இலங்கையின் அதிக நெல் உற்பத்தியைத் தரும் நான்காவது மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட இடை வெளிக்குப் பின்னர் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் டொக்டர் ஆர். ருஷாங்கன் தெரிவித்தார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய கொக்கொட்டிச்சோலை, வவுணதீவு, வெல்லாவெளி, செங்கலடி, கிரான், வாகரை ஆகிய பிரதேசங்களிலேயே அதிகமான விவசாயிகள் பெரும்போக நெற் செய்கையில் ஈடுபடவுள்ளனர். வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை 13 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ளது. இது தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடு வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் வெள்ளி மாலை நடைபெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் டொக்டர் ஆர். ருஷாங்கன், கிழ க்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் உட்பட அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், விவசாய அதிகாரிகள், விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இம் மாவட்டத்தில் அடுத்த மாத ஆரம்பத்தில் பெரும்போக நெற் செ ய்கை ஆரம்பமாகி எதிர்வரும் 2011ல் மார்ச் மாத இறுதிப் பகுதியில் அறுவடை நடைபெறும்.