திரு கோணமலையிலிருந்து 750 கிலோ மீட்டருக்கு அப்பால் வங்காள விரிகுடாவின் கிழக்கில் உருவான தாழமுக்கம் நேற்று முதல் சூறாவளியாக மாறி நகரத் தொடங்கி இருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணி ப்பாளர் எஸ். ஆர். ஜயசேகர நேற்று தெரிவித்தார். இச்சூறாவளி இலங்கையின் வடக்கு, வட கிழக்கு கரையை அண்மித்தபடியே கடலில் பயணம் செய்து நாளை 7ம் திகதி தென்னிந்தியாவின் சென்னையை அடையும் எனவும் அவர் கூறினார்.
இச்சூறாவளி குறித்து வடக்கு, கிழக்கு மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், திருமலையிலிருந்து 750 கிலோ மீட்டர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் கடந்த 3ம் திகதி இத்தாழமுக்கம் உருவானது. இது நேற்று முதல் சூறாவளியாக மாறி நகர ஆரம்பித்திருக்கிறது. இச் சூறாவளிக்கு ‘ஜல்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இச்சூறாவளி மணித்தியாலத்திற்கு 15 கிலோ மீட்டர்கள் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் அதேவேளையில், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு நூறு கிலோ மீற்றர்களாக உள்ளது. இச்சூறாவளி இன்று 6ம் திகதி இலங்கையை அண்மிக்கும் என எதிர்பார்க்கின்றோம். அதாவது, திருமலையிலிருந்து 600 கிலோ மீற்றர்களுக்குள் இச் சூறாவளி வந்து சேரும். அச்சமயம் இச்சூறாவளி தொடர்பாக மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதனால், வடக்கு, கிழக்கு மக்கள் இன்று ஊடகங்களில் வளிமண்டலத் திணைக்களத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள் குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இச் சூறாவளி இலங்கையின் வடக்கு, வட கிழக்கு கரையை அண்டியபடி கடலில் பயணம் செய்யும் என்பதால் அதன் தாக்கத்தை அப்பகுதி மக்களால் அதிகம் உணரக் கூடியதாக இருக்கும். அப்பிரதேசங்களில் இடி,மின்னலுடன் தொடர் மழை வீழ்ச்சி காணப்படும். காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படும். இச்சூறாவளி காரணமாக அதிகரித்த காற்று, இடி, மின்னல் என்பவற்றின் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இச்சூறாவளி காரணமாகவே கடல் கொந்தளிப்பாக உள்ளது. அதனால் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதை மீனவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இச் சூறாவளியின் விளைவாகவே காலநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது.