அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கொமன்வெல்த் விளையாட்டு – அவுஸ்திரேலியா பதக்க பட்டியலில் முதலிடம்

commonwealt_logo.jpgகொமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு நேற்று மட்டும் இதுவரை 5 தங்கப் பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ககன் நரங், அனீஷா சையத், ஓம்கார் சிங் ஆகியோர் நேற்று தங்கப் பதக்கங்களை வென்றனர். மகளிர் வலுதூக்கும் போட்டியில் ரேணு பாலா சானு தங்கப் பதக்கம் வென்றார். மேலும் மல்யுத்தப் போட்டியில் ரஜீந்தர் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் இந்தியா பெற்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கின்து. நேற்றுக் காலையில் நடந்த 10 மீட்டர் ஏர் ரைஃபில் இறுதிப் போட்டியில் 103.6 புள்ளிகள் பெற்று நரங் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 2008ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் நிகழ்த்திய சாதனையை அவரே முறியடித்தார். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா, இந்தப் போட்டியில் 103 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஏற்கெனவே நேற்று நடந்த போட்டியில் இவர்கள் இருவருமே சேர்ந்து இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், துப்பாக்கி சுடும் போட்டியின் 25 மீ. பிரிவில் இந்திய வீராங்கனை அனீஷா சையதும் 50 மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஓம்கார் சிங்கும் தங்கம் வென்றனர். மகளிர் வலுதூக்கும் போட்டியின் 58 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ரேணு பாலா சானு தங்கப் பதக்கம் வென்றார்.

மல்யுத்தம் 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ரஜீந்தர் தங்கப் பதக்கம் வென்றார். இத்துடன் இந்தியா பெற்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது.

மாவீரர் தினத்தை கொண்டாடத் தயாராகுமாறு குறுந்தகவல் அனுப்பிய யுவதி கிளிநொச்சியில் கைது

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் தொடர்பாக தனது கையடக்கத் தொலைபேசியில் குறுந் தகவல்களை (எஸ்.எம்.எஸ்.) வேறு ஆட்களுக்கு அனுப்பியதாகக் கூறி கிளிநொச்சியில் பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த மாவீரர் தினத்தைக் கொண்டாட ஆயத்தமாகும் படியும் அதில் அந்த யுவதி குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிளிநொச்சிப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இப்பெண் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3000 பேருக்கு இன்று ஆசிரிய நியமனம்

bandula.jpgகல்வியியல் கல்லூரிகளில் இருந்து பயிற்சி பெற்று வெளியேறும் 3000 பேருக்கு இன்று (06) ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் கூறினார். ஏற்றத் தாழ்வு ஏற்படாத வகையில் ஜனவரி மாதம் முதல் ஆசிரியர் இடமாற்றங்களை செயற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாய் மூல விடைக்காக ஐ. தே. க. எம்.பி. சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங் களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 554 ஆங்கில ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது தவிர அழகியற்கலை ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகப் போட்டிப் பரீட்சையூடாக ஆசிரியர்களை தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3174 அழகியற்கலை ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஒக்டோபர் 9 ஆம் திகதி போட்டிப் பரீட்சை நடத்தப்படும். இது தவிர கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் 3000 பேருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கி ஆசிரியர் வெற்றிடமாக உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர்.

சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ள தோடு, சில பாடசாலைகளில் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே, இடமாற்றக் கொள்கையின் பிரகாரம் 8 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் பணி புரிந்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என்றார்

உள்ளூராட்சி மன்றங்கள் திருத்தச் சட்ட மூலம் வர்த்தமானியில்

sri-lankan-parliament.jpgஉள்ளூராட்சி மன்றங்கள் திருத்தச் சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலத்தின் மீதான விவாதத்தை எதிர்க்கட்சி தரப்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில் உள்ளூராட்சி மன்றங்கள் திருத்த சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதன் பிரதியை எதிர்க்கட்சித் தலைவர் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

பொன்சேகாவின் காலத்தில் இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக 5244 இராணுவத்தினருக்கு தண்டனை

சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் 156 இராணுவ அதிகாரிகளுக்கும், 5088 இராணுவ வீரர்களுக்கும் இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகளை பெற்றுக்கொடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், இளைஞர் விவகார அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பொன்சேகா தளபதியாக இருந்த போது இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்புகளுக்கு முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அப்போதும் கையொப்பமிட்டு அனுமதியை வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். அப்போது தண்டனை வழங்கப்பட்டவர்களுக்காக எவரும் குரல் கொடுக்கவில்லை. இந்நிலையில் சரத் பொன்சேகாவுக்காக மாத்திரம் எதிர்க்கட்சிகள் குரல்கொடுப்பது ஏன் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பிலுள்ள மகாவலி கேந்திரத்தில் நடைபெற்றது. ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்ட இம்மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப் பெரும மேலும் உரையாற்றுகையில்: பொன்சேகா தளபதியாக இருந்த காலத்தில் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய உட்பட மேஜர் ஜெனரல் தரங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இராணுவ நீதிமன்றத்தின் மூலம் பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக தண்டனைகள் விதிக்கப்பட்டன.

இக்காலகட்டத்தில் நியமிக்கப்பட்டிருந்த இராணுவ நீதிமன்றத்தில் அங்கம் வகித்த மூன்று மேஜர் ஜெனரல்களே பொன்சேகா மீதான முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளை நடத்தினார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தேசத்தால் புகழப்பட்ட வீரர் ஒருவர் தேசத்துரோகத்தனமாக நடந்த குற்றச்சாட்டிற்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இது மாத்திரமல்ல இதுபோன்று சம்பவங்கள் உலகின் பல நாடுகளில் இடம்பெற்றுள்ளன.

முதலாவது உலக மகா யுத்தத்தின் போது வழிநடத்திய அந்நாட்டு தளபதி பலராலும் போற்றப்பட்டார். ஆனால் பல வருடங்களுக்கு பின்னர் அவர் ஹிட்லருக்கு இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருந்தாலும் அவரைக் கெளரவப்படுத்தும் வகையில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் சிறையிலேயே உயிரிழந்தார். இது போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொமன்வெல்த் போட்டி இன்று கோலாகலமாக ஆரம்பம்

commonwealt_logo.jpgகொமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் இன்று கோலாகலமாக தொட ங்குகின்றன. இரவு 7 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. எதிர்வரும் 14ம் திகதி வரை நடைபெறும்.

இன்று தொடக்க விழா நிகழ்ச்சி மட்டும் நடை பெறும். போட்டிகள் எதுவும் இல்லை. திங்கள் முதல் போட்டிகள் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த காமன் வெல்த் விளையாட்டுத் திரு விழாவில் 71 நாடுகள் கலந்து கொள்கின்றன. 6700 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோர் இணைந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைக்கின்றனர்.

பொன்சேகா முறைப்படி மன்னிப்பு கோரினால் கவனம் செலுத்தப்படும் – ஜனாதிபதி

சரத் பொன்சேகாவிற்கு எதிரான தீர்ப்பினைத் தாம் ஏற்றுக்கொண்டமை தனிப்பட்ட பழிவாங்கலல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தாமே நியமித்த இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை தாமே ஏற்காவிட்டால் அந்த நீதிமன்றக் கட்டமைப்பிற்கே பங்கம் ஏற்படுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சரத்பொன்சேகாவிற்கு மன்னிப்பளித்தல் சம்பந்தமாக முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அப்போது அது விடயத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பொலன்னறுவையில் பெளத்த மதத் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் (நேற்று முன்தினம்) கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இது நிதி மோசடி சம்பந்தமான குற்றமாகும். “என்னைக் கொலை செய்வதாகக் கூறிய போதும் நான் அது சம்பந்தமாக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை” எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் மன்னிப்பளிக்க முடியுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப முறைப்படி செயற்பட்டால் அது தொடர்பில் கவனத்திற்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இராணுவ நீதிமன்றத்தில் இத்தீர்ப்பு ஒன்றும் புதியதல்ல. இந்த நீதிமன்றத்தின் மூலம் சுமார் 8000 பேர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

சிறுவயதுத் திருமணம் பதிவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

குறைந்த வயது சிறுவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் பதிவாளர்களை வேலை நீக்கம் செய்து, அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.நாட்டின் எப்பகுதியாயினும் இவ்வாறு செயற்படும் திருமணப் பதிவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

பொலன்னறுவையில் நேற்று நடை பெற்ற வடமத்திய மாகாண அபிவிருத்தி செயற்பாட்டு மீளாய் வுக் கூட்டத்தின் போது வெலிக்கந்தை பிரதேசத்தில் பெருமளவு சிறுமிகள் குறைந்த வயதில் திருமணம் முடித்து ள்ளதாகவும், 15 வயதிற்கு மேற்பட்ட ஒரு சிறுமி கூட அப்பிரதேசத்தில் தற்போது இல்லை யென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது தொடர்பான முறைப்பாடு தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறு அங்கு சிறுவயதில் திருமணம் முடிந்த சிறுமிகளின் புகைப்படத்தையும் ஆதாரமாகக் காட்டினார். தனித்தனியே காணிகளைப் பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களுக்காக பெற்றோர் சிறு வயதிலேயே தமது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர்.

இத்தகைய சிறு பிள்ளைகள் இன்னும் சில மாதங்களில் பிள்ளைகளைப் பெற்று எவ்வாறு அவற்றை வளர்க்கப் போகின்றார்கள் என்பதை அந்த பெற்றோர் ஏன் சிந்திக்கவில்லையெனவும் ஜனாதிபதி கேள்வியெழுப்பினார். சிறுவர் தினம் கொண்டாடப்படும் இவ் வாரத்தில் இத்தகைய அநியாயங்கள் நடப்பதைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கடுமையான உத்தரவு பிறப்பித்தார்.

உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதம மந்திரி

tgte.jpgநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரதமமந்திரி தெரிவுசெய்யப்பட்டதுடன் அமைச்சரவையினை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என இணையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் 2010 செப்ரம்பர் 29ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 1ம் நாள்வரையான மூன்றுதினங்கள் கூடி அவ்அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் தமக்கான பிரதம மந்திரியினையும் தெரிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சரவையினை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தன.

நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்றம் இரண்டு அவைகளினைக் கொண்டதாக இருக்கும். இது தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினைக் கொண்ட பாராளுமன்றத்தினையும், செனற் எனப்படும் நியமன அங்கத்தவர்களினைக் கொண்ட ஆலோசனைச் சபையினையும் கொண்டிருக்கும். நாடுகடந்த தமிழீழ அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கனடாவினைச் சேர்ந்த திரு.பொன் பால்ராஜன் அவர்களினை பாராளுமன்ற சபாநாயகராகவும் சுவிற்சலாந்து நாட்டினைச் சேர்ந்த செல்வி. சுகன்யா புத்திரசிகாமணி அவர்களை பிரதி சபாநாயகராகவும் ஏகமனதாக தெரிவு செய்தது.

 திரு.விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதம மந்திரியாக பாராளுமன்றத்தினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

tgte.jpg

உரிய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை

computer.jpgதடை செய்யப்பட்ட 170 பாலியல் இணையத்தளங்களினை வடிவமைத்தவர்கள் தொடர்பிலும், இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள இளைஞர்கள் தொடர்பிலும் தீவிர விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளை தொடர்ந்து அது சம்பந்தமான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நீதி மன்ற உத்தரவின் பிரகாரம் உரிய நபர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது