அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

karunanithi.jpgமுதுகு வலி காரணமாக, முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வர் கருணாநிதிக்கு முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு காரணமாக கடும் வலி ஏற்பட்டதால் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வலி அதிகமாக உள்ளதால், ஒரு வார காலத்திற்கு முதல்வர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், வெளியூர் பயணங்கள், பொது நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ளமாட்டார். இந்த ஒரு வார காலத்தில் முதல்வர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டு, அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யாழ். புறநகர்ப் பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதல்

check1.jpgஅரி யாலை,  மாம்பழம்சந்தி, நாயன்மார்கட்டு மற்றும் ஆசீர்வாதப்பர் வீதி போன்றவற்றை உள்ளடக்கிய பகுதிகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. அதிகாலை முதல் நண்பகல் வரை மேற்கொள்ளப்பட்ட இத் தேடுதல் நடவடிக்கையின் போது வீதியால் சென்ற வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குள்ளாக்கப்பட்டதோடு பொதுமக்களின் அடையாள அட்டைகளும் பரிசீலிக்கப்பட்டன.

இந்தப் பகுதிகளை உள்ளடக்கிய வீடுகளிலும் படையினரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் போது வீடுகளில் இருந்தோர் விசாரணைகளுக்குட் படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  இதேவேளை, உடுவில ஈஞ்சடி வைரவர் ஆலயத்தை உள்ளடக்கிய பகுதியிலும் நேற்று முன்தினம் படையினரால் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புகின்ற போலி பயண முகவர்களை பிடிக்க ஏற்பாடு

potty-training.jpgவெளி நாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் போலி பயண முகவர்களைப்பிடிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பாவி இளைஞர், யுவதிகள் மற்றும் குடும்பத்தலைவர், குடும்பப்பெண் போன்றவர்களுக்கு ஆசைவார்த்தை கூறியும், போலி விளம்பரங்கள் செய்தும் இவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவதாக பூர்வாங்க விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை பெற்றுச் சென்ற பலர் கடந்த சில நாட்களாக அங்கிருந்து நாடு திரும்புவது அதிகரித்துள்ளது. இந்த போலி முகவர்கள் கூறியபடி அங்கு சம்பளம், தொழில் மற்றும் வசதிகள் தமக்குத்தரப்படவில்லை என்று இவர்கள் தெரிவித்தனர். இதேபோல ஐரோப்பிய நாடுகள், உட்பட சில நாடுகளுக்கு இவ்வாறான போலி முகவர்களால் அனுப்பப்பட்ட பலர் திருப்பி அனுப்பப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றத்தில் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களையடுத்து இந்த போலி பயண முகவர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இவ்வாறு செயற்படும் போலி பயண முகவர்கள் தொடர்பாக பொதுமக்களின் உதவியை பணியகம் நாடியுள்ளது

தமிழரை கொல்லவேண்டுமென இராணுவம் எண்ணவில்லையென ஜெயலலிதா கூறியிருப்பது ஆதரவான வார்த்தை இல்லையா? – கருணாநிதி கேள்வி

karunanithi.jpgஇலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை என்று ஜெயலலிதா கூறியிருப்பது இலங்கை இராணுவத்திற்கு ஆதரவான வார்த்தைகளா இல்லையா என்று முதலமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்விபதில் அறிக்கை வருமாறு;

இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாக தான் பேசவில்லை என்றும் அப்படி மாயத் தோற்றத்தை உருவாக்க சில தீய சக்திகள் முயல்வதற்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளாரே?

இலங்கை வேறுநாடு. அந்த நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதில் ஒரு எல்லை உண்டு. இலங்கையில் ஈழம் என்ற நாடு இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழரைக் கொல்ல வேண்டும் என்று சிங்கள இராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல என்று ஜெயலலிதா அளித்த பேட்டி 18ஆம் திகதி அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது.

இலங்கைத் தமிழரைக் கொல்ல இராணுவம் எண்ணவில்லை என்று அவர் சொன்னது இலங்கை இராணுவத்துக்கு ஆதரவான வார்த்தைகள் இல்லையா? ஜெயலலிதா முதலில் ஒன்றை சொல்வதும் பிறகு அப்படி சொல்லவே இல்லை என்று வாபஸ் வாங்குவதும் இது முதல்முறை அல்ல. இதுதான் கபட நாடகம். இது புரியாமல் பன்னீர்செல்வம் எதையோ நாடகம் என்றும் அதில் நடிக்க தான் தயாராக இல்லை என்றும் சொல்கிறார்.

இலங்கையில் தமிழர்களின் படுகொலைக்கு விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று அறிக்கையில் ஜெயலலிதா கூறியியுள்ளாரே?

இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

இலங்கைத் தமிழருக்காக கருணாநிதி திரட்டிய நிதி, அந்த மக்களுக்குப் போய்ச் சேர்ந்ததாக இதுவரை தகவல் இல்லை. அதை கருணாநிதி தன் குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை பற்றி?

அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு கோடி ரூபாவுக்கான காசோலைகள் யாரிடம் இருந்து வந்தது என்றே தெரியாமல் தன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டேன் என்று நீதிமன்றத்திலேயே சொன்னவர் அல்லவா. தான் திருடி, பிறரை நம்பாள் என்ற பழமொழிக்கு ஏற்ப இவ்வாறு கூறியுள்ளார். அந்த நிவாரணப் பொருட்கள் எல்லாம் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டன என்று பல நாளேடுகளில் செய்தி வந்துள்ளது.

இலங்கைத் தமிழர் நிவாரண நிதியைப் பொறுத்தவரை ஒவ்வொருவரிடம் இருந்தும் காசோலையாகத்தான் வழங்கப்பட்டதே தவிர யாரும் தொகையாக வழங்கவில்லை. என்னிடம் உதவி வழங்கிய அனைவரது பெயரும் ஏடுகளில் வெளியிடப்பட்டது. அந்த நிதி ஒவ்வொரு நாளும் நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு அரசு இருப்பில் செலுத்தப்பட்டது. முதல்கட்டமாக நிவாரணப் பொருட்கள் வழங்கியது போக மீதி இன்றளவும் அரசு கணக்கில் இருக்கிறது.

மேலும் யாழ்ப்பாணம் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் எழுதிய கடிதம் மத்திய அரசின் வெளியுறவு அமைச்சு மூலமாக கிடைத்தது. இந்திய அரசால் வழங்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட பொட்டலங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிடைத்தது. ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்கள் அதில் இருந்தன. சமையலுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. போர் நடந்துகொண்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் தமிழக மக்களிடம் இருந்து வந்த நன்கொடைப் பொருட்களை இலங்கைத் தமிழர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர்? என்று அதில் கூறியிருக்கிறார்.

இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது என்ற தலைப்பில் நீங்கள் தீர்மானம் கொண்டு வந்த போது தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வை காட்ட முன்வராமல் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்ததும் அவர்களை ம.தி.மு.க.பின்பற்றியதும் பற்றி?

இன்னும் தமிழ் இனம் நெல்லிக்காய் மூட்டையாகத்தான் இருக்கிறது என்று எண்ணி நெஞ்சம் பதைபதைக்கிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை. இதில் தி.மு.க.செயற்குழுவை மட்டும் கூட்டி முடிவெடுப்பது சரியல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளாரே?

தி.மு.க.ஜனநாயக இயக்கம். அதன் தலைவராக நான் இருந்த போதிலும் சில முக்கிய முடிவுகளை தன்னிச்சையாக எடுத்து விட முடியாது. முடிவுகளை எடுக்கலாம் என்ற போதிலும் நான் அவ்வாறு சர்வாதிகாரமாக நடந்து கொள்வதில்லை. முதலில் கட்சியில் முடிவெடுத்து பின்னர் அனைத்துக் கட்சிகளையோ, தோழமைக்கட்சிகளையோ கலந்தாலோசித்துத்தான் முடிவு அறிவிப்போம். அனைத்துக் கட்சிக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் கட்சியினர் கூட முன்னதாக தங்கள் கட்சிக்குள் விவாதித்து ஒரு முடிவு எடுத்துக் கொண்டுதான் வருவார்கள்.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவர் கூறும்போது, ?காங்கிரஸ் அரசையும் மத்திய அரசையும் தமிழக அரசு பகைத்துக் கொள்ள விரும்பவில்லை எனத் தெரிகிறது? என்று கூறியிருக்கிறாரே?

ஆம். தி.மு.க.வோடு தோழமை கொண்டுள்ள கூட்டணியில் உள்ள கட்சியின் அரசுதான் காங்கிரஸ் அரசு. கூட்டணி தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என தி.மு.க.நினைப்பது தவறல்லவே என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக விடுதி மேற்பார்வையாளர் மீது துப்பாக்கிச் சூடு

pistal.jpgயாழ். பல்கலைக்கழக விடுதி மேற்பார்வையாளர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உரும்பிராயைச் சேர்ந்த மாணிக்கம் பிரேமச்சந்திரன் (வயது 41) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே காலில் காயமடைந்துள்ளார்.

ஆனந்தகுமாரசாமி விடுதியில் பணியாற்றிய இவர் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் மதிய உணவுக்காக கொக்குவிலில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பி வரும் வழியில் கொக்குவில் பொற்பதிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து இவர் யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெப்ரவரி 15 இற்குள் தி.மு.க. பொதுக்குழு இலங்கைப் பிரச்சினை குறித்து முக்கிய தீர்மானம்

w_n.jpgஇலங் கைப் பிரச்சினை குறித்து பெப்ரவரி 15 ஆம் திகதிக்குள் தி.மு.க. பொதுக்குழு கூடி முக்கிய முடிவெடுக்கும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சனிக் கிழமை “சங்கத் தமிழ் பேரவை’ என்ற அமைப்பு நடத்திய பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது; “இந்த விழாவில் என்னைப் பலரும் பாராட்டினார்கள். பொன்னாடைகள், பட்டாடைகள் அணிவித்தார்கள். ஆனால், நான் முழு மகிழ்ச்சி அடையவில்லை.

பக்கத்து நாட்டில் நமது தமிழ் மக்கள் தங்களது தாயகத்தில் வாழ முடியாமல் துரத்தப்படுகிறார்கள். அவர்களின் துன்பத்துக்கு நாம் எப்போதும் முடிவு கட்டப்போகிறோம்? அதற்காகத்தான் சட்டப்பேரவையில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். இலங்கைப் பிரச்சினையை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகிறார்கள். நாங்கள் இந்தப் பிரச்சினையை அரசியலாக்க விரும்பவில்லை. மத்திய அரசு இப்பிரச்சினையில் தனது கடமையை ஆற்ற வேண்டும்.

வெள்ளிக்கிழமை (ஜன.23) சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்போது தி.மு.க. பொதுக்குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என்றேன். அதன்படி வரும் பெப்ரவரி 15 ஆம் திகதிக்குள் தி.மு.க. பொதுக்குழு கூடி முக்கிய முடிவெடுக்கும். இந்த அறிவிப்பு நான் உங்களுக்கு அளிக்கும் பட்டாடையாகும்.

தருமபுரத்திற்கு கிழக்கே புலிகளின் 3 படகுகள் அழிப்பு; 2 படகுகள் சேதம் – படைத்தரப்பு

_bort.jpgமுல்லைத் தீவில் தருமபுரத்திற்கு கிழக்கே நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் படையினரின் முன்னரங்கக் காவல் நிலைகளை உடைத்து கொண்டு முன்னேற முயன்ற விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று படகுகள் அழிக்கப்பட்டும் இரு படகுகள் சேதமடைந்துமுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பு மேலும் கூறுகையில்;

கல்மடுக்குளக்கட்டைத் தகர்த்த புலிகள் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த போது அதனூடாக ஐந்து படகுகளில் தாக்குதல் நடத்த வந்ததுடன், அதற்கு வசதியாகக் கடும் ஆட்லறி ஷெல் தாக்குதலையும் மோட்டார் குண்டுத் தாக்குதலையும் நடத்தினர். நான்கு அடி உயரத்திற்கு வெள்ளம் வடக்குப் பக்கமாகப் பாய்ந்த போது கால்நடைகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் யாவும் அடித்துச் செல்லப்பட்டன. புலிகளின் தொடர்ச்சியான கடும் ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

எனினும், இதன் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை மதிப்பிடப்படவில்லை. இதேநேரம், நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணிமுதல் தர்மபுரத்திற்கு தெற்கேயும் கல்மடுவுக்கு வடக்கேயும் 57 ஆவது மற்றும் 58 ஆவது படையணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சமர் நடைபெற்றுள்ளது.

அதிகாலை 1.45 மணியளவிலும் 3 மணியளவிலும் நடைபெற்ற மோதல்களில் புலிகள் பலத்த இழப்புகளைச் சந்தித்துள்ளனர். இதேநேரம், விசுவமடுவுக்கு மேற்கேயிருந்து முன்னேறும் 57 ஆவது படையணியினர் சனிக்கிழமை புளியம்பொக்கனைப் பகுதியிலுள்ள புலிகளின் நிலைகள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தனர். உடையார்கட்டுக்குளம், விசுவமடுக்குளம், புதுக்குடியிருப்பின் தென்பகுதியிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த மோதல்களில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கோத்தபாய ராஜபக்ச மற்றும் சரத்பொன்சேகா மீது வழக்கு தொடரப்படும்: அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் பெய்ன்

bruce-fein.jpgஇலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக, அந்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் கோதபய ராஜபக்ஷே மற்றும் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசின் உதவி தலைமை வழக்கறிஞராக இருந்து ஓய்வு பெற்ற புரூஸ் பெய்ன், சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்போது, அமெரிக்கப் பிரஜையான கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக அமெரிக்க தண்டனை சட்டக்கோவையின் 1091 ம் பிரிவின் கீழ் இனப்படுகொலை குற்றம் தொடர்பான 1000 பக்கங்களைக் கொண்ட மாதிரி குற்றப்பத்திரமொன்றை தயாரித்துள்ளதாகவும், அதை இரு வாரங்களுக்குள் வெளியிடுவதுடன் அமெரிக்க நாடாளுமன்றம் நீதி மற்றும் வெளிவிவகாரத் திணைக்களங்கள் ஆகியவற்றிடம் கையளிக்கவுள்ளதாகவும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.இதனை ஆய்வு செய்து, அமெரிக்க அரசே, இந்த வழக்கை தொடர்ந்து நடத்தும் என்றும் அவர் கூறினார்.

புலிகளின் யுத்த தாங்கியை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்

mi24-1301.jpgவிசுவமடு பகுதியிலுள்ள புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் நேற்று தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப்படைக்குச் சொந்தமான எம். ஐ. 24 ரக விமானங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

விசுவமடு குளத்திலிருந்து வடக்கே இரண்டு கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்த புலிகளின் யுத்த தாங்கியொன்றை இலக்கு வைத்து விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

விமானத் தான்குதலுக்கு இலக்கான யுத்த தாங்கியை மீட்கும் நோக்கில் முன்னேறிய இராணுவத்தின் 58வது படையணிக்கு உதவியாக நேற்று நண்பகல் மீண்டும் எம். ஐ. 24 ரக விமானம் மூலம் விமானத் தாக்குதலை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இலங்கையின் இனமோதல்கள் குறித்து பாரிஸ்,லண்டனில் நூல்கள் வெளியீடு

இலங்கையில் நடைபெற்று வரும் “இனமோதுகையின் அனைத்துலக பரிமாணம் என்ன, என்பதனை முழுமையாக ஆய்வு செய்யும் தமிழ் ஆவணமும், 2002 2006 காலப்பகுதியில் நடைபெற்ற சர்வதேச சமாதான முயற்சிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் அணுகுமுறைகள், அரசியல் வியூகங்கள் என்பனவற்றை ஆய்வு செய்யும் நூலும் பிரித்தானியா மற்றும் பிரான்ஸில் வெளியிடப்படவுள்ளன. இலங்கை இன மோதுகையானது தமிழ் சிங்கள தேசங்களுக்கு இடையேயான போர் மட்டுமல்ல, அனைத்துலக ஈடுபாடும், நோக்கங்களும் கொண்டதொரு அனைத்துலக விவகாரம் என கற்கையாளர்களும் சிந்தனையாளர்களும் விபரித்திருக்கின்றனர். இந்தப் பின்னணியில் இந்த மோதுகையின் அனைத்துலக பரிமாணம் என்ன என்பதை முழுமையாக ஆய்வு செய்யும் தமிழ் ஆவணமான “இலங்கை இனமோதுகையின் சர்வதேச பரிமாணம்’ எனும் நூல் வெளியிடப்படுகின்றது.

“குல்ரங்’ மூத்த பேராசிரியர் சத்தியேந்திரா, கலாநிதி சதானந்தன் உட்பட பல அனைத்துலக அறிஞர்கள் எழுதிய கட்டுரைத் தொகுப்பாக இது வெளியாகின்றது. இதேவேளை, 2002 2006 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை நடைபெற்ற சர்வதேச சமாதான முயற்சிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் அணுகுமுறைகள், அரசியல் வியூகங்கள் என்பனவற்றை ஆய்வு செய்யும் நூலாக “”மாற்றுநிலைப்படுத்தலின் அரசியல்’ எனும் நூல் வெளியிடப்படுகின்றது. சுதாகரன் நடராஜா, லக்சி விமலராஜா ஆகியோரின் ஆய்வுகளின் தமிழ் தொகுப்பாக இது வெளியாகின்றது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எதிர்வரும் சனிக்கிழமை 31.01.09.மாலை 4 மணிக்கு இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன. பிரித்தானியாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01.02.2009) மாலை 5.30 மணிக்கு லண்டனில் இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன. இரு நிகழ்வுகளிலும் நடேசன் சத்தியேந்திரா (தமிழ் புத்திஜீவி, தமிழ்நேசன் இணையத்தள முதன்மை ஆசிரியர்), அ.இ.தாசீசியஸ் (மூத்த புலத்தமிழ் ஊடகவியாளர் லண்டன்), ம.தனபாலசிங்கம் (தமிழ் சிந்தனையாளர், ஆய்வாளர் அவுஸ்திரேலியா,சிட்னி), கி.பி.அரவிந்தன் (பல்துறை செயற்பாட்டாளர், எழுத்தாளர் பாரிஸ்) ந.ஓ.பற்றிமாகரன் (ஆசிரியர், பத்திரிகையாளர், ஆய்வாளர் லண்டன்) ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர