அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

யாழ். பல்கலைக்கழகத்தை விஸ்தரிக்க இந்திய உதவியை நாடும் அமைச்சர் எஸ். பி.

jaffna-university.jpgயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மொன்றை அமைக்கவும் விவசாய பீடத்தை விஸ்தரிக்கவும் இந்தியாவின் உதவியைப் பெறவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கா தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள அமைச்சர் திஸாநாயக்க, இந்திய மனித வள அபிவிருத்தி அமைச்சர் கபில் சிபிலை நேற்று முன் தினம் (28) சந்தித்தார். அப்போதே மேற்குறித்த விடயம் தொடர்பாக அவர் இந்திய அமைச்சருடன் பேசினார்.

அத்துடன் பிரபல இந்திய பேராசிரியர்களையும் சிரேஷ்ட விரிவுரையாளர்களையும் அவர்களது விடுமுறை நாட்களில் இலங்கை பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றும் வாய்ப்பு பற்றியும் அமைச்சர் திஸாநாயக்க ஆராய்ந்து வருகிறார்.

முல்லை. வவுனியா மாவட்டத்தில் ரூ. 249 இலட்சம் நஷ்டஈடு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மக்களுக்கு நஷ்டஈடாக நேற்று 249 இலட்ச ரூபாவை வழங்கியதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை அபிவிருத்தி பிரதியமைச்சர் விஜித விஜய முனிசொய்சா தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நேற்றுக்காலை வவுனியாவிலும் பிற்பகல் முல்லைத்தீவிலும் நடைபெற்றன. மேற்படி நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்து கொண்ட அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் விஜித விஜயமுனிசொய்சா ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்று நஷ்ட ஈட்டுக்கான காசோலைகளை கையளித்துள்ளனர்.

பிரதியமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மக்கள் கடந்த முப்பது வருட கால யுத்தம் காரணமாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

அடுத்து வரும் இரு மாதங்களும் கடும் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

fo.jpgதற்போது இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் கடுமையான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இக்கடும் மழையினால் பல இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் எனவும் வளிமண்டலத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பாக இடைமழை பெய்யவிருப்பதாகவும், மலையகத்தில் நுவரெலிய, மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் அடைமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, பருவமழைக்கு முன்பாக தற்போது பெய்த வரும் மழையினால் வன்னியில் மீளக்குடியமர்த்தப்பட்டுவரும் பொதுமக்கள் அதிகம் பாதிப்படைந்து வரகின்றனர். தற்காலிகக் கூடாரங்களில் தங்கியிருக்கும் மக்கள் பாதிப்படைந்து வருவதோடு வீடமைப்பிற்கான உதவிகளைப் பெற்று வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மக்களின் பணிகளும் பாதிப்படைந்துள்ளது. இவ்வீடமைக்கும் பணிக்கான பணம் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருவதாலும் இரண்டாம் கட்ட பணம் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டதாலும் வீடமைப்புப்பணிகள் பாதிப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பரவலான மழை – மலையக பகுதிகளில் மண்சரிவு

கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நேற்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்ததாக வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவில் ஆகக்கூடிய மழை புத்தளத்தில் 174.5 மி. மீட்டர்கள் அளவில் பெய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய மழைக்காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை பிற்பகலிலோ, மாலை வேளையிலோ இடி, மின்னலுடன் மழை பெய்ய முடியும். இச்சமயம் கடும் காற்றும் வீசலாம். அதனால் இடி, மின்னல் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர், இடைப்பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி கால நிலை அடுத்த வாரம் ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வளம் முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகால்தென்ன குறிப்பிடுகையில், நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவுப்படி ராஜாங்கனைப் பிரதேசத்தில் 101.00 மி. மீ. மழை பெய்துள்ளது. அத்தோடு மகா இலுப்பள்ளமவில் 128.00 மி. மீ, அனுராதபுரத்தில் 88.090 மி.மீ என்றபடி மழை பெய்திருக்கின்றது. இதன் விளைவாக இராஜாங்கனைக்குளம் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்தது. அதனால் இக்குளத்தின் ஆறு வான் கதவுகள் நேற்று முதல் திறந்து விடப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்றன.

இதேநேரம், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறுகையில், இராஜாங்கனை குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டிருப்பதால் எலுவன்குளம் ஊடான மன்னார்- புத்தளம் வீதி நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  மன்னார்- புத்தளம் வீதியில் எலுவன்குளம் பிரதேசத்தில் பல இடங்கள் நீரில் மூழ்கி இருப்பதன் விளைவாகவே இப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றார்.

காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் தாழ் நிலங்களில் நேற்று முன்தினம் ஏற்பட்டிருந்த வெள்ள நீர் வடிந்து வருவதாக அம் மாவட்டங்களின் அனர்த்த முகாமைத்துவ நிலைய இணைப்பாளர்கள் கூறினர்.

நுவரெலிய – வெலிமட வீதியில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை

தற்போது மழை காலநிலை ஆரம்பமாகியுள்ளதால் நுவரெலியா – வெலிமடை வீதியை மிகுந்த முன்னெச்சரிக்கையோடு வாகனப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கிரந்த ஹேமவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நுவரெலியா – வெலிமடை நெடுஞ்சாலை தற்போது புனரமைக்கப்படுகின்றது. இதே நேரம் மழைக் கால நிலையும் ஆரம்பமாகி யுள்ளது. இதன் விளைவாக இப்பாதையின் பல இடங்களில் சேறு ஏற்பட்டிருக்கின்றது.

இதன் காரணத்தினால் இப்பாதையில் முன்னெச்சரிக்கையோடு வாகனங்களைச் செலுத்துவது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் வாகனங்கள் பாதையை விட்டு சறுக்கி, குடைசாய்ந்து விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றன. அண்மையில் பஸ் வண்டயொன்று குடைசாய்ந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.

‘M, N’ தொடரிலக்கம். புதிய கடவுச்சீட்டை பெற புதிய விண்ணப்பங்கள் அறிமுகம்

pas.jpg‘M, மற்றும் ‘N’ என்ற தொடரிலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்களைப் பயன் படுத்துபவர்கள் மீண்டும் புதிய கடவுச் சீட்டை பெற விண்ணப்பிக்கும் வகையில் புதிய நடை முறையொன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.இதற்கென குடிவரவு, குடியகல்வு திணைக்களம் புதிய விண்ணப்பப் படிவமொன்றை அறிமுகம் செய்கிறது.

அக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய விண்ணப்பப் படிவம் நடை முறைக்கு வருகிறது என குடிவரவு குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

M மற்றும் N தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டை உடையவர்கள் இரண்டு புகைப்படங்கள், கடவுச்சீட்டின் பிரதி என்பவற்றுடன் ஒரு பக்கத்தையுடைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கையளித்தால் மட்டும் போதுமானது. சமாதான நீதவானின் சான்று படுத்தவோ, அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திரமோ இணைத்தல் அவசியமில்லை.

முதற் தடவையாக கடவுச் சீட்டொன்றை பெறவிரும்பும் ஒருவர் முன்பு போன்று கடவுச்சீட்டுக்கான முன்னைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதுடன் அதற்குரிய சகல ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அத்துடன் சமாதான நீதவானின் சான்றுபடுத்தலும் அவசியமானது.

M மற்றும் N தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டுகளை பெற்றவர்களின் தரவுகள் ஏற்கனவே திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் மீண்டும் அதே ஆவணங்களை கேட்பதும் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவதும் நேரத்தையும் காலத்தையும் வீணாக்கும் வேலை என்பதாலேயே இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமுலுக்கு கொண்டு வரப்படுவதாக பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

96 ஹஜ் முகவர்களுக்கு திணைக்களம் அங்கீகாரம்

hajj.jpgஇம்முறை ஹஜ் யாத்திரிகர்களை மக்காவுக்கு அழைத்துச் செல்ல 96 ஹஜ் முகவர்களுக்கு முஸ்லிம் மத கலாசாரத் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரஸ்தாப 96 ஹஜ் முகவர் நிறுவனங்கள் அல்லாத வேறு முகவர் நிறுவனங்களுடன் யாத்திரிகர்கள் செய்யும் தொடர்புகளுக்கு முஸ்லிம், மத கலாசாரத் திணைக்களம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என்று திணை க்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி அறிவித்துள்ளார். அரசாங்க ஹஜ் குழுவும் ஹஜ் யாத்திரிகர் களின் நலன்கள் தொடர் பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங் கியுள்ளது.

மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா தலைமையிலான இக் குழுவில் பிரதி அமைச்சர் பைஸல் முஸ்தபா, முன்னாள் உப மேயர் அஸாத் சாலி, ஆகியோர் உறுப்பினர்களாகச் சேவையாற்றுகின்றனர்.

ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து ஹஜ் முகவர்கள் 3,25,000 ரூபா கட்டணத்தை அறவிட வேண்டு மென அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

14 வயதில் தாயானமை குறித்து விசாரணை:

கொழும்பு காசல் வைத்தியசாலையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். குறித்த சிறுமியும் அவரது குழந்தையும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குழந்தைபெறும் வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலொன்றினை அடுத்து சிறுவர் பாதுகாப்பு சபையின் பொலிஸ் அதிகாரிகள் சிலர் சென்று சிறுமி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெறப்பட்டதாகவும், சிறுவயதில் குழந்தை கிடைத்ததனால் குழந்தை, வைத்தியசாலையின் குழந்தைப் பாதுகாப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குழந்தை பெற்றெடுத்த 14 வயதுடைய சிறுமிக்கு தந்தை இல்லையெனவும், அவருடைய தாய் மனநோயாளி எனவும், சிறுமிக்கு உறவினர்கள் எவரும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. சிறுமியைப் பார்வையிட 28 வயதுடைய இளைஞர் வைத்தியசாலைக்கு வந்து போவதாகவும், சிறுமிக்கு 18 வயதானவுடன் அவரை திருமணம் செய்துகொள்வதாக குறித்த இளைஞன் அறிவித்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், 14 வயது சிறுமி குழந்தைப் பெற்றுள்ளதனால் அவரை பாதுகாக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அணு உலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய விஞ்ஞானிகள் குழு

chmbika.jpg2020ல் இலங்கையின் அணுசக்தி ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அணு உலையொன்றை அமைப்பதற்கான சாத்தியக் கூற்றை ஆராய்வதற்காக ஐந்து விஞ்ஞானிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஆறு மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதோடு அதன் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க கூறினார்.

அண்மையில் வியன்னாவில் நடைபெற்ற உலக அணுசக்தி அதிகார சபையின் வருடாந்த அமர்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, 1950களிலே அணு சக்தியூடாக மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்து இந்தியா கவனம் செலுத்தியது. பல நாடுகள் அணுசக்தி மூலமே கூடுதலாக மின்சாரம் உற்பத்தியில் செய்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மொத்த மின் உற்பத்தி இரண்டு வீதத்தை அணுசக்தி மூலமே மேற்கொள்கின்றன.

அணுசக்தியினூடாக மின் உற்பத்தி செய்வது மிகவும் பெரிய சவாலாகும். அதற்கு முகம் கொடுத்து வெற்றிகொள்ள நாம் தயாராக உள்ளோம். இதற்கு வெளிநாடுகளின் உதவி தேவைப்படும். அணுஉலையை எங்கு அமைப்பது? எந்த நாட்டின் உதவியைப் பெறுவது, முதலீட்டார்களின் உதவி போன்ற விடயங்கள் குறித்து இது வரை தீர்மானிக்கப்படவில்லை.

இலங்கையின் பொருளாதாரம் 8.5 வீதத்தை எட்டியுள்ள நிலையில் எமது மின்சக்தி பாவனை கடந்த 8 மாதத்தில் 8 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2018 ஆகும் போது எமது மின்சக்தி தேவை இரண்டு மடங்கால் அதிகரிக்கும். அந்த நிலையில் 2020ன் பின் நாடு இருட்டில் புதையும் நிலையே ஏற்படும். அதனால் அணுமின் உற்பத்தி போன்ற மின் உற்பத்திகள் குறித்து இப்பொழுது கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அணு உலையொன்றை அமைக்க 15 வருடங்கள் பிடிக்கும் 2020-25ற் இலங்கையில் அணு உலையொன்றை அமைக்க இப்பொழுது பூர்வாக பணிகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கு உதவி வழங்க சர்வதேச அணுசக்தி அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளதோடு வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது. அந்த வழிகாட்டல்களை பின்பற்றி நாம் அணு உலை அமைப்பதற்கான பணிகளை முன்னெடுக்க உள்ளோம்.

வியன்னா மாநாட்டின் போது இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகளுடனும் பேசினோம். அணு உலைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யா வழங்குவதோடு அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை அந்த நாடு பொறுப்பேற்கும். இது தொடர்பில் ரஷ்யாவுடன் பேச உள்ளோம்.

அணு உலைகளில் யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தை பயன்படுத்தும் புதிய முறையொன்றை இந்தியா கண்டுபிடித்துள்ளது. 30 வீதமான தோரியம் இலங்கை கடற்பரப்பில் காணப்படுகிறது. அது குறித்து நாம் கவனம் செலுத் தியுள்ளோம் என்றார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு முல்லை, வவுனியாவில் இன்று நஷ்டஈடு

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் இன்று வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறுகின்றன. புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் டியூ குணசேகர இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டு நஷ்டஈடுகளை வழங்கவுள்ளார்.

இதற்கிணங்க முல்லைத்தீவில் 150 குடும்பங்களுக்கும், வவுனியாவில் 30 குடும்பங்களுக்கும் இன்று நஷ்ட ஈடுகள் வழங்கப்படுகின்றன. இன்று காலை வவுனியாவிலும், பிற்பகல் முல்லைத்தீவிலும் நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈட்டுக் காசோலைகள் அமைச்சரினால் இந் நிகழ்வுகளின் போது வழங்கப்படுகின்றன.

இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட 402 புலி உறுப்பினர்கள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். வவுனியாவில் இந் நிகழ்வு இடம் பெறுவதுடன் அமைச்சர் டியூ குணசேகர இந் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்ட 7000 இற்கும் மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் வேலை வாய்ப்புச் சந்தையொன்றும் இன்று வவுனியாவில் நடைபெறவுள்ளது.

புனர்வாழ்வு சிறைச்சாலைகள் அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் வேலை வாய்ப்புச் சந்தையில் தெற்கிலிருந்து பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு அவர்கள் பெற்றுக் கொண்டுள்ள பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆடைக் கைத்தொழில், இலத்திரனியல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளவர்களை திறமை அடிப்படையில் தேர்ந்தெடுப்பரென அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

காலி, களுத்துறை மாவட்ட தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயம்

lightning-000.jpgபரவலாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக காலி, களுத்துறை மாவட்டங்களின் சில தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மழை மேலும் தொடருமாயின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களும் நீரில் மூழ்கக் கூடிய வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது. நாடெங்கிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரமழை வீழ்ச்சி பதிவில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சி மன்னாரில் 70.5 மி.மீட்டர்களாகப் பதிவாகியுள்ளது என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை நேற்றுக் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையுமான காலப்பகுதியில் காலி மாவட்டத்திலேயே அதிக மழை வீழ்ச்சியாக 50.7 மி.மீ. மழை பெய்துள்ளது எனவும் அவர் கூறினார்.

அடை மழை காரணமாக காலி மாவட்டத்தின் பலப்பிட்டி, எல்பிட்டி, கரந்தெனியா போன்ற பிரதேசங்களின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் உள்வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் காலி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் அசித ரணசிங்க கூறினார். எல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் திடீர் மண்சரிவு காரணமாக இரு வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளரான ஜயசிங்க ஆராய்ச்சி மேலும் கூறுகையில், தற்போதைய மழைக் காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்க முடியும். இன்று பிற்பகல் அல்லது மாலை வேளையில் இடி, மின்னலுடன் நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்ய முடியும். இச்சமயம் கடும் காற்றும் வீசலாம். அதனால் இடி, மின்னல் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இதேவேளை இடைப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி அடுத்த வாரத்திற்குள் ஆரம்பமாகலாமென எதிர்பார்க்கின்றோம் என்றார்.