அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கல்வி அமைச்சின் செயலாளர் பண்டாரவுக்கு எதிராக விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

secretary_.jpgகல்வி அமைச்சின் செயலாளர் நிமால் பண்டாரவை சேவையில் இருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் சிபார்சு செய்துள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தவென ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். வட மேல் மாகாண சபை செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாகவே, நிமால் பண்டாரவை சேவையில் இருந்து இடைநிறுத்துமாறு புலனாய்வு பிரிவு சிபார்சை தெரிவித்திருந்தது.

காணி விவகாரம் தொடர்பில், அரசாங்கத்தின் ஒரு தொகைப் பணத்தை கல்வி அமைச்சின் செயலாளர் மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாகவே, ஜனாதிபதியின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. பண்டார, வட மேல் மாகாண சபையின் செயலாளராக இருந்த காலத்தில், அரசாங்கத்தின் 10.25 மில்லியன் ரூபா பணத்தை அவர் மோசடி செய்ய முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம் இந்த நிலத்தை கைமாற்றிய விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஏனைய அதிகாரிகளுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவு சிபார்சு செய்துள்ளது.

முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் வட மேல் மாகாண சபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஹெரலியவல தொழிற்சாலை தொகுதியை விஸ்தரிப்பதற்கான அஸ்வத்துவத்த நில கொள்வனவு தொடர்பில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாகவே,ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலத்துக்கான பெறுமதியை அரச மதிப்பீட்டாளர்கள் 10 மில்லியன் ரூபாவாக கணிப்பிட்டுள்ள நிலையில், இக் காணியை 20.25 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நிமால் பண்டார முயற்சிகளை மேற்கொண்டமையும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. அரச மதிப்பீட்டாளரின் அறிக்கை கிடைக்கும்வரை இந்த காணி விவகாரத்தை இடைநிறுத்தி வைத்துள்ளதாகவும் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். இக் காணி விவகாரம் தொடர்பான கணக்காய்வுகளின்போதும், நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தீக்குளிக்க முயற்சி

perijar.jpgஇலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னை மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் (15)  தீக்குளிக்க முயன்ற பெரியார் தி.க.வை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரபரப்புக்கு பெயர்போன கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் (15) காலை தீக்குளிப்போம் என்று பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் அறிவித்து இருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர்கள், சுந்தரவடிவேல், பழனிசாமி, ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சவுந்தர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், உள்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். அதோடு தீயை அணைக்கும் கருவிகளையும் கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. மதியம் 12.40 மணியளவில் 3 திசைகளில் இருந்து 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வந்து கையில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்த காவலர்கள் ஓடிச்சென்று அவர்கள் 3 பேரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.

இதையடுத்து தீக்குளிக்க முயன்ற 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர். அவர்களது விபரம் :- பெரியார் ஜெகன் (30),ஈரோடு மாவட்ட பெரியார் திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளர், சம்பூகன் என்ற சண்முகம் ,.பெரியார் தி.க. திருப்பூர் நகர செயலாளர். கோபிநாத் (26), திருப்பூர் பெரியார் திராவிடர்கழகம்.. கைதான 3 பேரும் பந்தயச்சாலை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

புலிகளின் 5 ஆவது ஓடு பாதையும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

airstrip-1501.jpgபுலிகளின் 5ஆவது விமான ஓடுபாதையையும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 632ஆவது படையணி இரணைமடுக்குளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விமான ஓடுபாதையை நேற்று மாலை கைப்பற்றியுள்ளதாகவும், இந்த விமான ஓடுபாதை 50 மீற்றர் அகலமும், 1000 மீற்றர் நீளமும்; கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடர்ந்த காட்டுப் பகுதிக்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் மேற்படி விமான ஓடுபாதையைச் சுற்றி பதுங்கு குழிகளும், பாதுகாப்பு அகழிகளும் வெட்டப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானுக்கெதிராக தாக்குதல் நடத்தவும் ராணுவம் தயார் – இந்திய ராணுவ தளபதி தீபக் கபூர்

deepak.jpgபாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ராணுவத்தை குவித்து வரும் நிலையில், எந்த முடிவை எடுக்கவும் இந்தியா தயாராக உள்ளது. கடைசி சான்ஸாக தாக்குதல் நடத்தவும் ராணுவம் தயார் என்று இந்திய ராணுவ தளபதி தீபக் கபூர் தெரிவித்துள்ளார்.

ராணுவ உயர் அதிகாரிகளுடன் ராணுவ தளபதி தீபக் கபூர் நேற்று ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதட்டம் அதிகரித்துள்ளது. ஆனால் இதுகுறித்து பீதியைக் கிளப்ப தேவையில்லை.

பாகிஸ்தான் தனது பழங்குடி மாகாண எல்லையிலிரு்நது படைகளை கிழக்குப் பிராந்தியத்திற்கு (இந்தியாவுடனான எல்லைப் பகுதி) அனுப்பும் என எதிர்பார்க்கிறோம். தற்போது அவர்கள் கிழக்குப் பகுதி நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இதை இந்திய ராணுவம் ஏற்கனவே உணர்ந்துள்ளது. அவர்களின் திட்டத்தையும் நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். இருப்பினும் இப்போதைக்கு பயப்படும்படியாக எதுவும் இல்லை.

இருப்பினும் இந்தியா அனைத்து வாய்ப்புகளையும் எதிர்நோக்கியுள்ளது. தூதரக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் அதை இந்தியா சமாளிக்கும். அதேசமயம், கடைசிக் கட்டமாக தாக்குதல் வாய்ப்பையும் நாங்கள் மனதில் வைத்துள்ளோம். ஆனால் அது கடைசிக் கட்டம்தான் என்றார் கபூர்.

கிழக்கு அபிவிருத்தி அமைச்சர் – கருணா?

murali.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமாவளவனின் உண்ணாவிரதம் இன்று காலையே தொடங்கும்

thiruma.jpgஈழத் தமிழர்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று புதன்கிழமை நடத்தவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் பொலிஸாரின் அனுமதி மறுக்கப்பட்டதனால் இன்று வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னர் தீர்மானிக்கப்பட்ட இடமான சென்னை விருந்தினர் மாளிகைக்கு எதிரில் இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கவுள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் எங்குமிருந்து இளஞ் சிறுத்தைகள் பாசறையைச் சேர்ந்த இளைஞர்கள் சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தமிழகம் எங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகளும் இதில் கலந்து கொள்ள சென்னைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். குடாநாடு முழுவதும் தற்போது படையினர் வசம் – இராணுவப் பேச்சாளர்

_army.jpgயாழ்.  சுண்டிக்குளம் முழுவதும் நேற்று மாலையளவில் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ். குடாநாடு முழுவதும் தற்போது படையினர் வசமாகியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

சுண்டிக்குளத்துக்குள் நேற்றுக் காலை பிரிவேசித்த படையினர் மாலை வரை தொடர்ந்து புலிகளுடன் மேற்கொண்ட மோதலையடுத்தே அப்பகுதி முழுவதையும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக பிரிகேடியர் கூறினார். ஆனையிறவுக்கு கிழக்காக அமைந்துள்ள சுண்டிக்குளம் பிரதேசத்தை கடற் புலிகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

சுண்டிக்குளம் முழுவதையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந் துள்ள படையினர் புலிகளால் கைவிடப் பட்டுச் சென்ற நூறுக்கும் அதிகமான கடற் புலிகளின் படகுகள், 400க்கும் மேற்பட்ட அமுக்க வெடிகள், 40 இற்கும் மேற்பட்ட யுத்த தாங்கிகள், இரண்டு லொறிகள், ஐந்து ட்ரக்டர்கள், ஒரு கனரக வாகனம், 1000 கிலோ வெக்ற் உடைகள், ஜெனரேட்டர் உள்ளிட்ட பல வெடிபொருட்களை அங்கிருந்து மீட்டுள்ளனர். புலிகளிடமிருந்து இதுவரை கைப்பற்றப்பட்டு வந்த இடங்களிலிருந்து இத்தனை கனரக வாகனங்களையும் படகுகளையும் கைப்பற்றியுள்ளமை இதுவே முதல் தடவையெனவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

யாழ். குடாநாட்டில் சுண்டிக்குளம் பிரதேசம் மாத்திரமே இறுதியாக புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இப்பகுதியையும் இராணுவத்தினர் நேற்று மாலை புலிகளிடமிருந்து விடுவித்துள்ளனர். யாழ். குடா நாடு முழுவதும் தற்போது படையினர் வசமாகியுள்ளது. இது இராணுவத்தினர் முன்னெடுத்து வந்த அயராத முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகுமென்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

55 ஆம் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படையினரே சுண்டிக்குளம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். நேற்றுக் காலை சுண்டிக்குளம் பகுதிக்குள் பிரிவேசித்த படையினருக்கும் புலிகளுக்குமிடையில் மாலை வரை கடும் மோதல் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

புலிகளின் சதித்திட்டங்களுக்கு துணைநிற்கும் கைக்கூலிகள் ரணிலும் ஜே.வி.பி யினருமாம்! – விமல் வீரன்ஸ

vimalveera.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் மேற்கொள்ளும் சதித்திட்டங்களை உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் முன்னெடுத்துச் செல்லும் கைக்கூலிகளாக – முகவர்களாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜே.வி.பியினரும் செயற்பட்டு வருகின்றனர்.  – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.

கொழும்பில் (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு :- முன்னர் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் பாரிய சேதங்களை ஏற்படுத்திவந்தார். இப்போது அவரால் அவ்வாறு செய்ய முடியாது. புலிகள் யுத்த ரீதியாக பலத்த தோல்விகளைச் சந்தித்து வருகின்றனர். அவர்களின் இறுதி மூச்சு மிக விரைவில் அடங்கவுள்ளது. இந்தநிலையில் பிரபாகரனால் எந்தவிதமான தாக்குதல்களையும் மேற்கொள்ள முடியாது.

பிரபாகரன் தற்போது மேற்கொள்ளும் சதித்திட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்படுகின்றன. இதனால் அவரின் சதித்திட்டங்களை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அரங்கேற்றும் கையாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜே.வி.பியினரும் செயற்படுகின்றனர்.  தேசப்பற்றாளர்கள் போல் தங்களைக் காட்டிக்கொண்டு தேசத்துரோகச் செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பிரபாகரனின் சதித்திட்டங்கள் மாத்திரமன்றி அவரின் கையாட்களின் செயற்பாடுகளும் அரசால் தோற்கடிக்கப்படும். அதற்கான சக்திகளை நாம் அரசுக்கு வழங்குவோம். – என்றார்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள மக்களுக்கு அனைத்து அத்தியாவசிய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன – றிஸாட் பதியுதீன் தெரிவிப்பு

risard.jpgவிடுவிக்கப்படாத பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய செய்து கொடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மீட்கப்படாத பகுதிகளிலிருந்து அரச படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு இதுவரை 1,168 பேர் வந்து சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வவுனியா மெனிக் பாம் மற்றும் நெலுக்குளம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு செய்து கொடுத்து வருகின்றது.

அமைச்சின் நிதிமூலம் வவுனியா பிரதேசத்தில் 80 ஏக்கர் நிலப்பரப்பு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் இடம்பெயர்ந்து வந்துள்ளவர்கள் தங்குவதற்கென தற்காலிக வீடமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது 150 வீடுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் 75 வீடுகளின் நிர்மாண வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. இதற்கமைய 47 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் தற்சமயம் தற்காலிகமாகக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஏனையோரை மிக விரைவில் குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீட்கப்படாத பகுதிகளிலிருந்து வந்துள்ள மக்களுக்கு சமைத்த உணவு, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், உடைகள், சிறுவர்களுக்கான உணவு வகைகள் மற்றும் சமையலறை உபகரணங்கள் உட்பட அனைத்து வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரண நடவடிக்கைகளுக்கென ரூபா 30 மில்லியன் நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம்.றாசிக் தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் நாட்களிலும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும், மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மூவர் கைது

arrest.jpgபுலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவரை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரிடம் முரசுமோட்டை பிரதேசத்தில் வைத்தே படையினரால் இம் மூவரும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

படையினர் முன்னேறி நடத்திய தாக்குதல்களின் பின்னர் நடத்திய தேடுதலின் போது புலிகளின் நான்கு சடலங்கள், மோட்டார் சைக்கிள் ஒன்று, கனரக ட்ரக் வண்டி ஒன்றையும் மீட்டெடுத்துள்ளனர். இந்த மோதல்கள் நடந்த சில மணி நேரத்திற்கு பின்னர் அங்கிருந்து இரகசியமாக தப்ப முயன்ற மூவரையே படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் அலக்ஸ் மற்றும் யசோதரன் ஆகிய இருவரும் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராவர். அலக்ஸ் என்பவர் பொட்டு அம்மானுடன் இணைந்து செயற்பட்டுள்ளதுடன், புலிகளின் புலனாய்வு துறையிலும் இணைந்து செயற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் யசோதரன் என்பவர் புலிகள் இயக்கத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பாதுகாப்பு பிரிவிலும் இணைந்து செயற்பட்டுள்ளார்.