அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சிலி சுரங்கத்தினுள் சிக்கிய 33 பேரும் வெற்றிகரமாக மீட்பு – 33 எண் அதிர்ஷ்டமென அறிவிப்பு

13.jpgசிலியில் 69 நாட்கள் சுரங்கத்திற்குள் சிக்கியோரை மீட்கும் பணிகள் முற்றாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி நேற்றுக்காலை ஆறுமணிக்கு சுரங்கத்திலிருந்து 33 வது நபரும் வெளியே மீட்கப்பட்டார். சுரங்க வேலைகளிலீடுபட்டிருந்தபோது திடீரென மண்சரிவு ஏற்பட்டதையடுத்து இந்த 33 பேரும் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர். எழுநூறு மீற்றர் ஆழத்தில் 69 நாட்களாக இவர்கள் சுரங்கத்துக்குள் கிடந்தனர்.

ஆரம்பத்தில் சிறிய துளையிட்டு உணவு மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டன. பின்னர் ஒளி ஒலி கருவிகள் அனுப்பப்பட்டு உறவினர்கள் தொடர்பினை ஏற்படுத்தினர். இந்த முயற்சியும் வெற்றி பெறவே இவர்களை வெளியே எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மணித்தியாலத்திற்கு ஒருவரென ஒருவர் பின் ஒருவராக 33 பேரும் மீட்கப்பட்டனர். இந்த 33 என்ற எண் ஒரு அதிர்ஷ்ட எண் என சிலி அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த 33 பேரையும் மீட்க 33 நாட்கள் கடுமையான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. வெளியே எடுப்பதற்கென துளையிடப்பட்டவிட்டம் 66 செ. மீற்றர். இது 33ன் இருமடங்கு. வெளியேற்றும் நடவடிக்கை முடிந்த திகதி 2010.10.13. இதன் கூட்டுத்தொகையும் 33. இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட வயதும் 33. எனவே 33 ஒரு அதிஷ்ட எண் என மீட்புப் பணியிலீடுபட்ட கம்பனியின் அதிகாரிகள் தெரிவித்தனர். நாங்கள் 33 பேரும் உயிருடன் உள்ளோம் என எழுதி அனுப்பப்பட்ட இலத்தீன் எழுத்துக்களின் கூட்டுத் தொகையும் 33 ஆகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டோர் அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டனர். 33 என்ற இலக்கத்தை சிலி அரசாங்கம் அதிஷ்ட எண்ணாக அறிவித்துள்ளது.

யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹதுருசிங்கவுக்கு சர்வதேச சமாதான விருது

haturusinha.jpgயாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவுக்கு சர்வதேச சமாதான விருது வழங்கப்பட்டுள்ளது. குஸி சர்வதேச சமாதான விருது என்ற அமைப்பு பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் வைத்து எதிர்வரும் 24ம் திகதி இந்த உயர் விருதை வழங்கவுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அப்பாவி தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் மற்றும் இலங்கையின் தேசிய ஒற்றுமைக்காக ஆற்றிவரும் பங்களிப்பாகவும் இந்த சர்வதேச சமாதான விருது வழங்கப்படவுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலகில் பல்வேறு துறைகளுக்காக சேவையாற்றிய 19 பேர் இந்த அமைப்பினால் வெவ்வேறு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், சமாதானத்திற்கான விருது உலகிலேயே இம்முறை மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவுக்கே வழங்கப்படவுள்ள என்றும் மேற்படி விருது ஆசியாவின் நோபல் பரிசுக்கு சமமானதாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளை தளபதியாக ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (2008-2009) தேசிய பாதுகாப்பு நிர்வாகத் துறைக்கான முதுமாணி கற்கையைக் கற்றதுடன் இந்த கற்கை நெறியை கற்ற உலக நாடுகளின் இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் தங்கப்பதக்கத்தை வென்றார். 1980ம் ஆண்டு செப்டெம்பர் 16ம் திகதி இலங்கை இராணுவத்தில் கெடட் அதிகாரியாக இணைந்துக்கொண்ட இவர் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல்வேறு முக்கிய பயிற்சிகளை பெற்றுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் புமபூமி, வடமராட்சி நடவடிக்கை, இராணுவ நீண்டகால சேவை, தேசபுத்ர, ரிவிரச நடவடிக்கை, வடக்கு, கிழக்கு நடவடிக்கை, 60 வது சுதந்திர தினம், இராணுவத்தின் 50வது ஆண்டு மற்றும் ரணசூர ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஐ.தே.க எம்.பி ரஞ்சன் ராமநாயக்க கைது! ஏமாற்றி பணமோசடி செய்ததாக ஆசிரியை குற்றச்சாட்டு

ranjan1.jpgஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டே பிரதேசத்தில் வைத்து நேற்றுப் பிற்பகல் சி. ஐ. டி. யினரால் கைது செய்யப்பட்ட இவர், கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக கூறி, பத்து இலட்சம் ரூபா வரை அவரிடமிருந்து மோசடியாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இரகசிய பொலிஸார் இவரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். குறித்த ஆசிரியை தன்னிடம் பெற்ற பணத்தை தருமாறு திரும்ப திரும்ப கேட்ட போதெல்லாம் இவர் அந்த ஆசிரியையை ஏமாற்றி வந்துள்ளார்.

இதேவேளை, பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட ஆசிரியையை ரஞ்சன் ராமநாயக்க அச்சுறுத்தியதால், அந்த ஆசிரியை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்றில் வழக் குத் தாக்கல் செய்துள்ளார். மேற்படி குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதன் போது ரஞ்சன் ராமநாயக்கவினால் நீதிமன்றில் முன்பிணை கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தி னால் நிராகரிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைப் பணியாளர்களை பணிக்கமர்த்துவதை நிறுத்துமாறு கூறுகிறது சவூதி ஆட்திரட்டல் குழு

lankan-airlines.jpgரியாத்தில் இரு மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபிய தேசிய ஆட்திரட்டல் குழுவுக்கும் (சனார்கொம்) அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரமைப்புகளின் சங்கத்திற்கும் (அல்பியா) இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு கொழும்பு இணங்கும்வரை இலங்கையிலிருந்து வீட்டுப்பணிப்பெண்களை பணிக்கமர்த்துவதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்வதென நேற்று முன்தினம் ஞாயிற்றுக்
கிழமை சவூதி அரேபியாவின் தேசிய ஆட்திரட்டல் குழு (சனார்கொம்) தீர்மானித்துள்ளது.

ஆட்திரட்டல் கட்டணங்களை 8500 ரூபாவிலிருந்து 5,500 ரூபாவாக குறைப்பதற்கான உடன்படிக்கையில் தமது நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளமை தொடர்பாக சனார்கொம்மின் தலைவர் சாத் அல்பத்தா விளக்கமளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பையடுத்தே அவர் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறார். அல்பியாவுக்கும் சனார்கொம்முக்குமிடையில் இடம்பெற்ற இந்த உடன்படிக்கையை கௌரவிக்க இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தடையை ஏற்படுத்துவது குறித்து நாங்கள் சிபாரிசுகளை முன்வைக்கிறோம். புரிந்துணர்வு உடன்படிக்கை விவகாரம்,இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தின் போக்கு மற்றும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப்பெண் ஆரியவதிக்கு அண்மையில் இடம்பெற்ற சித்திரவதை தொடர்பான குற்றச்சாட்டு போன்ற பல்வேறு விடயங்களை கவனத்திற்கு எடுத்து நாங்கள் சிபாரிசுகளை முன்வைத்திருக்கிறோம் என்று சார்த் அல்பத்தா கூறியுள்ளார்.
இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் சவூதிஅரேபியாவுக்கு எதிராக ஆரியவதி விவகாரம் பாதிப்பான பிரபல்யத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆதாரமற்ற விதத்தில் அக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் இத்தகைய சர்ச்சைகளின்போது பிரஜைகளின் உரிமைகளும் மதிப்பும் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் நீதியாக நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். சவூதி அரேபியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளூர் தொழிலாளர் ஒழுங்கு விதிகளை மீறியுள்ள ஆட்திரட்டல் முகவரமைப்புகளுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் இலங்கை 42,906 வீட்டுப் பணியாளர்களை சவூதிக்கு அனுப்பியிருந்தது. இந்த வருடத்தின் முதல் அரையாண்டுப் பகுதியில் 19 ஆயிரம் பேர் அனுப்பப்பட்டிருக்கின்றனர். வீட்டுப்பணிப்பெண்கள் உட்பட சுமார் 5 இலட்சம் இலங்கைப் பணியாளர்கள் சவூதிஅரேபியாவில் பணிபுரிகின்றனர்.

இதேவேளை, சனார்கொம்முக்கும் அல்பியாவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாதென்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொதுமுகாமையாளர் எல்.கே.ருகுணுகே கூறியுள்ளார்.

ஆயுள் தண்டனை பெற்றாலும் சிறையில் மடிந்தாலும் விஷமிகளின் முன்னால் ஒருபோதும் மண்டியிடமாட்டேன் – பொன்சேகா

sarath_.jpgஆயுட்கால சிறைத்தண்டனை பெற்றாலும் அல்லது சிறையில் இறந்தாலும் கூட தான் ஒருபோதும் விஷமிகளின் முன்னால் மண்டியிடமாட்டேன் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொன்சேகா இதனைத் தெரிவித்திருக்கிறார். இதேவேளை, தலைநகர் கொழும்பின் வீதிகளில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஊர்வலம் சென்றனர்.அவரின் ஜனநாயக தேசியக் கூட்டணியின் பணியாளர்களும் அவரின் மனைவி அனோமா பொன்சேகாவும் வெலிக்கடைச் சிறைச்சாலையை நோக்கிச் சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக அவர்கள் கறுத்த ஆடைகளுடன் சென்றனர். “குரூரமான இந்தப் பழிவாங்கல்களுக்கு முடிவு கட்டுங்கள்” என்று வாசகம் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை அவர்கள் கொண்டு சென்றனர். செப்டெம்பர் 30 இல் பொன்சேகாவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற பாரியதொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக நேற்றைய நிகழ்வு காணப்பட்டது. எமது யுத்த கதாநாயகனுக்கு தவறாக வழங்கப்பட்ட நீதியை சீர்படுத்துவதற்கான முயற்சி இதுவென ஜனநாயகத் தேசியக் கூட்டணி எம்.பி. திரான் அலஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடு – நிலைமையை ஆராய விஷேட குழு இன்று விஜயம்

முப்பது பேர் அடங்கிய அமெரிக்க வர்த்தகத் தூதுக்குழு நேற்று இலங்கை வந்தடைந்தது. அமெரிக்க அரச மற்றும் தனியார் வர்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த தூதுக்குழு இன்று (12) வட மாகாணத்திற்கு, விஜயம் செய்யவுள்ளது. யாழ்ப்பாணத்தை இன்று காலை சென்றடையும் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக அமைப்பின் (Unitetd State Trade Representative- USTR)  பிரதிநிதி மைக்கல் மெலன் தலை மையிலான உயர்மட்ட அமெரிக்க வர்த்தக தூதுக்குழுவினருக்கும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறிக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண பொது நூலகத்தில் வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பின் போது வட மாகாணத்திலுள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்தும், வட பகுதியில் முதலீடு செய்வது குறித்தும் விரிவாக ஆராயப்படவுள்ளன.

சண்டே லீடரில் வெளியான செய்திக்கு பொன்சேகா மறுப்புத் தெரிவிக்கவில்லை – பிரெட்ரிகா ஜான்ஸ்

fredericajansz.jpgவெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாக, 2009 டிசம்பர் 12ம் திகதி ‘சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான தலைப்புச் செய்திக்கு சரத் பொன்சேகா ஒரு போதும் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்று சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் மேல் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ட்ரயல் – அட்-பார் விசாரணையின் போது தெரிவித்தார். வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அச்சமயம் பிரதி சட்ட மா அதிபர் வசந்த நவரட்ண பண்டாரவினால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதே ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இவ்வாறு கூறினார்.

அத்துடன் புலிகள் இயக்க தலைவர்கள் வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்த போது கொல்லப்படவில்லை என்றும் யுத்தத்தின் போதே அவர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறும் தெளிவான விளக்கமொன்றை 2009 டிசம்பர் 20ம் திகதி ‘சண்டே லீடர்’ பத்திரிகையில் பிரசுரிக்குமாறு சரத் பொன்சேகா பின்னர் ஒரு தடவை கூறியதாகவும் மங்கள சமரவீர உள்ளிட்ட நண்பர்கள் பலருடன் கலந்துரையாடிய பின்னரே சரத் பொன்சேகா இவ்வாறு தன்னிடம் கூறியதாகவும் பிரெட்ரிகா ஜான்ஸ் குறுக்கு விசாரணையின் போது கூறினார். குறிப்பிட்ட தெளிவான விளக்கத்தை பத்திரிகையில் பிரசுரித்த பின் சரத் பொன்சேகாவை தன்னால் தொடர்பு கொள்ள முடியாமற் போனதாக அவர் மேலும் கூறினார். விளக்கம் பத்திரிகையில் வெளியானதை யடுத்து ஜே.வி.பி.யினர் தனக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட தாகவும் தனது நற்பெயருக்கு களங்கம் விலைவிக்க முற்பட்டதாகவும் அவர் குறுக்கு விசாரணையின் போது குறிப்பிட்டார்.

வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான கட்டுரை பத்திரிகையில் வெளிவந்ததையடுத்து ஆயிரம் பேருக்கு மேல் அதனைப் பாராட்டியதாகவும் அது தொடர்பாக பி.பி.ஸி கூட தன்னை தொடர்பு கொண்டதாகவும் கூறிய பிரெட்ரிகா ஜான்ஸ் வெள்ளை கொடி விவகாரம் தொடர்பாக தான் எந்தவொரு ஊடகவியலாளர் மாநாட்டிலும் கலந்து கொள்ள வில்லை என்பதுடன் அவ்விடயம் பற்றி பத்தாரிகைச் செய்தி வெளியான பின் ஒரே ஒரு முறை மாத்திரம் சரத் பொன்சேகாவிடம் தான் பேசியதாகவும் குறிப்பிட்டார். வழக்கு விசாரணை இன்று காலை 10.30க்கு தொடரும்.

லிபியாவிலுள்ள இலங்கைப் பணியாளர்கள் மீண்டும் நாட்டிற்கு

lankan-airlines.jpgசேவை ஒப்பந்தத்தின்படி ஊதியம் வழங்குமாறு லிபியாவில் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை மேற்கொண்ட இலங்கைப் பணியாளர்களை மீட்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. லிபியாவின் நிறுவனத்துடன் இலங்கை வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு மேலாக குறித்த நிறுவனம் இலங்கைப் பணியாளர்களிடம் சேவைக் கொடுப்பனவை அறவிடுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

இந்தத் தகவலை அறிந்திராத இலங்கைப் பணியாளர்கள் ஒப்பந்தத்தின் படி தங்களுக்கு ஊதியம் வழங்குமாறுக் கோரி ஆர்பாட்டங்களை மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இதேவேளை, சட்டவிரோதமாக கொண்டு நடத்தப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகங்கள் குறித்து தகவல் வழங்குமாறு கிங்ஸிலி ரணவக்க பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

முரளி உலகக் கிண்ணத்துடன் ஓய்வு

muttiah-muralitharan.jpgஎதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறப்போவதாக இலங்கை அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்திய முரளிதரனுக்கு இந்திய சென்னையில் வைத்து நேற்று சனி பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையியேலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், தனது 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை போதுமானதெனவும், இளைய சமுதாயத்தினருக்கு இடம்கொடுத்து ஓய்வுபெற வேண்டிய காலம் தற்போது வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய தொடரில், தான் பங்கேற்கவுள்ளதாகவும், ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங் அணிக்காக தொடர்ந்தும் விளையாடவுள்ளதாகவும் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்

தேநீர் கோப்பையில் புதிய உலக சாதனை

viva.jpgஉலகின் முதல் தர தேயிலை ஏற்றுமதி நாடான இலங்கை, உலகின் மாபெரும் தேநீர்க் கோப்பைக்கான உலக சாதனையை நேற்றுப் படைத்தது.1000 கலன் வீவா தேநீரைக் கொண்ட மாபெரும் கோப்பை நேற்றுக் காலை 10 மணிக்கு கொழும்பு 05, பி. ஆர். சி. மைதானத்தில் தயாரிக்கப்பட்டு, கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கிளாஸ் கொஸ்மித் லைன் நிறுவனத்தினால் வீவாவின் பிரதான தொனிப்பொருள் பிரசார நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.இந்தச் சாதனை ஆரம்பம் முதல் இறுதி வரை லண்டன் கின்னஸ் பிரதிநிதிகளால் கண்காணிக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டமைக்கான உறுதிப்படுத்தும் சான்றிதழ் இலங்கை மிஷிறி இன் நுகர்வோர் பிரிவுத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான சச்சி தோமஸிடம் கையளிக்கப்பட்டது.நாங்கள் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினோம். எங்கள் மக்கள் பெரிதும் விரும்பும் பானமான தேநீரைக் கொண்டு ஒரு சாதனையைச் செய்யலாம் என்று நினைத்தோம் என்றார் சச்சி தோமஸ்.

2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் திகதி அமெரிக்க கன்ஸாஸ், போர்ட் ஸ்கொட் சுகாதார நிலையத்தால், மாபெரும் தேநீர்க் கோப்பை தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. 660 கலன் (3000 லீட்டர்) தேநீரைக் கொண்டதாக அச்சாதனை அமைந்திருந்தது. இச்சாதனை வீவாவினால் நேற்று முறியடிக்கப்பட்டது. வீவாவினால் 1000 கலன் தேநீரைக் கொண்ட கோப்பை நேற்று தயாரிக்கப்பட்டது.

இதற்கான பணிகள் சுமார் 2 மாதங்களுக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டன. இந்தக் கோப்பை 10 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்டது. 2000 வோல்டேஜ் கொண்ட 6 ஹீட்டர்களால் அது சூடேற்றப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வையடுத்து இம்மாபெரும் தேநீர்க் கோப்பை நகரின் பல பாகங்களுக்கும் மிஷிறிஇன் விற்பனை மற்றும் விநியோகிக்க படையணியின் வாகனத் தொடரணியுடன் எடுத்துச் செல்லப்பட்டது.