அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

1200 வீடுகள் முழுமையாக பூர்த்தி: மார்ச்சில் ஜனாதிபதியால் கையளிப்பு

sarath-amunugama.jpgஅரசாங்க ஊழியர்களுக்கு ஐயாயிரம் வீடுகள் அமைக்கும் திட்டமொன்றை பொதுநிர்வாக அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதில் சுமார் 1200 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு முதலில் ஹபராதுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 576 வீடுகளும் மார்ச் மாதம் ஜனாதிபதியினால் அரச ஊழியர்களுக்கு கையளிக்கப் படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம கூறினார்.

அரசாங்க ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது. அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டவாறு அரசாங்க ஊழியர்களுக்கு வீடுகள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஹபராதுவ பகுதியில் 576 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மூன்று தரத்திலான வீடுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் ஜனாதிபதியினால் அரச ஊழியர்களுக்கு கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர காலி வெகுனுகொடையில் 640 வீடுகள் அமைக்கப்பட்டு வருவதோடு பூர்த்தியடையும் நிலையில் உள்ளன.

கண்டி, குண்டசாலை பகுதியில் சுமார் 900 வீடுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதோடு சில தினங்களில் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க உள்ளோம்.

ராகம பகுதியில் சுமார் 800 முதல் 900 வரையான வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளோம். இதற்கான காணியை சுவீகரிக்க கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியது. அரசாங்கமும் மலேசிய ‘வின்கொண்ட்’ கம்பனியும் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிக்க உள்ளன.

5000 வீடுகளையும் நிர்மாணிக்க 50 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது.

வரலாற்றில் ஒரு போதும் அரசாங்க ஊழியர்களுக்கென இந்தளவு அதிகமான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது கிடையாது. வீடமைப்பு அமைச்சிற்குப் போட்டியாக அதிக மான வீடுகள் நிர்மாணிக்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இதேவேளை, கொழும்பு கெப்பிட்டிபொல மாவத்தையில் 16 மாடிகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. அத்தோடு 80 மாடிகளைக் கொண்ட வீடமைப்பு த்திட்டமொன்று பத்தரமுல்லையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா கம்பனியொன்று நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அரசாங்க ஊழியர்களுக்கான வீடுகளை வங்கிக் கடன் அடிப்படையிலா வேறு வகையிலா வழங்குவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஹபராதுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் எந்த நிமிடமும் கையளிக்கக்கூடிய நிலையில் உள்ளன.

தனியார் பஸ்களில் சீருடை, ரிக்கட் கட்டாயம்; உச்ச நீதிமன்று தீர்ப்பு

justice.jpgமேல் மாகாண தனியார் பஸ்களில் பயணச் சீட்டு வழங்குதல் மற்றும் சீருடை அணிதல் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறுவோரின் வீதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று போக்குவரத்து அதிகார சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் நேற்று விடுத்துள்ள இவ்வுத்தரவினை முழுமையாக ஏற்றுக் கொள்ளவதுடன் இதற்குப் பூரண ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகத் தனியார் பஸ் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.

இத் தீர்மானம் தொடர்பில் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தினகரனுக்குத் தெரிவிக்கையில்,

உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது காலத்தின் தேவை கருதி மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இது முழுமையாக நடை முறைப்படுத்தப்படுமானால் தனியார் பஸ் உரிமையாளர்க ளுக்கே பெரும் நன்மைகள் கிட்டும். பஸ்களில் பயணச் சீட்டு வழங்குதல் மற்றும் சீருடை தொடர்பில் கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கு இ. போ. ச. டிக்கட் பரிசோதகர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வதென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இ. போ. ச. விற்கு வேண்டுகோளொன்றை விடுக்கவும் சங்கம் தீர்மானித்துள்ளதுடன் நீதிமன்ற உத்தரவை விரைவாக நடைமுறைப்படுத்த உதவியாக சகல பஸ் நடத்துநர்கள், சாரதிகளுக்குச் சீருடைகளை இலவசமாகப் பெற்றுக் கொடுக்கவும் சங்கம் தீர்மானித்துள்ளது.

பிரயாணச் சீட்டுக்களை முறையாக வழங்கும் வகையில் பஸ் உரிமையாளர்களே அதற்கான டிக்கட் மெஷின்களைக் கொள்வனவு செய்ய வேண்டுமென சங்கம் அவர்களைக் கோருவதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி , ஆனையிறவை வெற்றிகொண்ட எமக்கு எஸ்.பி. திஸாநாயக்க சவாலுக்குரியவரல்ல – கெஹெலிய

kkhaliya.jpgகிளி நொச்சி , ஆனையிறவு போன்ற இடங்களை வெற்றி கொண்ட இந்த அரசிற்கு  எஸ்.பி ஒரு சவால் அல்ல என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அண்மையில் அம்பிட்டியாவில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியிலே உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

எஸ்.பி. திஸாநாயக்காவை தோற்கடிக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை அவர்கள் கட்சியே செய்து விடும். மத்திய வடமேல் மாகாணங்கள் மட்டுமல்ல இதன் பிறகு நடைபெறும் சகல தேர்தல்களிலும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெறும் . மகிந்த சிந்தனையின் படி நாட்டு மக்களுக்குப் பாரிய நன்மைகள் கிடைத்துள்ளன. எனவே மக்கள் எம்மை ஆதரிப்பர். கிளிநொச்சி , ஆனையிறவு இடங்களை வெற்றி கொண்ட எமக்குப் பொரமடுல்ல எஸ்.பி. சவாலுக்குரியவரல்ல.

ரணில் விக்கிரம சிங்க பாராளுமன்றத்திற்கோ, அமைச்சரவைக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ, தெரிவிக்காது பிரபாகரனின் காலடியில் வீழ்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற அடிப்படையில் பயங்கரவாதிகளிடம் எமது நாட்டின் ஒரு பகுதியை தாரை வார்த்தார். இன்று ஐ.தே கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறுகின்றவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

வன்னியில் இருந்து இடம்பெயரும் மக்கள் தனித்தனி வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள் – அமைச்சர் ரிசாட் பதியுதீன்

risard.jpgவன்னியில் தொடரும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வருகின்ற மக்களுக்கு ஐந்து நலன்புரி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கும் மீள் குடியேற்ற அநர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு , இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகின்ற மக்களின் விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து வருபவர்களில் வவுனியா வடக்குப் பிரதேச மக்களுக்கு ஓமந்தையிலும், மன்னார் பிரதேச மக்களுக்கு கட்டைஅடம்பனிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் மக்களுக்கு செட்டிக்குளம் மெனிக்பாம் பண்ணையிலுமாக ஐந்து நலன்புரி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இடம்பெயர்ந்து வருகின்றவர்களுக்கு தனித்தனியாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு அவற்றில் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள். சகல அமைச்சுகளும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மீள்குடியேற்ற அநர்த்த நிவாரண அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை மேற்பார்வை செய்யும். கொழும்பில் நடைபெற்ற உயர் மட்ட மநாட்டில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் இருந்து ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3,900 பேர் வவுனியாவுக்கு வந்துள்ளனர் எனவும் இவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். நாளுக்குநாள் வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதால் உரிய வசதிகளைச் செய்யுமாறு ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

புலிகளின் 3 இலக்குகள் மீது விமானத் தாக்குதல்

mi24-1301.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட புலிகளின் வெவ்வேறு மூன்று இலக்குகள் மீது இலங்கை விமானப் படையினர் நேற்று கடும் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.  விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் மற்றும் எம். ஐ. 24 ரக விமானங்களே கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தாக்குதல்கள் நேற்றுக் காலை 9 மணி தொடக்கம் 11.30 மணிக்குட்பட்ட காலப் பகுதியில் இடம்பெற்றன.

முல்லைத்தீவுக்குத் தெற்கே நேற்றுக் காலை 9 மணிக்கு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது முன்னேறிவரும் இராணுவத்தின் 59ஆம் படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அதற்கு எதிர்த்திசையில் தாக்குதல் நடத்தியதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இதனையடுத்து நேற்றுக் காலை 11.30 மணியளவில் முல்லைத்தீவுக்கு தெற்கே புலிகளின் முக்கியஸ்தர்கள் கூடும் இன்னுமொரு இடத்தில் விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரமண்டான்குளத்திற்கு வட மேற்கே இரண்டு கிலோமீற்றர் தொலைவில் மணல்மேடு அமைப்பதில் ஈடுபட்டிருந்த புலிகள் மீதும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்விமானத் தாக்குதல்கள் அனைத்தும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் மத்திய நிலையம் கூறியது.

சிரச ஊடக தாக்குதல் சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்

sirasa-02.jpgசிரச ஊடக வலையமைப்பின் கட்டிடத் தொகுதி தாக்குதல் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைதான ஐவர் நேற்று திங்கட்கிழமை நுகேகொட நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். விசாரணையின் முடிவில் ஐந்து பேரையும் சரீரப் பிணையில் செல்வதற்கு நுகேகொட நீதிவான் வஸந்த ஜினதாஸ அனுமதித்தார். நடத்தப்பட்டுவரும் விசாரணையை கருத்தில் கொள்ளும் போது சம்பவம் தொடர்பான கவனத்தை பொலிஸார் வேறு திசைக்கு மாற்ற முயல்வதாக நீதிவான் குறிப்பிட்டார்.

கணிசமான அளவுக்கு வெளிநாடுகள் கவனத்தை ஈர்த்துள்ள இச்சம்பவம் ஏன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக விசாரணை நடத்தப்படவில்லை என பொலிஸாரிடம் நீதிவான் வினவியதாக சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிஸங்க நாணயக்கார தெரிவித்தார்.

38 புலிகளின் உடல்கள் வவுனியாவில் அடக்கம்

வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 38 உடல்களும் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் அடக்கம் செய்யப்படவுள்ளது. வன்னியில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த பின்னர் படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த உடல்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டன.

இந்த உடல்களைப் பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திடம் பொலிஸார் தெரிவித்தபோதிலும், புதுக்குடியிருப்பிலிருந்து தகுந்த பதில் வராததால் உடல்களை பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கூறியது. மிகவும் பழுதடைந்துள்ள இவை துர்நாற்றம் வீசுவதினால் மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் வவுனியாவிலேயே அடக்கம் செய்ய பொலிஸாரும் வைத்தியசாலை நிர்வாகத்தினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தர்மபுரத்தில் நிலத்தின் கீழ் புலிகளின் டீசல் களஞ்சியத் தொகுதி

_army.jpg முல்லைத்தீவு தர்மபுரம் பிரதேசத்தில் நிலக்கீழ் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாரிய டீசல் களஞ்சிய தொகுதியை பாதுகாப்புப் படையினர் நேற்று கண்டுபிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ஒவ்வொன்றும் 225 லீற்றர்களைக் கொண்ட 300 பிளாஸ்டிக் பீப்பாக்களுக்குள் இந்த டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர், அவை சுமார் இரண்டு வருடங்களுக்கு போதுமானவையெனவும் குறிப்பிட்டார். கடந்த 15ம் திகதி வியாழக்கிழமை தர்மபுரம் நகருக்குள் பிரவேசித்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் கடந்த நான்கு நாட்களாக இந்தப் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருகின்றனர்.

இங்கிருந்து தொடர்ந்தும் முல்லைத்தீவை நோக்கி நாளுக்கு நாள் முன்னேறிச் செல்லும் இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவிந்திர டி சில்வா தலைமையிலான படைப்பிரிவினரே டீசல் களஞ்சியசாலைத் தொகுதியையும் கண்டு பிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். விடுவிக்கப்பட்ட இந்த தர்மபுரம் பிரதேசத்திலிருந்தே புலிகளின் குண்டு தயாரிக்கும் பிரதேசம் ஒன்றையும், மூன்று மாடிகளைக் கொண்ட பாரிய நிலக்கீழ் முகாம் ஒன்றையும் படையினர் கைப்பற்றியிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். படையினரால் கைப்பற்றப்பட்ட பாரிய டீசல் களஞ்சியசாலைத் தொகுதி தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :-

சுமார் ஒரு ஏக்கர் பரப்புள்ள பாரிய தென்னந் தோப்பின் கீழ் நிலத்திலிருந்து சுமார் ஒன்றரை அடிக்கு கீழாகவே இந்த களஞ்சியத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. இலை, குலைகளால் மிகவும் தந்திரமான முறையில் இந்த டீசல் பீப்பாக்கள் நிலக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.  இந்த டீசல் களஞ்சியத்திற்கு அடையாளமாக அந்த தென்னந் தோப்பிலுள்ள மரங்களில் சில குறியீடுகளும், அது களஞ்சியப்படுத்தப்பட்ட திகதி மற்றும் அதன் தொகை என்பன எழுதப்பட்டிருந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் தமது போக்குவரத்து நடவடிக்கைகளுக்காகவும், படையினரின் கடுமையான தாக்குதல்களை தவிர்க்கும் வகையில் புலிகளால் அமைக்கப்படும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள், மண் அரண்கள் அமைப்பதற்குத் தேவையான உபகரணங்களை பாவிப்பதற்கும் இங்கிருந்தே டீசல் எடுத்துச் சென்றிருக்கலாம் எனவும் பாதுகாப்புப் படையினர் சந்தேகிப்பதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

படையினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது ஷெல் குண்டுகள் விழுந்து எரி பொருட்கள் தீப்பற்றிக் கொள்ளாத வகையில் நிலத்தின் கீழ் வெட்டப்பட்ட நீரோடையொன்றிலேயே டீசல் பீப்பாக்கள் வைக்கப்பட்டு மேலே மணல் மற்றும் காய்ந்த தென்னம் ஓலைகளால் அவை மூடப்பட்டிருந்ததாகவும் படையினர் தெரிவித்தனர்.

துரித கதியில் முன்னேறி வரும் படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் இவற்றை மீட்கக்கூட நேரமில்லாது அவற்றை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பதாகவும் படையினர் சுட்டிக்காட்டினர். வன்னியிலுள்ள மக்கள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக பல தரப்பட்ட கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து டீசலும் அரசாங்கத்தினால் வன்னி மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டதெனவும் படையினர் கூறினர்.

கிளிநொச்சியை இழந்த புலிகள் கிளிநொச்சியில் முன்னெடுத்த சகல நிர்வாக நடவடிக்கைகளையும் ஏனைய செயற்பாடுகளையும் தர்மபுரம் பிரதேசத்திலேயே முன்னெடுத்துள்ளமை இங்குள்ள தடயங்கள் மூலம் தெரிய வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா இன்று பதவியேற்பு

obama-2001.jpg
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா இன்று பதவியேற்கின்றார். தலைநகர் வாஷிங்டனில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி பராக் ஒபாமா என்பதால் என்றுமில்லாதளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன.

கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையொட்டி வைபவத்தில் கலந்துகொள்வோர் அனைவரையும் இரண்டரை மணி நேரத்திற்கு முன்னரே வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைவரதும் ஆடைகள், உடல்கள் சோதனை செய்யப்படவுள்ளன. வெளிநாட்டு தூதுவர்கள், அரச, மதப் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தூதுவர்களுக்கான அழைப்பை பதவி விலகிச் செல்லும் வெளிநாட்டமைச்சர் கொண்டலிசா ரைஸ் எழுத்து மூலம் அனுப்பி வைத்திருந்தார். எனினும் ஈரான், வெனிசூலா, வடகொரியா, பொலிவியா போன்ற நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் தான் பதவியேற்ற பின்னர் மத்திய கிழக்குப் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் பகைமை நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதில் அக்கறை செலுத்தப்போவதாக முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு வைபவங்களில் பங்கேற்கும் பொருட்டு விசேட ஆடைகள் ஒபாமாவுக்கு தயார் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் இவ்வைபவத்தைப் பார்வையிட பெருந்தொகையானோர் நேரில் வருவர். மற்றும் தொலைக் காட்சிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. உலகெங்கிலுமிருந்து ஏராளமான ஊடகவியலாளர்கள் வாஷிங்டனுக்கு வந்துள்ளனர். வெள்ளை மாளிகையில் குடியேறும் பொருட்டு பராக் ஒபாமா கடந்த வாரம் வாஷிங்டன் வந்தார்.  இவரது புதல்விகள் இருவரது கற்றல் நடவடிக்கைகள் வாஷிங்டனில் தொடரவுள்ளன.

அமெரிக்கவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் உலக அரசியல் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுமென பெருமளவிலானோர் எதிர் பார்க்கின்றனர்.  இவ் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பராக் ஒபாமா இன்று பதவியேற்கின்றார். ஜனாதிபதி புஷ் பதவி விலகிச் செல்கின்றார்.

அகாஷி நாளை இரவு வருகிறார்

yasusi.jpgஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி இவ்வாரம் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இலங்கையில் மனித உரிமைகளின் தற்போதைய நிலைகுறித்தும் வன்னி மக்களின் இடப்பெயர்வு குறித்தும் கவனம் செலுத்தவுள்ளார். இலங்கையில் நான்கு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அகாஷி, நாளை  புதன்கிழமை இரவு கொழும்பை வந்தடைவார். இவ்விஜயம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் நிறைவடையும்.

அகாஷியின் இவ்விஜயத்தின் போது கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட அம்மாகாண சபையின் உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதாக இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரி.எம்.வி.பி. தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) சந்திப்பாரா என உறுதியாகக் கூற முடியாதெனவும் தெரிவித்தனர்.

மேலும் அகாஷி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கும் இது பற்றி அறிவித்துள்ளதாகவும் ஜப்பானிய தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அகாஷி இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளார்.