”இலங்கையின் தேசியக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என்றும் இதன்படி உத்தியோகபூர்வ அரச வைபவங்களில் இனிமேல் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது” என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது, ஸ்ரீலங்கா மாதா என ஆரம்பிக்கும் தேசிய கீதத்தின் சிங்கள பதிப்பு வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு கிழக்கில் தமிழ் பதிப்பு பயன்படுத்தப்படுகிறது. டிசம்பர் 08ல் நடைபெற்ற அமைச்சரவையின் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் தேசிய கீதத்திலிருந்து தமிழ் பதிப்பை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பு நீக்கம் தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள கருத்துக்கள்:
இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. தேசிய கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்தபோது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டது. கலந்தாலோசிக்கப்பட்டது.
ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டது. அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும்படி சட்டம் கொண்டுவருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறினர். சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக் கருத்தையே கொண்டிருந்தனர்.
இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்திவைத்துள்ளார். சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
-டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் (ஈபிடிபி).
இறந்தகாலத்தில் செய்த தவறை திருத்துவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானமே தேசிய கீதத்தை சிங்களத்தில் மாத்திரம் பாட வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம். உலகில் எந்த நாடும் தனது தேசிய கீதத்தை மொழிபெயர்த்து பாடுவதில்லை.
இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்ட போதிலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுகிறது. தேசிய கீதம் என்பது சகல இனங்களை பிரதிநித்துவப்படுத்துகிறது என்பதால், அதனை ஒரே மொழியில் பாட வேண்டும் என்ற தீர்மானத்தை அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 1978 ஆம் ஆண்டில் தேசிய கீதத்தை மொழிபெயர்த்து, அதனை பாடப்புத்தகங்களில் கூட அச்சிட்டமை கேலிக்குரியது.
-விமல் வீரவங்ச, அமைச்சர் (ஜேவிபி)
ஒரு நாட்டின் தேசிய கீதம் அந்நாட்டின் பெரும்பான்மை மொழியில் இருக்கவேண்டும். உலகில் இவ்வாறான நடவடிக்கைகளே பின்பற்றப்படுகின்றன. இதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், யுத்தம் முடிந்த நிலையில் முக்கியத்துவம் வழங்குவதற்கு எத்தனையோ பிரச்சினைகள் நம் முன்னிருக்கையில் தேசிய கீதம் தொடர்பில் மொழிப் பிரச்சினையை தற்போது தோற்றுவிப்பது இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும்.
அத்தோடு, சர்வதேச ரீதியில் எமக்கு எதிரான நாடுகளுக்கு மெல்லுவதற்கு வாய்க்கு அவல் கிடைத்தது போல் அமையும். தேசிய கீதத்தையே தமிழில் தடைவிதிக்கும் இலங்கை அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கப்போகின்றதென புலி சார்பானவர்களின் பிரசாரத்திற்கு உந்துசக்தியாக அமைந்துவிடும்.
– பத்தரமுல்லே சீலரத்ன தேரர், தலைவர் ஜனசெத பெரமுன
அரசியல் சாசனத்தின் உறுப்புரிமை 7, அட்டவணை 3ல் தேசிய கீதம் தமிழில் பாடப்படுதல் தொடர்பாகவும், தமிழில் பாடல் வரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அரசியல் சாசனத்தில் உள்ள விடயங்களை மீறும் செயற்பாடானது அப்பட்டமான இனவாத நடவடிக்கையாகும். 1956 ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்களம் மாத்திரம் என்ற சட்டத்தினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் பின்பு தான் 1988 ஆம் ஆண்டு தமிழும் அரச கரும மொழியாக்கப்பட்டது.
இவ்வாறிருக்கையில் அரசாங்கம் இந்த அமைச்சரவை முடிவை மீளப் பெற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பார்களானால் தமிழ் மக்கள் வேறு வழியில்லாமல் தேசிய கீதத்தினை பகிஸ்கரிக்க தள்ளப்படலாம்.
– சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
இலங்கையில் தமிழ் மக்களும், சிங்களவர்களும் வசிப்பதால் அந்த நாட்டு தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இதுவரை பாடப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை இலங்கை அதிபர் ராஜபக்சே மாற்றி, இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும் தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து விட்டதாகவும் அதற்கான தீர்மானம் அமைச்சரவையிலும் நிறைவேற்றப்படிருப்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது.
அந்த செய்தி உண்மையானால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புண்பட்டிருக்கின்ற ஈழத்தமிழர்களின் உள்ளத்தை மேலும் புண்படுத்தக் கூடியது. எனவே இந்த செயலை கண்டிக்கிறேன்.
– கலைஞர் கருணாநிதி, தமிழக முதலமைச்சர்.
தேசிய கீதம்
ஸ்ரீ லங்கா தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே – நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
Mother Lanka we salute Thee!
Plenteous in prosperity, Thou,
Beauteous in grace and love,
Laden with grain and luscious fruit,
And fragrant flowers of radiant hue,
Giver of life and all good things,
Our land of joy and victory,
Receive our gratefull praise sublime,
Lanka! we worship Thee.
Thou gavest us Knowledge and Truth,
Thou art our strength and inward faith,
Our light divine and sentient being,
Breath of life and liberation.
Grant us, bondage free, inspiration.
Inspire us for ever.
In wisdom and strength renewed,
Ill-will, hatred, strife all ended,
In love enfolded, a mighty nation
Marching onward, all as one,
Lead us, Mother, to fullest freedom.