அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கே. கே. எஸ். ரயில் பாதைக்கான வேலைகள் இந்த மாதம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரதப் பாதைக்கான வேலைகள் இந்த மாதம் ஆரம்பமாகும் என இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்த் கூறினார்.

யாழ். மாநகர சபையில் இலங்கை – இந்திய நட்புறவுச் சங்கத்தால் வழங்கப்பட்ட பஸ் வண்டிகளின் திறப்புகளை யாழ். நகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். சண்முகலிங்கன், வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி பொன்னம்பலம், யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் கு. பற்குணராஜா ஆகியோரிடம் இந்தியத் தூதுவர் அசோக்காந்த் நேற்று வெள்ளிக்கிழமை கையளித்தார். அசோக்காந்த் மேலும் பேசும்போது கூறியதாவது:- மக்களின் போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுக்கக் கூடியதான உதவிகளை இந்தப் பிரதேசத்திற்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மன்னார், மடு, தலைமன்னார் பகுதிகளுக்கான புகையிரத வீதிகளையும் எமது அரசு அமைத்துக் கொடுக்கவுள்ளது. இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இங்கே பல்வேறு உதவித் திட்டங்களை நடைமுறைப் படுத்தவுள்ளோம். மீள் குடியமர்ந்த மக்களின் வாழ்வாதார உதவியாக அவர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் இந்திய அரசு உதவி வருகின்றது.

பாதுகாப்புக்கு அடுத்தபடியாக கல்விக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு

president.jpgபாது காப்புக்கு அடுத்தபடியாக அரசாங்கம் அதிகளவு நிதியை கல்விக்கே செலவிட்டு வருவதாகவும், மில்லியன்களன்றி பில்லியன் கணக்கில் நிதியினை ஒதுக்கி வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.கல்வித்துறையை முன்னேற்றுவதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி; கடந்த வருடத்தில் பெருமளவு ஆசிரியர்களை நாடளாவிய ரீதியில் புதிதாக நியமித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

எல்லாவற்றிற்கும் மேலானது மன மகிழச்சியே. எமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம் எனவும் அவர் தெரிவித்தார். கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் 350 இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள நீச்சல் தடாகத்தினை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகை யிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, சுசில் பிரேம்ஜயந்த பிரதியமைச்சர்கள், மேர்வின் சில்வா, பண்டு பண்டாரநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:- திடசங்கற்பமும் அர்ப்பணிப்பும் இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு இந்த நீச்சல் தடாகம் சிறந்த உதாரணம். இந்தப் பாடசாலையின் அதிபரான லபுதலே சுதஸ்ஸனதேரர் தமது காரை லொத்தரில் விற்று இந்த நீச்சல் தடாகத்தை நிர்மாணிக்க உதவியுள்ளார்.

அமைச்சர் பீரிஸ¤க்கு எதிரான – நம்பிக்கையில்லா பிரேரணை 107 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு

gl.jpgவெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ¤க்கு எதிராக பிரதான எதிர்க் கட்சியான ஐ. தே. க. கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 107 மேலதிக வாக்குகளால் நேற்று தோற்கடிக்கப்பட்டது. இப்பிரேரணைக்கு எதிராக 139 வாக்குகளும் ஆதரவாக 32 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இப்பிரேரணைக்கு எதிராக ஆளும் தரப்பினருடன் இணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பு வேளையில் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு, மற்றும் ஐ. தே. க.வின் பல எம்.பிக்களும் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.

இப்பிரேரணைக்கு ஆதரவாக ஐ. தே. க. எம்.பி.கள் வாக்களித்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்கவென நிபுணர் குழுவை நியமிப்பதைத் தவிர்ப்பதற்கும், ஜீ. எஸ். பி. பிளஸ் நிவாரணம் தொடர்ந்தும் கிடைப்பதற்கு வழி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தவறியுள்ளார்.

அதனால், அவர் அமைச்சராக தொடர்ந்து செயலாற்றுவதில் இச்சபை நம்பிக்கை இழந்துள்ளதெனக் குறிப்பிட்டு ஐ. தே. க. எம்.பிக்களான ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்கா, லக்ஷ்மன் கிரியெல்ல, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் கையெழுத்திட்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபைக்குக் கொண்டு வந்தனர்.

இப்பிரேரணை மீதான விவாதத்தை எதிர்த் தரப்பில் கம்பஹா மாவட்ட எம்.பி. ஜோன் அமரதுங்க தொடக்கி வைக்க ஆளும் கட்சி சார்பில் அமைச்சர் மைத்திரபால சிறிசேன விவாதத்தை ஆரம்பித்தார். இவ்விவாதத்திற்கு ஆளும் தரப்பில் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் பதிலளித்து உரையாற்றினார். இப்பிரேரணை மீதான விவாதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழரசு கட்சிகளின் எம்.பிக்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.

இப்பிரேரணை மீதான விவாதம் பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாகி சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றது.

பொன்சேகாவின் எம்.பி. பதவி வெற்றிடம்; பாராளுமன்ற செயலாளர் அறிவிப்பு

sarathfonsekasad.jpgஜனநாயகத் தேசிய கூட்டமை ப்பு கொழும்பு மாவட்ட எம். பி. சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக தசனாயக்க நேற்று (7) தேர்தல் ஆணை யாளருக்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 66-டீ சரத்தின் பிரகாரம் இந்த பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். மேற்படி சட்டத்தின்64-ளி சரத்தின் படி பாராளுமன்ற பதில் செயலாளர் இதனை அறிவித்து ள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவு க்கு 30 மாத கடூழிய சிறைத்தண் டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதற்கு முப்படைகளின் தளப தியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் 29ம் திகதி அங்கீகாரம் வழங்கினார். இதனடிப்படையில், பொன்சேகாவுக்கு எதிரான தண்டனை 30 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டதோடு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சரத் பொன்சேகாவின் வெற்றிடத்திற்கு கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு பட்டியலில் அடுத்ததாக உள்ள லக்ஷ்மன் நிபுனஆரச்சி நியமிக்கப்பட உள்ளதாக அறியவருகிறது.

ஆனால் இதனை ஏற்காத ஜேவிபி, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக நீதிமன்றம் செல்கிறது. “சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டது சட்ட விரோத செயல்” என, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ராணுவ நீதிமன்றம் பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் உறுப்பினர்களின் பதவி பறிப்பு போன்றவற்றில் இறஙகுவது ஆபத்தானது என்றும், இதனை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது ஜேவிபி

இதேவேளை, சரத் பொன்சேகாவின் எம். பி. பதவி வெற்றிடமாக இருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் அறிவித்திருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் பிரியங்கா ஜயரட்ன, அரசியலமைப்பின் பிரகாரம் சட்டபூர்வமாகவே பாராளுமன்ற செயலாளர் அறிவித்துள்ளதாகக் கூறினார்.

இலக்கியத்துக்கான நோபல் – பெரு நாட்டு எழுத்தாளர் வர்காஸ் லோசாவுக்கு

00mario-vargas-llosa.jpgபெரு நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசாவுக்கு 2010ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. பெரு நாட்டு அதிபர் தேர்தலில் முன்பு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் லோசா. சிறந்த எழுத்தாளர், பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஸ்பானிஷ் மொழி  பேசும் இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவர் லோசா.

74 வயதாகும் லோசாவை வெகுவாகப் பாராட்டியுள்ள நோபல் பரிசுக் கமிட்டி, அரசியல் அதிகாரம் குறித்த அவரது அலசல், தனி நபர்கள் அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடும் நிலை, அதில் அவர்கள் அடையும் தோல்விகள், புரட்சிகள் குறித்து மிகுந்த ஞானத்துடன் எழுதி வருபவர் லோசா என புகழாரம் சூட்டியுள்ளது. மேலும் 60களிலும், 70களிலும் லத்தீன் அமெரிக்க இலக்கியம் பெரும் புகழ் பெறவும், பிரபலம் அடையவும் வித்தாக அமைந்தவர்களில் மிக முக்கியமானவர் லோசா என்றும் புகழ்ந்துள்ளது.

லோசா, 30க்கும் மேற்பட்ட நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் புகழ் பெற்றவை கான்வர்சேஷன் இன் கதீட்ரல், தி கிரீன் ஹவுஸ் ஆகியவையாகும். 1995ம் ஆண்டு இவருக்கு ஸ்பானிஷ் மொழி இலக்கிய வட்டாரத்தில் அளிக்கப்படும் உயரிய விருதான கார்வன்டஸ் பிரைஸ் கிடைத்தது.

பெருவின் அரிக்யூபாவில் பிறந்தவர் லோசா. இவரது பெற்றோர் விவாகரத்து வாங்கியதால் பொலிவியாவில் தனது தாத்தா, பாட்டியுடன் வளர்ந்தார். பின்னர் 1946ல் மீண்டும் பெரு திரும்பினார்.அங்கு ராணுவப் பள்ளியில் சேர்ந்தார். பிறகு லிமா மற்றும் மாட்ரிட் நகர்களில் இலக்கியம் மற்றும் சட்டம்  பயின்றார். 1959ல் பாரீஸுக்கு இடம் பெயர்ந்தார். மொழி ஆசிரியராகப் பணியாற்றினார். ஏஎப்பி எனப்படும் ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ்ஸேவில் செய்தியாளராகப் பணியாற்றினார். பிரான்ஸ் டிவியிலும் வேலை  பார்த்துள்ளார். அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இவர் ஆசிரியராகப் பணியாற்றியவர்.இப்போது கூட பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராக இருக்கிறார்.

1990ல் பெரு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அல்பர்டோ பிஜிமோரியிடம் தோல்வியுற்றார். பின்னர் 1994ம் ஆண்டு ஸ்பானிஷ் அகாடமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த எழுத்தாளராக மட்டுமல்லாமல் சாதாரண மக்கள் மீதான அடக்குமுறைகளை தைரியமாக தட்டிக் கேட்கும் புரட்சிவாதியாகவும் திகழ்பவர் லோசா என்பது அவருக்கான கூடுதல் சிறப்பாகும்

வட மாகாணத்தில் ரூ.190 கோடியில் சுகாதார திட்டம்

cc.jpgவட மாகாண சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கென 19 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் சேவையாற்றும் பொருட்டு 1250 கிராமிய சுகாதார உதவியாளர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எய்ட்ஸ், காசம், மலேரியா ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் உலகளாவிய நிதியம் (மிபிதிஹிணி) என்ற திட்டத்தின் ஊடாக இதற்காக 19 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிதி ஐந்து முக்கிய திட்டங்களில் செலவு செய்யப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் வி. ரவீந்திரன் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் வட பகுதியிலுள்ள 25 வைத்தியசாலை கள் புதிதாக நிர்மாணிக்கப்பட வுள்ளதுடன், ஆளணி பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். “வரும் முன் காப்போம்” என்ற வேலைத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவியாளர்களுடன் இணைந்து சேவை யாற்றும் பொருட்டு 1250 கிராமிய சுகா தார உதவியாளர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 570 பேருக்கு நவம்பர் மாதத்தில் நியமனம் வழங்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐந்து அம்சங்கள் உள்ளடக்கப்பட்ட இந்த வேலைத் திட்டத்தின் முதலாவது அம்சத்தின் கீழ் 175 மருத்துவ மாதுகளும், 50 பொது சுகாதார அதிகாரிகளும் நியமிக்கப்படவுள்ளனர். அத்துடன் இவர்களுக்குத் தேவையான சகல பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது. இரண்டாவது அம்சத்தின் கீழ் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுள்ள 25 வைத்தியசாலைகள் புதிதாக நிர்மாணிக்க புனரமைக்கப்படவுள்ளது. அத்துடன் எட்டு சுகாதார அதிகாரிகள் அலுவலகம், 12 விடுதிகள், ஐந்து மலேரியா தடுப்பு அலுவலகம், இரண்டு இருதய சிகிச்சை பிரிவு, ஆகியன நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் 8 கெப் வண்டிகளும் வழங்கப்படவுள்ளன.

மூன்றாவது அம்சத்தின் கீழ் 56 மருத்துவ பரிசோதனை நிலையங்களை அமைப்பதற்கு அல்லது விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன. சுமார் 85 மருத்துவ ஆய்வுக் கூட உதவியாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டு, பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன என்றார்.

நான்காவது அம்சத்தின் கீழ் உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

வட மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதுடன் நிதி ஒதுக்கீடுளையும் செய்துள்ளது என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்

ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் சங்கக்காரவுக்கு முதலிடம்

sangakkara.jpgஐ.சி.சி. டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன் அவர் நான்காவது இடத்தில் இருந்தார்.

2002 டிசம்பரில் ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு தற்போது தான் முதன் முறையாக 3வது இடத்திற்கு சச்சின் முன்னேறியுள்ளார்.

இதுபோல், வி.வி.எஸ். லட்சு மண் 4 இடங்கள் முன்னேறி 8 வது இடத்தைக் கைப்பற்றியுளார். இலங்கை வீரர் குமார சங்கக்கார முதல் இடத்திலும், ஷேவாக் இரண் டாமிடத்திலும் உள்ளனர். ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல் நேற்று துபாயில் வெளியிடப் பட்டது.

நாடுமுழுவதும் 2066 கிராமசேவகர் வெற்றிடங்கள். போட்டிப் பரீட்சை மூலம் நிரப்ப முடிவு

sena.jpgநாட்டில் 2066 கிராம உத்தியோக த்தர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளன. அவற்றை துரிதமாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டி. டபிள்யூ. ஜோன் செனவிரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம். பி. தயாசிறி ஜயசேகரவின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில்: நாடெங்கிலும் 2066 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படும்.

பரீட்சைகள் ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக இப் போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்படும். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் திறமைச் சித்தியையும், கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியையும் பெற்றிருப்பவர்கள் இப்போட்டிப் பரீட்சைக்குத் தோற்றும் தகுதி பெற்றவர்களாவர்.

எல்.ரீ.ரீ.ஈ. முக்கிய சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் – பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. முக்கிய சந்தேக நபர்கள் எவருமே விடுதலை செய்யப்பட மாட்டார்களென பொலிஸ் தலைமையகம் நேற்று அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் கவுன்ஸில் இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தது.

இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று கூடிய தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீதான சாட்சியங்களுக்கேற்ப வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆதாரங்கள் உள்ள பயங்கரவாத சந்தேக நபர்கள் எவருமே விடுதலை செய்யப்படமாட்டார்கள்.

இதேவேளை, போதுமான சாட்சியங்கள் இல்லாத சந்தேக நபர்களை விடுதலை செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொமன்வெல்த் விளையாட்டு – அவுஸ்திரேலியா பதக்க பட்டியலில் முதலிடம்

commonwealt_logo.jpgகொமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு நேற்று மட்டும் இதுவரை 5 தங்கப் பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ககன் நரங், அனீஷா சையத், ஓம்கார் சிங் ஆகியோர் நேற்று தங்கப் பதக்கங்களை வென்றனர். மகளிர் வலுதூக்கும் போட்டியில் ரேணு பாலா சானு தங்கப் பதக்கம் வென்றார். மேலும் மல்யுத்தப் போட்டியில் ரஜீந்தர் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் இந்தியா பெற்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கின்து. நேற்றுக் காலையில் நடந்த 10 மீட்டர் ஏர் ரைஃபில் இறுதிப் போட்டியில் 103.6 புள்ளிகள் பெற்று நரங் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 2008ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் நிகழ்த்திய சாதனையை அவரே முறியடித்தார். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா, இந்தப் போட்டியில் 103 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஏற்கெனவே நேற்று நடந்த போட்டியில் இவர்கள் இருவருமே சேர்ந்து இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், துப்பாக்கி சுடும் போட்டியின் 25 மீ. பிரிவில் இந்திய வீராங்கனை அனீஷா சையதும் 50 மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஓம்கார் சிங்கும் தங்கம் வென்றனர். மகளிர் வலுதூக்கும் போட்டியின் 58 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ரேணு பாலா சானு தங்கப் பதக்கம் வென்றார்.

மல்யுத்தம் 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ரஜீந்தர் தங்கப் பதக்கம் வென்றார். இத்துடன் இந்தியா பெற்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது.