கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் தம்மை விசாரணை செய் அல்லது விடுதலை செய் என கோரி இலங்கை சிறைச்சாலைகளுக்குள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடாத்துகின்றனர்
வன்னி யுத்த நடவடிக்கைகளுக்கு முன்னர் வட- கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அல்லது புலிகள் என சந்தேகிக்கப்படும் அரசியற் கைதிகள் அண்ணளவாக 1200 பேர் வரையில் இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு குறிப்பிடத்தக்கோர் பல வருடங்களாக சிறையில் உள்ளனர்.
இவர்களில் பெரும்பான்மையானோர் இன்றுவரை நீதி விசாரணைக்காக எடுத்துச் செல்லப்படாமலேயே (ரிமான்ட் கைதிகளாக) தடுத்து வைக்கப்பட்டுள்னர். இவர்கள் தம்மை ‘விசாரணை செய்’ அல்லது ‘விடுதலை செய்’ என்ற தமது போராட்டங்களை தமது சார்பில் எடுத்துச் சொல்ல யாரும் அக்கறை அற்றவர்களாகவும் உள்ளனர் என்றும், இப்படி சிறைகளில் உள்ள பலர் தாம் எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்கள் என்றும் தம்மீது குற்றங்கள் இருப்பின் நிரூபித்து தண்டனை வழங்கலாம் என்றும் அதைவிடுத்து தம்மை நீதி விசாரணைகள் இன்றி தடுப்புக்காவல் சிறையில் அடைத்திருப்பது இலங்கை அரசின் மனிதாபமற்ற செயல் என்றும் கண்டிக்கின்றனர். இலங்கை அரசு தம்மை தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே மனிதாபிமானமற்ற முறையில் நடாத்துவதாகவும் கருத்து கூறுகின்றனர்.
சிறைகளில் உள்ள போராளிகளில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அல்லது விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தவர்கள் என பலதரப்பட்டவர்களும் அடங்குவர். இச்சந்தேக நபர்கள் கிட்டத்தட்ட 1200 பேர்வரையில் வன்னி யுத்தத்திற்கு முன்பு கைசெய்யப்பட்டவர்கள் இவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது இலங்கை இராணுவம் கைது சென்று விசாரணையின் பின்னர் கொன்றுவிட்டது இன்னும் சிலர் இவர்களில் பலர் சயனைட் உட்கொண்டு மடிந்து போயினர் என்று கருதப்படுபவர்கள் இலங்கை சிறைச்சாலையிலும் தடுப்பு முகாமிலும் இராணுவ பொலீஸ் முகாம்களிலுமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிறு பகுதியினர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டவர்களுமாக சிறைச்சாலைகளிலும் உள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் J வாட்டில் 68 பேரும், G செல்லில் 75 பேரும், பெண்கள் பிரிவில் பெண்கள் 53 பேரும் CRP மகசீன் சிறையில் 159 பேருமாக உள்ளனர். G செல்லில் உள்ளவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டு பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற கைதிகளில் பலர் 10வருடங்கள், 12வருடங்கள், 15வருடங்கள் சிறைத்தண்டனை பெற்று தண்டனை அனுபவித்துக் கொண்டும் உள்ளனர்
இதைவிட அநுராதபுரம் சிறைச்சாலைகளில் 200க்கு மேற்ப்பட்டோரும் யாழ்ப்பாண சிறையில் 250 க்கு அதிகமானோரும், அவர்களுடன் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்தோருமாக 400 பேர்வரையிலும், பூசா தடுப்பு முகாமில் 330க்கு மேற்ப்பட்டோரும் உள்ளனர். இதைவிட சிறைச்சாலை ஆணையாளரின் கட்டுப்பாடல்லாத CID, DID, NIB போன்ற இராணுவ, பொலீஸ், உளவுப்பிரிவினரின் தடுப்பு முகாம்களிலும் என பரவலாக 1500 பேர்வரையிலான தமிழ் பேசும் அரசியற் கைதிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்னர்.
(புலிகளுடனான முள்ளி வாய்க்கால் வரையில் நடைபெற்ற வன்னி இறுதி யுத்தத்தில் யுத்தத்தின்போது கைது செய்யப்பட்டவர்களும், பின்னர் வன்னி அகதி முகாம்களில் தெரிவு செய்து கைது செய்ப்படுபவர்களும் ,இறுதி யத்தத்தின்போது கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களும், சரணடைந்தவர்களும் உட்பட IDP முகாம்களில் தம்மிடம் பதிவு செய்யும்படி கேட்டுவிட்டு புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி இந்த கட்டுரையில் சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும்.)
சிறைக் கைதிகளில் 75 சதவிகிதத்தினர் 2003ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டுவரையிலான காலப்பகுதிகளில் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு எடுத்து வரப்பட்ட விடுதலைப்புலிகள் என்ற சந்தேக நபர்களே. இவர்களில் மீதி 25 சதவிகிதத்தினர் 7வருடங்கள், 10வருடங்கள், 20வருடங்கள் 12 வருடங்களாக நீதிவிசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களேயாவர். இந்தக் கைதிகள் பலர் சித்திரவதைகளினால் ஏற்ப்பட்ட காயங்களுடனும் மனநோயாலும் பாதிப்படைந்தவர்களாகவே உள்ளனர். இவர்கள் தாம் இந்த சிறைகளிலேயே வாழ்ந்து மடிந்து போயிடுவோம் என்று எதிர்பார்க்கின்றனர்.
இந்த சிறைகளில் உள்ள பெண்கள் சிலர் கைதுசெய்யப்படும்போது கர்ப்பமாக இருந்தவர்கள். இவர்கள் சிறையில் இருக்கும் போதே குழந்தைகள் பிறந்தும் இக் குழந்தைகள் தற்போது 23 மாதம், 20 மாதம் மற்றும் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தைகளாக உள்ளனர். இக்குழந்தைகள் தமது தாய்களுடன் நீதி மன்றத்திற்கு வரும் காட்சிகளை பலர பார்த்த்துள்ளனர். இந்த குழந்தைகள் ஏன் சிறைகளில் வாழவேண்டும் என்பதை பலரும் கவலையுடன் தெரிவித்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சில கர்ப்பிணிப் பெண்கள் இவர்களின் கணவன்மார்களுடன் கைது செய்யப்பட்டவர்கள். கணவர்மார் சிறைச்சாலையின் ஆண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தத்தம் குடும்பங்களுடன் சந்தித்து கலந்துரையாட ஒவ்வொரு கிழமையும் அனுதிக்கப்படுகின்றனர்.
இந்தக் குற்றமற்ற குழந்தைகள் சிறையில் அடைக்கபட்டுள்ளது சட்டவிரோதமானது தானே என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகருமான நிஹால் ஜெயசிங்கேயிடம் கேட்டபோது ‘தாயே குழந்தையின் பாதுகாவலர் என்றும் குழந்தைகளை பிரித்தெடுத்து தனியே பராமரிக்கும் சட்டமுறைகளும், அதற்குரிய சமூக வசதிகளும் அரசிடம் இல்லை என்பதால் இந்தக் குழந்தைகள் தாயுடன் சிறையில் இருப்பது தவிர்க்க முடியாதது’ என்றும் பதிலளித்தார்.
சிறையிலுள்ள குடும்பங்களுக்கு அவர்களது உறவினர்கள் நண்பர்கள் உணவுப் பொருட்கள் பால்மாப் பொருட்கள் கொண்டுவந்து கொடுக்க சிறைச்சாலை அனுமதித்த போதிலும் யாரும் கொண்டுவந்து கொடுக்கத் துணிவதில்லை. காரணம் கொண்டுவந்து கொடுப்பவர்களும் புலிகளாக இனம் காணப்படுவர் அல்லது அவதானிக்கப்படுவர் அல்லது அவர்களும் காணாமல் போய்விடுவர் என்ற பயமேயாகும். இதற்கு உதாரணமாக சில உறவினர்கள் காணாமல் போயுள்ளதாக இந்த தமிழ் அரசியல் கைதிகள் தேசம் நெற்றுக்கு தெரிவிக்கின்றனர்.
தம்மை ‘விசாரணை செய்’ அல்லது ‘விடுதலை செய்’ என்ற அடிப்படையில் தற்போது போராட்டங்களை நடாத்தம் இந்த அரசியற் கைதிகள் முன்பும் பல தடவைகள் பல உண்ணாவிரத போராட்டங்கள் செய்துள்ளனர். இந்தப் போராட்டங்கள் எதுவித பலனும் அற்றுப்போயுள்ளன. இந்த உண்ணாவிரதப் போராட்டங்கள் பற்றி தமிழ்ச்சமூகம் குறிப்பாக புலம் பெயர் சமூகம் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை என்பதையும் இச்சிறைகளில் உள்ள பல முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
இப் போரட்டங்களின் பின்னர் தம்மை ஜநா மனிதஉரிமைகள் குழு 2007 டிசம்பர் மாதம் 9ம் திகதி சிறைகளுக்கு வந்து பார்வையிட்டனர் எனினும் அவர்களை விசாரணை செய்ய அல்லது விடுதலை செய்ய ஏற்பாடுகள் செய்வதாகவும் 3 மாத காலங்களுக்குள் பதில் தருவதாக உறுதி மொழியும் கொடுத்துச் சென்றனராயினும் இதுவரையில் ஜநா மனித உரிமைகள் குழுவிடமிருந்து எந்த பதிலும் தமக்குக் கிடைக்கவில்லை என்று கருத்துக்களை தெரிவித்தனர்.
தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பல வகையான சித்திரவதைக்குள்ளாவதாகவும் இன்றும் இவர்கள் விசாரணைக்காக எடுத்துச் செல்லப்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது. இது பற்றி நிஹால் ஜெயசிங்கேயிடம் விசாரித்தபோது ‘ரிமான்ட்டில் உள்ளவர்களும் சிறைச்சாலைகளில் தண்டனை பெற்ற கைதிகளும் வெளியே எடுத்துச் சென்று விசாரணைகள் மேற்கொள்வதற்கு இலங்கை சட்டவியலில் இடம் இல்லை என்றும் இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்காது’ என்றும் தெரிவித்தார். நீதிமன்றம் அனுமதி வழங்காமல் சிறையிலிருந்து யாரையும் இலங்கை பாதுகாப்புப் பிரிவினர் எடுத்துச்செல்ல சிறைச்சாலை நிர்வாகம் சிறைச்சாலை ஆணையாளர் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
சிறைச்சாலை நிர்வாகத்தில் உள்ள கைதிகள் தமக்கு மூன்று வேளை உணவு தரப்படுவதாகவும், மூன்று வேளையும் சோறு தரப்படுவதாகவும் கூறினர். காலையில் சோறு சம்பல் சொதியுடனும், மதியத்திலும் இரவிலும் சோறு இரண்டு அல்லது மூன்று கறிகளுடன் தரப்படுவதாகவும், இதில் கிழமையில் ஒருநாள் கோழிக்கறியும் கிழமையில் ஒருநாள் மீன்கறியும், ஞாயிற்றுக்கிழமைகளில் பிரியாணியும் தரப்படுவதாயும் கூறினர்.
தமது போராட்டங்களில் என்றும் எதுவுமே சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக செய்ய முடியாது என்றும் இப்படி சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக செய்தால் தமக்கு தரப்படும் உணவுகள் வசதிகள் குறைக்கப்பட்டு விடும் என நிர்வாகம் தெரிவித்துள்ளதாயும் கூறினர்.
அதேவேளை இந்த தமிழ் அரசியல்கைதிகள் கடந்த தமது சிறைக்கால வரலாற்றில் தைப்பொங்கல், புதுவருடம், மாவீரர் தினம், நத்தார் போன்ற தினங்களை கொண்டாடுவதாயும் தெரிவிக்கின்றனர். இதற்கான வசதிகளை சிறைச்சாலை நிர்வாகமே செய்து தருவதாயும் கூறிய இவர்கள் தாம் வாழும் போதே இப்படியான வாழ்க்கையை தவறவிடக் கூடாது என்பதிலும் தாம் இனிமேல் தமது சாதாரண வாழ்க்கை கிடைக்குமா, என்ற ஆதங்கத்துடன் தாம் வாழும் போதே வாழ்ந்து விடவேண்டும் என்ற மனத்துடன் இந்த சிறைகளில் வாழ்வதையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
சிறைச்சாலை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் பேசும் அரசியல் கைதிகள் தமக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் தரப்படுவதாயும் அத்துடன் ரேடியோ தொலைக்காட்சி போன்ற உபகரணங்கள் தரப்பட்டுள்ளதாயும் தாம் IBC Tamil ன் தாயகம் உறவுப்பால நிகழ்ச்சியினை அரச ஒலிபரப்பு தடை இடையூறுகளுக்கு ஊடாகவும் கேட்கக் கூடியதாக இருந்ததாயும் தெரிவித்தனர்.
இந்த சிறையிலுள்ள இன்னும் சிலர் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட முடியாத இயக்கம் எவ்வளவு பிரச்சினைகளை எதிர் நோக்கினாலும் ஒரு சிறிய பகுதியினரான புலிகளின் செயற்ப்பாட்டிலிருந்து அது மீண்டும் பரந்து வியாபித்து எழும் என்ற அதீத நம்பிக்கையுடன் வாழ்கின்றதையும் நான் உணர்ந்து கொண்டேன்.
பலர் சித்திரவதைகளில் ஏற்ப்பட்ட வடுக்களினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி மனித உரிமைகள் அமைப்புக்களோ சர்வதேச தமிழர் அமைப்புக்களோ எந்தவித அக்கறையும் காட்டவில்லை என்பதையும் இவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் தம்மீது வைக்கப்பட்டுள்ள குற்றங்களை நீதிமன்றம் விசாரிக்க அல்லது தம்மை விடுதலை செய்யவும் தம்மீது செய்யப்பட்ட சித்திரவதைகள் மனித உரிமை மீறல்கள் பற்றியும் கவனம் எடுத்து தமக்கு புலம்பெயர் தமிழர்கள் தமக்கு உதவ வேண்டும் என்றும் இந்த கைதிகள் கோருகின்றனர்.
புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தமது நிலைபற்றியும் சர்வதேச அமைப்புக்கள் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றியும் முதல் தடவையாக முன்வைக்கபபடும் இந்த பதிவை புலம் பெயர் சமூகம் கவனமெடுத்து செயற்ப்படும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த சிறைச்சாலைகளில் உள்ள பல தமிழ் அரசியல்க்கைதிகள் பலர் தமக்கு தேவையான உடுபுடவைகள் துணிகள் போதாமையால் அவதியுறுவதாகவும் குறிப்பாக பெண்களுக்குரிய ஆடைகள் பற்றாக்குறை உள்ளதும் கவனத்தில் எடுத்து உதவிகள் அளிக்கப்பட வேண்டிய தேவையில் உள்ளனர்.
வட-கிழக்கிலுள்ள மக்களின் அன்றாட தேவைகளை இந்த யுத்தம் நாசம் செய்துள்ளதாலும் தமது சாதாரண வாழ்வையே வாழமுடியாது தவிப்பதாலும் மக்கள் வேறு விடயங்களில் அக்கறை எடுத்துக் கொள்ளாமலேயே வாழ்கின்றனர். மேலும் மக்களின் பேச்சுச் சுதந்திரம் உட்பட பல சுதந்திரங்கள் விடுதலை இயக்கங்களாலும் அரசினாலும் கட்டுப் படுத்தப்பட்டிருந்தது இந்த உணர்விலிருந்து இன்று வரையில் தமிழ் மக்கள் விடுபடவில்லை அல்லது விடுபட முடியாது காரணிகள் தொடர்ந்தும் உள்ளன.
வட கிழக்கு மக்கள் புலிகளைப் பற்றி எது சரி பேசினாலே தான் புலிஎன அடையாளம் காணப்பட்டு கொல்லப்படுவேன் என எதிர்பார்க்கும் நிலை இருக்கையிலும் சிறையிலுள்ள தமது உடன் பிறப்புக்கள் உறவினர்கள் பற்றி அக்கறை காட்டினாலே தமது உயிருக்கு ஆபத்து என்ற நிலைப்பாட்டில்- அவர்கள் எப்படி சிறையிலுள்ள புலிகளுக்காக கருத்துக்களை முன்வைக்க அல்லது போராட முடியும்.
புலம் பெயர் நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும் முக்கியமாக நிதி சேகரிப்பு பிரச்சாரங்கள் ஆர்ப்பாட்டங்களில் காட்டும் அரசியல் அக்கறையை இக்கைது செய்யப்பட்ட புலிப்போராளிகளில் காட்டமுடியாமைக்கு புலிகளினால் உருவாக்கப்பட்ட கலாச்சாரமே முக்கிய காரணமாகும். அதாவது சிறை சென்றவர்கள் இயக்க விதிப்படி சயனைட் சாப்பிட்டு தன்னை மாய்த்துக் கொள்ளாத- எமது இரகசியங்களை அரசுக்கு கொடுத்தவர்கள் என்ற கருத்துக் கொண்ட கலாச்சாரமே.
சிறையிலுள்ள போராளிகள் தாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாகவும் தாம் அக்கறையில்லாமல் கைவிடப் பட்டவர்களாகவும் தாம் என்றோ ஒருநாள் இலங்கை அரசினால் கொல்லப்படுவோம் என்ற உணர்வுடனும் வாழ்கின்றனர். இன்னும் சிலர் தாம் விடுதலை செய்யப்படின் வெளிநாடுகளுக்கு செல்லும் நோக்குடனும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஈடுபட விருப்பமும் கொண்டுள்ளனர். அதேசமயத்தில் மற்றைய தமது சக கைதிகளுக்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தி பேச முடியாத நிலையிலும் உள்ளனர். தாம் துரோகிகள் என்றோ அல்லது கருணா ஆதரவாளர்கள் என்றோ பார்க்கப்படும் அல்லது பிரச்சினைகள் எழுந்துவிடும் என்ற அச்சமே இதற்கு காரணமாகும்.