::கலை இலக்கியம்

::கலை இலக்கியம்

கலை இலக்கியம் தொடர்பான விமர்சனங்களும் கட்டுரைகளும்

நாங்களும் வெள்ளரசங் கிளையும்! : விஜி

botreeநீண்ட தரைப்பாதையின்
சிதைவுற்ற கரைகள் எங்கும்
பாதி எரிந்த மரங்கள்
முகங்களை திருப்பிக் கொள்ளும்.

முட்கம்பி வேலிகளுக்கப்பால்
சோர்வுற்ற மலர்கள்
வெற்றுப் பார்வையை வீசும்.

படிந்து போயுள்ள புழுதி போல்
பட்ட அவமானங்கள்
சொல்லவும் கேட்கவும்
ஆளற்று மௌனிக்கும்;.

மழையிற் கரைந்ததாயினும்
அவர் கண்ணீர்
தனியே உறைந்து கிடக்கிறது

சிந்திய குருதியோ
அடையாளம் காட்ட விரும்பாது
இன்னும் ஆழமாய்
தன்னை புதைத்து கொண்டுளது.

தூக்கிய கைகள்
காற்றில் சோர்ந்து விழ
தீ கக்கும் துப்பாக்கிகளே
அவர்களுடன் பேசின.

சுவடின்றி அள்ளப்பட்ட
சாம்பலின்
தப்பியொட்டிய துகள்கள்
என்னை விட்டு
போகாதே என்கின்றன.

எத்தனை தடவைதான்
குழந்தை
செத்த தாயிடம் பால் அருந்தும்?

வெள்ளரசங் கிளையை
எம்மால்
நிமிர்ந்து பார்க்க முடியவில்லை!

பொம்மை! : நோர்வே நக்கீரா

பொம்மை

Valentine’s Day Barbie
அங்கமெல்லாம் தங்கம் பூட்டி
சருகைச்சேலைகள் சரசரக்க
அழகு காட்டி
கோவில்சப்பறம்போல்
பெண்டிர் எங்கு போகினம்?

கண்ட நிண்ட கலர்களில்
கோட்டும் சூட்டும்
மாறிச்சாறிப்போட்டுக் கொண்டு
ஜொகிங் ஷூ(ஒடுகாலணி)வும் மாட்டிக்கொண்டு
ஆண்கள் எங்கு போகினம்?

மகிழுந்து காட்ட
மணவறைக்கோ போகினம்?

கமராக்கள் கண்ணடிக்கும்
சந்தையொன்றில்
பிள்ளையென்று சொல்லி
ஒருபொம்மை கொண்டுவந்தார்
தந்தை சிந்தை போலே
ஆடவேண்டும் என்று
பிள்ளையது பொம்மையாய்
என்றுமாக்கப்பட்டது.

வீடியோ எடுக்கவென்றே
பிறந்தநாள் நடக்குது.
காணத இடமெல்லாம்
கண்டு கழித்துப்போகுது.
வடிவான பெண்கண்டால்
நின்று அங்கு மேயுது.

பெற்றோர்கள் கேக்கு வெட்ட
பிள்ளை போஸ் கொடுக்குது.
பிறந்தநாள் பிள்ளைக்கா? பெற்றோருக்கா?
இது பிள்ளையா? பொம்மையா?

பொன் பொன்னாய் பரிசுகள்
போட்டியாய் வந்தது.
போட்டுப்பார்த்து பெற்றோரே இரசிக்கினம்
வளர்ந்து பிள்ளை விரும்பிக்கேட்டால்
சீதனம் எனச் சொல்லினம்.
பெற்றோரின் விருப்புப்படி
பேருக்கும் புகழுக்குமாய் வாழுமிந்த பிள்ளைகள்
பிள்ளைகளா? பொம்மைகளா?

எம்மண்ணில் எம்மக்கள்
அகதியாய் அலைகிறார்கள்
பேரன் பேத்தியும் பசியுடனே
படுக்கிறார்கள்
இங்கேயோ!!!
ஆனைமுதல் பூனைமுதல்
சாப்பாட்டுக் கோப்பையிலே விழுகுது
மூக்கு முட்ட திண்ட சனம்
ஊர்க்கதைகள் கதைக்கினம்.

வீட்டுக்குள்
கருமுகில் கூட்டுக்குள்
சிகரெட்டு நட்சத்திரங்கள்.
புகையடித்தே பிள்ளைகளை
பழுக்க வைக்கிறார்கள் பெற்றோர்.
பிஞ்சில் பழுத்த பழங்களோ இவைகள்!!

அப்பருக்கு சிகரெட்டு
பிள்ளைக்கு சிகரெட்பெட்டி

தண்ணியடித்துத் தவழுகிறார்
பிள்ளையுடன் தந்தை.
தந்தையடித்த குடித்த தண்ணீரில்
குளிக்கிறது பிள்ளை
பாட்டி பிள்ளைக்கா? பெற்றோருக்கா? ஊருக்கா?

கொடுத்த பிறசென்ட்டுக்கு சமனனாய்
தின்று சிலர் தீர்த்தனர்.
தம் வண்டியைத் தள்ளிக் கொண்டு
கார்வண்டிக்குள் போயினர்.

பத்து வயதிலேயே பிள்ளை
பட்டம் பெறவேண்டுமாம்- அதனால்
ஐந்துநாளும் பிள்ளை பாடசாலை போகுது
வந்து பின்னேரம் பாட்டுப்படிக்கப் போகுது.
சனியெங்கும் தனியாகத் தமிழ்படிக்கப் போகுது
ஞாயிறு தோறும் டான்ஸ் பழகப்போகுது.
பிள்ளையா? பொம்மையா?
தொல்லையதற்கு இல்லையா?

கல்யாணச் சந்தையிலே
பிள்ளை விலைபோகுது.
ரூபாயில் சீதனம்
பவுண் டொலராய் ஆகுது.
போட்டோவில் பார்த்தே
மாப்பிளைத் தேர்வும் நடக்குது
பொன்னும், பொருளும் பணமும் கொடுத்து
பெண்ணையும் சும்மா தள்ளிவிடும்போது.
இதைவிட மலிவாக
பொம்மை எங்கு வாங்கலாம்?

பிறப்பு முதல் இறப்புவரை
தன் விருப்புவிட்டு
பேருக்கும் புகழுக்கும் ஊருக்குமாய் வாழும்
இத்தியாகிகளை
பிள்ளையென்பதா? பொம்மையென்பதா

கவிமலர்கள் – கொச்சைவழக்குக் கவிதை

உலக சாரணர் தினம் – புன்னியாமீன்

baden-powell.jpgஉலக சாரணர் தினம் ஆகஸ்ட் 01ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. உலகளாவிய ரீதியிலான சாரணர்களும், சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூரும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாக ஆகஸ்ட் முதலாம் திகதி என சில நாடுகளில் இத்தினம் சிறப்புத்தன்மை பெற்றாலும்கூட, ஜுலை மாத இறுதி வாரமும், ஆகஸ்ட் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொருத்தவரையில் முக்கியமான நாட்களாகும். 1907ம் ஆண்டு ஜுலை மாதம் 28ஆம் திகதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும், தன்னலமற்ற மனித நேயமிக்க சேவையுணர்வை உலகில் விதைத்திட்ட ‘சேர். றொபர்ட் ஸ்டீவன் ஸ்மித் பேடன் பவல்” என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. லண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மகாநாடும், சாரணியப் பாசறையும், ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் ஆறாம் திகதி வரை நிகழ்ந்தது. எனவே, முதலாவது சாரணிய இயக்கப் பாசறை நடைபெற்ற தினத்தை அடிப்படையாகக் கொண்டே உலக சாரணியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

சமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சிக்களமாகக் கல்விச்சாலைகளில் மாணவ, மாணவியர்களுக்கான சாரணர் இயக்கம் உலகளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதி, மத வேற்றுமை கடந்து சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டினை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது. வயது வந்தோர்க்கான கல்வி, சாலை விதிமுறைகளை மேற்கொள்ளுதல், விழா நடைபெறும் காலங்களில் கூட்டத்தினைக் கட்டுப்படுத்துதல், மரங்களை நடுதல் போன்ற பணியினைச் சாரணர் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

வாய்மை, நேர்மை, நம்பகத்தன்மை, தேசப்பற்று, நேசம் ஜீவகாருண்யம், மரியாதை, தைரியம் போன்ற இன்னோரன்ன ஆளுமை விருத்தியம்சங்களைக் கொண்டு மனித நேயப்பண்புகளுடன் சேவைகள் மூலம் சமூகத்துடன் ஒன்றிணைந்த அமைப்பாக மிளிரும், ‘எதற்கும் தயாராக இரு! ” எனும் தொனிப் பொருளைக் கொண்ட சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பிதாவாகக் கருதப்படும் பேடன் பவல், 1857 பெப்ரவரி 22ம் திகதி பிறந்தார். ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கௌரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது.

புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் 1876இல் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார். இளம் வயதில் இராணுவத்தில் இணைந்து கொண்ட பேடன் பவல் இந்தியா, கனடா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரிந்தார். 1910 இல் ஓய்வு பெற்றார். தென்னாபிரிக்காவில் பணியாற்றிய வேளையில், 1907ம் ஆண்டில் 22 இளைஞர்களுடன் சாரணர் இயக்கத்தை ஆரம்பித்தார். லண்டன், பிரவுண்ரு தீவில் முதலாவது சாரணிய இயக்க மகாநாடும் சாரணியப் பாசறையும், இவரால் நிகழ்த்தப்பட்டது. சிறுவர்களுக்கான சாரணீயம் (Scouting for Boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆபிரிக்காவிற்குத் திரும்பிய பேடல் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார்.

1910ல் சாரணியம் உலகெங்கும் பரவத் தொடங்கியது. தற்போது உலகில் சாரணர் சங்கங்கள் 216 நாடுகளில் செயல்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கையிலும் பார்க்கக் கூடுதலான நாடுகளில் செயல்படும் தொண்டு நிறுவனமாக சாரணர் அமைப்பு விளங்குகின்றது. உலகம் முழுவதிலும் 38 மில்லியன் சாரணர்கள் உள்ளனர். ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் 18 மில்லியன் சாரணர்கள் உள்ளனர் எனபுள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன..

1912ல் உலக சகோதரத்துவத்தை வளர்க்கும் தூரநோக்கில் உலகப் பயணத்தை பேடன் பவல் மேற்கொண்டார். இதேவேளை அவரது பாரியார் சீமாட்டி ‘ஒபேவா பேடன் பவல்” 1910ல் பெண்கள் சாரணியத்தை ஆரம்பித்து உலகெங்கும் வியாபிக்க வழிகோலினார். 1916ல், குருளைச் சாரணர் இயக்கமும், 1918ல் ரோவர்ஸ் சாரணர் இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இன்று சாரணியர் இயக்கமும், பெண்கள் சாரணிய இயக்கமும் சமுதாய வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றன. இவை எதிர்காலச் சமூகத்திற்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றது. உலக சகோதரத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட சாரணியத்தின் மூலமாக உலக நாடுகளில் சமாதானத்தையும், ஒற்றுமையையும் கட்டியெழுப்புதல் வேண்டும், என்பதே இன்றைய எதிர்பார்ப்பாகும். பேடன்பவல் தனது இறுதிக்காலத்தில் துணைவியாரோடு ஆபிரிக்காவில் வசித்தார். 1941-01-08ம் நாள் காலமானார்.

1920ல் உலக சாரணர்களை ஒன்றிணைத்து, சாரணர் ஜம்போரி ஒன்றை தனது தலைமையில் இங்கிலாந்தில் கொண்டாடினார். இந்நிகழ்வு 1920-08-06ம் திகதி இடம்பெற்றது. அந்நாளில் பேடன்பவல் உலகின் பிரதம சாரணர் எனப் பிரகடனப்படுத்தப்பட்டார். இவரை இங்கிலாந்தின் 5ம் ஜோர்ஜ் மன்னர், ‘கில்வெல் பிரபு” எனப் பெயர்சூட்டி, பாராட்டிக் கெளரவித்தார். அன்று முதல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை சாரணர் ஜம்போரி உலக நாடுகளில் நிகழ்கின்றது.

இன்று உலகில் பெருமளவு நாடுகளில் பலகோடி சாரணர் இயக்கங்கள் உருவாகி, பேடன் பவல் பிரபுவின் தூரநோக்கை நிறைவேற்றி வருகின்றமை, நிறைவளிக்கின்றது. சாரணியர் அமைப்பு உலகமயப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். சாரணர் இயக்கத்தில் ஜம்போரிப் பாசறைகள் முக்கியத்துவம் பெற்றவை. சாரணர் உலக ஜம்போரிகளில், உலகளாவிய ரீதியில் சாரணர்கள் ஒன்றிணைக்கப்பட்டு பயிற்சிக்கும், செயற்பாட்டிற்கும், கடமையுணர்வு, நற்புணர்வு ஆகியவற்றிக்கு ஏற்ற வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். ஆரம்பகாலங்களில் ஜம்போரிகளில் உலகளாவிய சாரணர்கள் ஒன்றிணைக்கப்பட்டனர். தற்போதைய நாடுகளில் அளவிலும் பிரதேச, பிராந்திய ரீதியிலும் தலைமைத்துவம் ஏற்றுள்ள சாரணியத்தில் சாதனை படைத்துள்ள சாரணர்களே ஜம்போரியில் வரையருக்கப்படுகின்றனர்.

முதலாவது சாராணியர் உலக ஜம்போரி (உலக சாரணியர்களை ஒன்றிணைக்கும் பாசறை) 1920ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஒலிம்பியா எனுமிடத்தில் நடைபெற்றது. முதலாவது உலக ஜம்போரியில் 34 நாடுகளைச் சேர்ந்த சுமார் 8, 000 சாரணியர்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது உலக ஜம்போரி, 1924ஆம் ஆண்டு டென்மார்;கில் நடைபெற்றது. இதில் சுமார் 5, 000 சாரணியர்கள் கலந்து கொண்டனர்.

1929ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்றாவது உலக ஜம்போரில் 69 நாடுகளைச் சேர்ந்த சுமார் 50, 000 சாரணியர்கள் கலந்துகொண்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. தொடர்ந்து நான்காவது உலக ஜம்போரி 1933ஆம் ஆண்டு ஹங்கேரியிலும் (25, 792 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஐந்தாவது உலக ஜம்போரி 1939ஆம் ஆண்டில் ஹொலன்டிலும் (28, 750 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஆறாவது உலக ஜம்போரி 1947ஆம் ஆண்டு பிரான்சிலும் ( 24, 152 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), ஏழாவது உலக ஜம்போரி 1951ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலும் ( 12, 884 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), எட்டாவது உலக ஜம்போரி 1955ஆம் ஆண்டு கனடாவிலும் (11, 139 சாரணியர்கள் கலந்து கொண்டனர்), 80 நாடுகளிலிருந்து சுமார் 30, 000 பேர் கலந்துகொண்ட ஒன்பதாவது உலக ஜம்போரி 1957ஆம் ஆண்டு இங்கிலாந்திலும் 44 நாடுகளிலிருந்து 12 ,203 பேர் கலந்துகொண்ட பத்தாவது உலக ஜம்போரி 1959ஆம் ஆண்டு பிலிப்பைன்சிலும் 14, 000 சாரணியர்கள் கலந்துகொண்ட, பதினொறாவது உலக ஜம்போரி 1963ஆம் ஆண்டு கிரேக்கத்திலும், பன்னிரெண்டாவது உலக ஜம்போரி 1967ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிலும் நடைபெற்றன. ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற இந்த ஜம்போரியில் 105 நாடுகளைச் சேர்ந்த 12, 011 சாரணியர்கள் பங்கேற்றுள்ளனர்.

பதின்மூன்றாவது உலக ஜம்போரி 1971ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்றது. இந்த ஜம்போரியில் 87 நாடுகளைச் சேர்ந்த 23, 758 சாரணியர்களும், 1975ஆம் ஆண்டு நோர்வேயில் நடைபெற்ற 14வது உலக ஜம்போரியில் 91 நாடுகளைச் சேர்ந்த 17, 259 சாரணியர்களும், பங்கேற்றுள்ளனர். 15வது உலக ஜம்போரி ஈரானில் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும், ஈரானில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகள் காரணமாக அந்த ஜம்போரி நடைபெறவில்லை. இதனால் 15வது உலக ஜம்போரி 1983ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்றது. இதில் 14, 752 சாரணியர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 1987-1988 இல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 16வது உலக ஜம்போரியில் 84 நாடுகளைச் சேர்ந்த 14, 434 சாரணியர்களும், 1991 இல் கொரியாவில் நடைபெற்ற 17வது உலக ஜம்போரியில் 135 நாடுகளைச் சேர்ந்த சுமார் 20.000 சராணியர்களும், 1995 இல் நெதர்லாந்தில் நடைபெற்ற 18வது உலக ஜம்போரியில் 166 நாடுகளைச் சேர்ந்த 28, 960 சாரணியர்களும், 1998-1999 20ஆம் நூற்றாண்டில் கடைசியாக சிலி நாட்டில் நடைபெற்ற 19வது உலக ஜம்போரியில் 157 நாடுகளைச் சேர்ந்த சுமார் 31, 000 சராணியர்களும், 21ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற முதலாவது ஜம்போரி 2002-2003 இல் தாய்லாந்தில் நடைபெற்றது. இந்த 20வது உலக ஜம்போரியில் 147 நாடுகளைச் சேர்ந்த சுமார் 24. 000 சாரணியர்கள் கலந்து கொண்டனர். சாரணியம் உருவாக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் நேரத்தில் 21வது உலக சாரணிய ஜம்போரி இங்கிலாந்தில் 2007ஆம் ஆண்டு நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த ஜம்போரியில் 147 நாடுகளைச் சேர்ந்த சுமார் 24, 000 சாரணியர்கள் பங்கேற்றனர்.

22வது உலக ஜம்போரி 2001இல் சுவீடன் நாட்டிலும்ää 23வது உலக ஜம்போரி 2015ஆம் ஆண்டு ஜப்பானிலும், 24வது உலக ஜம்போரி 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்;பட்டுள்ளன.

சாரணிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட பலர, ; இன்று உலகில் பலதுறைகளிலும் பெயர் பதித்திருப்பதைக் காணலாம். உதாரணமாக, முதன்முதலாக சந்திரனில் காலடியெடுத்து வைத்த நீல்ஆம்ஸ்ரோங் ஒர் சாரணியரே இவர் அமெரிக்காவின் Eagle Scout விருது பெற்றவர். நிலவில் இதுவரை காலடி பதித்து நடந்த 12 பேரில் 11 பேர் சாரணர்கள் .(ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற ஆல்டிரின் உட்பட). 1959 லிருந்து இதுவரை 214 பேர் விண்வெளி விஞ்ஞானிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களில் 125 பேர் சாரணர்கள். ஜெமினி 7, ஜெமினி 12, அப்பல்லோ 8, அப்பல்லோ 13, ஆகிய விண்கலன்களில் சென்று வந்தவர், NASA வின் தலைவராக இருந்தவர் ஜேம்ஸ் லோவல் ஒரு சாரணர். உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜான் F கென்னடி ஒரு Cub Scout ஆக இருந்தவர். அமெரிக்க ஜனாதிபதிகள் வரிசையில் பில் கிலிண்ட்டன், ஜார்ஜ் புஷ் போன்றோர்களும் சாரணர்களே. உலகப் புகழ் பெற்ற Microsoft Computer நிருவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் பில் கேட்ஸ் ஒரு சாரணர். இவ்வாறான பல சாரணியர்கள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

இலங்கை சாரணர் சங்கம் 2012ம் ஆண்டில் நூற்றாண்டு நிறைவைக் காணவிருக்கின்றது. ஆனால், உலக சாரணர் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதற்கு எமது சங்கத்தில் ஒரு இலட்சம் சாரணர்கள் உறுப்புரிமை பெறவேண்டும். இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினரே தற்போது இலங்கை சாரணர் சங்கம் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

2012 ஆம் ஆண்டிற்குள் இலங்கை சாரணர் சங்கத்தின் உறுப்பினர்களை ஒரு இலட்சமாக்குவதற்கான திட்டம் ஒன்று கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 1907 இல் உலகில் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கம் இலங்கையில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1912 இல் கிறீன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

1912ல் இலங்கையில் சாரணர் இயக்கம் மாத்தளை கிறிஸ்து அரச கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. 1917 மார்ச் 21ல் கண்டி பெண்கள் உயர் பாடசாலையில் பெண்கள் சாரணியம் உருவாக்கப்பட்டது. உலக சாரணியப் பொது அமைப்பின் ஒரு பகுதியாக ஆசிய பசுபிக் பிராந்தியமுள்ளது. உலகில் இது பரந்துபட்ட பிராந்தியமாகும். இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பெருமளவு சனத்தொகையும் கொண்டுள்ளதுடன் அரசியல் பொருளாதார கல்வி சமூக கலாசாரம் என்பவற்றிலும் முன்னேறி வரும் நாடுகளாகும். இந்நாடுகளிலுள்ள தேசிய சாரணர் இயக்கங்கள் ஒன்றிணைந்து ஆசிய-பசுபிக் பிராந்திய அமைப்பினை உருவாக்கியுள்ளன. இலங்கையும் இவ்வமைப்பில் இணைந்து தனது பங்களிப்பினைப் புரிந்து வருகின்றது. 1921ம் 1934ம் ஆண்டுகளில்,தனது மனைவியோடு பேடன்பவல் இலங்கைக்கு விஜயம் செய்து பல சாரணிய நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

‘அயலகத் தமிழறிஞர்கள்” – இலங்கைத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு

ilnco.jpgஇலங்கைத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ள ‘அயலகத் தமிழறிஞர்கள்” என்ற தலைப்பில் தமிழக அறிஞர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் எழுதிய இந்த நூல் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளிவர உள்ளது.

இலங்கைத் தமிழறிஞர்கள் தனிநாயகம் அடிகளார், க.சிவத்தம்பி, கா.கைலாசபதி, ஈழத்துப்பூராடனார் (செல்வராசகோபால்),  சி.மௌனகுரு, அ.சண்முகதாசு, எம்.ஏ.நுஃமான், சுப்பிரமணியன், ஆ.வேலுப்பிள்ளை உள்ளிட்டோர் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ள அயலகத் தமிழறிஞர்கள் என்னும் தலைப்பிலான நூல் தமிழ்நாட்டில் வெளிவர உள்ளது. 200 பக்கம் அளவில் அயலகத் தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். 

ayalaka.jpgதமிழகத்தில் வெளிவரும் தமிழ் ஓசை நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவந்த களஞ்சியம் பதிப்பில் ஆறு மாதங்களாக அயலகத் தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளியானது. அதில் 30 அயலகத் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, தமிழ் இலக்கியப்பணிகள் இடம்பெற்றிருந்தது. கால்டுவெல், போப் அடிகளார், தனிநாயகம் அடிகளார், அ.கி.இராமனுசன்,  கமில் சுவலபில், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அலெக்சாண்டர் துபியான்சுகி,  தாமசு லேமான், சுப.திண்ணப்பன், ஆ.இரா.சிவகுமாரன், முரசு.நெடுமாறன் உள்ளிட்ட முப்பது தமிழுக்கு உழைத்த அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் இந்தத் தொடர் அறிஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் இடம்பெற்ற கட்டுரைகள் இணையத்தில் வெளிவந்ததால் உலக அளவில் இந்தத்தொடருக்கு ஆதரவு இருந்தது. தொடர் நிறைவு பெற்றதும் வயல்வெளிப் பதிப்பகத்தின் சார்பில் இந்த நூல் வெளிவர உள்ளது. தமிழக விலை 200 ரூபாவாகும்.

முனைவர் மு இளங்கோவன் எழுதிய இணையம் கற்போம் என்ற நூலும் அதேநாளில் வெளிவர உள்ளது. இணையத் தமிழறிஞர் பட்டம் பெற்ற முனைவர் மு. இளங்கோவன் தமிழறிஞர்களின் வாழ்க்கை, கலை, இலக்கியம், கல்வெட்டு, சிற்பம் குறித்து தொடர்ந்து இணையத்தில் எழுதி வருபவர். தமிழ் இணையப் பயிலரங்கைத் தமிழகம் முழுவதும் நடத்தி தமிழ் மாணவர்களுக்கு இணையம் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருபவர். தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல்,  வலைப்பூ உருவாக்கம், விக்கிப்பீடியாவில் எழுதுதல், மின்னிதழ்கள் உள்ளிட்ட துறை பற்றி எழுதிய பதினைந்து கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.112 பக்கம் அளவுள்ள இந்த நூலின் தமிழக விலை 100 ரூபாவாகும். 

நூல் ஆசிரியரிடம் தொடர்புகொள்ள பின்வரும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்

.muelangovan@gmail.com
 

டி.கே.பட்டம்மாளின் உடல் மைலாப்பூரில் தகனம்

pattammal.jpgசென்னையில் நேற்றுக் காலமான பிரபல கர்நாடக இசை மேதை  டி.கே.பட்டம்மாளின் உடல் நேற்று மாலை மைலாப்பூரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.. பெருந்திரளான மக்கள் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர். மரணச்செய்தி கேட்டதும் இசை உலகைச் சோந்த பலர் டி.கே.பட்டம்மாளின் இல்லத்துக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிரபல கர்நாடக இசைப் பாடகர் பால முரளி கிருஷ்ணா,  நடிகை வைஜயந்திமாலா,  கவிஞர் வாலி,  நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன்,  பிரபல வீணை இசைக் கலைஞர் வித்தியா சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவு குறித்து அ..தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்களை தனது நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் பாடி தமது தேச பக்தியை வெளியிட்டவர் டி.கே.பட்டம்மாள் என அந்த அனுதாபச் செய்தியில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தெருக்கதை: வழிப்போக்கன்

kulan-article2.jpg
தெருக்கதைகள்: 1

நான்: யோசப்பு அண்ணை! எல்லாம் உப்புச்சப்பு இல்லாமல் முடிஞ்சு போச்சுது. நீங்கள்தான் புலிகளின்டை முதல் புள்ளியாக நிண்டனீங்கள்.
யோசப்பு: ஓம் தம்பி எங்கடை காலகஸ்டம் இப்படியாப்போச்சு. யாருக்குத் தெரியும் இவன் உப்பிடிப் படம்காட்டுவான் எண்டு.

நான்: நீங்கள்தான் தலைவரைத் தலையிலை கொண்டு திரிந்தனீங்கள். இப்ப உப்பிடிக் கதைக்கிறியள்.
யோசப்பு: கொண்டு தெரிஞ்சனாங்கள் தான். எங்களுக்கு விடுதலைவேணும் தானே தம்பி.

நான்: நீங்கள் மட்டும்தான் உண்மையைச் சொல்லுறியள். உங்களுக்கு மட்டும்தான் விடுதலை வேணும் எண்டு. புலியள் மக்களுக்கு விடுதலை, மக்களுக்கு விடுதலையெண்டு தங்களுக்குக்குத் தானே நாடு கேட்டவங்கள், நாடு நாடாய் காசு சேர்த்தவங்கள்.
யோசப்பு: நான் எங்களுக்குகெண்டது மக்களுக்குத் தான் தம்பி.

நான்: அப்ப நீங்கள் என்னும் மாறேல்லை?
யோசப்பு: நான் மாறிட்டன் அப்பு. கே.பின்டை பக்கம் மாறிட்டன். நான் இப்ப புலியில்லை.

நான்: அப்ப கே.பின்டை குழுவை என்னெண்டு சொல்லுறது?
யோசப்பு: அது பிரபாகரன் புலி இது கேபியின் புலி.

நான்: உங்கடை புலி என்ன செய்யப்போகுது?.
யோசப்பு: செய்தியள் பாக்கிறதில்லையோ? நாடுகடந்த தமிழ்ஈழத்துக்கான போராட்டம் தொடங்கிட்டம். எங்கடை அரசியல் போராட்டம்தான்.

நான்: நீங்கள் எல்லாரும் வைச்சால் குடும்பி வழிச்சால் மொட்டைதான்? ஒண்டில் ஆயுத போராட்டம் இல்லையெண்டால் அரசியல் போராட்டம்.
யோசப்பு: ஆயுதப்போராட்டம்தான் எல்லாம் முடிஞ்சுபோச்சே. உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து எங்களை நாசம் அறுத்துப்போட்டுதே. போதாதே தம்பி?.

நான்: வெளிநாடுகளைக் குறைசொல்லாதையுங்கோ? நீங்களும் அமெரிக்காவேடையும் சண்டைக்கு நிண்டனியள்தானே. எண்டைக்கு அரசியலைப்பற்றி யோசிச்சனியள்? சரி கிடைச்ச தீர்வுகளையாவது வைச்சுக் கொண்டு தொடர்ந்து போராடியிருக்கலாம் தானே? நீங்களும் எங்கடை மக்களையே கொன்றுபோட்டு இராணுவம் கொல்லுது என்று உலகுக்குப் படம் காட்டினியள் தானே. உங்கடை திருகு தாளங்களையெல்லாம் சற்றலைட்டிலை மற்றநாடுகள் பாத்திருக்கும். சொந்த மக்களையே பயணக்கைதியாக வைத்திருந்த ஒரேயொரு போராட்டம் உங்கடைதான்.
யோசப்பு: நடந்ததைக் கதைச்சுப் பிரயோசனம் இல்லை, நடக்க வேண்டியதைப் பாப்பம்.

நான்: இனி நடக்க என்ன கிடக்கு. ஊரை அடிச்சு அரசாங்கத்துக்குக் குடுத்தியள். போராட்டம் என்று போராடும் சக்திகளான மக்களையே கொன்று குவிச்சியள். மிச்சம் மீதியாய் கொஞ்சச்சனம் தப்பி ஒட்டி இருக்குதுகள். தொடருங்கோ உங்கடை போராட்டுங்களை. கிழக்கிலை நீங்கள் வளத்துவிட்ட நம்பிக்கை நட்சத்திரங்கள் கிளம்பிட்டினம். இனி இந்தியாவும் தன்ரை பங்குக்கு தமிழ்குழுக்களுக்கு காசும் ஆயுதப்பயிற்சியும் குடுத்துவிடும் சீனனை இலங்கையிலை இருந்து எறிய.
யோசப்பு: என்னடா தம்பி நம்பிக்கையைக் கைவிடக்கூடாது. இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்.

நான்: எல்லாம் செய்து முடிச்சுப்போட்டு இப்ப எங்களிட்டை வாறியள். அப்ப சொன்னம் கேட்டனியளோ? இப்பவும் நீயோ நானோ என்று பிரிஞ்சு நின்று அடிபடாமல் எல்லாருமாய் சேர்ந்து சேர்த்த காசுகளை அந்தமக்களுக்குக் கிடைக்கச் செய்கிறதோடை ஆயுதம் அது இது என்று அவசரப்படாமல் நிதானமாய் எப்படி உலகநாடுகளின் அனுசரணையோடை எம்மக்களுக்கு குறைந்தபட்ச அரசியல் தீர்வு ஏதாவது கிடைக்குமோ என்று பாருங்கோ.
யோசப்பு: அதைத்தானே எங்கடை கேபியும் சொல்லுறார். பிரபாகரன் இருக்கிறார் எண்ட மற்றக்குழு பிரபாகரன் வரட்டும் எண்டு பாத்துக் கொண்டிருக்கினம்.

நான்: கேபி சொல்லுறது சரி தமிழீழம் என்றும் சொல்லுறியள். உலகநாடுகளே சொல்லிப்போட்டுது சின்னத்தீவைப் பிரிக்க ஏலாது எண்டு. இப்ப பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ எண்டதில்லை இண்டைய பிரச்சனை. இருந்தா வரட்டும், அவர் வரமாட்டார் சனத்தைப்படுத்தின பாட்டுக்கு சனமே அடிச்சுச் சாக்காட்டிப் போடும். உங்கடை கேபியும் தமிழீழம் எண்டு காலத்தை இழுத்தடிக்கிறதை விட்டுப் போட்டு ஏதாவது உடனடியாக சூட்டோடை சூடா உலகத்தின்ரை பார்வை மற்றப் பக்கங்களுக்கு திரும்பமுன்னம் நடக்க வேண்டியதைப் பாருங்கோ. ஆறினால் கஞ்சி பழங்கஞ்சிதான்.

நான்: (யோசப்புவின் நண்பர் ஒருவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறார்) அண்ணை உங்கடை பிரெண்டு உங்களைக் கண்டும் காணாத மாதிரிப்போறார்.
யோசப்பு: அவர் என்ணோடை கொஞ்சம் மனக்கசப்புத் தம்பி. எல்லாம் புலிப்பிரச்சனைதான். வேறை என்ன காசுதான்.

நான்: புலிக்கெண்டு வாங்கி உங்கடை பொக்கட்டை நிரப்பிப்போட்டியள் போலை?
யோசப்பு: தம்பி உப்பிடிக் கதைக்கப்படாது. நான் புலிக்கு விசுவாசத்தோடைதான் காசு சேத்தனான். எங்களுக்கு, சேர்க்கிற காசிலை 15 விகிதகொமிசன் தந்தவங்கள்தான். நாங்கள் எங்கடை வேலை வில்லட்டியை விட்டுப்போட்டுத்தானே காசு சேர்க்கப் போனனாங்கள். போற இடத்திலை எத்தினை கேள்வி நியாயம். மழை வெய்யில்…காடு கரம்பையெண்டு திரிஞ்சனாங்கள்.

நான்: சரி மனச்சாட்சிப்படி சொல்லுங்கோ உது உதவியோ தொழிலோ?
யோசப்பு: உதவிதான் தம்பி. மற்றவை எல்லாம் வீட்டிலை குளிரிலை நித்திரை கொள்ளேக்கை நாங்கள் மட்டும் உந்தப் பனிக்கிள்ளையும் குளிருக்கிள்ளையும் திரிஞ்சு காசு சேத்தனாங்கள்.

நான்: அதுக்குத்தானே உங்களுக்கு கொமிசன் தந்தவங்கள். உங்களுக்குக் காசு தந்தவங்கள் எல்லாம் வானத்திலை இருந்து கொட்டுண்டதைப் பொறுக்கித்தரேல்லை.
யோசப்பு: நீ என்ன தம்பி உதிலைபோன என்ரை பழைய பிரெண்டு மாதிரிக்கதைக்கிறாய். அவரும் உப்பித்தான்; தந்தகாசைத் திருப்பித்தா எண்டு கேட்கிறார். போராட்டத்துக் கெண்டு கொடுத்துப்போட்டு என்னட்டைக் கேட்டால் நான் எங்கை போறது தம்பி.

நான்; கனக்கவே தந்தவர்? வாங்கின கொமிசனிலை குடுக்கவேண்டியது தானே.
யோசப்பு: ஒரு இலட்சம். அந்தக்காசை ஒவ்பிசிலை குடுத்திட்டன். போய் அவங்களைக் கேட்க வேண்டியது தானே.

நான்: உங்களிட்டைத் தந்த காசை எப்படி அவங்களிட்டைக் கேட்கிறது. உங்களுக்குத் தெரியுமோ அந்தாள் பொலிசுக்குப் போகலாமமெண்டு.
யோசப்பு: அதுதானே முடியாது தம்பி. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு எப்படி காசு குடுப்பாய் என்று கேட்டு அவரையுமெல்லோ உள்ளுக்குப் போடுவாங்கள்.

நான்: ஓகே..கொஞ்சப்பேர் வந்து தன்னை வெருட்டிக்காசு கேட்டது என்று சொல்லலாம் தானே. புலியள் வெருட்டிக்காசு வாங்கிறது ஐரோப்பா முழுக்கத் தெரியும் தானே.
யோசப்பு: அதுக்குத்தானே நான் கே.பின்டை பக்கம் போட்டேனே. பொலிஸ் வந்தால் நான் கூட்டிக் கொண்டுபோய் யாருட்டை காசு கொடுத்தனான் எண்டு காட்டுவன். பேந்து புலிகளும் அவரும் பட்டபாடு. இல்லையெண்டால் சொல்லுவன் நான் இப்ப கேபியின் பக்கம் புலியைப்பற்றி எனக்குத் தெரியாது எண்டு.

நான்: உப்பிடிச் சொல்லி நீங்கள் நழுவேலாது. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு காசு சேர்க்கிறதற்கு சட்டம் இடங்கொடுக்காது. காசுகுடுத்த எல்லாரும் சேர்ந்து பொலிசுக்கோ கோட்டுக்கோ போனால் வாங்கின காசுக்கு நீங்கள் தான் பொறுப்பு.
யோசப்பு: அதுதானே பிரபாகரனின்டை கையெழுத்தோடை றிசீட்டுக் கொடுத்திருக்கிறம். போய் பிரபாகனிட்டைக் கேட்க வேண்டியது தானே.

நான்: நீங்கள் சொல்லுறமாதிரி பிரபாகன் மேசையிலை இருந்து உந்த றிசீட்டுக்களுக்கு கையெழுத்துப் போட்டுக் கொண்டு இருந்ததாலைதான் போராட்டம் தோத்துப் போனதாக்கும். என்ன கதைவிடுகிறியள் அண்ணை. உந்த றிசீட்டே கள்ளவேலை தான். ஒண்டைப் பிடிக்கப்போய் எல்லாம் பிடிபடப்போகுது.
யோசப்பு:அப்ப என்ன தம்பி செய்கிறது.

நான்: போய் பிரபாகரனிட்டைக் கேழுங்கோ.
யோசப்பு: தம்பி என்னை நடுத்தெருவிலை விட்டுவிட்டுப் போகிறீர்.
நான்: நீங்கள் எல்லாரும் கறக்கிறதையெல்லாம் கறந்து போட்டு எங்களையும் மக்களை நடுத்தெருவிலைதானே விட்டுனீங்கள். வருவன் இப்பவில்லை… காசெண்டு வந்தால் பொல்லோடை வருவன்…

முள்ளி வாய்க்கால் : விஜி

Nanthi_Kadal_lagoon
புல் வெளியும்
கொஞ்ச மரங்களும்
கொண்ட இடங்களெல்லாம்
முள்ளிவாய்க்காலாய்தான்
கண்முன் விரிகிறது.

கடலின் நினைவு
அச்சம் தருகிறது
அதன் ஓ வென்ற
இரைச்சல்; தாண்டி
மனிதர்களின்
மரண ஓலம் மேலெழுகின்றது!

கடல் அறியுமோ
எங்கள் மனிதர்களின்
கண்ணீரின் உப்பையும்
குருதியின் அடர்த்தியையும்!

எந்தக் குழந்தை
தன் இறுதி மூச்சை
எங்கு நிறுத்தியதோ?
இன்னும் குழந்தைகள்
வழிதவறி அங்கு
அலைந்து திரியுமோ?

நீர்க்கரையில்
பாத்திரங்கள் பண்டங்கள்
சிதறிக் கிடக்கின்றன.
யாருக்காய் அவை காத்திருக்கின்றனவோ?

தனியே தொங்கும்
கைப்பை
சோகமாய் பார்த்திருக்கிறதே
போனவர் எப்போது
திரும்பி வருவாரோ?

புலம்பெயர் தெருக்களில்
இப்போது
சுடு சாம்பல்
காற்றில் மணக்கிறது!
சுற்றிலும்
மரண ஓலம் ஓயாது
துரத்துகிறது!

எந்தக்காலம் இனி
முள்ளிவாய்க்கால்
தன்
கதை பேசும்?

 விஜி

வசந்தம் போதும் எமக்கு! : தானிஸ் அஷ்ரப்

வசந்தம் போதும் எமக்கு

வடக்கு வெழுத்தது
வசந்தம் கிடைத்தது
வழக்கு ஜெயித்தது
கணக்கும் முடிந்தது
நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் வலிக்கிறது…
உனக்கேன் வீண் பாட்டு
உடனே நிப்பாட்டு.

சுணங்கும் வேளையில்
இனங்கள், சனங்கள்
சுகங்கள் இன்றி
சுருளும் மடியும்
உனக்கேன் வீண் பாட்டு?
மனங்களை மாற்று
மறுவாழ்வு காட்டு!

புலர மறுக்கும் பொழுதெல்லாம்
தருமா வசந்தம்?
கதறும் குழந்தைக்கும்
பதறும் அன்னைக்கும்
அறுந்த உறவுக்கும்
பிரிந்த உயிருக்கும்
தெரிந்தால் கூறும்
தெவிட்டாத வசந்தம்?

இனியும் ஒரு யுத்தம்
இம்மண்ணில் வேண்டாம்
கனியும் ஒரு காலம்
காலடிக்கே வந்தது
தயவு செய்து
தரும போதனைகளை
மர்ம சாதனைகளாக்க வேண்டாம்
கர்ம வீரர்கள் மட்டும்
புறப்படட்டும்
காரியம் நடக்கட்டும்.

மானம் வேண்டுவோரின்
ஞாயங்களை
வாழவிடனும்
அப்போ
வானம் எங்கும்
வெள்ளி பொங்கி
கானம் பாடும்
காரிருள் தேயும்
காற்றுத் தழுவும்
வசந்தம் போதும் எமக்கு!

ஆக்கியோன்
தானிஸ் அஷ்ரப்

கவிஞர் ராஜமார்த்தாண்டன் மரணம்

07rajamarthandan-1.jpgகவிஞர் ராஜமார்த்தாண்டன் 06.06.2009 அன்று அகால மரணமடைந்துவிட்டார். ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தவர்.

1 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்),
2 என் கவிதை (கவிதைகள்),
3 ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு),
4 கொங்குதேர் வாழ்க்கை – 3 (தொகுப்பு, தமிழினி),
5 புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி),
6 புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி).

நிறைய கவிதைகள் எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவுமே முன்வைக்கப்படுகிறார். தொடர்ந்து கவிதைகளின் போக்கையும், கவிஞர்களையும் அவர் உள்வாங்கிக்கொண்டிருந்ததால், இது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. தொடரந்து கவிதைகளை வாசிக்கும் எவரும் ஒருவித தொடர்ச்சியையோ தொடர்ச்சியின்மையையோ காலப்போக்கில் கண்டுகொண்டுவிடமுடியும். மனமாச்சரியங்களுக்கு ஆட்படாமல் தம் கருத்துகளைச் சொல்லும் திறனாய்வாளர்கள் அருகி வரும் நிலையில் ராஜமார்த்தாண்டனின் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தமிழினி வாயிலாக கொங்குதேர் வாழ்க்கை என்னும் தமிழின் மரபு-புதுக்கவிதைகளின் தொகுப்பு வந்தபோது, புதுக்கவிதைகளைத் தொகுக்கும் பணியை ராஜமார்த்தாண்டன் செய்தார். கிட்டத்தட்ட 93 கவிஞர்களின் 893 கவிதைகளை அவர் தொகுத்திருந்தார்.

தகவல் :இளைய அப்துல்லா

இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு கனடாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் அலைஸ் முன்றோவுக்கு

alice.jpgகனடாவை சேர்ந்த பெண்  எழுத்தாளர் அலைஸ் முன்றோவுக்கு இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த சிறந்த ஆங்கில இலக்கிய படைப்புக்கான புக்கர் பரிசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ. 47 லட்சம் ரொக்க பணமும் அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு கனடாவின் அலைஸ் முன்றோ, இந்தியாவின் மகாஸ்வேதா தேவி, இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து எழுத்தாளர் வி.எஸ்.நைபால் உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

இது குறித்து நடுவர் குழுவினர் கூறுகையில், அலைஸ் முன்றோ சிறுகதை எழுத்தாளர் என்ற அளவில் தான் அனைவராலும் அறியப்பட்டுள்ளார். ஆனால், அவரது நாவல்கள் அனைத்துமே தலைசிறந்த எழுத்தாளர்களின் தலைசிறந்த எழுத்துக்களை போல் உள்ளது. அவரது புத்தகம் ஒவ்வொன்றையும் படிக்கும் போது நாம் இதுவரை அறிந்திராத புதிய விஷயம் ஒன்றை கற்றுக்கொள்ளலாம் என்றனர்.

இந்த விருது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என முன்றோ தெரிவித்துள்ளார்.