அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

நாட்டின் பல பகுதிகளில் நேற்று மின்சாரத்தடை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நேற்று பிற்பகல் 2.50 மணி முதல் மின்சாரத்தடை ஏற்பட்டது. கொத்மலை – பியகமைக்கிடையிலான தேசிய மின்னிணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணமென மின்வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பில் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவிக்கையில்,

கொத்மலை – பியகம தேசிய மின்னிணைப்புப் பரிமாற்றத் தொகுதியில் நேற்று 2.50 மணியளவில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இது தொடர்பில் மின்சார சபைக்குப் பல முறைப்பாடுகள் வந்தன.

மேற்படி மின்துண்டிப்பினால் கொத்மலை – பியகம மின்னிணைப்பு பரிமாற்றத் தொகுதியூடாக மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் மின் பாவனையாளர்கள் அசெளகரியங்களுக்குள்ளாகினர். இத்தொழில்நுட்பக் கோளாறைப் பரிசோதித்து திருத்தும் நோக்கில் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அக்குழு உடனடியாகவே தமது செயற்பாடுகளை ஆரம்பித்தன.

இதனையடுத்து எவ்வளவு விரைவாக மின்சாரத்தை வழங்க முடியுமோ அந்தளவு விரைவாக மின்சாரத்தை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் மின்வலு எரிசக்தி அமைச்சு மேற்கொண்டதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

பாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு- இருதரப்பு பேச்சு இன்று ஆரம்பம்

sr.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி நேற்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார். நேற்று பிற்பகல் 4.30 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பையேற்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள சர்தாரிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

எதிர்வரும் 30ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சர்தாரி, இலங்கை அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார். இவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி. மு. ஜயரட்ன, அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

பாகிஸ்தான் ஜனாதிபதியுடன் 40 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவினரும் வருகை தந்துள்ளனர். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரோமி, பாதுகாப்பு அமைச்சர் அஹமட் முக்தார், பாக். வர்த்தக சம்மேளனத் தலைவர் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் ஆகியோர் இதில் அடங்குவர்.

படைத் தலைமையகம் உள்ள இடங்களில் உல்லாச ஹோட்டல்கள் – கோட்டாபய ராஜபக்ஷ

சுற்றுலாக் கைத்தொழில் துறையில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழும் சீனாவின் சங்கிரில்லா நிறுவனம் இலங்கையின் உல்லாசப் பயணத் துறையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட முன்வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இந்த முதலீடு தொடர்பான உடன்படிக்கை நேற்று முன்தினம் நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்ட தாகவும் கூறினார்.

இந்த முதலீட்டின் மூலம் இராணுவ தலைமையகம் அமைவுற்றிருக்கும் பிரதேசம் அடங்கலான பகுதியில் உல்லாச ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் குறிப் பிட்டார். இராணுவ தலைமையகம் உள்ளிட்ட முப்படை தலைமையகங்களும் பத்தர முல்லையிலுள்ள 55 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

களுத்துறை தீயணைப்பு மற்றும் அனர்த்த சேவைப் பிரிவு, களுத்துறை நகர சபையின் இணையதள அங்குரார்ப்பண வைபவம் என்பன பிரதியமைச்சர் ரோகித அபேகுண வர்தன தலைமையில் களுத்துறை நகர மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘நாம் அழிந்த வரலாறு போதும். இனி அழிவுகளில் இருந்து எழுந்து நிமிர்வோம்’ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Douglas_Devanandaவடமாகாண விவசாயிகளுக்காக இந்தியா வழங்கும் உழவு இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (நவம்பர் 27 2010) ஆற்றிய உரை.

அனைவருக்கும் வணக்கம்!….

எமது தேசமெங்கும் இரத்த ஆறு கொட்டிப்பாய்ந்த கொடிய வரலாறு ஒழிந்து முடிந்து, சமாதான நதி பெருக்கெடுத்து பாயும் காலம் இது!…

நாம் விரும்பும் சமாதானம் என்பது சகல மக்களும் அனுபவித்தே தீர வேண்டிய அரசியலுரிமை சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.

அந்த வகையில் அரசியலுரிமை சுதந்திரத்தை எமது மக்கள் அனுபவிக்க முடிந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் முன்னெடுத்து வருகின்ற இவ்வேளையில்….

இதே சம காலத்தில் எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவோம் என்ற உண்மையை மக்களாகிய உங்களுக்கு உறுதியாக மெய்ப்பிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இன்றைய நாளை நாம் கருத வேண்டும்.

இது சாதாரண நாள் அல்ல. நாம் அழிந்த வரலாறு போதும். இனி அழிவுகளில் இருந்து எழுந்து நிமிர்வோம் என்பதற்கு கட்டியம் கூறும் அர்த்தமுள்ள நாள் இன்றைய நாள்.

ஆகவேதான் இன்றைய இந்த நிகழ்வில் எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவின் பிரதமர் கெளரவ திரு மன்மோகன் சிங் அவர்களின் நல்லெண்ண  து}துவனாக எஸ். எம் கிருஸ்ணா அவர்கள் வருகை தந்திருக்கின்றார்.

இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தின் ஆரம்பங்களில் இந்தியாவில் இருந்து சமாதான து}துவனாக வந்திருந்தவர் திரு பார்த்தசாரதி அவர்கள்.

அப்போது எமது மக்கள் கீதை சொன்ன கண்ணன் வண்ண தேரில் வருகிறான் போன்ற பக்தி பாடல்களை எங்கள் தேசமெங்கும் இசைக்க விட்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அதை வரவேற்றிருந்தனர்.

அது போலவே, இன்றும் இந்தியாவில் இருந்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் து}துவனாக எம்மை நாடி வந்திருக்கிறார் எஸ்.எம் கிருஸ்ணா அவர்கள்.

உலகத்தின் ஒளியாகவும், சமாதான தூதுவனாகவும் யேசு பிரான் அவதரித்த நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நீதிக்காகவும், தர்மத்திற்காகவும் உபதேசம் செய்த கிருஸ்ண பரமாத்மாவின் வடிவமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஸ்ணா அவர்கள் இங்கு வருகை தந்திருக்கின்றார்.

அவரை ஈழத் தமிழர்கள் சார்பாகவும், எமது அரசாங்கத்தின் சார்பாகவும் நான் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.

அது மட்டுமன்றி. எமது மக்களுக்காக இனி வரப்போகின்ற அரசியலுரிமை சுதந்திரத்திற்காகவும், அழிந்து போன எமது தேசத்தை மறுபடியும் கட்டி எழுப்பும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச அவர்களின் இன்னொரு வடிவமாகவும், அவரது பிரதிநிதியாகவும் எமது நண்பர் பசில் ராஜபக்ச அவர்கள் இங்கு வந்திருக்கின்றார்.

எப்போதுமே எம்மோடு ஒத்துழைத்து வட பகுதி மக்களின் துயரங்களோடும் துன்பங்களோடும் பங்கெடுப்பதோடு மட்டுமன்றி எமது மக்களுக்காக முன்னெடுத்து வருகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருப்பவரும், வட பகுதி மக்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாக திகழ்பவருமான வட மாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்கள் இங்கு வந்திருக்கின்றார்.

துணிச்சலான பெண்மணிகளாக எம்மோடு சேர்ந்து யாழ் மாவட்ட அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு வரும் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அவர்கள், மற்றும் எமது யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள், எமது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று மக்களாகிய உங்களுக்கு நம்பிக்கை தரும் சகலரும் இங்கு வந்திருக்கின்றோம்.

எமது மக்களில் பலர் இறந்து போன தங்களது உறவுகளை நினைத்து துயரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அது எனக்கு புரிகின்றது.
 
இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது எமது மக்களுக்கு கிடைத்திருந்த ஒரு பொன்னான வாய்ப்பு. அதை ஏற்று, சரி வர பயன்படுத்தியும் இருந்தால் நாம் கடந்த காலங்களில் அழிவுகளை சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்திருக்காது.

மக்களாகிய நீங்கள் உங்களது பிள்ளைகளை அல்லது உறவுகளை அழிவு யுத்தத்திற்கு பலி கொடுத்திருக்க வேண்டிய அவலங்கள் இங்கு நடந்திருக்காது.

தவறான வழி முறையில் வழிநடத்தப்பட்டிருந்தாலும் இழந்து போன உயிர்கள் யாவும் எமது மக்களாகிய உங்களது பிள்ளைகள் என்ற வகையில், எங்களது உறவுகள் என்ற வகையில் நாமும் உங்களது துயரங்களில் பங்கெடுக்கின்றோம்.
 
நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லதாக நடக்க வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும்.
 
கடந்த காலங்களில் உங்களுக்கு அழிவுகளை பெற்று தந்த தவறான வழிமுறைகளை நீங்கள் உணர்ந்து, தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தியிருந்த அனைத்து வழிமுறைகளையும் நீங்கள் இன்னமும் முழுமையாக புரிந்து கொண்டு செயற்பட முன்வருவீர்களேயானால் நாம் கடந்த இருபது வருடங்களில் சந்தித்திருந்த அழிவுகளை மிகவும் குறுகிய காலத்தில் நாம் கட்டி எழுப்பி விடலாம்.

இது போன்ற நிகழ்வுகளும் திட்டங்களும் இங்கு நடந்து கொண்டிருப்பதும்,  நீங்கள் பயனாளிகளாக வந்து உங்களுக்கான உதவிகளை பெற்று கொண்டிருப்பதும், மிகவும் மகிழ்ச்சிகரமானதும் நம்பிக்கை தரக்கூடியதுமான விடயங்களாகும். நாம் கடைப்பிடித்து வருகின்ற இணக்க அரசியல் செயற்பாட்டின் மூலம் இது போன்ற பல தேவைகளை நிறைவேற்றி முடிக்க முடியும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. ஒருவன் நடுக்கடலில் வீழ்ந்து விட்டான் என்பதற்காக அவன் கடலை திட்டிக்கொண்டிருக்க முடியாது. நம்பிக்கையோடு கரையேற  முயற்சிக்க வேண்டும். கையில் கிடைக்கின்ற ஏதாவது ஒன்றை முதலில் கெட்டியாக பிடித்துக்கொண்டு கரையேற முயற்சிக்க வேண்டும். அது போலவே எமது பிரச்சினைகளையும் நாம் அணுக வேண்டும்.

யாருடன் பேசி நாம் எமது மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமோ அவர்களுடன் இணைந்துதான் எதையும் சாதிக்க முடியும்.

நாம் கட்டம் கட்டமாக எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்று உங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கின்றோம். அது நிச்சயம் நடக்கும். நாங்கள் அதை நடாத்திக் காட்டுவோம்.

எமது மக்களுடைய மீள் குடியேற்றம், அவர்களுக்கான வாழ்வாதார வசதிகள், உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த பிரதேசங்களை மீண்டும் மக்கள் குடியிருப்பாக மாற்றியமைத்தல்  போன்ற எல்லா பிரச்சினைகளும் கட்டம் கட்டமாக நிறைவேறி வருவதை நீங்கள் கண்டு வருகின்றீர்கள்.

இவைகள் எல்லாம் நாங்கள் அரசாங்கத்தில் பங்கெடுத்திருப்பதாலும், அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொண்டதாலும்  நடந்து கொண்டிருக்கும் காரியங்களே என்பதை நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்கள்.

இது போலவே எமது அரசியலுரிமை பிரச்சினைக்கும் நாம் தீர்வு காண்போம் என்பதை உறுதியாக தெரிவிக்க விரும்புகின்றேன். எமக்கு இன்னமும் அதிகமான அரசியல் பலம்  கிடைத்திருந்தால் நாம் இன்னமும் விரைவாக அவைகளை நிறைவேற்றியிருப்போம்.

நேற்றைய தினம் எமக்குள் பொது உடன்பாடு கண்டு செயற்பட்டு வரும் பல்வேறு கட்சிகளும் இணைந்த தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தது. இந்த சந்திப்பானது மிகவும் திருப்திகரமானதாகவும், நம்பிக்கை தருவதாகவும், முன்னேற்ற கரமானதாகவும் அமைந்திருந்தது.

ஆகவே எமது மக்களின் விடிவிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தமது முரண்பாடுகளை மறந்து நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் நான் இந்த நிகழ்வின் ஊடாக அழைப்பு விடுக்க விரும்புகின்றேன்.

இதே நேரத்தில் இந்த நாட்டில் நிலவியிருந்த சகல வன்முறைகளும் இன்று முடிவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. எமது சமூகம் ஒரு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட சமூகமாக முழுமையாக மாறுவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும்.

நேற்றிரவு 2.00 மணியளவில் நான் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி கொடிகாமம் பகுதி ஊடாக வந்துகொண்டிருந்த போது யாழ் தினக்குரல் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து எனக்கு அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருந்தது.

தமது அலுவலகத்தின் அருகில் யாரோ சிலர் இரும்பு தடி பொல்லுகளுடன் வந்து நிற்பதாகவும் தம்மை ஆபத்தில் இருந்து பாதுகாக்குமாறும் எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. நான் உடனடியாகவே யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியோடு தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு செல்லுமாறு தெரிவித்திருந்ததோடு அந்த நள்ளிரவு வேளையில் நானே நேரடியாக தினக்குரல் அலுவலகம் நோக்கி சென்று தினக்குரல் ஊழியர்களுடன் பேசி நிலைமைகளை அவதானித்து உரிய நடவடிக்கையினையும் எடுத்திருந்தேன்.

இது போன்ற அச்சுறுத்தல் சம்பவங்களில் எந்த தரப்பினரும் ஈடுபடுவதை தவிர்த்து இன்று உருவாகியிருக்கும் இந்த ஜனநாயக சூழலை பாதுகாக்க சகலரும் முன்வர வேண்டும் என்பதை நான் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வந்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்த ஜனநாயக சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எமது விருப்பங்களை வெளிப்படையாகவே ஏற்று கருத்துச் சொல்லி வருகின்றார். அது மட்டுமன்றி  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அபிவிருத்தி, அன்றாட அவலங்களுக்கான தீர்வு முதற்கொண்டு, அரசியல் தீர்வு வரைக்கும் அனைத்தையும் நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்தின் ஊடாக நாம் நிறைவேற்றுவோம். அதற்கு ஈ.பி.டி.பி யினராகிய நாம் பொறுப்பு.

நடக்கும் என்று நம்பிக்கையோடு செயற்பட்டால் அது நடக்கும். நடக்காது என்று கூறி நாம் விலகி இருப்போமேயானால் அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை.

எமக்கு பக்க பலமாக, தமிழ் மக்களுக்கு உறுதுணையாக, எமது மக்களின் அரசியலுரிமைக்கு தீர்வு காணும் விடயத்தில் எமது அரசாங்கத்திற்கும், எமக்கும் துணையாக எமது நட்பு நாடாகிய இந்தியா இருக்கின்றது.

அதற்கு அடையாளமாகவே பல்வேறு அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகளோடு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா அவர்கள் இங்கு வருகை தந்திருக்கின்றார்.

அதே போல் நண்பர் பசில் ராஜபக்ச அவர்கள் இலங்கை இந்திய அரசுகளுக்கிடையிலான ஒரு உறவுப்பாலமாக செயலாற்றுவதோடு இன்று இந்த மண்ணையும் மக்களையும் நோக்கி வர விரும்பியிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம். கிருஸ்ணா அவர்களையும் அழைத்து வந்திருக்கிறார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையிலான அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இன்று கைகுலுக்கி நேச சக்திகளாக செயற்பட்டுக் கொண்டிருப்பது இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கும் பெரிதும் சாதகமான ஒரு விடயமாகும்.

ஆகவே இலங்கை இந்திய நட்புறவு வளர வேண்டும் என்று நான் தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துகின்றேன்.

இதே வேளையில் எமது மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை புரிந்து வருகின்ற இந்திய அரசுக்கும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் தமிழ் மக்களின் சார்பாக நான் நன்றி தெரிவித்து எனது உரையை இத்துடன் முடிக்கின்றேன்.

ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க தமிழ்க் கட்சிகளின் அரங்கம் முடிவு

Tamil_Arangam_Met_MR_26Oct10வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அப்பகுதி மக்களின் நலன், வாழ்வாதாரம் தொடர்பாக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவதாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலுள்ள சகல மக்களுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போன்றதொரு திறமையான தலைவர் வேறு எங்கும் கிடையாது எனவும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamil_Arangam_Met_MR_26Oct10தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியபோதே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கருத்தை தெரிவித்தனர்.வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்தும் பேசப்பட்டது.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் எந்தவொரு நபரையும் மீளக்குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்காது என சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றிய பின்னர் ஒழுங்கான முறையில் மக்கள் அவர்களின் இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.

Tamil_Arangam_Met_MR_26Oct10இச்சந்திப்பின்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார் எம்.பி., வீ. ஆனந்த சங்கரி, ரி. சித்தார்த்தன், எஸ். சதானந்தம், ரி. ஸ்ரீதரன், பி. குமார், கே. சிவாஜிலிங்கம், சீ. சந்திரஹாசன், எஸ். பேரின்பநாயகம், கே. சுரேந்திரன், என். குமரகுருபரன், ஏ. ராஜமாணிக்கம், கே. தயாலினி, ஜீ. ராஜ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மன்னார், முல்லை, யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் கடும்மழை

Flooding_Jaffnaயாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் முப்பத்தாறு மணித்தியாலத்துக்குள் கடும் மழை பெய்யுமென யாழ். திருநெல்வேலி வானிலை ஆய்வுமையம் எதிர்வு கூறியுள்ளது. தற்போது தாழமுக்கம் இல்லாதபோதும் இது பருவப் பெயர்ச்சிக்கான மழை வீழ்ச்சியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று காலை முதல் குடாநாட்டிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் தொடச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது.

Flooding_Jaffnaகுடாநாட்டில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி தருகின்றன. யாழ்ப்பாணம் மொம்மைவெளி, சூரியவெளி பண்ணை, காக்கைதீவு, இருபாலை மக்கள் வெள்ளம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளனர். யாழ். செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெள்ளகாரணமாக இடம்பெயர்ந்த மக்களின் நலன்களைக் கவணிக்க தகவல்களை திரட்டி வருகின்றது.

மன்னாரில் தொடரும் மழை, வெள்ளம் காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன. மன்னார் நகர் பகுதியில் உள்ள வீதிகளில் வெள்ள நீர் நிறைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறிய குளங்களில் நீர் நிறைந்து பெருக்கெடுத்திருக்கின்றது.

அபிவிருத்தி இலக்கை வெற்றிகொள்வதில் சிறுபான்மை மக்களும் பூரண பங்களிப்பு வழங்கவேண்டும் – கெஹலிய

kahiliya.jpgஅரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி இலக்கை வெற்றிகொள்வதில் சிறுபான்மை மக்களும் பூரண பங்களிப்பு வழங்கவேண்டுமென தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதென நாம் ஓய்ந்துவிட முடியாது. சர்வதேச நாடுகளில் அதன் செயற்பாடுகள் துடிப்புடன் இடம்பெறுகின்றன. ஜனநாயகத்தின் காவலர்கள் என்று கூறப்படும் நாடுகளே அதற்கு ஒத்துழைப்பை வழங்குகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள அமைச்சர் ரம்புக்வெல்ல நேற்று தமது அமைச்சில் தமது கடமையைப் பொறுப்பேற்ற பின் ஊடக அமைச்சு, மற்றும் தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றினார். இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், புலிகளின் முக்கியஸ்தரான ருத்ரகுமாரைப் பிரதமராகக் கொண்ட நாடுகடந்த அரசாங்கம் அண்மையில் அமைக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஒத்துழைப்பை வழங்கியுள்ளன. அதேபோன்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த தமிழ்ச் செல்வனுக்கு பிரான்ஸில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் அந்நாட்டின் பிராந்திய ஆளுநர் ஒருவரே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டுள்ளார்.

அரசாங்கம் எத்தகைய தீர்மானங்களை எடுத்த போதும் அதனை சில மணித்தியாலங்களுக்குள் மாற்றவேண்டிய நிர்ப்பந்தத்தை எங்கோ பதுங்கு குழிக்குள் இருந்த ஒரு தனி மனிதன் ஏற்படுத்திய யுகம் ஒன்றை மறந்துவிட முடியாது.

இன்றும் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்ட போதும் புலிகள் அரசாங்கம் அமைத்து தம்மை நிலை நிறுத்திக்கொள்ள முயலும் நடவடிக்கைகள் சர்வதேச மட்டத்தில் இடம்பெறுகின்றன. அதனை சில சர்வதேச நாடுகள் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ள நிலையையும் காணமுடிகிறது.

இந்நிலையில் தனித்துவமும் இறைமையும் உள்ள நாடு என்ற வகையில் நாம் பெற்ற சுதந்திரத்தையும் உரிமையையும் இலங்கையர் என்ற அடையாளத்தையும் பாதுகாப்பதில் நாம் முன்னிற்க வேண்டும். அதற்கு ஊடகத் தகவல் துறை அமைச்சின் பங்களிப்பு மிக விசாலமானது என்பதை உணர்ந்து செயற்படவேண்டும எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளம், மண்சரிவு – 16 ஆயிரத்து 681 பேர் பாதிப்பு.

கடந்த சில தினங்களாகப் பெய்த மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 3768 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 62 வீடுகள் முழுமையாகவும், 239 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவென 225 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்றுத் தெரிவித்தார்.

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களுக்கு இந்நிதி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வும் அவர் கூறினார். குருநாகல், புத்தளம், கொழும்பு, மாத்தளை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கும் இந்நிதி மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆபாச இணையத் தளங்களை வடிவமைப்போர் மீது தண்டனை

அறியாமையால், விருப்பமின்றி அல்லது காட்சிப்படுத்தும் நோக்கமின்றி ஆபாச இணையத்தளங்களில் தோற்றியுள்ள நபர்களின் இரகசியத் தன்மையினைப் பேணி அவர்களை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு கோட்டை நீதவான் செல்வி லங்கா ஜயரத்னவிடம் நேற்று (25) தெரிவித்தது. அந்த நபர்களின் புகைப்படங்கள் பிரசித்தி ப்படுத்தப்பட மாட்டாது எனவும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலும் குறிப்பிடுகின்றது. ஆபாச இணையத் தளங்களிற்கு காட்சியளிக்கும் புகைப்படங்களை பிரசித்தப்படுத்துவதற்கு முன்னர் தேவையானவர்களுக்கு அந்தப் புகைப்படங்களை வந்து பார்வையிடுவதற்காக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் தலைமையகம் மற்றும் காலி, கண்டி, நீர்கொழும்பு, மாத்தறை, இரத்தினபுரி, அநுராதபுரம், அம்பாறை ஆகிய தொகுதி காரியாலயங்களில் இரகசியமாக வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் பணியகம் மேலும் குறிப்பிடுகின்றது.

ஆபாச இணையத் தளங்களில் காட்சிப்படுத்தப்படுகின்ற நபர்களின் புகைப்படங்களை நீதிமன்ற அனுமதியின் மீது பத்திரிகைகளில் பிரசுரித்ததன் பின்னர் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திடம் ஆஜரானதாகவும், மேலும் ஒன்பது பேர் தொடர்பாக அனாமதேய அழைப்புக்கள் மூலம் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பணியகம் நேற்று (25) நீதவானிடம் தெரிவித்தது.

ஆபாச இணையத் தளங்களை வடிவமைத்து இணையத்தில் சேர்த்து பணம் உழைப்போர் தொடர்பாக தொடர்ந்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பணியகம் கூறுகிறது. இவ்வாறான செயற்பாடுகளில் கூட்டாக அல்லது தனிப்பட்ட முறையில் நிறுவனங்களை நடத்திச் செல்வது அல்லது பங்களிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலும் கூறுகின்றது.

கிருஷ்ணா இன்று வருகை; சர்தாரி ஞாயிறன்று கொழும்பில்

ind-pak.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி, இந்திய அமைச்சர் ஆகியோரின் இலங்கை விஜயத்தால் நாட்டுக்கு பலகோடி பெறுமதியான நன்மைகள் கிடைக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். இது தவிர இலங்கையில் முதலீடு செய்வதற்காக பெல்ஜியம் மற்றும் மலேசிய நாட்டு உயர் மட்ட வியாபாரிகள் குழுக்களும் இலங்கை வருவதாக அமைச்சர் கூறினார்.

வரவு – செலவுத்திட்ட இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேலும் கூறியதாவது:- இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இன்று (வியாழன்) இலங்கைக்கு வருகிறார். அவர் வெறும் கையுடனன்றி நாட்டுக்கு பல்வேறு நன்மைகளை எடுத்து வருகிறார்.  யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவர் விஜயம் செய்வார். 250 அமெரிக்க டொலர் செலவில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தையும் கிருஷ்ணா ஆரம்பித்து வைக்க உள்ளார். கடனாக அன்றி உதவியாகவே இந்த வீடமைப்புத் திட்டம் இலங்கைக்கு வழங்கப்படுகிறது.

இது தவிர 800 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடக்கில் மூன்று ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் பணியையும் அவர் ஆரம்பித்துவைப்பார்.

அத்தோடு காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் என்பவற்றை அபிவிருத்தி செய்யவும் இந்தியா விசேட திட்டங்களை முன்னெடுக்க உள்ளது. தனது விஜத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திலும் ஹம்பாந்தோட்டையிலும் இரு கொன்சூலர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படும்.

பாக். ஜனாதிபதி விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பும் தினத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அல் சர்தாரி இலங்கைக்கு வருகை தருகிறார். அவரும் இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் பல திட்டங்களை எடுத்து வருகிறார். சீனி, சீமெந்து கைத்தொழிற்சாலைகள் சிறுமத்திய கைத்தொழிற் துறைகள் ஆரம்பிப்பது குறித்து அவரின் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும்.