் மாற்றுக் கருத்தாளர்கள் மீதான அரசியல் ஒடுக்குமுறை ஒப்பீட்டளவில் நிலவி வருகிறது. ஓற்றைக் கட்சி இருக்கிறது. வீட்டுவசதிப் பிரச்சினை இருக்கிறது. கியூபாவுக்கு தற்போது பயணம் செய்யவும் மியாமியிலிருந்து கியூபஉறவுகளுக்கு பணம்தரவும் ஆன தடையை ஒபாமபா அரசு தளர்த்தியிருக்கிறது. இலத்தீனமெரிக்காவில் முன்னாள் கொரில்லாக்கள் அனைவரும் தேர்தல் அரசியலைத் தேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இலத்தீன் அமெரிக்கர்கள் என்ற தேசியப் பெருமிதம் அவர்களுக்கிடையில் வளர்ந்து வருபதால்தான் அமெரிக்கா இந்தப் புவிப்பரப்பில் தனிமைப்பட்டிருக்கிறது. இலத்தீனமெரிக்காவில் நிகரகுவா, பொலிவியா, எல்ஸல்வடோர் என வறிய நாடுகளின் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களிடம் தமது சின்னஞ்சிறு தேசியம் குறித்த குறைகள் இருக்கிறது. அதுபோல பெருமிதமும் இருக்கிறது. மெக்ஸிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்கிற மக்கள் அவ்வாறு ஆவதற்கான காரணம் பொருள்தேட்டம்.

சாரு உளறுகிறமாதிரி இருந்திருந்தால் கியூபா உள்ளிட்ட இலத்தீனமெரிக்க நாடுகளில் இருந்து தொண்ணூறு சதவீதமானவர்கள் இலத்தீன் அமெரிக்காவை விட்டே ஓடியிருக்க வேண்டும். முன்பாக இந்த நாடுகளிலிருந்து வேறு நாடுகளுக்கு ஓடியவர்கள் அமெரிக்க ஆதரவு ராணுவக் கொடுங்கோன்மைக்கு எதிராகவே வெளிநாடுகளுக்கு ஓடினார்கள். மறுதலையாக கியூபாவிலிருந்து ஓடியவர்கள், பெரும்பாலானவர்களாக மயாமியில் வாழ்கிறவர்கள். பாடிஸ்டாவின் அரசியலை ஆதரித்த காரணங்களுக்காக ஓடினார்கள். இந்த அரசியல் யதாரத்தங்கள் ஏதும் அறியாத முட்டாளாக ஈழப்பிரச்சினையும் ஆயுதவிடுதலைப் போராட்டமும் குறித்துப் பேசுகிற வேளையில் கியூபாவின் மீது பாய்கிற சந்தர்ப்பவாதியாக சாரு இருக்கிறார்.

அமாவும் ஜெமோவும் பாராட்டுகிற கஸ்டநாடா இலத்தீனமெரிக்காவில் அமெரிக்காவின் அரசியல் செல்வாக்கை விரும்புகிறவர். சாவேசினதும் கியூப அரசினதும் எதிர்மறை விமர்சகர். சே கியூபாவை விட்டுப் போனதற்கு பிடல்-சேகுவேரா முரண்பாடே காரணம் என்பதை முன்வைப்பவர் இவர். இந்த வாதத்தை அமாவும் முன்வைக்கிறார் ஜெமோவும் முன்வைக்கிறார். இவர்கள் இருவருடையதும் வாசிப்பு எனக்கு மெய்சிலிர்க்கிறது. ஃபிடல் ஒரு அரசுத்தலைவர். ஓரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியவர். சேகுவேரா ஒரு மனோரதியமான புரட்சியாளர். முதலும் முடிவுமாக சேகுவேரா சர்வதேசியவாதி. ஃபிடலின் ஒப்புதலின்படிதான் சேகுவேரா ஆப்ரிக்கா சென்றார். அங்கிருந்து மீண்டு மாறுவேடத்தில் பொலிவியா சென்றார். எந்த இரண்டு புரட்சியாளர்களும் போலவே அவர்களுக்கிடையிலும் அரசியல் முரண்பாடுகள் இருந்தன. சோவியத் யூனியன் மற்றும் சீனா தொடர்பாக இருவருக்கும் முரண்பாடு இருந்தது. சோவியத் யூனியனின் அரசியல் பொருளியல் அணுகுமுறைகள் குறித்து முதலில் அதிருப்தி வெளியிட்ட ஃபிடல், பிற்பாடு கியூபாவின் அன்றைய நலன்கருதி சோவியத் யூனியனை ஆதரித்தார். சேகுவேரா அவ்வாறு இருக்கவில்லை.

சேகுவேரா மரணமுற்று நாற்பதாவது ஆண்டு நிறைவையொட்டி நிறைய புதியநூல்களும் விவரணப்படங்களும் வந்திருக்கின்றன. அமாவும் ஜெமோவும் இவ்வகையில் செய்வது பச்சை அயோக்கியத்தனம். பொலிவியாவில் அல்லாவிட்டால் கியூபாவிலேயே சேகுவேரா கொல்லப்பட்டிருப்பார் என எழுதுகிற ஜெமோ, இதற்கான ஆதாரம் என்ன என்பதை முன்வைக்கவேண்டும். வரலாறு இந்தக் கழிசடைத் தனத்திற்கு எதிராகத்தான் இருக்கிறது. சேகுவேராவின் மனைவியும் மகளும் மகனும் கியூபாவிலிருந்துதான் சேகுவேராவின் தொகுப்பு நூல்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

சோடர்பர்க்கின் சேகுவேரா குறித்த ஐந்து மணிநேரத் திரைப்படத்தின் 20 பிரதிகளை சோடர்பரக் ஃபிடலின் கியூபாவுக்குத்தான் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார்.

3

எஸ்.ராமகிருஷ்ணன் முன்னுணர்வுடன் ஈழப் பிரச்சினை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். எஸ்ராவின் நேர்மை என்னவென்றால் பொத்தாம் பொதுவாக எழுதிச் செல்வது. கீழ் வரும் நான்கு புள்ளிகளில் எஸ்ரா யாரைக் குறிப்பாகச் சொல்லுகிறார் என்று ஒரு தெளிவில்லை.

எஸ்ராவின் முதல் மேற்கோள் இது : நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே முடிவு செய்கிறான் என்று சொன்ன புரட்சி கருத்துகளை நேற்று வரை கொண்டாடி வந்த பலரும் இன்று வன்முறை பாதை தவறானது. வன்முறையில்லாமல் நாம் அமைதியாக போராடி வெற்றி பெற வேண்டும் என்ற யோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எஸ்ரா, யார் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று நேரடியாகவும் தெளிவாகவும் சொல்லுங்கள்.

எஸ்ராவின் இரண்டாவது மேற்கோள் இது : ஆயிரமாயிரம் மக்கள் கொட்டடிகளில் நிராதரவாக அடைக்கபட்டிருக்கிறார்கள். வதை முகாம் போல அகதிமுகாம்கள் உள்ளன என்ற கண்கூடான உண்மைகள் வெளிவந்த பிறகும் அதைபற்றிய எவ்விதமான கலக்கமும் இன்றி இனி ஈழம் செய்ய வேண்டியது என்னவென்று இலவச புத்திமதிகளை ஈழத்திற்கு வாரிவழங்கும் அறிவுவேசைத்தனம் வன்முறையில்லையா?

இந்த அறிவுவேசைத்தனத்தை, வன்முறை-அகிம்சை எனும் எதிர்மையில் செய்து கொண்டிருப்பது யார்? அது சாருவும் ஜெமோவும் அல்லவா? பெயரைக் குறிப்பிடாமல் எதற்கு குசுகுசுத்துக் கும்மியடித்துக் கொண்டிருக்கறீர்கள் எஸ்ரா?

இது எஸ்ராவின் மூன்றாவது மேற்கோள் : பிரபாகரன் உயிரோடு இல்லை. அவர் கொல்லபட்டுவிட்டார் என்ற செய்தியை (வதந்தியை) எதற்காக இத்தனை உற்சாகமாக ஊடகங்கள் கொண்டாடுகின்றன. என்ன வெறுப்பு அது. ஈழமக்களின் கடைசி யுத்தம் முறியடிக்கபட்டுவிட்டது என்பதை பொதுவெளிகள் ஏன் களிப்போடு பேசி கதைக்கின்றன.

செய்தி, அப்புறமாகப் பிராக்கெட்டில் வதந்தி என எழுதுகிறீர்கள். செய்தியா வதந்தியா நிஜமா? புனைவுக்கும் நிஜத்துக்கும் பிம்பத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியை மயங்கவைப்பது இலக்கியத்துக் பொருந்தும். அரசியலில் இதற்கு அர்த்தமில்லை.

இரு எஸ்ராவின் கடைசி மேற்கோள் : நான் ஆழ்ந்த அரசியல் அறிவு கொண்டவன் இல்லை. ஈழப்போராட்டத்தின் வரலாற்றை முழுமையாக கற்று தேர்ந்து சரி தவறுகளை நிறுத்துப் பார்த்து எனது நிலைப்பாட்டை எடுப்பவனுமில்லை.

அறிவும் ஈடுபாடும் எப்படி வரும்? தேடலும் படிப்பும் இருந்தால்தான் வரும். அக்கறை இருந்தால்தான் வரும்.

4

அரசியலில் தனக்கு ஈடுபாடோ, நிலைபாடுகள் எடுக்கிற தேடலோ தன்னிடம் இல்லை என்கிறார் எஸ்ரா. இலக்கியம் போல திரைப்படத்திலும் அரசியலிலும் தனக்கு ஈடுபாடு இல்லை என்கிறார் ஜெயமோகன். தனக்கு நுண்ணுரசியலில் ஈடுபாடு இல்லை என்றும் அவர் சொல்கிறார். தான் அடிப்படையில் இலக்கியவாதி, அதை விட்டுவிட்டு தான் அரசியல் குறித்து எழுத வேண்டியிருக்கிறது என்கிறார் சாருநிவேதிதா.

அரசியல் குறித்த முன்னுரிமை வழங்காத அவர்களது தேர்வுகள் குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது. அதைப் போலவே, திரைப்படத்திலும் அரசியலிலும் ஈடுபாடு காட்டி, எனக்கு இலக்கியத்தில் அவ்வளவு ஈடுபாடு இல்லை எனத் தேர்கிற ஒருவரது சுதந்திரத்திலும் எவரும் தலையிட முடியாது.

பிரச்சினை எங்கு வருகிறது?

இலக்கியத்தில் அக்கறையோ ஈடுபாடோ இல்லை எனப் பிரகடனப்படுத்தி விட்டு, தமது உன்னதப் படைப்புக்கள் என்று கருதுகிறவைகள் குறித்து ஒருவர் விமர்சனத்தை முன்வைக்கும் போது, எஸ்ரா சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்றவர்களின் எதிர்விணை எத்தகையதாக இருக்கும்? இலக்கியம் குறித்து ஆணித்தரமாக கருத்துக்கள் முன்வைக்கிற ஒருவர், இலக்கியத்தின் நுண்விவரங்களிலோ, குறைந்தபட்சம் இலக்கிய வாசிப்பிலோ அல்லது தேடலிலோ தனக்கு அக்கறையில்லை எனத் துவங்கினால் இவர்களது எதிர்விணைகள் எவ்வாறாக இருக்கும்?

இலக்கியத்தில் இவர்கள் தேடலையும் நுண்விவரங்களையும் வைத்து, தமது படைப்புக்களைத் தற்பாதுகாப்பதோடு, பிறரது படைப்பையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். விஷ்ணுபுரம் குறித்த அல்லது பின்தொடரும் நிழல் குறித்த ஜெயமோகனின் எதிர்விணைகள், சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் குறித்த எஸ்.ராவின் கட்டுரை, தனது படைப்புக்கள் குறித்த ஜெயமோகனின் கருத்துக்களுக்கு சாருநிவேதிதாவின் எதிர்விணைகள் என இவர்களுக்கிடையில் எப்படிப் பொறிபறந்தது என யோசித்துப் பாருங்கள். நான் சொல்வது விளங்கும்.
இலட்சக் கணக்கிலான மக்கள் முள்கம்பி வேலிக்குள் நிற்கிறார்கள். பத்தாயிரக் கணக்கில் இனக் கொலையினால் இறந்து போயிருக்கிறார்கள். முழு உலகினதும் வல்லரசுகள் அந்த மக்களுக்கு எதிராக நிற்கிறது.

இதில் அக்கறையோ, ஈடுபாடோ, நுண்விவரங்களோ குறித்து அறியாமல், எப்படி அய்யன்மீர், நீங்கள் எழுந்த மேனியாக எழுத முடியும் என்று கேட்பது எப்படித் தவறாகும்?

5

சில நிலைபாடுகள் தமிழகச் சூழலில் மட்டும்தான் எழு முடியும் என்று தோன்றுகிறது. இலக்கிய உணர்வு இல்லாமல் எழுத்தாளர்கள் இருக்க முடியுமா? இந்தக் குறிப்பிட்ட கேள்வி, எழுத்தாளன் என்பவன் யார், இலக்கிய உணர்வு என்பது யாது, இலக்கிய ஈடுபாட்டின் தன்மைகள் எத்தகையது என விரிய வேண்டும் என நான் கருதுகிறேன்.

இலக்கிய ஈடுபாட்டின் தன்மைகள் அவரவரது தேர்வுகளும் ஈடுபாடும் சம்பந்தப்பட்டது. இதனை இரண்டு விதங்களில் முன் வைக்கலாம். எழுத்தாளன் என்பவன் இலக்கிய உணர்வு கொண்டிருக்க வேண்டும் எனக் கட்டாயமில்லை. எழுத்தாளன்; எனும் பொதுப் பெயருக்கும் இலக்கியவாதி என்கிற தனித்த ஆளுமைக்கும் வித்தியாசங்கள் இருக்கிறது.

அரசியல், பொருளியல், வணகவியல், குற்றவியல், சமூகவியல், விஞ்ஞானம் போன்ற எத்தனையோ அறிவுத் துறைப் போக்குகள் இருக்கின்றன. இவைகள் குறித்து மட்டுமே தனித்து எழுதுகிறவர்கள் தத்தமது துறைகளில் ஈடுபாடும் அக்கறையும் நுண்விரங்களில் தேடலும் கொண்ட எழுதுபவர்கள். இவர்கள் இலக்கியம் பற்றி எழுதும் போது இலக்கியத்தில் ஈடுபாடும் தேடலும் நுண்விவரங்களில் அக்கறையும் இருந்தால் தான் எழுத வேண்டும். அல்லவெனில் தத்தமது துறைகளுடன் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இலக்கியவாதிகள் பிற துறைகளில் ஈடுபாடும் அக்கறையும் தேடலும் இருந்தால்தான் எழுத வேண்டும். அல்லவெனில் அது குறித்து எழுதுவதனை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு எழுத்தாளனின், அவன் எத்துறை சார்ந்த எழுத்தாளன் ஆயினும் இலக்கிய உணர்வுகளையும், அவனது தேர்வுகளையும் அவனது முன்னுரிமைகளும், காலப் பரிமாணம் குறித்த அவனது திட்டங்களையும் சார்ந்துதான் இயங்க முடியும். குறிப்பாகச் சொல்வதானால், தமிழில் இன்று குவிந்து கொண்டிருக்கிற இலக்கியப் படைப்புக்களை முழுமையிலும் ஒருவன் வாசித்து முடித்து அபிப்பிராயம் சொல்ல அவனது வாழ்காலம் போதாது. வாழ்வு குறித்த ஒருவனது தரிசனத்தின் அளவில்தான் வாசிப்பு குறித்த அவனது தேர்வுகளும் அமைகிறது.

என் அனுபவத்திலிருந்து பேசுவதுதான் இங்கு பொருத்தமாக இருக்கும்.
அடிப்படையில் நான் என்னை ஒரு வாசகன் என்றே கருதிக்கொள்கிறேன். எழுத்து என்பது எனது வாசிப்பையும் எனது அனுபவங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிற ஒரு வழிமுறையாகவே நான் தேர்கிறேன். மனிதவிமோசனம் என்கிற எனது தந்தை விதைத்த அந்த உந்துதலே இன்றளவிலும் என்னைச் செலுத்துகிறது. இலக்கியத்தையும் அரசியலையும் அதனது வலிமை கருதி என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அரசியல் என்பதைக் கட்சி சார்ந்த அரசியல் என நான் புரிந்து கொள்ளவில்லை. தத்துவம் அதனது பகுதி என நான் புரிந்து கொண்டிருக்கிறேன். தத்துவம் இலக்கியத்தினதும் பகுதி எனவும் நான் புரிந்திருக்கிறேன். அரசியலுக்கும் இலக்கியத்திற்குமான உறவு நேரடியிலானது இல்லை எனினும், அறுதிப் பார்வையில் எந்தப் படைப்பும் ஒரு அரசியலைத் தனது உள்ளுறையாகக் கொண்டிருக்கிறது எனவும் நான் கருதுகிறேன். எழுத்து சார்ந்து இலக்கியத்திலிருந்து அரசியலுக்கும், அரசியலிலிருந்து இலக்கியத்திற்குமாகவே நான் அலைந்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு முன்னோடி ஆளுமைகள் தமிழில் உண்டு, ஞானி, எஸ்.வி.ராஜதுரை, ஆதி, எஸ்.என்.நாகராசன், எல்.ஜி.கீதானந்தன், இன்குலாப், என இருக்கிறார்கள். ஞானி, எஸ்.வி.ஆர். போன்றவர்களது முதன்மை ஈடுபாடு கோட்பாடும் அரசியலும் தான் எனினும் அவர்கள் சில தருணங்களில் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். எஸ்.வி.ஆர். சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஞானி கல்லிகை என குறுங்காவியம் எழுதியிருக்கிறார். இன்குலாப்பினால் அரசியலையும் அவரது கவிதைகளையும் பிரிக்க முடியாது

எனது வாலிப நாட்களில் நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன். மனுஷ்யபுத்திரனை அப்படித்தான் எனக்குத் தெரியும். பாடல்கள் எழுதியிருக்கிறேன். பிற்பாடு பல பத்தாண்டுகளின் பின் ‘அம்மா’ இதழ் மனோ கேட்டுக்கொண்டதற்காக சிறுகதையும் எழுத முயன்றிருக்கிறேன். மறுபடியும் கவிதைகள் எழுதியிருக்கிறேன். அதனது தொடர்ச்சியான ஈடுபாட்டின் பகுதியாக இலத்தீனமெரிக்கக் கவிதைகள், குர்திஸ் கவிதைகள், மஹ்முத் தர்வீஷ் கவிதைகள் என தொகுப்புக்களையும் கொணர்ந்த வண்ணமே உள்ளேன். மேற்கத்திய நாவல்கள் குறித்தும் அறிமுகங்கள் எழுதுகிறேன். சமகாலத் தமிழ் இலக்கியம் நான் அதிகம் வாசிப்பதில்லை. காரணம் அது கீழானது எனக் கருதியதாக இல்லை. எனது வயதும் எனது முன்னுரிமைகளும் வேறுபட்டதுதான் காரணம்.

‘மேலதிகமாக ஒரு நாளும் கூட இல்லை, என விதிக்கப்பட்டதுதான் வாழ்வு’ என்கிறார் விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா.

ஐம்பது வயதின் பின் மரணம் என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது.

எஸ்ரா, ஜெமோ, சாரு உள்பட எழுத்துக்களை நான் தேர்ந்தெடுத்து வாசிக்கிறனேயல்லாது அவர்களை முழுக்க வாசிக்கிற நேரமோ உத்தேசமோ எனக்கு இல்லை. பாலமுருகனின் ‘சோழகர் தொட்டி’ மாதிரியான நாவல்கள் அல்லது ஜீவா பற்றி அவரோடு அதிகமும் பழகிய தா.பாண்டியனின் ‘ஜீவா நினைவுகள்’ எனக்கு முன்பாக இருக்குமானால், இவைகளது ஆதாரத்தன்மை கருதி, ஜெயமோகனது புனைவை விடவும், சுராவினது ஜீவா நினைவுகளை விடவும், இவைகளுக்கே நான் முன்னுரிமை தருகிறேன். பிற்பாடுதான் நான் ஜெமோவையும் சுராவையும் வாசிப்பேன்.

உலக அளவிலான இலக்கியங்களை நான் நிறைய வாசிக்கிறேன். தமிழுக்கு அவைகளை அறிமுகம் செய்ய வேண்டிய தேவைகள் அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன். மைய இலக்கியங்களை விடவும் விளிம்புநிலைக் குரல்களும், தமிழில் இதுவரை பதிவுபெறாத உலகக் குரல்களும் தான் எனக்கு முக்கியம். தாஸ்தயாவ்ஸ்க்கி குறித்து எழுதத் தமிழில் தொகை ஆட்கள் உண்டு. தாஸ்தயாவ்ஸ்க்கியையும் மீறிச் செல்கிற கஸான்டாஸ்கிசில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். இனக் கொலைக்கு உள்ளான ஜிப்ஸிகளின் படைப்புகளில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். தற்கொலை செய்து கொண்ட வால்ட்டர் பெஞ்ஜமின் வாழ்வில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம்.

ஈழப் பிரச்சினை. எனது இருபத்தி ஐந்து ஆண்டுகால வாழ்வோடு, இலக்கியம் அரசியல் திரைப்படம் எனது அக்கறைகளையும் தாண்டிய எனது அன்றாட வாழ்வோடு கலந்த பிரச்சினை. ஈழப் பிரச்சினையோடு, எனது வாழ்வோடு கலந்த எனது வாசிப்புடன் கலந்த ரித்விக் கடக், ஜான் ஆப்ரஹாம், தெரிதா, நெருதா, கிராம்ஸ்க்கி பற்றி, ‘வெறும்’ இலக்கியம் மட்டுமே அறிந்த இலக்கியவாதிகள் உளறிக் கொண்டிருக்கிறார்கள். இதனைப் பற்றி விமர்சிப்பதற்கு நான் இவர்களது படைப்புக்களைப் படித்துத் துறைபோக வேண்டுமா என்ன? இதனைப் பேசுவதற்கு இவர்களது இலக்கியப் படைப்புக்களைப் படிக்க வேண்டியது அவசியம் இல்லை என நான் நினைக்கிறேன்.

எதனைப் பற்றி நாம் பேசுகிறோமோ அது குறித்த வாசிப்புத்தான் முக்கியம்.
தெரிதா பற்றிப் பேசுகிறபோது தெரிதாவைப் படித்துவிட்டுத்தான் பேச வேண்டும். சொன்டாக் பற்றிப் பேசினால் சொன்டாக்கைப் படிக்க வேண்டும். மார்க்ஸ் பற்றிப் பேசினால் மார்க்சைப் படிக்க வேண்டும். கிராம்சி பற்றிப் பேசுவதானால் கிராம்சியைப் படிக்க வேண்டும். ஜெயமோகனது பின்தொடரும் நிழல் பற்றிப் பேச வேண்டுமானால் அதனைப் படிக்க வேண்டும். சாரு நிவேதிதாவின் உன்னத சங்கீதம் பற்றிப் பேச வேண்டுமானால் அதனைப் படிக்க வேண்டும்.

ஈழம் பற்றிப் பேசுவதானால் ஈழம் பற்றி எனக்கு அக்கறையும் ஈடுபாடும் படிப்பும் தேடலும் இருக்க வேண்டும். இல்லையெனில் அது பற்றிப் பேசக் கூடாது. இவைகளைப் பற்றிப் பேசுவதற்கு எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம், சே குவேரா, கியூபா, பிரபாகரன் பற்றிய ஞானம் தானேயொழிய, சாரு-ஜெமோ-எஸ்ரா போன்றோரின் மொத்த இலக்கியப் படைப்புக்கள் பற்றிய ஞானம் இல்லை.

இது ஒரு அறிவு ஒழுக்கம். இதனைத்தான் நான் வலியுறுத்துகிறேன்.

6

ஈழப் பிரச்சினையை முன்வைத்து ஜெமோ, சாரு போன்ற இலக்கியவாதிகள் அபிப்பிராயம் தெரிவித்ததனையடுத்து, தமிழ்நதி, ஈழத்தின் ஆயுதவிடுதலைப் போராட்டம் குறித்துக் கருத்துச் சொல்வதற்கான இருவரதும் தகைமைகள் குறித்து கேள்வி கேட்டிருந்தார். இருவரும் தமிழ்நதிக்கு ஏதும் எதிர்விணை செய்திருக்கவில்லை. மதுரை இலக்கியச் சந்திப்பில், பொதுவாக ஈழத்தமிழர்களின் துயர்களுக்கான தமிழக இலக்கியவாதிகளின் எதிர்விணை என்ன என்பதுதான் தமிழ்நதியின் கேள்வியாக இருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு நீங்கள் ஏன் ஆதரவு தரவில்லை என தமிழ்நதி கேட்டிருக்கவில்லை. மேடையில் அதற்கு எதிர்விணை செய்த ஆதவன் தீட்சண்யா தவிர்ந்த பிற எழுத்தாளர்கள் எவரும் தமிழ்நதிக்கு அரசியல்ரீதியிலான பதிலைச் சொல்லியிருக்கவில்லை. ஆதவன் தீட்சண்யா தமிழ்நதியின் கேள்வியை முழக்கவும் தன்னுடைய கட்சி சார்ந்த அரசியல் நிலைபாட்டில் இருந்துதான் அணுகினார்.

ஈழப் பிரச்சினை தொடர்பான ஆதவனது அரசியல் இருமுனைகள் கொண்டது. ஈழம் தொடர்பான மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் அவருடைய அரசியல். புகலிட புலி எதிர்ப்பாளர்களான ஷோபா சக்தி, சுசீந்திரன் போன்றவர்களால் தகவமைக்கப்பட்ட அரசியல் அவருடைய அரசியல். இருவரது நேர்முகத்தையும் ஆதவன் தனது புதுவிசையில் வெளியிட்டார். ஆதவன் தமிழக இலக்கியவாதி எனும் அடிப்படையில் தமிழ்நதியின் கேள்விகளை அணுகியிருக்கவில்லை. புகலிட புலி எதிர்ப்பாளர்களால் தகவமைக்கப்பட்ட அவரது கருத்துநிலையிலிருந்தே அவர் தமிழ்நதியை அணுகினார்.

இதற்கான காரணத்தையும் புகலிட நிகழ்வுகளை அறிந்தவர் அறிவர். கனடாவில் நடந்த பெண்கள் சந்திப்பில் புலிகளை விமர்சித்தவர்களுக்கும் தமிழ்நதிக்கும் இடையில், புலி எதிர்ப்பு-புலி ஆதரவு எனும் முனைகளிலிருந்து விவாதங்கள் நடந்திருந்தன. அந்தப் பெண்கள் சந்திப்பு தொடர்பாக தமிழ்நதி தனது விமர்சனங்களையும் பதிவு செய்திருக்கிறார். இவையனைத்தையும் ஆதவன் அறியாதவர் எனக் கொள்ளத் தேவையில்லை.

தமிழ்நதியைப் புலி ஆதரவாளராகக் கொண்டு, புலிகள் தலித்திய-மார்க்சிய விரோதிகள் எனக் கொண்டு, புகலிட புலி எதிர்ப்பாளர்களின் தமிழகக் குரலாகவே, தமிழ்நதிக்கு எதிரான ஆதவனது குரல் இருந்தது. இதனாலேயே பிற்பாடு இவர்களுக்கு இடையிலான விவாதத்தில் ஷோபா சக்தி பிரவேசிக்க வேண்டியிருந்தது.

எனக்கு ஆச்சர்யமூட்டக் கூடிய ஒரு விடயம் என்னவென்றால், ‘தமிழ்நதி ஜெயமோகனையும் சாருநிவேதிதாவையும் பிறாண்டி வைத்தார்’ என ஷோபா சக்தி எழுதுகிறார். சாருநிவேதிதா ஷோபா சக்தியைப் பொறுத்து சின்னக்கதையாடல்காரர். சாருநிவேதிதாவிடம் அவரது நேசத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஷோபா சக்திக்கும் ஜெயமோகனுக்கும் என்ன பொதுத்தன்மைகள் என்றே எனக்குப் புரியவில்லை. ஜெயமோகனைக் கடுமையான இந்துத்துவவாதி என ஆசான் அ.மார்க்ஸ் எழுதுகிறார். சுந்தர ராமசாமியை ‘வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக’ விமர்சிக்கும் ஷோபா சக்தி எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜெயமோகன் குறித்துக் கடுமையாக ஒரு சுடுசொல் சொல்வதில்லை.

கொரில்லாவுக்கு ஜெயமோகன் ‘பாசிடிவ்’ விமர்சனம் எழுதினார், அப்புறமாக இருவருக்கும் புலி எதிர்ப்பு. இது தவிர இவர்களை இணைக்கிற கண்ணிதான் என்ன?

சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ரா போன்றவர்களுக்கு இல்லாததொரு பரிமாணம் ஆதவண் தீட்சண்யா, ஷோபா சக்தி, தமிழ்நதி போன்றோருக்கு உண்டு. மூவரும் இலக்கியவாதிகள் என்ற பரிமாணத்தையும் தாண்டி ஈழம் குறித்து திட்டவட்டமான கருத்துக்கள் கொண்ட அரசியல்வாதிகள் என்ற பரிமாணம்தான் அது. இயல்பாகவே பின்மூவரதும் கருத்துக்களை அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியலில் இருந்துதான் அணுகமுடியும். இவர்களது இலக்கியத் தகுதிகள் இந்தப் பிரச்சினையை அணுகுவதற்கு எந்தவிதத்திலும் ஒருவருக்கு அவசியமில்லை.

இவர்கள் பேசுவது முழுமையாக ஈழ அரசியல். இதனை அரசியல் தளத்தில்தான் அணுக வேண்டும்.

ஆதவன் தீட்சண்யாசின் அரசியல் ரீதியான ஆவேச உரைவீச்சினை விலக்கிவிட்டு அவர் தமிழ்நதிக்குச் சொன்ன உருப்படியான எதிர்விணை இதுதான் :

இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது மட்டுல்ல பொதுவாகவே சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக வெளிப்படுத்துவதில் தமிழகப் படைப்பாளிகளிடம் ஒரு மனத்தடை இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஏதோ ஒரு கண்ணி அறுபட்டுக் கிடக்கிறது. ஒருவேளை கூட்டாக விவாதித்து அதை கண்டுபிடிப்போமானால் உடனடி நிகழ்வுகள் மீது படைப்புகள் வரலாம். அதுகுறித்து வேண்டுமானால் பேசலாம்..

தமிழ்ச் செல்வனும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்தான் இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் முழு நேர ஊழியராக இருக்கிறார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும்தான் ஆதவனும் இருக்கிறார். இரண்டு குரல்களிளும் வெகு சாதாரணமாக வித்தியாசத்தைப் பாரக்க முடிகிறது.

‘ஏதோ ஒரு கண்ணி அறுபட்டுக் கிடக்கிறது’ எனச் சொல்லும் ஆதவன், எந்தக் கண்ணி ஏன் அறுபட்டக் கிடக்கிறது என்று பேசுவதற்குக் கூட, அவர் தனது தலித்தியப் பெருங்கதையாடலுக்குள்ளிருந்தும், சகலவற்றையும் கணிசூத்திரம் போல இரவல் புகலிடப் பார்வையில் தலித்திய விரோதமாக நிரல்படுத்தும் அவரது மூடுண்ட அரசியல் பார்வைக்குள்ளிருந்தும் அவர் வெளியே வரவேண்டும்.

அப்போதுதான் அவர் வெளிப்படையாக எல்லோருடனும் உரையாடல் மேற்கொள்வது சாத்தியம்.

7

உலகில் வெகுமக்கள் அறிவுஜீவிகள் (public intellectuals) எனும் பாத்திரத்தை இலக்கியவாதிகள் ஏற்றிருக்கிறார்கள். இந்தியாவிலும் தமிழகத்திலும் கூட அதற்கான உதாரணங்கள் உண்டு. இலக்கியவாதிகளாக செக்கோஸ்லாவியாவில் வஸ்லாவ் ஹாவல், இலத்தீனமெரிக்காவில் கார்ஸியா மார்க்வஸ், ஆப்ரிக்காவில் செம்பேன் ஒஸ்மான், ரஸ்யாவில் மயக்காவ்ஸ்க்கி, இங்கிலாந்தில் ஹெரால்ட் பின்ட்டர், அமெரிக்காவில் அலன் ஜின்ஸ்பர்க், இந்தியாவில் முல்க் ராஜ் ஆனந்த், தமிழகத்தில் மகாகவி பாரதி என இவர்கள் அந்தந்த சமூகம் சார்ந்து வெகுமக்கள் அப்பிப்பிராயங்களை உருவாக்குபவர்களாக இருந்திருக்கிறார்கள்.

தத்துவவாதியாக ஸார்த்தர், இலக்கிய விமர்சகராக எட்வர்ட் ஸைத், மனித உரிமையாளராக நோம் சாம்ஸ்க்கி, பத்திரிக்கையாளராக ஜான் பில்ஜர், தமிழகத்தில் கோட்பாட்டாளராக எஸ்.வி.ராஜதுரை போன்றவர்கள் இப்படி இயங்கியிருக்கிறார்கள். குறிப்பிட்ட ஆளுமைகள் அனைவரும் தாம் பேசுகிற விடயங்களில், ஈடுபாட்டுடன், அறிவுடன், நுண்விவரங்களுடன் தமது நிலைபாடுகளைத் தெளிவாக அச்சமின்றி முன்வைத்தவர்கள்.

இன்றைய தமிழகத்தின் தீவிர-சீரிய இலக்கியவாதிகள் அல்லது புகழ்பெற்ற இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இந்தத் தகுதிகள், அறிவுஜீவி என்கிற தகுதி இல்லை என நான் அச்சமின்றிச் சொல்கிறேன்.
ஓரு படைப்பாளியாக இன்குலாப் மட்டுமே இதில் விதிவிலக்கு.
வெகுமக்கள் அறிவுஜீகளுக்கு அரசு மட்டுமல்ல, சகலவிதமான அதிகார மையங்களையும் எதிர்கொள்ள வேண்டிய திடமனம் வேண்டும். அது இன்றைய தமிழ் இலக்கிய ஜாம்பவான்களுக்குக் கிஞ்சிற்றும் இல்லை.

இலக்கியம் என்பது ஒரு வகையிலான கற்பனா சாம்ராஜ்யம். அது கற்பனா சம்ராஜ்யம் எனும் அளவில் ஒரு கருத்தியலைத் தன்னளவில் முன்வைக்கிறது (literature is itself an utopia and as an utopia it represents and constitutes an ideology). இந்தக் கருத்தியலை, ‘நிலவும்’ கருத்தியல்களோடு இணைத்தோ ஒப்புநோக்கியோ பாரக்கத் தேவையில்லை. வரலாறு, அக்காலத்தின் இலக்கியச் சூழல், இலக்கிய வடிவங்களின் வளர்ச்சி போன்றவை பற்றின அவதானிப்புடன், இலக்கியம் விரிக்கும் கருத்தியலை மார்க்சியர்கள் அவதானிக்கிறார்கள். மார்க்ஸ் முதல் டிராட்ஸ்க்கி வரை, இலக்கியத்தில் அழகியலுக்கான முக்கியத்துவத்தை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள். அதே வேளை, அதனது கருத்தியலையும் அரசியலையும் அவர்கள் அவதானிக்கவே செய்கிறார்கள்.

இலக்கியத்தை இலக்கியவாதியின் பிரக்ஞைபூர்வமான பிரகடனங்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை. அதனைத் தீர்மானிப்பதற்கு வேறு வேறு காரணிகள் இருக்கின்றன. இலக்கியம் அரசியலையும் கருத்தியலையும் தாண்டி, மனுக்குலத்தைப் பேசுகிறது. இந்த வகையில் அதனை சமூக நோக்குக் கருதி பிற்பாடாக அதனது அரசியலையும் கருத்தியலையும், மானுட உள்ளடக்கத்தையும், அதனது வலதுசாரி-இடதுசாரி போக்குகளையும் பிரித்தறிகிறோம். நீட்ஷேவின் ‘இப்படிப் பேசினான ஜராதுஷ்டாவின்’ கவித்துவத்தில் தன்னை முற்றிலும் இழந்துவிடுகிறவன், நாசிக் கொலைக் களங்களை மறந்து விடுகிறான்.

எந்த இலக்கியவாதியினதும் கவித்துவத்திலும் மொழியிலும் தோயத் தெரிந்த ஒரு இலக்கிய வாசகன், அதே இலக்கியவாதியின் அபத்த அரசிலையும் மறந்துவிட வேண்டிய அவசியமில்லை.

8

‘கலையில் மொழியின் இடம் என்பது கூடார்த்தத் தன்மை கொண்ட ஊடாட்டம் கொண்டது. புதைமணல் போன்றது. கழைக் கூத்தாடியின் மெத்தை போன்றது. எழுத்தாளனாக மொழி என்பது எப்போதும் காலடியில் உங்களுக்கு வழிவிடும் உறைந்த ஏரி போன்றது‘ என்பார் பின்ட்டர்.

அரசியலில் மொழிப் பாவனை பெரும் இடம் இலக்கியத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. மொழி இங்கு நேரடி அர்த்தம் தரவேண்டும். கூடார்த்தம் அரசியலில் செல்லுபடியாகாது. அரசியல் கருத்துக்களை எவரும் பிரதி இன்பத்திற்காகப் படிப்பதில்லை. அரசியலில் நக்கல் நையாண்டிகளை எவரும் சீரிய அர்த்தத்தில் எடுத்துக் கொள்வதில்லை.

இலக்கியமொழிக்கும் அரசியல் மொழிக்குமான வித்தியாசத்தை ஹெரால்ட் பின்ட்டர் தனது நோபல் பரிசு உரையில் துல்லியமாக வித்தியாசப் படுத்திக் காட்டுகிறார்.

இந்த அறிவு நேர்மை தமிழ் இலக்கியவாதிகளுக்கு இல்லை.

ஈழப் போராட்டம் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட தருணத்தில் சாரு நிவேதிதா, ஜெமோ, எஸ்ரா போன்றவர்கள் கட்டுரை எழுதுகிறார்கள். ஈழ அரசியலை வெகுஜன ஊடகங்களும் இடைநிலைப் பத்திரிக்கைகளும் பேசுவது ஜெமோவுக்கு அலுப்பாக இருக்கிறது. அமெரிக்காவுக்குப் போனாலும் நந்திகிராம் பற்றிப் பேசுகிறபோது, அங்கு குடியேறிய பங்களாதேஷ் இஸ்லாமியர்கள் இனி வங்கத்திலும் ‘ஆசாதி கேட்பார்கள்’ என்று நக்கலாக ஜெமோவுக்குச் சொல்லத் தோன்றுகிறது. ஜெயமோகனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அரசியல் வெளியில் நஞ்சை விதைக்கும் வார்த்தைகள்.

இலக்கியவாதிகள் அரசியல் பேச வேண்டும் என அவசியமில்லை. அவன் அரசியல் பேசுவானானால் அது அவனது தேர்வு. அவனது தேர்வுக்கும் அதனது விளைவுகளுக்கும் அவன் பொறுப்பாக இருத்தல் வேண்டும். அவன் இப்போது அரசியல்வாதியாகவும் ஆகியிருக்கிறான். அரசியல்வாதி எனும் போது கட்சி சார்ந்த அரசியல்வாதியாக அல்ல, வெகுமக்கள் நலன் சார்ந்த, அறம் சார்ந்த அரசியல் பேசுவதாக அவன் கருதுகிறான்.

வெகுமக்கள் நலன் சார்ந்த அரசியல் பேசபவனாக, வெகுமக்கள் அறிவுஜீவி எனும் பாத்திரத்தையும் அவன் ஏற்கிறான்.

ஸ்பானிஸ் உள்நாட்டுப் போர், வியட்நாம் யுத்தம், ஈராக் யுத்தம் போன்வற்றில் இலக்கியாவதிகள் இவ்வாறு அரசியல்வாதிகளாக, வெகுமக்கள் அறிவுஜீவிகளாக ஆகியிருக்கிறார்கள். ஜியார்ஜ் ஆர்வல், ழான் பவுல் ஸார்த்தர், ஹெரால்ட் பின்ட்டர் என இவ்வாறான மரபு உலக இலக்கியத்தில் உண்டு.

இந்தத் தெளிவும் ஆளுமையும் கடப்பாடும் நெஞ்சுரமும் தமிழ் இலக்கியவாதிகளுக்கு இல்லை.

ஜெயமோகன் தனக்கான வாசகர்களைத் தனது ரசிகர் வட்டம்போலப் பாவித்து ஒரு நிறுவனம் போல இயங்குபவர். தனக்கு ஈடுபாடு இல்லை எனச் சொல்லிக் கொண்டே, அரசியலில் எதனை வெறுக்க வேண்டும், எதனைத் துவேசம் செய்ய வேண்டும், எதனுடன் உரையாட வேண்டும், எதனைப் பாராட்டி முன்நிறுத்த வேண்டும் என்பதனைத் தெளிவாக அறிந்தவர். பிஜேபி, அரசியலில் உருவாக்கி வைத்த சமூக வெளிதான் ஜெயமோகன் இயங்கிக் கொண்டிருக்கும் கலாச்சார வெளி. மார்க்சிய வெறுப்பு, இந்துத்துவ உலக நோக்கு என இதுவே அவரது சிந்தனையுலகம். இது தமிழ்ச்சூழலுக்கு நேர்ந்திருக்கும் அவமானம் என நான் கருதுகிறேன். இதனைச் சொல்ல ஜெயமோகனின் ‘மொத்த’ இலக்கியப் படைப்புகளையும் வாசிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

இதனைச் சுட்டிக் காட்டுவதற்கு ஈழப் பிரச்சினை சார்ந்த விவாதங்கள் ஒரு தருணமாக வாய்த்திருக்கிறது.

வாசிப்பு ஞானம் பற்றிய சர்ச்சை என்பாதால் இதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜெயமோகனின் வாசிப்பு இலட்சணம் இது : இஸ்லாமியர் குறித்த ஒற்றை அரசியலை எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ், யமுனா ராஜேந்தின், அ.முத்துக் கிருஷ்ணன் போன்றோர் செய்கிறார்கள் எனக் கொஞ்சமும் கூச்சமில்லாது எழுதுகிறார் ஜெமோ. உயிர்மை வெளியீடான எனது ‘அரசியல் இஸ்லாம்’ நூலிலுள்ள முதல் அத்தியாயத்தைப் படித்திருந்தாலே போதும், அ.மார்க்சின் இஸ்லாம் பற்றிய பார்வைக்கும் எனது அணுகுமுறைக்கும் எந்தவிதத்திலும ஒற்றுமை இல்லை என்பதை ஜெமோ அறிந்திருப்பார். அரசியல் இஸ்லாம் என்பது விடுதலை இறையியல் அல்ல, அது ஒரு சீரழிவு இயக்கம் என்கிறேன் நான். அமா இப்படியா சொல்கிறார்?

பேசுகிற விஷயங்களைத் தெரிந்து கொண்டு, அது குறித்த வாசிப்புடன், அது குறித்த ஈடுபாட்டுடன், அக்கறையுடன் பேசுங்கள் என நான் கேட்கிறபோது, இவர்களது இலக்கியப் படைப்புக்களைப் படித்துவிட்டுப் பேசுங்கள் என என்னிடம் சொல்பவர்களைச் செவியுறக் கேட்கும் போது…

அவர்களது குரல்கள் எனக்கு ஆபாசமாக இருக்கிறது.

நன்றி : உயிரோசை

நாங்களும் வெள்ளரசங் கிளையும்! : விஜி

botreeநீண்ட தரைப்பாதையின்
சிதைவுற்ற கரைகள் எங்கும்
பாதி எரிந்த மரங்கள்
முகங்களை திருப்பிக் கொள்ளும்.

முட்கம்பி வேலிகளுக்கப்பால்
சோர்வுற்ற மலர்கள்
வெற்றுப் பார்வையை வீசும்.

படிந்து போயுள்ள புழுதி போல்
பட்ட அவமானங்கள்
சொல்லவும் கேட்கவும்
ஆளற்று மௌனிக்கும்;.

மழையிற் கரைந்ததாயினும்
அவர் கண்ணீர்
தனியே உறைந்து கிடக்கிறது

சிந்திய குருதியோ
அடையாளம் காட்ட விரும்பாது
இன்னும் ஆழமாய்
தன்னை புதைத்து கொண்டுளது.

தூக்கிய கைகள்
காற்றில் சோர்ந்து விழ
தீ கக்கும் துப்பாக்கிகளே
அவர்களுடன் பேசின.

சுவடின்றி அள்ளப்பட்ட
சாம்பலின்
தப்பியொட்டிய துகள்கள்
என்னை விட்டு
போகாதே என்கின்றன.

எத்தனை தடவைதான்
குழந்தை
செத்த தாயிடம் பால் அருந்தும்?

வெள்ளரசங் கிளையை
எம்மால்
நிமிர்ந்து பார்க்க முடியவில்லை!

பொம்மை! : நோர்வே நக்கீரா

பொம்மை

Valentine’s Day Barbie
அங்கமெல்லாம் தங்கம் பூட்டி
சருகைச்சேலைகள் சரசரக்க
அழகு காட்டி
கோவில்சப்பறம்போல்
பெண்டிர் எங்கு போகினம்?

கண்ட நிண்ட கலர்களில்
கோட்டும் சூட்டும்
மாறிச்சாறிப்போட்டுக் கொண்டு
ஜொகிங் ஷூ(ஒடுகாலணி)வும் மாட்டிக்கொண்டு
ஆண்கள் எங்கு போகினம்?

மகிழுந்து காட்ட
மணவறைக்கோ போகினம்?

கமராக்கள் கண்ணடிக்கும்
சந்தையொன்றில்
பிள்ளையென்று சொல்லி
ஒருபொம்மை கொண்டுவந்தார்
தந்தை சிந்தை போலே
ஆடவேண்டும் என்று
பிள்ளையது பொம்மையாய்
என்றுமாக்கப்பட்டது.

வீடியோ எடுக்கவென்றே
பிறந்தநாள் நடக்குது.
காணத இடமெல்லாம்
கண்டு கழித்துப்போகுது.
வடிவான பெண்கண்டால்
நின்று அங்கு மேயுது.

பெற்றோர்கள் கேக்கு வெட்ட
பிள்ளை போஸ் கொடுக்குது.
பிறந்தநாள் பிள்ளைக்கா? பெற்றோருக்கா?
இது பிள்ளையா? பொம்மையா?

பொன் பொன்னாய் பரிசுகள்
போட்டியாய் வந்தது.
போட்டுப்பார்த்து பெற்றோரே இரசிக்கினம்
வளர்ந்து பிள்ளை விரும்பிக்கேட்டால்
சீதனம் எனச் சொல்லினம்.
பெற்றோரின் விருப்புப்படி
பேருக்கும் புகழுக்குமாய் வாழுமிந்த பிள்ளைகள்
பிள்ளைகளா? பொம்மைகளா?

எம்மண்ணில் எம்மக்கள்
அகதியாய் அலைகிறார்கள்
பேரன் பேத்தியும் பசியுடனே
படுக்கிறார்கள்
இங்கேயோ!!!
ஆனைமுதல் பூனைமுதல்
சாப்பாட்டுக் கோப்பையிலே விழுகுது
மூக்கு முட்ட திண்ட சனம்
ஊர்க்கதைகள் கதைக்கினம்.

வீட்டுக்குள்
கருமுகில் கூட்டுக்குள்
சிகரெட்டு நட்சத்திரங்கள்.
புகையடித்தே பிள்ளைகளை
பழுக்க வைக்கிறார்கள் பெற்றோர்.
பிஞ்சில் பழுத்த பழங்களோ இவைகள்!!

அப்பருக்கு சிகரெட்டு
பிள்ளைக்கு சிகரெட்பெட்டி

தண்ணியடித்துத் தவழுகிறார்
பிள்ளையுடன் தந்தை.
தந்தையடித்த குடித்த தண்ணீரில்
குளிக்கிறது பிள்ளை
பாட்டி பிள்ளைக்கா? பெற்றோருக்கா? ஊருக்கா?

கொடுத்த பிறசென்ட்டுக்கு சமனனாய்
தின்று சிலர் தீர்த்தனர்.
தம் வண்டியைத் தள்ளிக் கொண்டு
கார்வண்டிக்குள் போயினர்.

பத்து வயதிலேயே பிள்ளை
பட்டம் பெறவேண்டுமாம்- அதனால்
ஐந்துநாளும் பிள்ளை பாடசாலை போகுது
வந்து பின்னேரம் பாட்டுப்படிக்கப் போகுது.
சனியெங்கும் தனியாகத் தமிழ்படிக்கப் போகுது
ஞாயிறு தோறும் டான்ஸ் பழகப்போகுது.
பிள்ளையா? பொம்மையா?
தொல்லையதற்கு இல்லையா?

கல்யாணச் சந்தையிலே
பிள்ளை விலைபோகுது.
ரூபாயில் சீதனம்
பவுண் டொலராய் ஆகுது.
போட்டோவில் பார்த்தே
மாப்பிளைத் தேர்வும் நடக்குது
பொன்னும், பொருளும் பணமும் கொடுத்து
பெண்ணையும் சும்மா தள்ளிவிடும்போது.
இதைவிட மலிவாக
பொம்மை எங்கு வாங்கலாம்?

பிறப்பு முதல் இறப்புவரை
தன் விருப்புவிட்டு
பேருக்கும் புகழுக்கும் ஊருக்குமாய் வாழும்
இத்தியாகிகளை
பிள்ளையென்பதா? பொம்மையென்பதா

கவிமலர்கள் – கொச்சைவழக்குக் கவிதை

உலக சாரணர் தினம் – புன்னியாமீன்

baden-powell.jpgஉலக சாரணர் தினம் ஆகஸ்ட் 01ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. உலகளாவிய ரீதியிலான சாரணர்களும், சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூரும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாக ஆகஸ்ட் முதலாம் திகதி என சில நாடுகளில் இத்தினம் சிறப்புத்தன்மை பெற்றாலும்கூட, ஜுலை மாத இறுதி வாரமும், ஆகஸ்ட் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொருத்தவரையில் முக்கியமான நாட்களாகும். 1907ம் ஆண்டு ஜுலை மாதம் 28ஆம் திகதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும், தன்னலமற்ற மனித நேயமிக்க சேவையுணர்வை உலகில் விதைத்திட்ட ‘சேர். றொபர்ட் ஸ்டீவன் ஸ்மித் பேடன் பவல்” என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. லண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மகாநாடும், சாரணியப் பாசறையும், ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் ஆறாம் திகதி வரை நிகழ்ந்தது. எனவே, முதலாவது சாரணிய இயக்கப் பாசறை நடைபெற்ற தினத்தை அடிப்படையாகக் கொண்டே உலக சாரணியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

சமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சிக்களமாகக் கல்விச்சாலைகளில் மாணவ, மாணவியர்களுக்கான சாரணர் இயக்கம் உலகளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதி, மத வேற்றுமை கடந்து சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டினை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது. வயது வந்தோர்க்கான கல்வி, சாலை விதிமுறைகளை மேற்கொள்ளுதல், விழா நடைபெறும் காலங்களில் கூட்டத்தினைக் கட்டுப்படுத்துதல், மரங்களை நடுதல் போன்ற பணியினைச் சாரணர் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

வாய்மை, நேர்மை, நம்பகத்தன்மை, தேசப்பற்று, நேசம் ஜீவகாருண்யம், மரியாதை, தைரியம் போன்ற இன்னோரன்ன ஆளுமை விருத்தியம்சங்களைக் கொண்டு மனித நேயப்பண்புகளுடன் சேவைகள் மூலம் சமூகத்துடன் ஒன்றிணைந்த அமைப்பாக மிளிரும், ‘எதற்கும் தயாராக இரு! ” எனும் தொனிப் பொருளைக் கொண்ட சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பிதாவாகக் கருதப்படும் பேடன் பவல், 1857 பெப்ரவரி 22ம் திகதி பிறந்தார். ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கௌரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது.

புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் 1876இல் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார். இளம் வயதில் இராணுவத்தில் இணைந்து கொண்ட பேடன் பவல் இந்தியா, கனடா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரிந்தார். 1910 இல் ஓய்வு பெற்றார். தென்னாபிரிக்காவில் பணியாற்றிய வேளையில், 1907ம் ஆண்டில் 22 இளைஞர்களுடன் சாரணர் இயக்கத்தை ஆரம்பித்தார். லண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மகாநாடும் சாரணியப் பாசறையும், இவரால் நிகழ்த்தப்பட்டது. சிறுவர்களுக்கான சாரணீயம் (Scouting for Boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆபிரிக்காவிற்குத் திரும்பிய பேடல் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார்.

1910ல் சாரணியம் உலகெங்கும் பரவத் தொடங்கியது. தற்போது உலகில் சாரணர் சங்கங்கள் 216 நாடுகளில் செயல்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கையிலும் பார்க்கக் கூடுதலான நாடுகளில் செயல்படும் தொண்டு நிறுவனமாக சாரணர் அமைப்பு விளங்குகின்றது. உலகம் முழுவதிலும் 38 மில்லியன் சாரணர்கள் உள்ளனர். ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் 18 மில்லியன் சாரணர்கள் உள்ளனர் எனபுள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன..

1912ல் உலக சகோதரத்துவத்தை வளர்க்கும் தூரநோக்கில் உலகப் பயணத்தை பேடன் பவல் மேற்கொண்டார். இதேவேளை அவரது பாரியார் சீமாட்டி ‘ஒபேவா பேடன் பவல்” 1910ல் பெண்கள் சாரணியத்தை ஆரம்பித்து உலகெங்கும் வியாபிக்க வழிகோலினார். 1916ல், குருளைச் சாரணர் இயக்கமும், 1918ல் ரோவர்ஸ் சாரணர் இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இன்று சாரணியர் இயக்கமும், பெண்கள் சாரணிய இயக்கமும் சமுதாய வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றன. இவை எதிர்காலச் சமூகத்திற்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றது. உலக சகோதரத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட சாரணியத்தின் மூலமாக உலக நாடுகளில் சமாதானத்தையும், ஒற்றுமையையும் கட்டியெழுப்புதல் வேண்டும், என்பதே இன்றைய எதிர்பார்ப்பாகும். பேடன்பவல் தனது இறுதிக்காலத்தில் துணைவியாரோடு ஆபிரிக்காவில் வசித்தார். 1941-01-08ம் நாள் காலமானார்.

1920ல் உலக சாரணர்களை ஒன்றிணைத்து, சாரணர் ஜம்போரி ஒன்றை தனது தலைமையில் இங்கிலாந்தில் கொண்டாடினார். இந்நிகழ்வு 1920-08-06ம் திகதி இடம்பெற்றது. அந்நாளில் பேடன்பவல் உலகின் பிரதம சாரணர் எனப் பிரகடனப்படுத்தப்பட்டார். இவரை இங்கிலாந்தின் 5ம் ஜோர்ஜ் மன்னர், ‘கில்வெல் பிரபு” எனப் பெயர்சூட்டி, பாராட்டிக் கெளரவித்தார். அன்று முதல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை சாரணர் ஜம்போரி உலக நாடுகளில் நிகழ்கின்றது.

இன்று உலகில் பெருமளவு நாடுகளில் பலகோடி சாரணர் இயக்கங்கள் உருவாகி, பேடன் பவல் பிரபுவின் தூரநோக்கை நிறைவேற்றி வருகின்றமை, நிறைவளிக்கின்றது. சாரணியர் அமைப்பு உலகமயப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். சாரணர் இயக்கத்தில் ஜம்போரிப் பாசறைகள் முக்கியத்துவம் பெற்றவை. சாரணர் உலக ஜம்போரிகளில், உலகளாவிய ரீதியில் சாரணர்கள் ஒன்றிணைக்கப்பட்டு பயிற்சிக்கும், செயற்பாட்டிற்கும், கடமையுணர்வு, நற்புணர்வு ஆகியவற்றிக்கு ஏற்ற வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். ஆரம்பகாலங்களில் ஜம்போரிகளில் உலகளாவிய சாரணர்கள் ஒன்றிணைக்கப்பட்டனர். தற்போதைய நாடுகளில் அளவிலும் பிரதேச, பிராந்திய ரீதியிலும் தலைமைத்துவம் ஏற்றுள்ள சாரணியத்தில் சாதனை படைத்துள்ள சாரணர்களே ஜம்போரியில் வரையருக்கப்படுகின்றனர்.

முதலாவது சாராணியர் உலக ஜம்போரி (உலக சாரணியர்களை ஒன்றிணைக்கும் பாசறை) 1920ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஒலிம்பியா எனுமிடத்தில் நடைபெற்றது. முதலாவது உலக ஜம்போரியில் 34 நாடுகளைச் சேர்ந்த சுமார் 8, 000 சாரணியர்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது உலக ஜம்போரி, 1924ஆம் ஆண்டு டென்மார்;கில் நடைபெற்றது. இதில் சுமார் 5, 000 சாரணியர்கள் கலந்து கொண்டனர்.

1929ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்றாவது உலக ஜம்போரில் 69 நாடுகளைச் சேர்ந்த சுமார் 50, 000 சாரணியர்கள் கலந்துகொண்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. தொடர்ந்து நான்காவது உலக ஜம்போரி 1933ஆம் ஆண்டு ஹங்கேரியிலும் (25, 792 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஐந்தாவது உலக ஜம்போரி 1939ஆம் ஆண்டில் ஹொலன்டிலும் (28, 750 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஆறாவது உலக ஜம்போரி 1947ஆம் ஆண்டு பிரான்சிலும் ( 24, 152 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஏழாவது உலக ஜம்போரி 1951ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலும் ( 12, 884 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), எட்டாவது உலக ஜம்போரி 1955ஆம் ஆண்டு கனடாவிலும் (11, 139 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), 80 நாடுகளிலிருந்து சுமார் 30, 000 பேர் கலந்துகொண்ட ஒன்பதாவது உலக ஜம்போரி 1957ஆம் ஆண்டு இங்கிலாந்திலும் 44 நாடுகளிலிருந்து 12 ,203 பேர் கலந்துகொண்ட பத்தாவது உலக ஜம்போரி 1959ஆம் ஆண்டு பிலிப்பைன்சிலும் 14, 000 சாரணியர்கள் கலந்துகொண்ட, பதினொறாவது உலக ஜம்போரி 1963ஆம் ஆண்டு கிரேக்கத்திலும், பன்னிரெண்டாவது உலக ஜம்போரி 1967ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிலும் நடைபெற்றன. ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற இந்த ஜம்போரியில் 105 நாடுகளைச் சேர்ந்த 12, 011 சாரணியர்கள் பங்கேற்றுள்ளனர்.

பதின்மூன்றாவது உலக ஜம்போரி 1971ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்றது. இந்த ஜம்போரியில் 87 நாடுகளைச் சேர்ந்த 23, 758 சாரணியர்களும், 1975ஆம் ஆண்டு நோர்வேயில் நடைபெற்ற 14வது உலக ஜம்போரியில் 91 நாடுகளைச் சேர்ந்த 17, 259 சாரணியர்களும், பங்கேற்றுள்ளனர். 15வது உலக ஜம்போரி ஈரானில் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும், ஈரானில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகள் காரணமாக அந்த ஜம்போரி நடைபெறவில்லை. இதனால் 15வது உலக ஜம்போரி 1983ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்றது. இதில் 14, 752 சாரணியர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 1987-1988 இல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 16வது உலக ஜம்போரியில் 84 நாடுகளைச் சேர்ந்த 14, 434 சாரணியர்களும், 1991 இல் கொரியாவில் நடைபெற்ற 17வது உலக ஜம்போரியில் 135 நாடுகளைச் சேர்ந்த சுமார் 20.000 சராணியர்களும், 1995 இல் நெதர்லாந்தில் நடைபெற்ற 18வது உலக ஜம்போரியில் 166 நாடுகளைச் சேர்ந்த 28, 960 சாரணியர்களும், 1998-1999 20ஆம் நூற்றாண்டில் கடைசியாக சிலி நாட்டில் நடைபெற்ற 19வது உலக ஜம்போரியில் 157 நாடுகளைச் சேர்ந்த சுமார் 31, 000 சராணியர்களும், 21ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற முதலாவது ஜம்போரி 2002-2003 இல் தாய்லாந்தில் நடைபெற்றது. இந்த 20வது உலக ஜம்போரியில் 147 நாடுகளைச் சேர்ந்த சுமார் 24. 000 சாரணியர்கள் கலந்து கொண்டனர். சாரணியம் உருவாக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் நேரத்தில் 21வது உலக சாரணிய ஜம்போரி இங்கிலாந்தில் 2007ஆம் ஆண்டு நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த ஜம்போரியில் 147 நாடுகளைச் சேர்ந்த சுமார் 24, 000 சாரணியர்கள் பங்கேற்றனர்.

22வது உலக ஜம்போரி 2001இல் சுவீடன் நாட்டிலும்ää 23வது உலக ஜம்போரி 2015ஆம் ஆண்டு ஜப்பானிலும், 24வது உலக ஜம்போரி 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்;பட்டுள்ளன.

சாரணிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட பலர, ; இன்று உலகில் பலதுறைகளிலும் பெயர் பதித்திருப்பதைக் காணலாம். உதாரணமாக, முதன்முதலாக சந்திரனில் காலடியெடுத்து வைத்த நீல்ஆம்ஸ்ரோங் ஒர் சாரணியரே இவர் அமெரிக்காவின் Eagle Scout விருது பெற்றவர். நிலவில் இதுவரை காலடி பதித்து நடந்த 12 பேரில் 11 பேர் சாரணர்கள் .(ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற ஆல்டிரின் உட்பட). 1959 லிருந்து இதுவரை 214 பேர் விண்வெளி விஞ்ஞானிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களில் 125 பேர் சாரணர்கள். ஜெமினி 7, ஜெமினி 12, அப்பல்லோ 8, அப்பல்லோ 13, ஆகிய விண்கலன்களில் சென்று வந்தவர், NASA வின் தலைவராக இருந்தவர் ஜேம்ஸ் லோவல் ஒரு சாரணர். உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜான் F கென்னடி ஒரு Cub Scout ஆக இருந்தவர். அமெரிக்க ஜனாதிபதிகள் வரிசையில் பில் கிலிண்ட்டன், ஜார்ஜ் புஷ் போன்றோர்களும் சாரணர்களே. உலகப் புகழ் பெற்ற Microsoft Computer நிருவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் பில் கேட்ஸ் ஒரு சாரணர். இவ்வாறான பல சாரணியர்கள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

இலங்கை சாரணர் சங்கம் 2012ம் ஆண்டில் நூற்றாண்டு நிறைவைக் காணவிருக்கின்றது. ஆனால், உலக சாரணர் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதற்கு எமது சங்கத்தில் ஒரு இலட்சம் சாரணர்கள் உறுப்புரிமை பெறவேண்டும். இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினரே தற்போது இலங்கை சாரணர் சங்கம் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

2012 ஆம் ஆண்டிற்குள் இலங்கை சாரணர் சங்கத்தின் உறுப்பினர்களை ஒரு இலட்சமாக்குவதற்கான திட்டம் ஒன்று கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 1907 இல் உலகில் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கம் இலங்கையில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1912 இல் கிறீன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

1912ல் இலங்கையில் சாரணர் இயக்கம் மாத்தளை கிறிஸ்து அரச கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. 1917 மார்ச் 21ல் கண்டி பெண்கள் உயர் பாடசாலையில் பெண்கள் சாரணியம் உருவாக்கப்பட்டது. உலக சாரணியப் பொது அமைப்பின் ஒரு பகுதியாக ஆசிய பசுபிக் பிராந்தியமுள்ளது. உலகில் இது பரந்துபட்ட பிராந்தியமாகும். இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பெருமளவு சனத்தொகையும் கொண்டுள்ளதுடன் அரசியல் பொருளாதார கல்வி சமூக கலாசாரம் என்பவற்றிலும் முன்னேறி வரும் நாடுகளாகும். இந்நாடுகளிலுள்ள தேசிய சாரணர் இயக்கங்கள் ஒன்றிணைந்து ஆசிய-பசுபிக் பிராந்திய அமைப்பினை உருவாக்கியுள்ளன. இலங்கையும் இவ்வமைப்பில் இணைந்து தனது பங்களிப்பினைப் புரிந்து வருகின்றது. 1921ம் 1934ம் ஆண்டுகளில்,தனது மனைவியோடு பேடன்பவல் இலங்கைக்கு விஜயம் செய்து பல சாரணிய நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.