அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பாங் கி மூனின் ஆலோசனைக் குழுவை எதிர்த்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்

ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கை தொடர்பில் நியமித்த ஆலோசனைக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ. நா. தலைமை அலுவலகம் முன்பாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஜெனீவாவில் நேற்று நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நோர்வே உட்பட ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கையர்கள் சுவிஸ் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்கான அமைப்பொன்றினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதேவேளை, நியூயோர்க், பிரித்தானியா, ஜேர்மன், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடல் மட்டம் உயர்வு

இலங்கை, இந்தோனேஷியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் கடல் மட்டம் அதிகரித்துள்ளதால் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவின் Colorado பல்கலைக்கழகம், அந்நாட்டு தேசிய சுற்றுச் சூழல் ஆய்வு மையம் ஆகியன இந்து சமுத்திரம் தொடர்பாக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தின.

பேச்சுவார்த்தையில் சிறுபான்மை கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டும். – மனோ கணேசன்

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சிறுபான்மை கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென ஜனநயாக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிறுபான்மை கட்சிகளின் பங்களிப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமும் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க யுத்தக் கப்பல் திருமலையில்

war.jpgஅமெரிக்க யுத்தக் கப்பல் பேர்ள் ஹார்பர் எல்.எஸ்.டி. 52 திருகோணமலைக்கு வருகை தந்துள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (13) காலை 11.00 மணியளவில் இக்கப்பல் திருகோணமலை சீனக்குடா அஷ்ரப் இறங்கு துறையில் நங்கூரமிட்டுக் கொண்டது. இதில் 800 படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பசுபிக் பிராந்திய கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பல் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவை. திருகோணமலைக்கு வருகை தந்த இக்கப்பல் நாளை வெள்ளிக்கழமை (16) வரை தரித்து நிற்கும். இக்கப்பலில் வந்தோர் திருகோணமலையில் பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை கடற்படைத்தள வீதியில் அமைந்துள்ள மெதடிஸ்த சிறுவர் இல்லத்திற்கு சென்ற இவர்களுள் ஒரு பகுதியினர் அச்சிறுவர் இல்லத்திற்கு வேண்டிய வர்ணங்களை பூசியதோடு துப்புரவுப் பணிகளிலும் ஈடுபட்டனர். மற்றொரு குழுவினர் திருகோணமலையின் வடக்கே அமைந்துள்ள திரியாய் கிராமத்திற்கு சென்று திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டனர். திருகோணமலைக்கு வந்துள்ள படையினரை இலங்கை கடற்படையினர் வரவேற்று இவ் இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். திருகோணமலையில் இவர்கள் சமூக அபிவிருத்தி வேலைகள், மருத்துவ முகாம்கள், என்பனவற்றை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொக்கட்டிச்சோலையில் ஆயுதங்கள் மீட்பு

கொக்கட்டிச்சோலை பகுதியிலுள்ள கடலேறிக்கருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கியொன்றும் மெகசின் ஒன்றும் 20 ரவைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பொலிஸார் நேற்று முன்தினம் மாலை நடத்திய தேடுதலின் போதே இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில் சேவை ஓமந்தை வரை நீடிக்கப்படும்

sri-lanka-railway.jpgயாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாத முடிவுக்குள் ஓமந்தை வரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்து பிரதியமைச்சர் ரோஹண திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

யாழில் பெற்றோல், டீசல் விலை குறைப்பு

sri-lanka-petroleum.jpgஅமைச்சரவை தீர்மானத்தின்படி இன்றிலிருந்து யாழில் பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி பெற்றோல் ரூபா 2.40 த்தாலும் . டீசல் மற்றும் மண்னெண்ணை ரூபா 1.90 த்தாலும் விலை குறைக்கப்படவுள்ளது.

வைகோ, நெடுமாறன் கைது

yko_03.jpgசென்னை யில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழநெடுமாறன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை இதுழாசிரியர் மா நடராசன் உட்பட ஏராளமானோரை தமிழ் நாடு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றமையைக் கண்டித்தும், ஐ.நா நிபுணர் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மறுக்கும் மஹிந்த அரசுக்கு தமிழகத்தில் தூதரகம் இயங்கக் கூடாது என்று தெரிவித்தும் இலங்கை அரசுக்கு எதிராக சென்னை மைலாப்பூர் பகுதியில் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வவுனியாவில் எரிபொருள் விநியோக உப நிலையம் – வடபகுதி மக்களுக்கு விமோசனம்

sri-lanka-petroleum.jpgவவுனியாவுக்கு வடக்கே எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான எரிபொருள் விநியோக உப நிலையம் நேற்று வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டது. இதுவரை காலமும் அனுராதபுரத்திலிருந்தே எரிபொருள் விநியோகம் பெளசர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்போது ரயில் மூலம் வட பகுதிக்கான எரிபொருள் விநியோகமும் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியத் துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று வவுனியாவில் எரிபொருள் விநியோக உப நிலையத்தை திறந்து வைத்தார். அத்துடன் வன்னி மாவட்டத்தில் 13 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து வைக்கும் திட்டத்தின் கீழ் எட்டாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைச்சர் சுசில் கிளிநொச்சி நகரில் திறந்துவைத்தார்.

பெளஸர்கள் மூலம் எரிபொருள் வட பகுதிக்கு கொண்டு செல்வதால் போக்குவரத்துச் செலவுடனேயே வடபகுதி மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரயில்கள் மூலம் எரிபொருட்களை வட பகுதிக்கு கொண்டு செல்வதன் ஊடாக செலவினம் குறைக்கப்படுவதுடன் அந்த செலவினத் தொகையை நிவாரணமாக வடபகுதி மக்களுக்கே பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

1989 களில் வவுனியாவில் இயங்கிவந்த எரிபொருள் விநியோக நிலையம் கடந்த காலங்களில் கவனிப்பாரற்ற நிலையில் இருந்தது. வவுனியா குட்செட் வீதியில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியிலமைந்துள்ள மேற்படி விநியோக உப நிலையம் மீண்டும் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் புதிய எரிபொருள் நிலையங்களை அமைத்து வருகிறது.

மீண்டும் இன்று (14ம் திகதி, எரிபொருள் நிரப்பிச் செல்லும் சரக்கு ரயில் வவுனியா நோக்கி புறப்படவுள்ளது. அனுராதபுரம் எரிபொருள் விநியோக உப நிலையத்திலிருந்தும் வவுனியா உப நிலையத்திற்கும் எரிபொருள் அனுப்பப்படவுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உகண்டா குண்டு வெடிப்பில் கொட்டாஞ்சேனை ராமராஜா கிருஷ்ணராஜா (50) பலி

உகண்டா குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை இலங்கைக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளி விவகார அமைச்சு கென்னிய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித் தார்.

கொழும்பு 13, சென். பெனடிக் மாவத்தையைச் சேர்ந்த ராமராஜா கிருஷ்ணராஜா (50) எனும் குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் 2008ஆம் ஆண்டு முதல் உகண்டாவிலுள்ள இந்திய கம்பனியொன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றி வந்துள்ளார். இக்குண்டு வெடிப்புகளில் 74 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.