சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளாகி உடம்பில் 24 ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பிய பெண்ணுக்கு நேற்று மாத்தறை கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்த இந்த சத்திர சிகிச்சையின் மூலம் அவரது உடம்பிலிருந்து 16 ஆணிகள் அகற்றப்பட்டன. ஏனையவை உயிர் ஆபத்தை ஏற்படுத்தாதவை என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். அவரது உடலிலிருந்து 2 அங்குல ஆணிகள் 12 மற்றும் 2 1/2 அங்குல ஆணி ஒன்றும், மூன்று குண்டூசிகளும் அகற்றப் பட்டன. உடலில் மீதமுள்ள ஆணிகளை அகற்றுவதற்காக மீண்டும் ஒரு சத்திரசிகிச்சை நடைபெறவுள்ளதாக கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரி டொக்டர் பிரபாத் கஜதீர தெரிவித்தார்.
கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரி டொக்டர் பிரபாத் கஜதீரவின் ஆலோசனைக்கமைய வைத்திய நிபுணர் கமல் வீரதுங்க திலங்க த சில்வா, எச்.கே.கே. சதரசிங்க, மயக்க மருந்தேற்றும் வைத்திய நிபுணர் வசந்தி குணசேக்கர உள்ளிட்ட டொக்டர்கள் குழுவினர் சுமார் 3மணிநேரம் சத்திர சிகிச்சையில் ஈடுபட்டனர்.இரண்டு குழந்தைகளின் தாயான எல்.பி. ஆரியவதி (வயது 49)யின் மன நிலை பாதிக்கப் படும் என்ற காரணத்தினாலும், சத்திரசிகிச்சையைத் தொடர்ந்தும் நடத்துவதால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாகவும் நேற்றைய சத்திரசிகிச்சை 13 ஆணிகள், 3 குண்டூசிகள் நீக்கப்படுவதுடன் நிறுத்தப்பட்டது. அவரது உடலில் துருப்பிடித்த நிலையிலேயே இந்த ஆணிகள் இருந்தன.
இன்னும் சில தினங்களின் பின்னர் சத்திரசிகிச்சையை மேற்கொள்வது என டொக்டர்கள் தீர்மானித்ததுடன், மன நல மருத்துவரின் ஆலோசனையை பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. சத்திர சிகிச்சையின் பின்னர் குறிப்பிட்ட பெண் சாதாரண வார்ட் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் தேறி வருவதாகவும் டொக்டர்கள் தெரிவித்தனர்.
தனக்கு வேலை வழங்கிய சவுதிஅரேபிய நாட்டவர் உடலில் ஆணிகளை அடித்ததாக அப்பெண் கூறியிருந்தார். 24 ஆணிகளும் ஊசியும் உடலில் இருப்பதை எக்ஸ்ரே மூலம் தெரியவந்திருக்கிறது. நெற்றியிலும் ஆணி உள்ளது என்று மருத்துவமனைப் பணிப்பாளர் பிரபாத் கஜதீர கூறியுள்ளார்.
இந்த ஆணிகள் 2 அங்குல நீளமுடையவையாகும். ஆரியவதியின் கைகள், கால்கள், அடிப்பாதங்களிலேயே அதிகளவுக்கு ஆணிகள் அறையப்பட்டுள்ளன. ஆனால் ஆரியவதியின் உட்புற உடல்உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தோன்றவில்லை என்று டாக்டர் கஜதீர கூறினார்.கடந்த மார்ச்சில் சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த இப்பெண் அதிகளவு உளப்பாதிப்புக்கு உட்பட்டவராகவே உள்ளார். தனது அவையவம் தொடர்பாக அதிகளவுக்கு விபரங்களை அவரால் கூற முடியவில்லை.
10 இலட்சத்து 80 ஆயிரம் இலங்கையர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இவர்களில் 70 சதவீதத்தினர் பெண்களாவர்.
வீட்டுவேலையாட்களாக பணிபுரியும் இலங்கையர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் சிறு தொகையினர் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளிலும் தொழில் புரிகின்றனர்.
எஜமானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
சவூதி அரேபியாவில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் எஜமானர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இலங்கை வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனையை கோரியுள்ளது. பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க மேற்படி பெண் தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபரிடம் நேற்று கையளித்தார்.
இதேவேளை சவூதியிலுள்ள எஜமானர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை இலங்கை தூதரகம் நேரடியாக மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதால் சவூதி அரசின் ஊடாக இதனை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றியும் பணியகம் ஆராய்ந்து வருகிறது. இலங்கைப் பெண்ணுக்கு மிக மோசமான முறையில் சித்திரவதை நடந்துள்ளமை பற்றி சவூதியிலுள்ள இலங்கை தூதுவர் தனது அதிருப்தியையும் சவூதி அரசுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை வெளிநாட்டமைச்சு கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரியில் மேற்படி பெண்ணின் மருத்துவ அறிக்கையையும் கோரியுள்ளது. சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார் என்பதற்கான மருத்துவ அறிக்கைகள், எக்ஸ்ரே மற்றும் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஆணிகளின் விபரங்கள் போன்றவற்றை சேகரிப்பதற்கு பணியகத்தின் மாத்தறை கிளை அதிகாரிகள் நேற்று கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தனர்.
சவூதியில் இவ்வாறு வீடுகளில் துன்புறுத்தப்படுதல், சித்திரவதைக்குள்ளாக் கப்படுதல் போன்ற சம்பவங்கள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக் குமானால் உடனடியாக இலங்கை தூத ரகத்துக்கு அறிவிக்குமாறு சவூதியிலுள்ள உள்ளூர் பத்திரிகைகள் மூலம் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ஆணிகளால் குத்தி சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணும் பலமுறை தனது உறவினர்களோடு பேசியுள்ள போதும் பல முறை இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்ட போதும் தனக்கு இவ்வாறான சித்திரவதை நடைபெற்றது என்பதை தெரிவிக்கவில்லை.
அச்சம் காரணமாகவே இவர் இவ்வாறு தெரிவிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் எவரும் அச்சமின்றி இலங்கை தூதரகத்துக்கு அறிவிக்க வேண்டும் என இலங்கை தூதரகம் அறிவித்தல் விடுத்துள்ளது. சவூதி எஜமானர்களிடமிருந்து நஷ்டஈட்டை பெற்றுக் கொடுக்க பணியகம் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.