அருட்சல்வன் வி

Sunday, January 23, 2022

அருட்சல்வன் வி

சவூதியில் சிசுக் கொலை; ரிஸான நபீக்கு தண்டனை உறுதி

naaa.jpg2005 ஆம் ஆண்டில் இலங்கை வீட்டுப்பணிப் பெண் ஒருவர் சவூதியில் சிசுவினை கொலை செய்தார் என்பதனை விசாரணையின் பின் ரியாத் உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  ரிஸான நபீக் என அழைக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப் பெண், நைப் ஜிஷியன் ஹலாப் அல் ஒடபீ என்பவரின் 4 மாத குழந்தையை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அப்துல்லா அல் ரொசாமி தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட டவடாமி உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.

நபீக்கிற்கு வேலை வழங்குனரின் மனைவி அவரது குழந்தைக்கு பால் வழங்குமாறு குழந்தையை வழங்கியுள்ளார் இதன் பின்னரே அவர் குழந்தையை கொன்றுள்ளார் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் நபீக் செய்ததாக கூறப்படும் கொலையினை மறுத்து நபீக் மனு தாக்கல் செய்யலாம் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு மேலும் வேலை வாய்ப்புக்கள் – அவுஸ்திரேலியாவுடன் இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து

வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழில் அமைப்புகளுடன் நேற்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் காமினி லொக்குகே, வடபகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மேலும் பல தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், ஊழியர் சேமலாப நிதியத்தைப் பெறுவதில் வட பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும். இதற்காக வவுனியாவில் தற்பொழுது நடமாடும் சேவையொன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் ஜகத் பாலசூரியவும் கலந்து கொண்டிருந்தார்.

யாழ். வசாவிளான் கல்லூரி ரூ. 50 இலட்சத்தில் புனரமைப்பு – ஜனவரியில் கல்வி நடவடிக்கை ஆரம்பம்

யாழ். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் ஐம்பது இலட்சம் ரூபா செலவில் உடனடியாக புனரமைக்கப் படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைகளினதும் மேற்படி பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் நலன்விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்தப் பாடசாலை கடந்த மாதம் 29ம் திகதி பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது. சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்பட்ட இந்த பாடசாலையை அபிவிருத்தி செய்தல், புனரமைப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேல் மாகாண தமிழ் சாகித்திய விழா இன்று

மேல் மாகாணத் தமிழ் சாகித்திய விழா பிரதான நிகழ்வுகள் இன்று மாலை மூன்று மணிக்கு கொழும்பு- 10 மருதானை- எல்பின்ஸ்ரன் மண்டபத்தில் நடைபெறுகிறது. நிகழ்வுக்கு மேல் மாகாண சபை உறுப்பினரும் சாகித்திய விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான எஸ். இராஜேந்திரன் தலைமைதாங்குவார்.

மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா பிரதம அதிதியாகவும் கெளரவ அதிதிகளாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேல் மாகாண கலாசார அமைச்சர் உபாலி கொடிகார, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், முன்னாள் எம். பீ. மனோ கணேசன், மேல் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ந. குமரகுருபரன், முன்னாள் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பீ. பீ. தேவராஜ், மேல் மாகாண பிரதம செயலாளர் விக்டர் சமரவீர, மேல் மாகாண கலாசார அமைச்சின் செயலாளர் ஏ. ராமநாயக்க ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் சோ. சந்திரசேகரன், லேக் ஹவுஸ் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சீலரட்ன செனரத், தொழில் அதிபர்கள் சுந்தரம் பழனியாண்டி, ஜே.பி. ஜெயராம் ஜே.பி. ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள்.

மேல் மாகாணத்தின் தமிழ் மொழி மூலப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்படுவதுடன், 25 பேர் சாகித்திய விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர். நம் நாட்டு கலைப் படைப்புகளைப் பிரதிபலிக்கும் இசை நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் விழாவைச் சிறப்பிக்கும். இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் இராஜேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த வருடம் விருது பெற்றவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப் படுகிறது.

புனர்வாழ்வு நிலையங்களின் பராமரிப்புக்கு ரூ. 100 மில். செலவு

புனர்வாழ்வு நிலையங்களில் பராமரிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உணவுக்காக மட்டும் நாளொன்றுக்கு நூறு மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறதென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மாலை 306 முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மார்ச் மாதம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைக்குரிய தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்தத் தேர்தலில் நீங்களும் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக வரமுடியும். அதன் வழியாக அரசியல் பலமும் அரச பலமும் கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதுவரையில், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஐயாயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்து கொண்டுள் ளனர்.

வளர்முகநாடுகளின் நிலைக்கு சமனான முறையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. போரின்போது வெற்றிகொண்ட இராணுவத்தினர் சரண் அடைந்த போராளிகளையும் மனித நேய அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருகின்றது. புனர்வாழ்வு நிலையங்களில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்தவர்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 306 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். 200 பெண்களும், 106 ஆண்களும் அடங்கியிருந்தனர். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இவர்களை பொறுப்பேற்றனர்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசகர் எஸ். சதீஸ்குமார், செயலாளர் எம். திசாநாயக்க, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுகந்த ரணசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைக் கிடைத்த ஒரே ஒரு தங்கமும் பறிபோகுமோ?

manju.gifஇந்தியாவில் நடைபெற்ற 19ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 56 கிரோ கிராம் எடைப் பிரிவு குத்துச் சண்டைப் பிரிவில் வெற்றிபெற்று இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த மஞ்சு வன்னியாராச்சி தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தற்போது கருத்துக் கூற முடியாதென இலங்கை விளையாட்டுப் பிரிவின் வைத்திய பொது முகாமையாளர் வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

மஞ்சு வன்னியாராச்சி தொடர்பில் பல தகவல்கள் கசிந்துள்ள போதும் உத்தியோகப் பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் முறையான விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் உறுதியான தகவல்களை தெரிவிக்க முடியுமென வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் கூறியுள்ளார். எனினும் மஞ்சு வன்னியாராச்சி போட்டியில் பங்குபற்றுவதற்கு முன்னர் அவரிடம் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பிரயோகித்துள்ளமை உறுதியாவதாகவும், பொதுநலவாய விளையாட்டுக் குழு இந்திய டில்லியில் இருந்து இலங்கைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் இலங்கை அதிகாரிகள் மஞ்சு வன்னியாராச்சியிடம் வினவியபோது, தான் அப்படியொரு ஊக்கமருந்தை பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தான் நோய் ஒன்றுக்காய் சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டதாக மஞ்சு வன்னியாராச்சி கூறியுள்ளார். இந்நிலையில் மஞ்சு வன்னியாராச்சியிடம் இலங்கை ஒலிம்பிக் குழு எதிர்வரும் 14 நாட்களுக்குள் உரிய விளக்கமளிக்குமாறி கோரியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரையில் கண்டெடுத்த டப்பா வெடித்து 8 வயது சிறுவன் பலி. மேலும் 4 சிறார்கள் காயம்: மூதூரில் சம்பவம்

மூதூர் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டெடுத்த டப்பா ஒன்று வெடித்ததில் எட்டு வயதுச் சிறுவன் கொல்லப்பட்டதோடு மேலும் நான்கு சிறார்கள் காயமடைந்தனரென பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை 9.45 அளவில் மூதூர் தக்வா நகர் வட்டம் கடற்கரை பகுதியில் நடந் துள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஐந்து சிறுவர்களும் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு கண்டெடுத்த டப்பா ஒன்றை திறக்க முற்பட்டுள்ளனர். அப்போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த ஐந்து சிறார்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் முகாஜிதீன் சர்பான் என்ற எட்டு வயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாரென ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறின.

காயமடைந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் அடங்குகின்றனர். காயமடைந்தோரின் விபரம் வருமாறு, ஸல்மான், (வயது – 10), சாஜித் (வயது 05), சையிப் (வயது- 03) என்பவர்களுடன் யாரியா கரீம்- இம்ராக் (வயது 08) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

முன்னாள் அமைச்சர் தர்மதாச பண்டா காலமானார்

முன்னாள் அமைச்சர் தர்மதாச பண்டா தனது 72 வது வயதில் காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுக் காலமானார்.

1965 ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலைப் பாராளுமன்ற உறுப் பினராகத் தனது அரசியல் பயணத்தை இவர் ஆரம்பித்திருந்தார்.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிய இவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் முன்னைய அமைச்சரவையில் துணை வேளாண்மை மற்றும் பயிர்ச்செய்கை அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.

புனர்வாழ்வு பெறுவோர் விபரங்கள் – www.bcgrsrilanka.com இணையத்தில்

தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள், கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவோர் பற்றிய விபரங் களை மக்கள் அறிந்து கொள்வதற்கான இணையத்தளம் யாழ்ப்பாண செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இணையத்தளத்தின் முகவரி www.bcgrsrilanka.com என்பதாகும். இந்த இணையத்தளம் அதிகளவு ஊடகவிய லாளர்களுக்கு பயனுடையதாக விருக்குமென கருதப்படுகிறது.

ஜனாதிபதியின் 2வது பதவிக் காலம் – 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம்

tree.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு மற்றும் பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டமொன்று நவம்பர் 15ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான ஏற்பாடுகளை சுற்றாடல் வளத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது.

நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், மற்றும் பாடசாலைகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என சுற்றாடல் வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் யாப்பா, 30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக சூழல் உட்பட மரம். செடிகள் என்பவற்றிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.

பசுமையான சூழலொன்றினை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுவதற்காகவே நாடளாவிய மர நடுகை வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் உருவாகியுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியுமென்று கூறிய அமைச்சர், இன்று உலகிலே சூழலை பாதுகாத்துவரும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இவ்வாறு ஒரே தடவையில் அதிகளவு கன்றுகளை நட்டிய நாடு பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரையில் இல்லை என்பதால் சிலவேளை இதுவொரு கின்னஸ் சாதனையாகக் கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.