அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மட்டக்களப்பு மாவட்டத்தில் 42 இடங்களில் இன்று மின்வெட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 18 ஆம் திகதி 42 இடங்களில் 9 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின்சா சபை தலைமையகம் தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக வாழைச்சேனை, கருவாக்கேணி, சுங்காங்கேணி, கிண்ணையடி, கும்புறுமூலை, பாசிக்குடா, கிரான், சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு, உன்னிச்சை, ஆயித்தியமலை, பங்குடாவெளி, இலுப்பட்டிச்சேனை, கறடியனாறு, மரப்பாலம், ராஜபுரம், கித்துள், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, தும்பங் கேணி, ஐயங்கேணி, மிச்நகர், தளவாய், மீராகேணி, சதாம்குசைன் கிராமம், ஹிஸ்புல்லாஹ் கிராமம், வந்தாறுமூலை, கொம்மாதுறை, செங்கலடி, களுவண்கேணி, ஏறாவூர், ஆறுமுகத்தான்குடியிருப்பு, தன்னாமுனை, வுக்கடி, மயிலம்பாவெளி, திருப்பெருந்துறை, பிள்ளையாரடி, ஊறணி ஆகிய இடங்களில் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் நவம்பர் 25ம் திகதி இலங்கை வருகை

கொழும்பில் நடைபெறவிருக்கும் இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழுவில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா நவம்பர் 25ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

ம்மாதம் 27ஆம் திகதி மேற்படி ஆணைக்குழு கொழும்பில் கூடுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபோதும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் திடீர் ஜப்பான் விஜயம் காரணமாக இது அடுத்த மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டிரு ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி யொருவர் கூறினார்.

இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்க விருக்கும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மூன்று தினங்கள் வரை இங்கே தங்கியிருப்பதுடன் வடக்கில் மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்வதுடன் அங்கு இந்திய அரசின் நிதியுதவியின்கீழ் முன்னெடுக்கப் பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழு கடந்த 2005ஆம் ஆண்டு கொழும்பில் கூடி ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவில் ஐந்து தினங்கள் தங்கியிருக்க முடிவு

obamas.jpgஅடுத்த மாதம் இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கு அதிக நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார். “இது இந்தியாவுடனான நட்புறவை பலப்படுத்துவதற்கு அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டுவதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது’ என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐந்து நாட்கள் வரை, அவர் இங்கு தங்கியிருக்க கூடும் என தெரிகிறது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து, ஒபாமா இத்தனை அதிக நாட்கள் வேறு எந்த வெளிநாட்டிலும தங்கியது இல்லை என அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுடனான நட்பை பலப்படுத்துவதற்கு, அமெரிக்கா அதிக ஆர்வமுடன் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் மும்பை, அமிர்தசரஸ், டில்லி உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒபாமா பங்கேற்கவுள்ளார். மும்பையில் கடந்த 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

இது குறித்து தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறுகையில், “அதிபரின் இந்திய சுற்றுப் பயணத்துக்கான அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும, அமெரிக்க அதிபரின் இந்திய சுற்றுப் பயணம், இரு நாட்டு உறவை மேலும் பலப்படுத்துவதாக இருக்கும்” என்றார்.

மட்டக்களப்பில் பல பகுதிகளிலும் கொள்ளை ஐவர் கொண்ட ஆயுதக் கோஷ்டி கைது

மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் ஆயுத முனையில் கொள்ளையிட்டு வந்த கிரானைச் சேர்ந்த ஐவர் கொண்ட குழு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து துப்பாக்கி ஒன்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணமும் கையடக்கத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக கிரான் கும்புறுமூலை கிண்ணையடி பகுதிகளில் வீடுகளில் புகுந்து ஆயுத முனையில் கொள்ளையிட்டு வந்த இந்தக்கோஷ்டி தாங்கள் கொள்ளையடித்த கையடக்கத்தொலைபேசிகளை விற்பனை செய்யும் போது பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் கடந்த 10 ஆம் திகதி இவர்களை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் மூவர் முன்னாள் ஆயுதக் குழு ஒன்றைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் 18 தொடக்கம் 25 வயதுடையவர்கள். திருமணமானவர்கள். கிரான் பகுதியைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் உறவினர்கள். மேற்படி பகுதிகளில் இவர்கள் கொள்ளைகளை மேற்கொண்டு வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து ரி.56 ரகதுப்பாக்கி ஒன்றும் 25 ரவைகளும் கையடக்கத்தொலைபேசிகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் காலமானார்

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமான எஸ்.விஜயகுமாரன் (வயது 55) நேற்று சனிக்கிழமை முற்பகல் மாரடைப்பினால் காலமானார். இவரது பூதவுடல் அட்டன் நகரிலுள்ள மல்லியப்பூ வீதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் திங்கட்கிழமை கொட்டகலையில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.விஜயச்சந்திரன் தெரிவித்தார். நெஞ்சுவலி காரணமாக அவர் நேற்று காலை உறவினர்களால் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முற்பல் 10 மணியளவில் காலமானார்.

லிந்துலை நாகசேனைதோட்டத்தில் பிறந்த இவர் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் கல்விகற்ற பின் பட்டதாரியானார். இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரியாக பணியாற்றினார்.1993 ஆம் ஆண்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு மலையக மக்கள் முன்னணியின் வளர்ச்சிக்காக தோள்கொடுத்தவர். கடந்த நான்கு வருடமாக செயலாளர் நாயகமாக பணியாற்றிய இவர் இதற்கு முன் அமைப்புச் செயலாளராகவும் கட்சியின் உயர் பீட உறுப்பினராகவும் இருந்தார். இவரது திடீர் மறைவு கட்சிக்கும் மலையக மக்களுக்கும் பெரும் இழப்பாகுமென மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஒருநாள் போட்டியில் இருந்தும் முரளிதரன் ஓய்வு

muralidharan.jpgஇலங்கை அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் இருந்து கிரிக்கெட் உலகிற்கு பிரவேசித்த முரளிதரன் பல்வேறு சாதனைகளையும், சோதனைகளையும் தாண்டித்தான் கிரிக்கெட் உலகில் தனது இடத்தை நிலை நாட்டியிருந்தார். முரளிதரனைப் போன்ற சிறந்த சுழற் பந்துவீச்சாளர் இலங்கை அணிக்கு மட்டுமல்ல உலக அணிக்கும் கிடைக்கமாட்டார்.

முரளிதரன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் அதாவது இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இடம்பெறும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்துள்ளார்.

இவரது ஓய்வு அறிவிப்பானது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தாலும் காலத்தின் கட்டாயம் அவர் ஓய்வு பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவரது உடற்தகைமை, குடும்ப நோக்கம் மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கம் எனப் பல காரணங்கள் உண்டு. எது எப்படியோ முரளிதரன் ஓய்வு பெற்றாலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் அவரை பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக பயன்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.

முஸ்லிம் கைதிகள் விவகாரம்: மதத் தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு அமைச்சர் டியூ முடிவு

சிறைச் சாலைகளில் அதிகரித்துவரும் முஸ்லிம் சிறைக் கைதிகளின் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் மதத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும். இது பற்றி தாம் ஏற்பாடுகளைச் செய்யப் போவதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் முழு சனத்தொகை எட்டு வீதம் எனக் கூறப்படுகிறது. ஆனால் சிறைவாசம் அனுபவிக்கும் முஸ்லிம் கைதிகளின் விகிதமோ 16 முதல் 19 வீதம் வரையில் அதிகரித்து இருப்பது குறித்து முஸ்லிம் மதத் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டியூ குணசேகர மேலும் தெரிவித்திருக்கிறார்.

மக்கள் வழங்கிய பெயர்ப்பட்டியல் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் கையளிப்பு

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளின் விடுதலை தொடர்பில் இன்னும் ஒரு வாரத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடமிருந்து பதிலொன்று கிடைக்கப்பெறுமென்று கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக நீண்ட பட்டியலொன்றைப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்குக் கையளித்துள்ளதாகத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், அவற்றைப் பரிசீலித்து ஒரு வாரகாலத்தினுள் திருப்பமான பதிலொன்றை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.

வன்னிப் பகுதிகளில் நல்லிணக்க ஆணைக்குழு பொதுமக்களிடம் நடத்திய பகிரங்க விசாரணைகளின்போது, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்துத் தருமாறும் காணாமற்போனவர்களைத் தேடித் தருமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பான விபரங்களை எழுத்து மூலம் வழங்குமாறு ஆணைக் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறானவர்களின் விபரங்களைத் தபால் மூலம் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும் கூறினார். கிடைக்கப்பெறும் விபரங்களைக் கொண்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினருடன் தனியாகக் கலந்துரையாடி பதிலொன்றைப் பெற்றுத் தருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, ஆணைக்குழுவின் தலைவர் சில்வா கொழும்பு திருப்பியதும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன் பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், ஓமந்தைத் தடுப்பு முகாமுக்குச் சென்ற ஆணைக்குழுவின் தலைவர், இளைஞர், யுவதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அவர்களின் விடுதலை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் கலந்துரையாடியதையும் தெரிவித்தார். இது தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், ஒருவார காலத்தில் சாதகமான பதிலொன்றை எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விளக்க மறியல்

ranjan1.jpgஇரகசிய பொலிஸாரினால் கைதுசெய்யப் பட்டுள்ள ஐ. தே. க. எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க கண்டி பொலிஸாரினால் நேற்று (15) நீதிமன்றில் ஆஜர் செய் யப்பட்டார். இதன்போது இவரை 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி கண்டி மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற விளக்கம் முடியும் வரைக்கும் நாட்டை விட்டு செல்வதற்கு தடை விதிக்கும் முகமாக குடியகல்வு மற்றும் குடிவரவு திணைக் களத்திற்கு அறிவிக்கும் படியும் மேலும் எதிர்வரும் 27ம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்கும்படி பொலிஸார் மஜிஸ்திரேட்டிடம் வேண்டினர்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக கூறி பத்து இலட்சம் வரை அவரிடமிருந்து மோசடியாக பெற்றார் எனும் குற்றச் சாட்டின் பேரில் குறித்த ஆசிரியை கட்டுகஸ்தோட்ட பொலிஸில் முறைப் பாடு செய்திருந்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க 3 மனித உரிமை அமைப்புகள் மறுப்பு

சர்வதேச விசாரணைக்கு வலியுத்தல் நியூயோர்க்: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை 3 சர்வதேச முன்னணி அமைப்புகள் ஏற்றுக்கொள்ளமாட்டாதென தெரிவித்துள்ளன.மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு,  சர்வதேச மன்னிப்புச்சபை ஆகிய மூன்று அமைப்புகளும் கூட்டாக இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்டிருப்பதாக ரிலீப் வெப் இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.போர்க் குற்றங்கள் தொடர்பான முன்னேற்றகரமான பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான ஆற்றலைக் குறைந்தளவிலேயே இந்த ஆணைக்குழு கொண்டிருப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் அரசியல் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறும் தன்மை என்பவற்றை முன்னெடுப்பதற்கான உண்மையானதும் நம்பகரமானதுமான முயற்சிகளை மேற்கொள்ளும் போது ஆணைக்குழு முன் தோன்றுவதற்கான வாய்ப்பு கிடைப்பதை வரவேற்பதாகவும் ஆனால், ஆணைக்குழுவானது சர்வதேச தரத்தின் ஆகக்குறைந்தளவு மட்டத்தைக்கூட நிறைவேற்றுவதாக இல்லையெனவும் அந்த மூன்று அமைப்புகளும் குறிப்பிட்டுள்ளன.