இலங்கை யர்களை வீட்டுப் பணிப்பெண்களாக சேர்ப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானத்தை சவூதி அரேபிய அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரியவருகிறது பணிப்பெண்களுக்கான ஊதியம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இப்பகிஷ்கரிப்பு குறித்து அறிவிப்பதற்காக ஆட்சேர்ப்பு தொடர்பான சவூதி அரேபிய அரசாங்கக்குழு நாளை ஒன்றுகூடவுள்ளது. பணிப்பெண்களுக்கான ஊதியத்தை 7500 சவூதி றியால்களிலிருந்து 5500 றியால்களாக குறைப்பதற்கான சவூதி அரேபிய அரசாங்கத்தின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என சவூதி அரேபிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, அரேபிய மொழி நாளிதழான ‘அல்யோம்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைத் தரப்பின் இணக்கமற்ற தன்மையானது சவூதி அரேபிய அரசாங்கக் குழுவின் அனைத்து உறுப்பினர்களிடையேயும் இவ்விடயத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அவர்கள் ஏனைய நாடுகளிலிருந்து பணிப்பெண்களை சேர்ப்பது குறித்து கலந்துரையாடுகின்றனர் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.