அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான சந்தேகமே ஐ.தே.க.வுடன் ஆளும்தரப்பு பேசுவதற்குக் காரணம் தயாசிறி ஜயசேகர

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து சாதகமான சமிக்ஞை கிட்டாமல் போகலாமென்ற சந்தேகம் எழுந்ததன் காரணமாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக ஐக்கிய தேசியக்கட்சியுடன் பேசுவதற்கு முன்வந்தார் எனத் தெரிவித்த குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாம் மீண்டுமொரு தடவை கைகளைச் சுட்டுக்கொள்ளாத விதத்தில் நிதானமாகச் செயற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அன்று எம்பக்கமிருந்த 17 பேரை இழுத்தெடுப்பதற்கு அவர் மேடையேற்றியநாடகத்தை நாம் மறந்துவிடக்கூடாது எனவும் ஜனாதிபதி நம்பகத்தன்மையோடு நடந்து கொள்வதை உறுதி செய்து கொண்டே பேச்சுகளை தொடரவேண்டுமெனவும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்திய ரூபாவுக்கும் குறியீடு

rupee.jpgஉலகளாவிய ரீதியில் நாடுகளின் பணத்தைக் குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் இருப்பது போல இந்திய நாணயத்திற்கும் புதிய குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்திய பணத்திற்கு இந்த குறியீடுதான் பயன்படுத்தப்படும்.இந்த ரூபாய் அடையாள குறியீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அம்பிகாசோனி டில்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

சர்வதேச நாணயங்களான அமெரிக்க டொலருக்கு யூரோவுக்கு பவுண்ஸுக்கு ஜப்பான் யென் அடையாள குறியீடு இருப்பது போல இந்திய ரூபாய்க்கும் அடையாள குறியீடு வழங்கப்பட மத்திய அரசு முடிவு எடுத்தது.

நிதிக்கம்பனிகள் சட்டத்தை நீக்கிவிட நடவடிக்கை

நாட்டில் சட்டவிரோதமாக இயங்கும் நிதி நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக நடைமுறையில் உள்ள நிதிக்கம்பனிகளின் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி மேற்கொள்ளவுள்ளது.

இந்த வருடம் டிசம்பரில் நடைமுறையிலுள்ள நிதிக் கம்பனிகள் சட்டத்தை மத்திய வங்கி அகற்றிவிடும் என்று விபரங்களை வெளியிடுவதற்கு அதிகாரம் வழங்கப்படாத அதிகாரியொருவர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்குக் கூறியுள்ளார்.

உத்தேச நிதி,வர்த்தக சட்டமூலமானது சட்டவிரோதமாக இயங்கும் நிதிநிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான விதத்தில் செயற்படுவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டதாக அமையும். சக்விதி போன்ற மோசடி நிறுவனங்களிலிருந்து முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

களுவாஞ்சிக்குடியில் தேசிய சேமிப்பு வங்கியின் 30 இலட்சம் ரூபா கொள்ளை

களுவாஞ்சிக்குடி தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான முப்பது இலட்சம் ரூபா பணம் நேற்று வியாழக்கிழமை காலை களுவாஞ்சிக்குடியில் வைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிக்குடிக் கிளையின் உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிக்குடியிலுள்ள இலங்கை வங்கியிலிருந்து தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான முப்பது இலட்சம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிக்குடி கிளையை நோக்கி சென்றுகொண்டிருந்த போது மணல் வீதி எனுமிடத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியை மறித்துத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி முப்பது இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் விசாரணைகளை நடத்தியதோடு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.மணல் வீதி என்னுமிடத்தில் ஏற்கனவே பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்று இருந்து பின்னர் அது அகற்றப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக வங்கி உத்தியோகத்தர்கள் களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

போலி நாணயத் தாள் அச்சிட்ட 2 பேர் கைது

ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்ட இருவர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிட மிருந்து ஒரு இலட்சத்து 77 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

விஸ்வமடு, முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்டு பல்வேறு இடங்களுக்கும் விநியோகித்து வந்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து இவர்கள் வவுனியாவில் வைத்தே போலி நாணயத் தாள்களை அச்சிட்ட பின்னர் கிளிநொச்சிக்கு எடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

வைகோ, நெடுமாறன் சிறையில் அடைப்பு

yko_03.jpgதமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் தொடர் கொலை செய்து வருவதைக் கண்டித்தும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களை மூடக்கோரியும் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து இலங்கை தூரதகத்தை மூடக் கோரி ஊர்வலமாக அனைவரும் துணைத் தூதரகத்தை நோக்கி கிளம்பினர். இதையடுத்து போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர், வைகோ, பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் உள்ளிட்ட 282 பேரை மட்டும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது, 188, 341, 153(A), 143, 7 I (A), 145,285,506(I), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப் போடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். வைகோ உள்ளிட்ட சிலரை திருச்சிக்கும், நெடுமாறன் உள்ளிட்ட சிலரை கடலூருக்கும், நடராஜன் உள்ளிட்ட சிலரை மதுரைக்கும் கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். பெண்களை வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியர் நதீகாவின் மரணம்; அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

mosquito.jpgடெங்கு நோய்க்கு உள்ளாகி உயரிழந்த பதுளை ஆஸ்பத்திரி வைத்தியரின் மரணம் தொடர்பாக தமக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பதுளை பொது வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய வைத்தியர் நதீகா லக்மாலி விஜயநாயக்க டெங்கு நோய்க்கு உள்ளாகி பதுளை ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிறன்று உயிரிழந்தார். இவ்வாறான நிலையில் இவரது தந்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று முன்தினம் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு பதுளை ஆஸ்பத்திரியில் தமது மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததன் விளைவாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வைத்தியர் நதீகாவின் மரணம் தொடர்பாக தமக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். டெங்கு நோய்க்கு உள்ளான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்ட்டுக்குப் பொறுப்பான வைத்தியரான நதீகா அந்த ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்றுள்ளார்.  இருப்பினும் இவரது ஆரோக்கியத்தில் அங்கு பணியாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் உரிய கவனம் செலுத்தினார்களாக என உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதேநேரம் டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி டெங்கு ஒழிப்பு தொடர்பான துரித வேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. “இவ்வேலைத்திட்டம் தொடர்பான பொறுப்புக்கள் மாகாண சபை களுக்கும், உள்ளூராட்சி மன்றங் களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பொறுப்புக்களை எவரும் தவிர்ந்து நடக்க முடியாது.  டெங்கு நோயை ஒழிப்பதற்காக எல்லோரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை டெங்கு நுளம்பு ஒழிப்புக்கென பி.ரி.ஐ. பக்aரியா நுண்ணங்கியைப் பாவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சின் மேலதிக செய லாளருக்கு அறிவுறுத்தல் வழங்கி யுள்ளார்.

அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது – அமைச்சர் கெஹலிய

வட பகுதியில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட மாட்டாது என, இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதுவரையில் 2,91,198 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இதுவரையில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 198 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய மெதவெல தெரிவித்துள்ளார். குறிப்பாக பொலன்னறுவை அனுராதபுரம் உள்ளிட்ட 1746 சதுர பரப்பளவைக்கொண்ட நிலப்பகுதியிலேயே கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய மெதவெல தெரிவித்துள்ளார்

மகள் மீது பாலியல் வல்லுறவு; தந்தைக்கு 10 வருட கடூழியச் சிறை

தனது 14 வயதான மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் ஒருவருக்கு 10 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை வழங்கி புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புத்தளம் மேல்நீதிமன்ற நீதவான் எஸ்.டி. அப்ரா தாஸிம் இந்த தீர்ப்பை நேற்று முன்தினம் வழங்கினார்.

2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி மேற்படி தந்தை தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் சந்தேக நபரான ஆனமடுவ திறல்வெவ வட்டகெதர வாசியான சோமதாஸ என்பவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்தத் தவறின் மேலதிகமாக மூன்று மாதம் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25,000 ரூபாவை நஷ்டஈடாக வழங்கவும், நஷ்ட ஈட்டை செலுத்தத்தவறின் மேலதிகமாக ஆறுமாதகால கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் புத்தளம் மேல் நீதிமன்ற நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

4 குழந்தைகளின் தந்தையான இவர் தனது மனைவி வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுச் சென்றுள்ள சமயம் பாட்டியின் பாதுகாப்பிலிருந்த தனது மூத்த மகளையே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.