மேட் இன் ஸ்ரீலங்கா எனும் மகுடத்தின் கீழ் உலகம் வியக்கும் உற்பத்தி கேந்திர மையமாக இலங்கை கட்டியெழுப்பப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சர்வதேச நாடுகளின் கழிவுகளை குவிக்கும் நாடகவன்றி இனி இலங்கையை உலக முன்னிலையில் மாபெரும் உற்பத்தி நாடாகத் திகழ வைப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். உலகிலேயே கடலல்லாத பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் முதல் துறைமுகமென வர்ணிக்கப்படும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு கடல் நீர் நிரப்பும் நிகழ்வை உத்தியோகபூர்வமாக நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மேலும் உரை நிகழ்த்திய ஜனாதிபதி :
இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் எம்மைவிட மிக மிக பின்னடைவாகவிருந்த நாடுகள் இன்று பெரும் முன்னேற்றமடைந்துள்ளன. அதனைப் பார்த்து ஆதங்கப்படுவதற்கான நேரம் இதுவல்ல. தாய்நாட்டை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்பி உற்பத்தியின் கேந்திர நிலையமாக மாற்றும் எமது இலக் கினை வெற்றி கொள்ள சகலரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம்.
பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இத்தகைய அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டில் நடைபெறுகின்றன. அம்பாந் தோட்டைத் துறைமுகத்தைப் பொறுத்தவரை பல தடைகள் சவால்கள் விமர்சனங்களுக்குப் பின்னர் வெற்றிகரமாக தற்போது நடைமுறைப் படுத்தப்படுகிது. எமது நாட்டின் வரலாற்றில் பல துறைமுகங்கள் இருந்துள்ளன. எனினும் இந்த துறைமுகமானது உலக வரைபடத்தில் இலங்கையைக் குறித்துக் காட்டும் ஒன்றாகத் திகழ்கிறது. சர்வதேசத்துக்கும் இலங்கைக்குமான தொடர்பை மேலும் வலுப்படுத்துவதாகவும் இது அமைகிறது.
நாட்டுக்கான சுதந்திரத்தினைப் பெற்றுக் கொடுத்துள்ள எமக்கு அபிவிருத்தி மற்றும் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பும் உள்ளது. கடந்த வருடம் மே மாதம் நம் நாட்டை சுதந்திரமாக்கினோம். நாம் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிரப்பும் கடல் நீர் சகல பலவீன சிந்தனைகளையும் கழுவிவிடும் என்பது உறுதி.
தொடர்ந்தும் சர்வதேசத்தின் வர்த்தக கேந்திர நிலையமாகவே இலங்கை இருந்து வந்துள்ளது. எனினும் இந்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதனால் எமது தாய்நாடு உலகளாவிய ரீதியில் பிரசித்தமடைகிறது. எமது நாட்டில் சுதந்திர பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் பஞ்சமகா திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி வருகிறோம். இதன் மூலம் ஐந்து முக்கிய துறைமுகங்களையும் நிர்மாணித்து வருகிறோம்.
உலக நாடுகளின் குப்பைகளைக் கொட்டுகின்ற இடமாக எமது நாட்டை வைத்திருக்க முடியாது. ‘மேட் இன் ஸ்ரீலங்கா’ என்ற பெயருடன் சர்வதேசமெங்கும் புகழ்பெறும் உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கின்ற பொருளாதார மையமாக இந்நாடு இனி திகழ வேண்டும். வரட்சியான மாவட்டமாக வர்ணிக்கப்பட்ட அம்பாந்தோட்டையில் தற்போது சர்வதேச துறைமுகம், விமான நிலையம், சர்வதேச விளையாட்டரங்கு, அதிவேக பாதைகள் புதிய ரயில் பாதைகள் என பாரிய அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. இந்த துறைமுகம் மூலம் முழு நாட்டினதும் பொருளாதார மையமாக இது திகழும்.
எமது கண்ணுக்குப் புலப்படும் வகையில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான கப்பல்கள் எமது பிரதேசத்தை ஊடறுத்துச் செல்கின்றன. மத்திய கிழக்கு ஆபிரிக்க வலயங்களைப் போன்று ஆசிய நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் இதிலடங்குகின்றன. இவற்றுக்கான எரிபொருள் சேவைகளை வழங்குவதுடன் பெரும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் மையமாகவும் இத்துறைமுகம் விளங்குகிறது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.