வட மாகாணத்தில் பல கோடி ரூபா செலவில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளவுள்ள ஆறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதற்கட்டமாக இன்று வவுனியா விஜயம் செய்யவுள்ளனர். ஒவ்வொரு நிறுவனமும் பல கோடி ரூபா செலவில் தாம் புதிதாக நிர்மா ணிக்கவுள்ள தொழிற்சாலைகளை அமைப்பதற்குத் தேவையான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அடையாளம் காணவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
வட மாகாணத்தில் முதலீடு செய்ய இணக்கம் தெரிவித்த பிரென்டிக்ஸ், ஹைத்ராமணி, மாஸ் ஹோல்டிங், டைமெக்ஸ் ஓவிட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், தனக்கும் இடையில் வவுனியாவில் இன்று விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
வட பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக் கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டும் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையிலும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் சுட்டிக் காட்டினார்.
முதலீட்டாளர் குழுவினருடன், இலங்கை முதலீட்டுச் சபை, சுற்றாடல் திணைக்கள அதிகாரிகளும் இன்று வவுனியா செல்லவுள்ளனர். வவுனியா நகர், வவுனியா வடக்கு, செட்டிக்குளம் மற்றும் நெலுங்குளம் பகுதிகளுக்கே இந்த முதலீட்டாளர்கள் நேரில் சென்று காணிகளை அடையாளங் காணவுள்ளனர்.
சுற்றாடல் மற்றும் வனவள திணைக்களங்களின் அறிக்கை பெறப்பட்டவுடன் சில வாரங்களில் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிக்க மேற்படி முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக மேற்படி தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வுள்ளதாக தெரிவித்த ஆளுநர், இதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வட மாகாண சபை மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார். யாழ். கிளிநொச்சி பகுதிகளிலும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இது போன்ற தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் வட மாகாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்றும் இவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.